Published:Updated:

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

பனீர் பட்டர் மசாலா
பிரீமியம் ஸ்டோரி
பனீர் பட்டர் மசாலா

இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறியிருக்கிறது பனீர்

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறியிருக்கிறது பனீர்

Published:Updated:
பனீர் பட்டர் மசாலா
பிரீமியம் ஸ்டோரி
பனீர் பட்டர் மசாலா
புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

பனீர் கீர்

தேவை: பால் - அரை லிட்டர் துருவிய பனீர் - ஒரு கப் ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் முந்திரி, பாதாம் - கால் கப் (பொடித்தது) சர்க்கரை - கால் கப் சாரைப்பருப்பு - 2 டீஸ்பூன்.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்முறை: அடி கனமான வாணலியில் பால் சேர்த்து, மிதமான தீயில் கெட்டியாகும் வரை காய்ச்சவும். பின்னர் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பாலைச் சற்று ஆறவைத்து துருவிய பனீர், பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து, ஏலக்காய்த்தூளையும் சேர்த்து சாரைப்பருப்பு தூவி, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பனீர் ஃப்ரிட்டர்ஸ்

தேவை: பனீர் - 200 கிராம் (நீளமாக நறுக்கவும்) கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டீஸ்பூன் சமையல் சோடா - ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, கார்ன்ஃப்ளார், சமையல் சோடா, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றிக் கரைக்கவும். இந்தக் கரைசலில் பனீர் துண்டுகளைப் புரட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரிக்கவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பனீர் வெஜிடபிள் சூப்

தேவை: பனீர் - 200 கிராம் (சதுரத் துண்டுகளாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் (சேர்த்து) - ஒரு கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப் சோயா சாஸ் ­- ஒரு டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் முதல் ஒரு டீஸ்பூன் வரை ஆலிவ் ஆயில், உப்பு - தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: ஒரு வாணலியில் ஆலிவ் ஆயில் சேர்த்து, பனீர் துண்டுகளை வறுக்கவும். மற்றொரு வாணலியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு கேரட், பீன்ஸ் சேர்க்கவும். இதனுடன் வெங்காயம், உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்துக் கிளறி, பின்னர் கார்ன்ஃப்ளார் மாவைத் தண்ணீரில் கரைத்து அதனுடன் சேர்த்துக் கலக்கவும். பிறகு, பனீர் துண்டுகள் சேர்த்துக் கலந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

பனீர் சாலட்

தேவை: பனீர் - 200 கிராம் (சதுரமாக நறுக்கவும்) வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்) நீளமாக நறுக்கிய குடமிளகாய் - அரை கப் பச்சை மிளகாய் - 2 (நீளமாக நறுக்கவும்) எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப் உப்பு - தேவைக்கேற்ப.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: ஒரு பானில் (pan) எண்ணெய்விட்டு பனீர் துண்டுகளை லேசாகப் பொரிக்கவும். அதே பானில் வெங்காயம், குடமிளகாய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிவிட்டு இறக்கவும். இதனுடன் பனீர், எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும். பிறகு, கொத்தமல்லித்தழை சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.

மின்ட் பனீர் பராத்தா

தேவை: கோதுமை மாவு - 2 கப் பனீர் - 200 கிராம் (துருவவும்) பொடியாக நறுக்கிய புதினா - அரை கப் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்றாகக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை மெல்லிய சப்பாத்திகள் போல தேய்க்கவும். தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு சப்பாத்திகளைச் சுட்டெடுக்கவும். ராய்தா / கிரேவியுடன் சூடாகப் பரிமாறவும்.

பனீர் ஆம்லெட்

தேவை: பனீர் - 200 கிராம் (துருவவும்) கடலை மாவு - ஒரு கப் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய கேரட், கோஸ் (சேர்த்து) - அரை கப் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்றாகக் கலந்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். ஒரு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய்விட்டு ஒரு கரண்டி மாவை ஊற்றி, மிதமான சூட்டில் இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும். இதை தக்காளி சாஸ் / புதினா சட்னியுடன் சாப்பிடலாம்.

