Published:Updated:

30 வகை அவல் ரெசிப்பி

அவல் ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
அவல் ரெசிப்பி

சுதா செல்வகுமார்

30 வகை அவல் ரெசிப்பி

சுதா செல்வகுமார்

Published:Updated:
அவல் ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
அவல் ரெசிப்பி
30 வகை அவல் ரெசிப்பி

அவல் கேரட் பர்ஃபி

தேவை: அவல் - ஒரு கப் கேரட் துருவல் - கால் கப் நாட்டுச் சர்க்கரை - அரை கப் தேங்காய்த்துருவல் - அரை கப் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை கிராம்பு - ஒன்று சர்க்கரை இல்லாத கோவா - 50 கிராம் (உதிர்த்துக்கொள்ளவும்) நெய் - தேவையான அளவு விருப்பமான நட்ஸ் (வறுத்தது) - 2 டேபிள்ஸ்பூன்.

அவல் கேரட் பர்ஃபி
அவல் கேரட் பர்ஃபி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்முறை: அவலை அலசி தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடாக்கி கேரட்டைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தேங்காய்த்துருவல், கிராம்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் நாட்டுச்சர்க்கரையைச் சேர்த்து, கரைந்ததும் சர்க்கரை இல்லாத கோவா, அவல் மற்றும் நட்ஸ் சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் தூவி, தேவையெனில் இடையிடையே சிறிது நெய்விட்டு கைவிடாமல் கிளறி, நன்கு வெந்த பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். நெய் தடவிய தட்டில் கலவையைச் சேர்க்கவும். சிறிது ஆறியதும் விரும்பிய வடிவத்தில் கட் செய்து பரிமாறவும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவல் பிர்னி

தேவை: அவல் - ஒரு கப் கண்டன்ஸ்டு மில்க் - அரை கப் பால் - 2 கப் சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன் முந்திரி விழுது - 2 டேபிள்ஸ்பூன் (தண்ணீரில் முந்திரியை ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும்) ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன் பிஸ்தா (சீவியது) - 2 டேபிள்ஸ்பூன் குங்குமப்பூ - ஒரு சிட்டிகை பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை.

அவல் பிர்னி
அவல் பிர்னி

செய்முறை: அவலை அலசி தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கொதிக்கவைக்கவும். அடுப்பைக் குறைந்த தீயில்வைத்து பாலை சுண்டக் காய்ச்சவும். இதில் அவல் சேர்த்து வேகவிடவும். அவல் வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் கண்டன்ஸ்டு மில்க், முந்திரி விழுது சேர்த்துக் கலந்து பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து அடுப்பை நிறுத்தவும். மேலே பிஸ்தா தூவிப் பரிமாறவும். இதைச் சூடாகவும் பருகலாம்; ஆறவைத்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தும் பருகலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவல் மோர்க்கூழ்

தேவை: அவல் - ஒரு கப் சின்ன வெங்காயம் (தோலுரித்து, பொடியாக நறுக்கியது) - கால் கப் நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (கீறவும்) கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - அரை டீஸ்பூன் உடைத்த உளுந்து - ஒரு டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன் இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை புளித்த தயிர் - ஒரு கப் தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

அவல் மோர்க்கூழ்
அவல் மோர்க்கூழ்

செய்முறை: அவலை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும். தயிரில் தண்ணீர், உப்பு சேர்த்துக் கடைந்துகொள்ளவும் (மோராக இரண்டரை கப் வரை இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, சீரகம், உளுந்து தாளித்து கடலைப்பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும். கடைந்த மோரை அதில் ஊற்றி கலக்கி, அவல் மாவை போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்த்துருவல் தூவி, நன்கு வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

அவல் குலாப் ஜாமூன்

தேவை: அவல் - ஒரு கப் சர்க்கரை - ஒரு கப் குங்குமப்பூ - ஒரு சிட்டிகை வெதுவெதுப்பான பால் - மாவு பிசையத் தேவையான அளவு சர்க்கரை இல்லாத கோவா - ஒரு கப் (உதிர்த்துக்கொள்ளவும்) ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 15 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