பனீர் ஐஸ்க்ரீம்

தேவை: பனீர் - 200 கிராம் (உதிர்க்கவும்) பால் - அரை லிட்டர் பால் பவுடர், சர்க்கரை - தலா ஒரு கப் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 4 டீஸ்பூன்.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: ஒரு பாத்திரத்தில், பால் பவுடர், கார்ன்ஃப்ளார் சேர்த்து சிறிதளவு பால்விட்டு நன்றாகக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பால் ஊற்றி, நன்கு காய்ந்ததும், பால் பவுடர் கலவை, சர்க்கரை, பனீர் சேர்த்து அடுப்பை `சிம்’மில் வைத்து, 5 - 10 நிமிடங்கள் கிளறவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். கலவையை ஆறவிட்டு 5-6 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

பனீர் செஷ்வான் ஃப்ரைடு ரைஸ்

தேவை: உதிர் உதிராக வேகவைத்த பாஸ்மதி சாதம் - 2 கப் பனீர் - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்) பூண்டு - மிளகாய் விழுது - 2 டீஸ்பூன் பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி அளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: வாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பூண்டு - மிளகாய் விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். வெங்காயம், பாதியளவு வெங்காயத்தாள், பனீர் துண்டுகள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு உதிராக வடித்த சாதம், மீதி வெங்காயத்தாள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி, சுடச்சுடப் பரிமாறவும்.

நவாபி பனீர் கறி

தேவை: பனீர் - 200 கிராம் வேகவைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கப் பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய முந்திரி - 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவி விழுதாக அரைக்கவும்) பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) தேங்காய்ப்பால் - அரை கப் பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்) கெட்டித் தயிர் - 3 டேபிள்ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம் - 4 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறுகட்டு (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்) நெய் - 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: சீரகம் - அரை டீஸ்பூன் கிராம்பு, ஏலக்காய் - தலா 3 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - அரை கப்.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: நறுக்கிய முந்திரியை வெந்நீரில் ஊறவைத்து விழுதாக அரைக்கவும். பனீரை சதுரத் துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் சேர்த்து காயவிட்டு பூண்டு, வெங்காயத்தைச் சிவக்க வதக்கி, இஞ்சி விழுது, அரைத்த தேங்காய் மசாலா விழுது சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய்ப்பால், தயிர், முந்திரி விழுது, பனீர், வேகவைத்த பச்சைப் பட்டாணி, உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் சிறு தீயில் வேகவிடவும். கடைசியாக ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

பனீர் கேப்ஸிகம்

தேவை: சதுர துண்டுகளாக நறுக்கிய பனீர் – 200 கிராம் பெரிய குடமிளகாய் – ஒன்று (விதை நீக்கி, சதுர துண்டுகளாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் – 2 (சதுர துண்டுகளாக நறுக்கி தனி இதழ்களாகப் பிரிக்கவும்) இஞ்சி – சிறு துண்டு (தோல் சீவி பொடியாக நறுக்கவும்) பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கவும்) பட்டை – சிறு துண்டு கிராம்பு – 4 தக்காளி – 4 (மிகவும் பொடியாக நறுக்கவும்) தக்காளி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன் காய்ந்த வெந்தயக்கீரை (கஸூரி மேத்தி) – ஒரு டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒன்றரை டீஸ்பூன் வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: கார்ன்ஃப்ளாரை கால் கப் நீரில் கரைக்கவும், வாணலியில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து காயவிட்டு சிறுதீயில் குடமிளகாயை 5 நிமிடங்கள் வதக்கியெடுக்கவும். மீண்டும் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து காயவிட்டு வெங்காயத்தை வதக்கி எடுக்கவும். மீண்டும் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து காயவிட்டு இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை நன்கு நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும். மீண்டும் கொஞ்சம் வெண்ணெய்விட்டு பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளைச் சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும். வதக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு (பட்டை, கிராம்பை நீக்கிவிடவும்), மிளகாய்த்தூள், சர்க்கரை, தக்காளி சாஸ், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். மீதமுள்ள வெண்ணெயைக் காயவைத்து அரைத்த விழுதைச் சேர்க்கவும். அத்துடன் வதக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு பின்னர் பனீர் சேர்க்கவும். கடைசியில் கரைத்த கார்ன்ஃப்ளார், காய்ந்த வெந்தயக்கீரை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி சூடாகப் பரிமாறவும்.

கிரஞ்சி பனீர்

தேவை: பனீர் - 200 கிராம் (சதுரத் துண்டுகளாக நறுக்கவும்) நறுக்கிய வெங்காயம் - கால் கப் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: சிறிதளவு எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த வெங்காய விழுது, இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு, தக்காளி சாஸ் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு கெட்டியாகக் கரைக்கவும்.இந்தக் கலவையுடன் பனீர் சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் 3 - 4 மணி நேரம் வைக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு, ஊறிய பனீர் துண்டுகளைப் பொன்னிறமாக இரண்டு புறமும் வறுத்துப் பரிமாறவும்.

பனீர் இனிப்புப் போளி

தேவை: கோதுமை மாவு - 2 கப் பனீர் - ஒரு கப் (துருவியது) சர்க்கரை - அரை கப் தேங்காய்த் துருவல் - கால் கப் நெய், உப்பு - தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: ஒரு கடாயில் நெய், பனீர் சேர்த்து அதனுடன் சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மாவை சப்பாத்தி போல தேய்க்கவும். அதில் பனீர் பூரணம் வைத்து நான்கு புறமும் மடித்து மெல்லிய பராத்தாக்கள் போல லேசாக தேய்க்கவும். தோசைக்கல்லில் நெய்விட்டு தேய்த்து வைத்ததைச் சுட்டெடுக்கவும்.

பனீர் கபாப்

தேவை: பனீர் - 200 கிராம் (உதிர்க்கவும்) உருளைக்கிழங்கு - ஒன்று பச்சைப் பட்டாணி - கால் கப் கேரட் - ஒன்று பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் கொத்தமல்லித்தழை, புதினா (சேர்த்து) - அரை கப் (பொடியாக நறுக்கியது) மைதா - ஒரு கப் ரஸ்க் தூள் - அரை கப் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி உதிர்க்கவும். கேரட், பச்சைப் பாட்டாணியையும் வேகவைத்து உதிர்க்கவும். ஒரு பாத்திரத்தில் பனீர், வேகவைத்த உருளைக்கிழங்கு, கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். மைதா மாவுடன் சிறிதளவு நீர் சேர்த்துக் கரைக்கவும். பனீர் கலவையை வேண்டிய வடிவத்தில் கபாப்களாக செய்து, மைதா கரைசலில் நனைத்து, ரஸ்க் தூளில் புரட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, கபாப்களைப் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

டிங்கிரி டோல்மா

தேவை: பட்டன் காளான் - ஒரு கப் (நன்கு கழுவி, பொடியாக நறுக்கியது) துருவிய பனீர் - ஒரு கப் வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - ஒரு இன்ச் துண்டு (தோல் சீவி பொடியாக நறுக்கவும்) பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கவும்) சீரகம் - அரை டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு தனி மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - முக்கால் டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் நெய், உப்பு - தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: வாணலியில் நெய்விட்டு சூடாக்கி, சீரகம் தாளித்து, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்துக் கிளறவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் நறுக்கிய காளான் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி, துருவிய பனீர் சேர்த்து, அடுப்பை `சிம்’மில் வைத்து, 5 - 10 நிமிடங்கள் மூடி போட்டு வேகவிடவும். பிறகு இறக்கி கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். நான், சப்பாத்தியுடன் பரிமாறவும்.

பனீர் பெப்பர் ஃப்ரை

தேவை: பனீர் - 200 கிராம் (சதுரமாக நறுக்கவும்) வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 2 (நீளமாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - ஒன்றரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், பெருஞ்சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது, மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், பெருஞ்சீரகத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் பனீர் சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து, அடுப்பை `சிம்’மில் வைத்து மூடிபோட்டு வேகவிட்டு 5 - 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி சப்பாத்தி / ரொட்டி உடன் பரிமாறவும்.