அவல் குலாப் ஜாமூன்
அவல் குலாப் ஜாமூன்

செய்முறை: வெறும் வாணலியில் அவலை வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு சர்க்கரை கரைந்ததும் அடுப்பை நிறுத்தி சர்க்கரைப் பாகை ஆறவிடவும். அதில் குங்குமப்பூ சேர்க்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் அவல் மாவு, சர்க்கரை இல்லாத கோவா, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, பால் தெளித்து மிருதுவாகப் பிசையவும். மாவு முழுவதையும் சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். ஓர் உருண்டையை எடுத்து அதன் நடுவே பாதி பேரீச்சை வைத்து மூடி உருட்டிக்கொள்ளவும். இப்படி எல்லா உருண்டைகளையும் செய்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி அவல் - கோவா உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித் தெடுத்து சர்க்கரைப் பாகில் போடவும். அரை மணி நேரம் ஊற விட்டு பரிமாறவும்.

அவல் வெஜ் பிரியாணி

தேவை: அவல் - ஒரு கப் பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்) பட்டை - சிறிய துண்டு கிராம்பு - ஒன்று நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு - தலா 2 டேபிள்ஸ்பூன் பிரெட் ஸ்லைஸ் - 2 (ஓரங்களை நீக்கி சிறுசிறு சதுரங்களாக நறுக்கவும்) உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன் அலசி ஆய்ந்த புதினா - 2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (கீறவும்) இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன் நெய், எண்ணெய் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப.

அவல் வெஜ் பிரியாணி
அவல் வெஜ் பிரியாணி

செய்முறை: பிரெட் துண்டுகளை நெய்யில் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் நெய், எண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், புதினா, முந்திரி, தக்காளி சாஸ் சேர்த்து வதக்கி, கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். இதில், தேவையான தண்ணீர்விட்டு, கொதி வந்ததும் ஊறிய அவலைச் சேர்த்துக் கிளறவும். நன்றாக வெந்ததும் வறுத்த பிரெட் துண்டுகளைச் சேர்த்து இறக்கவும்.

அவல் புட்டு

தேவை: அவல் - ஒரு கப் தேங்காய்த்துருவல் - கால் கப் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை நாட்டுச்சர்க்கரை - கால் கப் நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை முந்திரிப்பருப்பு (உடைத்தது) - ஒரு டேபிள்ஸ்பூன்.

அவல் புட்டு
அவல் புட்டு

செய்முறை: வெறும் வாணலியில் அவலை வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும். வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கலக்கவும். பின்னர் இதை அவல் மாவில் தெளித்துப் பிசிறி மூடி 10 நிமிடங்கள் வைக்கவும். பிறகு மூடிவைத்த அவல் கலவையை நன்கு உதிர்த்துவிட்டு இட்லித்தட்டில் பரப்பி ஆவியில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். இதனுடன் தேங்காய்த்துருவல், நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். கடைசியாக, முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து நெய்யோடு அவல் கலவையில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

அவல் பான் கேக்

தேவை: இட்லி அரிசி - 2 கப் அவல் - ஒரு கப் தேங்காய்த் துருவல் - கால் கப் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் வெல்லப் பாகு - அரை கப் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை வறுத்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன் நெய், தேன் - தேவையான அளவு உப்பு - ஒரு சிட்டிகை.

அவல் பான் கேக்
அவல் பான் கேக்

செய்முறை: வெந்தயம், அரிசி, அவலை அலசி தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். கிரைண்டரில் ஊறவைத்த பொருள்களைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்து, அரைக்கும்போது நடுவில் தேங்காய்த்துருவல் சேர்த்து மையாக அரைத்தெடுக்கவும். இதனுடன் முந்திரி, ஏலக்காய்த்தூள், உப்பு, வெல்லப்பாகு சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் நெய் தடவி மாவைச் சற்றே கனமான, நடுத்தர அளவிலான தோசைகளாக ஊற்றி வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். மேலே தேன் ஊற்றிப் பரிமாறவும்.