பனீர் புர்ஜி

தேவை: பனீர் – 200 கிராம் (உதிர்த்துக்கொள்ளவும்) வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய குடமிளகாய் – ஒரு கப் தனி மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – அரை கப் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, பின்னர் குடமிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து, உதிர்த்த பனீர் சேர்த்துக் கலக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி, சூடாகப் பரிமாறவும்.

பனீர் ஜால் ஃப்ரீஸ்

தேவை: பனீர் – 200 கிராம் (சதுரமாக நறுக்கி பொன்னிறமாகப் பொரிக்கவும்) வெங்காயம், கேரட், குடமிளகாய் – தலா ஒன்று (நீளமாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன் தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன் சோயா சாஸ் – அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன் வெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: அடி கனமான வாணலியில் வெண்ணெயை உருக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது, கேரட், குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். கடைசியாக பனீரை சேர்த்துக் கிளறி இறக்கவும். எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும். பனீர் ஜால் ஃப்ரீஸ் ரெடி. இதை சப்பாத்தி / நான் உடன் பரிமாறலாம்.

மேத்தி பனீர் ஃப்ரை

தேவை: பனீர் – 200 கிராம் (சதுரமாக நறுக்கவும்) மேத்தி (வெந்தயக்கீரை) – அரை கப் (கழுவி, இலைகளைப் பிரித்து எடுத்து வைக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (நீளமாக நறுக்கவும்) தனி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன் சீரகத்தூள் – கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் மேத்தி இலைகளைச் சேர்த்து நன்கு வதக்கி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். நன்றாக வதங்கியதும் அரை கப் தண்ணீர்விட்டு, பனீர் சேர்த்துக் கலந்து, அடுப்பை `சிம்’மில் வைத்து மூடிபோடவும். 5 - 10 நிமிடங்கள் கழித்து திறந்து எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

கலாகந்த்

தேவை: துருவிய பனீர் – 250 கிராம் பாதாம், பிஸ்தா – தலா 6-10 கண்டன்ஸ்டு மில்க் – ஒரு கப் சர்க்கரை – ஒரு கப் ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன் நெய் - சிறிதளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: ஒரு பாத்திரத்தில் துருவிய பனீர், கண்டன்ஸ்டு மில்க், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு நான்-ஸ்டிக் கடாயில் கலவையைப் போட்டு 4 - 5 நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். பின்னர் ஒரு தட்டில் பட்டர் ஷீட் / பேக்கிங் ஷீட் வைத்து, நெய் தடவி இந்தக் கலவையை நன்கு பரப்பவும். ஆறியதும் வட்டம் / சதுரமாக வெட்டி பாதாம், பிஸ்தா வைத்து அலங்கரிக்கவும்.

பனீர் பைனாப்பிள் சாட்

தேவை: வட்டமாக நறுக்கிய அன்னாசிப்பழம் – 4 துண்டுகள் துருவிய பனீர் – 100 கிராம் சர்க்கரை – 2 டீஸ்பூன் சாட் மசாலாத்தூள், உப்பு – தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: பனீருடன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். அன்னாசிப்பழத் துண்டுகள் மீது இந்தக் கலவையைச் சிறிதளவு வைத்து உப்பு, சாட் மசாலாத்தூள் தூவி, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து `ஜில்’லென்று பரிமாறவும்.

பனீர் சிஸ்லர்ஸ்

தேவை: சதுரமாக நறுக்கிய பனீர் – 200 கிராம் வெங்காயம், குடமிளகாய் - தலா ஒன்று (சதுரமாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் – அரை டீஸ்பூன் தயிர் – 3 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன் சாட் மசாலாத்தூள், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன் காய்ந்த வெந்தயக்கீரை (கஸூரி மேத்தி) – ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் உப்பு – தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: பனீருடன் தயிர், இஞ்சி - பூண்டு விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஒரு கடாயில் ஆலிவ் ஆயில்விட்டு சூடாக்கி, ஊறிய பனீர் சேர்த்து, அடுப்பை `சிம்’மில் வைத்து இரண்டுபுறமும் புரட்டிப் போடவும். பாதி வெந்தவுடன் வெங்காயம், குடமிளகாய், உப்பு சேர்த்துக் கலக்கவும். 5 - 10 நிமிடங்கள் கழித்து எலுமிச்சைச்சாறு, சாட் மசாலாத்தூள், காய்ந்த வெந்தயக்கீரை சேர்த்துக் கலந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

வொயிட் குருமா

தேவை: பனீர் – 200 கிராம் தயிர் – ஒரு கப் இஞ்சி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் கரம் மாசாலாத்தூள் – முக்கால் டீஸ்பூன் வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்) கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா (சேர்த்து) – அரை கப் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: பட்டை - 2 அல்லது 3 கிராம்பு – 3 பிரியாணி இலை – ஒன்று ஏலக்காய் – 2.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: பனீரை சதுரமாக நறுக்கவும். தவாவில் சிறிதளவு எண்ணெய்விட்டு பனீரை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது, உப்பு, மஞ்சள்தூள், கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிக்கக்கொடுத்த பொருள்களைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தயிர்க் கலவையைச் சேர்த்துக் கிளறி, 5 நிமிடங்கள் கழித்து கரம் மசாலாத்தூள், பனீர் சேர்த்து, 2 - 3 நிமிடங்களுக்குப் பிறகு கொத்தமல்லித்தழை, புதினா தூவி இறக்கிப் பரிமாறவும்.

பனீர் பிரியாணி

தேவை: பாஸ்மதி அரிசி – ஒரு கப் பனீர் துண்டுகள் – அரை கப் சுடுநீரில் ஊறவைத்து அரைத்த காய்ந்த மிளகாய் விழுது – அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 வட்டமாக நறுக்கிய சின்ன வெங்காயம் – கால் கப் பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய பூண்டு – ஒரு டீஸ்பூன் பட்டை – சிறு துண்டு கிராம்பு, ஏலக்காய் பிரியாணி இலை – தலா ஒன்று எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் பனீர் துண்டுகளை வறுத்து எடுத்துக்கொள்ளவும். குக்கரில் கொஞ்சம் நெய்விட்டு, காய்ந்ததும் பிரியாணி இலை, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் அரைத்த மிளகாய் விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். கழுவிய பாஸ்மதி அரிசி, தேவையான உப்பு, தண்ணீர்விட்டுக் கலக்கவும். அதனுடன் பனீர் துண்டுகள், பச்சைப் பட்டாணி சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி வெங்காயத்தாள் சேர்த்து, எலுமிச்சைச்சாறுவிட்டு சூடாகப் பரிமாறவும்.

ஷாய் பனீர்

தேவை: பனீர் – 200 கிராம் (பிசைந்துகொள்ளவும்) வெங்காயம் – 2 பூண்டு – 7 பல் பச்சை மிளகாய் – 2 இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவவும்) மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் தக்காளி – 6 (பொடியாக நறுக்கவும்) குடமிளகாய் – ஒன்று (சிறு சதுரங்களாக நறுக்கிக்கொள்ளவும்) கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் – தேவையான அளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கி கொஞ்சம் தண்ணீர்விட்டு தக்காளி வேகும் வரை கொதிக்கவிடவும். கிரேவி சற்று கெட்டியானதும் சிறு சதுரங்களாக நறுக்கிய குடமிளகாய், கையால் பிசைந்த பனீர் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும். நான் / சப்பாத்தியுடன் பரிமாறவும்.