அவல் பக்கோடா

தேவை: அவல் - ஒரு கப் கடலை மாவு - அரை கப் நறுக்கிய வெங்காயம் - அரை கப் தோல் உரித்த பூண்டு - 2 பல் (நசுக்கிக்கொள்ளவும்) பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் - சிறிதளவு கறிவேப்பிலை (ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை (ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன் தோல் சீவி நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் சோம்பு - ஒரு டீஸ்பூன் வேர்க்கடலைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அவல் பக்கோடா
அவல் பக்கோடா

செய்முறை: அவலைத் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து நீர் இல்லாமல் ஒட்டப் பிழிந்து வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் இதில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு பிசிறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை பக்கோடாக்களாகப் கிள்ளிப்போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

அவல் மினி ரொட்டி

தேவை: சிவப்பு அவல் - ஒரு கப் உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து, தோல் உரித்து மசிக்கவும்) வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் கெட்டித் தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன் ரஸ்க்தூள் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அவல் மினி ரொட்டி
அவல் மினி ரொட்டி

செய்முறை: வாய் அகன்ற பாத்திரத்தில் சிவப்பு அவலைச் சேர்த்து தண்ணீரில் அலசி, பிறகு 10 நிமிடங்கள் ஊறவைத்து தண்ணீரை ஒட்டப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் மற்ற பொருள்கள் பொருள்கள் அனைத்தையும் (எண்ணெய் தவிர) சேர்த்துப் பிசையவும். இந்த மாவை சிறு உருண்டையாகப் பிடித்து தட்டையாகத் தட்டவும். இதை ரஸ்க்தூளில் புரட்டவும். ஒரு பான் (pan) அல்லது தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு சூடாக்கி இந்த அவல் மினி ரொட்டியைப் போட்டு சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

அவல் கற்கண்டு பாத்

தேவை: அவல் - ஒரு கப் டைமண்ட் கற்கண்டு - ஒரு கப் பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை குங்குமப்பூ - ஒரு சிட்டிகை உடைத்த முந்திரி, உலர்திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன் ஏலக்காய் - 2 (நசுக்கிக்கொள்ளவும்) உலர் பூசணி விதை - ஒரு டீஸ்பூன் பால் - 2 கப் நெய் - சிறிதளவு.

அவல் கற்கண்டு பாத்
அவல் கற்கண்டு பாத்

செய்முறை: வாணலியில் நெய் ஊற்றிச் சூடாக்கி முந்திரி, திராட்சை, உலர் பூசணி விதை, ஏலக்காய் சேர்த்து வறுத்துவைக்கவும். அவலை அலசிக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் பால் ஊற்றிக் காய்ச்சி, குறைந்த தீயில் அடுப்பை வைத்து, கற்கண்டைப் பாலில் சேர்த்துக் கிளறவும். கற்கண்டு கரைந்ததும் அவல் சேர்த்துக் கிளறி வேகவிடவும். அவல் வெந்து பொங்கல் போலாகும் நேரத்தில் பச்சைக் கற்பூரம் மற்றும் நெய்யில் வறுத்த பொருள்களைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். குங்குமப்பூ தூவிப் பரிமாறவும்.

அவல் கொழுக்கட்டை

தேவை: கேழ்வரகு அவல் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப் காய்ந்த மிளகாய் - 3 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன் ஒன்றிரண்டாக உடைத்த மிளகு - அரை டீஸ்பூன் ஒன்றிரண்டாக உடைத்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை (அலசி ஆய்ந்தது) - தலா ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் உடைத்த உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப் பனீர் துருவல் - 3 டேபிள்ஸ்பூன் தண்ணீர் - ஒன்றரை கப் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அவல் கொழுக்கட்டை
அவல் கொழுக்கட்டை

செய்முறை: அவலை நன்கு கழுவி 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்து ஒட்டப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மிளகு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் பல்லு பல்லாக நறுக்கிய தேங்காயைச் சேர்க்கவும். இதனுடன் ஒன்றரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்தவுடன் ஒன்றிரண்டாக உடைத்த துவரம்பருப்பு, அவல், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும். கலவை நன்கு வெந்ததும் கீழே இறக்கி பிடிகொழுக்கட்டையாகப் பிடிக்கவும். அதன்மேல் பனீர் துருவல் தூவிப் பரிமாறவும்.

அவல் பருப்பு உசிலி

தேவை: அவல் - ஒரு கப் கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பு - கால் கப் காய்ந்த மிளகாய் - 3 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு, உடைத்த உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அவல் பருப்பு உசிலி
அவல் பருப்பு உசிலி

செய்முறை: அவலை நன்கு அலசி 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்து ஒட்டப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து சிறிதளவு உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். இட்லித் தட்டில் அரைத்த பருப்புக் கலவையை உதிர்த்துவிட்டு 10 - 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் வெந்த பருப்புக் கலவையைப் போட்டுக் கிளறவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், அவல் சேர்த்து மேலும் கிளறவும். பின்னர் இந்தக் கலவையில் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் புரட்டி வேகவிட்டு எடுக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

அவல் மிக்ஸர்

தேவை: சுத்தம் செய்த கெட்டி அவல் - ஒரு கப் வறுத்த வேர்க்கடலை - கால் கப் உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன் (ஆய்ந்தது) உடைத்த முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அவல் மிக்ஸர்
அவல் மிக்ஸர்

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி அவலைப் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். பிறகு அதே வாணலியில் சிறிதளவு எண்ணெயைக் காயவிட்டு கறிவேப்பிலை, முந்திரி, உலர்திராட்சையைப் பொரித்தெடுத்து வைக்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் பொரித்த அவலுடன் மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை மற்றும் பொரித்த கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு, உலர்திராட்சை சேர்த்து நன்றாகக் கிளறி, குலுக்கிப் பரிமாறவும். மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் ரெடி.

எலுமிச்சை அவல்

தேவை: அவல் - ஒரு கப் எலுமிச்சைப்பழம் - ஒன்று (பிழிந்து விதை நீக்கி சாற்றை வடிகட்டிக்கொள்ளவும்) மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 உடைத்த உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன் (ஆய்ந்து நறுக்கியது) வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எலுமிச்சை அவல்
எலுமிச்சை அவல்

செய்முறை: அவலை அலசி 15 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து ஒட்டப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னர் இதனுடன் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். பிறகு ஊறவைத்துப் பிழிந்த அவல், உப்பு சேர்த்துப் புரட்டவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை, வெந்தயப்பொடி, கொத்தமல்லித்தழை சேர்க்கவும். கடைசியாக எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

தஹி அவல் பழ சாட்

தேவை: சிவப்பு அவல் - அரை கப் புளிப்பில்லாத தயிர் - ஒரு கப் மாதுளை முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய ஆப்பிள் - ஒரு டேபிள்ஸ்பூன் வாழைப்பழம் (வட்டமாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன் உலர்திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை - ஒரு டீஸ்பூன் சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் வறுத்த உலர் விதை (பூசணி, வெள்ளரி விதை போன்றவை) - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை.

தஹி அவல் பழ சாட்
தஹி அவல் பழ சாட்

செய்முறை: சிவப்பு அவலை தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து நீரை ஒட்டப் பிழிந்துள்ளவும். தயிரைக் கடைந்து வாய் அகன்ற பவுலில் சேர்த்து மற்ற அனைத்துப் பொருள்களையும் அதனுடன் சேர்த்துப் பரிமாறவும். ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து `ஜில்’லென்றும் பரிமாறலாம்.

அவல் மினி பூரி

தேவை: அவல் - ஒரு கப் கோதுமை மாவு - அரை கப் மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் ஓமம் - அரை டீஸ்பூன் உலர் மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) - அரை டீஸ்பூன் ரெடிமேடு மயோனைஸ் - 3 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

அவல் மினி பூரி
அவல் மினி பூரி

செய்முறை: அவலை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் எண்ணெய், மயோனைஸ் தவிர மற்ற பொருள்களைச் சேர்த்து தண்ணீர் தெளித்துப் பிசைந்து வட்டமாக இட்டு விருப்பமான பிஸ்கட் கட்டரால் அழுத்தி வடிவம் கொடுக்கவும். அதைச் சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மயோனைஸ் தொட்டு (டிப் செய்து) சாப்பிடவும்.

அவல் பணியாரம்

தேவை: அவல் - அரை கப் பச்சரிசி - ஒரு கப் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் துருவிய வெல்லம் - ஒரு கப் நெய் - 2 டேபிள்ஸ்பூன் சமையல் சோடா - கால் டீஸ்பூன் நெய்யில் வறுத்த உலர் வெள்ளரி விதை - 2 டேபிள்ஸ்பூன்.