பனீர் சீஸ் பன்

தேவை: பன் – 4 பனீர் துருவல் - கால் கப் சீஸ் துருவல் – அரை கப் பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: பன்னின் மேல் பகுதியை வெட்டி எடுத்துவிட்டு, கீழ்ப் பகுதியின் நடுவில் உள்ள பாகத்தை கத்தியால் கீறி எடுத்து பள்ளம் போல் செய்யவும். பனீர் துருவல், சீஸ் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். ஒவ்வொரு பன்னுக்குள்ளும் இதை அழுத்தி வைத்து மேல் பாக பன்னால் மூடவும். தோசைக்கல்லை காயவைத்து, பன்னை அதன் மேல் வைத்து சுற்றிலும் சிறிது வெண்ணெய் தடவி, வெந்ததும் (மூடிய நிலையிலேயே) மறுபுறமும் திருப்பிவிட்டு நன்கு சூடானதும் எடுத்து சுடச்சுட பரிமாறவும்.

குறிப்பு: தேவையெனில், பொடியாக நறுக்கி பொரித்தெடுத்த முந்திரியைத் தூவிப் பரிமாறலாம்.

பனீர் க்ராகெட்ஸ்

தேவை: துருவிய பனீர் – கால் கப் காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று உருளைக்கிழங்கு – 2 பச்சை மிளகாய் – 3 இஞ்சி – சிறு துண்டு (தோல் சீவவும்) பூண்டு – 4 பல் மைதா – 4 டேபிள்ஸ்பூன் பிரெட் தூள் – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 2 நிமிடங்கள் வெந்நீரில் போட்டு எடுக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளவும். பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை விழுதாக அரைக்கவும். மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய காலிஃப்ளவர், பச்சை மிளகாய் விழுது, உப்பு, துருவிய பனீர், 2 டேபிள்ஸ்பூன் மைதா - இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து நன்கு பிசைந்து, சிலிண்டர் ஷேப்பில் அல்லது விரும்பிய வடிவத்தில் செய்யவும். மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் மைதாவை நீர்க்க கரைத்து அதில் பனீர் க்ராகெட்ஸை முக்கி பிரெட் தூளில் புரட்டி எடுத்து, சூடான எண்ணெயில் பொரித்தடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

பனீர் ஸ்டிர் ஃப்ரை

தேவை: பனீர் - 200 கிராம் (நீளமாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 4 (நீளமாக நறுக்கவும்) நீளமாக நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப் ஆம்சூர் பவுடர் - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு டீஸ்பூன் கடுகு, வெந்தயம், சீரகம் - தலா கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: பனீருடன் ஆம்சூர் பவுடர், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், சீரகம் தாளித்து, பச்சை மிளகாய், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் ஊறிய பனீர், சில்லி ஃபிளேக்ஸ் சேர்த்துக் கலந்து, எலுமிச்சைச்சாறு சேர்த்துப் புரட்டி சூடாகப் பரிமாறவும்.

பனீர் பொடிமாஸ்

தேவை: துருவிய பனீர் – 200 கிராம் சின்ன வெங்காயம் – கால் கப் பச்சை மிளகாய் – 3 இஞ்சி – சிறு துண்டு (தோல் சீவவும்) பூண்டு – 10 பல் மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன் கடுகு – கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு எண்ணெய், உப்பு – சிறிதளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் துருவிய பனீர், மிளகுத்தூள், சீரகத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பாலக் பனீர்

தேவை: பனீர் – 100 கிராம் பசலைக்கீரை – ஒரு கட்டு (சுத்தம் செய்யவும்) பச்சை மிளகாய் – ஒன்று வெங்காயம், தக்காளி – தலா 2 இஞ்சி – சிறு துண்டு (தோல் சீவவும்) பூண்டு – 10 பல் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) – முக்கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம், வெண்ணெய் – தலா 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கீரையை சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிட்டு மிக்ஸியில் மசித்துக் கொள்ளவும். பனீரை எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைக்கவும். தக்காளியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அடிகனமான வாணலியில் வெண்ணெய் சேர்த்துக் காயவிட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளியையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் தேவையான உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் மசித்த கீரையை சேர்த்துக் கொதிக்கவிடவும். இறுதியாக பொரித்த பனீர், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துக் கிளறி இறக்கி சுடச