அவல் பணியாரம்
அவல் பணியாரம்

செய்முறை: அரிசி, அவலை நன்கு அலசி, தண்ணீரில் ஒரு மணி நேரம் ஒன்றாக ஊறவைக்கவும். பின்னர் மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து அரைக்கவும். பின்னர் வெல்லத்தையும் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு அரைத்தெடுக்கவும். அரைத்த மாவுக் கலவையில் ஏலக்காய்த்தூள், வறுத்த வெள்ளரி விதை, சமையல் சோடா ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். பின்னர் குழிப்பணியாரக் கல்லில் நெய்விட்டு சூடாக்கி மாவை அதில் ஊற்றி வேகவிட்டு, திருப்பிப்போட்டு வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

அவல் பொடி மிக்ஸ்

தேவை: அவல் - அரை கப் மிளகு - 2 டேபிள்ஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் உளுந்து - 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, ஆளிவிதை - தலா ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு நெய் - சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அவல் பொடி மிக்ஸ்
அவல் பொடி மிக்ஸ்

செய்முறை: அவலை நன்கு கழுவி அதனுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்துப் பொலபொலவென்று வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். குழைந்துவிடக் கூடாது. வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் உளுந்து, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், ஆளிவிதை சேர்த்து வறுத்து எடுக்கவும். பின்னர் இதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் எடுத்துக்கொள்ளவும். வாணலியைச் சூடாக்கி வெந்த அவலை சேர்த்து, இதனுடன் பொடித்த இந்தப் பொடியை 2 டேபிள்ஸ்பூன் போட்டு, சிறிதளவு நெய்விட்டு புரட்டியெடுத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

அவல் லாலிபாப்

தேவை: அவல் - ஒரு கப் டூட்டி ஃப்ரூட்டி, சாக்லேட் சாஸ் - தலா 2 டேபிள்ஸ்பூன் பால் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை - கால் கப் உலர் செர்ரிப்பழம் - ஒரு டேபிள்ஸ்பூன் கலர் இனிப்பு ஸ்பிரிங்கிள்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் கொப்பரைத்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் லாலிபாப் ஸ்டிக் - தேவையான அளவு பேரீச்சை (விதை நீக்கியது) - 4 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்).

அவல் லாலிபாப்
அவல் லாலிபாப்

செய்முறை: அவலை நன்கு கழுவி வெந்நீரில் 20 நிமிடங்கள் போட்டு எடுத்து நீரை ஒட்டப்பிழிந்து வாய் அகன்ற பவுலில் சேர்க்கவும். அதனுடன் லாலிபாப் ஸ்டிக் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து அவற்றின் கீழே ஸ்டிக் செருகவும். பின்னர் ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

அவல் பழ கீர்

தேவை: அவல் - ஒரு கப் வாழைப்பழம் - 2 (தோல் உரித்து மசித்துக்கொள்ளவும்) தேங்காய்ப்பால், பால் - தலா அரை கப் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை சர்க்கரை - அரை கப் தேன் - ஒரு டேபிள்ஸ்பூன் (தேவையெனில்) பிஸ்தா (சீவியது) - 2 டேபிள்ஸ்பூன்.

அவல் பழ கீர்
அவல் பழ கீர்

செய்முறை: அவலை நன்கு கழுவி தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். அடிகனமான வாணலியில் பால் ஊற்றிச் சூடானதும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் அவல் சேர்த்து வேகவிடவும். அடுப்பைக் குறைந்த தீயில்வைத்து அவல் கலவையில் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்கிவைக்கும்போது மசித்த வாழைப்பழம் சேர்த்து, தேங்காய்ப்பால்விட்டு கிளறி இறக்கி, பிஸ்தா தூவி சூடாகப் பருகவும். அல்லது ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து தேன் ஊற்றிப் பருகலாம்.

குறிப்பு: வாழைப்பழத்தை மசிக்காமல் பொடியாகவும் நறுக்கிப் போடலாம். சீஸனுக்குத் தகுந்தாற்போல மாம்பழம்கூட சேர்க்கலாம்.

மூவர்ண சிறப்பு அவல்

தேவை: அவல் - ஒன்றரை கப் கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு (சிறியது, அலசி ஆய்ந்துகொள்ளவும்) இஞ்சி - கால் அங்குலத் துண்டு (தோல் சீவவும்) சீரகத்தூள் - அரை டீஸ்பூன் புளி - சிறிதளவு வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - ஒன்று கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு - தாளிக்கத் தேவையான அளவு தேங்காய்த் துருவல் - கால் கப் கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன் (ஆய்ந்தது) கேரட் துருவல் - கால் கப் காய்ந்த மிளகாய் - ஒன்று மசாலா வேர்க்கடலை (பொடித்தது) - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மூவர்ண சிறப்பு அவல்
மூவர்ண சிறப்பு அவல்

செய்முறை: இதை மூன்று விதமாக மூன்று வண்ணங்களில் செய்யப் போகிறோம்.

முதலில் ஆரஞ்சு வண்ண கேரட் அவல். ஒன்றரை கப் அவலை அலசி 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து மூன்று பகுதிகளாகப் பிரித்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் சிறிதளவு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து கேரட் துருவல், உப்பு சேர்த்துச் சுருள வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிட்டு, ஊறிய அவல் அரை கப் போட்டு கிளறி, பொடித்த மசாலா கடலையைத் தூவிப் புரட்டி, அவல் வெந்ததும் அடுப்பை நிறுத்தி இறக்கவும். ஆரஞ்சு கேரட் அவல் ரெடி.

அடுத்து தேங்காய் வெள்ளை மிளகு அவல். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சிறிதளவு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்துக் கிளறி, அரை கப் ஊறிய அவலைப் போட்டு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கினால் தேங்காய் - வெள்ளை மிளகு அவல் ரெடி.

மூன்றாவது கொத்தமல்லி அவல். கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், புளி, உப்பு, இஞ்சி ஆகியற்றுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு கெட்டியாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கறிவேப்பிலை தாளித்து, அரைத்த கொத்தமல்லி விழுதைப் போட்டு கிளறி, ஊறிய அவல் அரை கப் சேர்த்து, உப்பு போட்டுப் புரட்டி அவல் வெந்ததும் சீரகத்தூள் தூவி இறக்கவும். கிரீன் கொத்தமல்லி அவல் ரெடி.

மூன்றுவித அவலையும் ஒன்றன் மீது ஒன்றாக லேயராக அடுக்கியும் சாப்பிடலாம். தட்டில் தனித்தனியாக வைத்தும் சுவைக்கலாம்.

அவல் சாலட்

தேவை: கேழ்வரகு அவல் - அரை கப் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்) ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப் வெள்ளரிக்காய், கேரட் - தலா ஒன்று (சிறியது, துருவிக்கொள்ளவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன் (ஆய்ந்தது) உப்பு - சிறிதளவு.

அவல் சாலட்
அவல் சாலட்

செய்முறை: அவலை அலசி தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை ஒட்டப் பிழிந்துவிட்டு ஃப்ரெஷ் க்ரீமில் போட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும். இதில் துருவிய கேரட், வெள்ளரி, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய தக்காளி, ஆய்ந்த கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கிளறி

ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்து கூலாகப் பரிமாறவும்.

அவல் ஸ்டஃபிங் சாண்ட்விச்

தேவை: பிரெட் ஸ்லைஸ் - 6 (நெய்யில் டோஸ்ட் செய்யவும்) அவல் - கால் கப் (ஊறவைக்கவும்) சாக்லேட் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன் நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் - கால் கப் நாட்டுச்சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன் உலர்திராட்சை, உலர் செர்ரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன் டூட்டி ஃப்ரூட்டி - ஒரு டேபிள்ஸ்பூன் பீநட் பட்டர் - 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

அவல் ஸ்டஃபிங் சாண்ட்விச்
அவல் ஸ்டஃபிங் சாண்ட்விச்

செய்முறை: வாணலியில் நெய்விட்டு சூடாக்கி உலர்திராட்சை, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்த்தூள், டூட்டி ஃப்ரூட்டி, அவல் சேர்த்துப் புரட்டி அவல் வெந்ததும் அடுப்பை நிறுத்தவும். ஒரு பிரெட்டின் ஒருபுறம் சிறிதளவு பீநட் பட்டர் தடவவும். மற்றொரு பிரெட்டில் சாக்லேட் சாஸ் தடவவும். இரு பிரெட்டுக்கு நடுவே அவல் இனிப்புக் கலவையை வைத்து மூடவும். இதே மாதிரி அனைத்து பிரெட் ஸ்லைஸையும் செய்து செர்ரிப் பழத்தை மேலே வைத்து, டூத்பிக்கால் குத்திப் பரிமாறவும்.

அவல் கட்லெட்

தேவை: அவல் - ஒரு கப் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் தோல் சீவி நறுக்கிய காய்கறி (கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட்) - அரை கப் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப் கொத்தமல்லித்தழை (ஆய்ந்தது) சோள மாவு, ரஸ்க் தூள் - தலா 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அவல் கட்லெட்
அவல் கட்லெட்

செய்முறை: அவலை அலசி 10 - 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி நறுக்கிய வெங்காயம், நறுக்கிய காய்கறிகள், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து வேகவிடவும். இத்துடன் ஊறிய அவல், மிளகாய்த்தூள் சேர்த்துப் புரட்டி கொத்தமல்லித்தழை, சோள மாவு சேர்த்துக் கிளறி அடுப்பை நிறுத்தவும். இந்தக் கலவையை சிறு உருண்டைகளாகப் பிடித்து ரஸ்க் தூளில் புரட்டி விருப்பமான வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்துகொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு சூடாக்கி அவல் கட்லெட்டைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகப் வேகவைத்து எடுத்து சாஸுடன் பரிமாறவும்.

அவல் இட்லி

தேவை: பச்சரிசி - ஒரு கப் இட்லி அரிசி - ஒரு கப் அவல் - ஒரு கப் ஜவ்வரிசி - கால் கப் உளுத்தம்பருப்பு - கால் கப் உப்பு - தேவைக்கேற்ப.

அவல் இட்லி
அவல் இட்லி

செய்முறை: அரிசியை 2 - 3 நேரமும் அவலை 15 நிமிடமும் உளுத்தம்பருப்பு, ஜவ்வரிசியை ஒரு மணி நேரமும் தனித்தனியே தண்ணீரில் ஊற வைக்கவும். கிரைண்டரில் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு மையாக அரைக்கவும். அரைத்த மாவுடன் உப்பு சேர்த்துக் கரைத்து 8 மணி நேரம் புளிக்கவைத்து இட்லித் தட்டில் இட்லியாக ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். மிருதுவான, சத்தான அவல் இட்லி தயார். விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

அவல் கேசரி

தேவை: அவல் - ஒரு கப் வறுத்த சேமியா - கால் கப் சர்க்கரை - அரை கப் டூட்டி ஃப்ருட்டி - ஒரு டேபிள்ஸ்பூன் நெய் - 2 டேபிள்ஸ்பூன் கண்டன்ஸ்டு மில்க் - கால் கப் ஜாதிக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை விருப்பமான ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை.

அவல் கேசரி
அவல் கேசரி

செய்முறை: அடிகனமான வாணலியில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும், சர்க்கரை முழுவதுமாகக் கரைந்ததும் அதனுடன் அவல், வறுத்த சேமியா சேர்த்துக் கிளறவும். இதனுடன் கண்டன்ஸ்டு மில்க், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு நெய், ஃபுட் கலர் சேர்த்து மேலும் கிளறவும். அவல், சேமியா இரண்டும் நன்கு வெந்து சுருள்பதம் வந்ததும் டூட்டி ஃப்ரூட்டி தூவி கலவையை இறக்கவும். சுவையான அவல் கேசரி தயார்.

அவல் தோசை

தேவை: அவல் - 2 கப் இட்லி அரிசி - ஒரு கப் பச்சரிசி - ஒரு கப் தேங்காய்த்துருவல் - கால் கப் கேரட் துருவல் - ஒரு கப் காய்ந்த மிளகாய் - 4 பெரிய வெங்காயம் - ஒன்று பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கடுகு - அரை டீஸ்பூன் உடைத்த உளுந்து - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை (ஆய்ந்தது) - தலா ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

அவல் தோசை
அவல் தோசை

செய்முறை: அவல், இட்லி அரிசி, பச்சரிசியை அலசி தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்து இவற்றுடன் கேரட் துருவல், தேங்காய்த்துருவல், உப்பு, காய்ந்த மிளகாய் 2, நறுக்கிய வெங்காயம் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, மீதமுள்ள மிளகாய் சேர்த்துத் தாளித்து பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை நிறுத்தவும். இதை அரைத்த அவல் - கேரட் மாவில் சேர்த்துக் கிளறவும். தோசைக்கல்லைச் சூடாகி மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய்விட்டு சுட்டெடுத்துப் பரிமாறவும்.

அவல் பருப்பு உப்புமா

தேவை: அவல் - ஒரு கப் பாசிப்பருப்பு - அரை கப் காய்ந்த மிளகாய் - 3 கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் உடைத்த உளுந்து - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை (அலசி ஆய்ந்தது) - சிறிதளவு தேங்காய்த்துருவல் - கால் கப் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அவல் பருப்பு உப்புமா
அவல் பருப்பு உப்புமா

செய்முறை: அவலை அலசி 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவிடவும். பாசிப்பருப்பை மெத்தென்று வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உடைத்த உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் தேங்காய்த்துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, வெந்த பருப்பு, ஊறிய அவல் சேர்த்து நன்கு புரட்டவும். அவல் வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

அவல் உருண்டை

தேவை: அவல் - ஒரு கப் கோதுமை மாவு - கால் கப் ரவை - 2 டேபிள்ஸ்பூன் நெய் - கால் கப் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை - அரை கப் வறுத்த, உடைத்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்.

அவல் உருண்டை
அவல் உருண்டை

செய்முறை: அவலை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் அரைத்து மாவாக்கிக்கொள்ளவும். கோதுமை மாவு, ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் மூன்றையும் சேர்த்து நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து, உருக்கிய நெய் விட்டு பிசிறி, கெட்டியான உருண்டைகளாகப் பிடிக்கவும்.

அவல் மசால் வடை

தேவை: கம்பு அவல் - ஒரு கப் பிரெட் ஸ்லைஸ் - 4 (ஓரங்களை நீக்கிவிடவும்) பெரிய வெங்காயம் - கால் கப் (நறுக்கியது) இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன் அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை (ஆய்ந்தது) - தலா ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு - ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அவல் மசால் வடை
அவல் மசால் வடை

செய்முறை: கம்பு அவலை அலசி தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடித்தெடுத்து, வாய் அகன்ற பாத்திரத்தில் சேர்க்கவும். எண்ணெய் தவிர மற்ற பொருள்கள் அனைத்தையும் அதனுடன் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டி மாவாகப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி மாவை வடைகளாகத் தட்டி போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

அவள் அளிக்கும் அவல் ஸ்பெஷல்!

தின்னத் தின்ன திகட்டாது சுவை... சொல்லிச் சொல்லி மாளாது பெருமை... அது அவல்! கிருஷ்ண பகவானை குசலேர் சந்திக்கச் சென்றபோது, அவர் பகவானுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது - அவல் என்பது புராண சம்பவம். `அப்படியே சாப்பிடலாம்’ என்பதில் தொடங்கி, அறுசுவை உணவாக விதவிதமாக சமைத்து உண்ணலாம் என்பது வரை சமையலறையில் சமய சஞ்சீவினியாக கைகொடுப்பது அவல். அவலைப் பாலில் ஊறவைத்துச் சாப்பிடலாம்; மோர் சேர்த்தும் சாப்பிடலாம். ஆனால், தயிருடன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லதல்ல.

சுதா செல்வகுமார்
சுதா செல்வகுமார்

அவல் எளிதில் ஜீரணமாகும். எடையைக் குறைக்க உதவும். உடனடியாக சக்தி தரும். இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவும். வயிற்றுக் கோளாறுகளிலிருந்து பாதுகாக்கும்... இப்படி அவல் தரும் நன்மைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். சிவப்பு அவல், கம்பு அவல் போன்றவை கடைகளில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் ஆரோக்கியம் மேலும் சிறக்கும்.

இந்த இணைப்பிதழில், அவலைப் பயன்படுத்தி செய்யக்கூடிய மோர்க்கூழ், கேசரி, புட்டு, வெஜ் பிரியாணி, பணியாரம், கீர், கட்லெட், வடை, பர்ஃபி போன்ற ருசியான, சத்துமிக்க ரெசிப்பிகளை வழங்கும் சமையற்கலைஞர் சுதா செல்வகுமார், ‘`பெரும்பாலான ரெசிப்பிகளை தட்டை அவலில் செய்திருக்கிறேன். அவற்றைக் கெட்டி அவலில் செய்பவர்கள் கூடுதல் நேரம் ஊறவைக்க வேண்டும்’’ என்று டிப்ஸும் அளிக்கிறார். ஹேப்பி அவல் சமையல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism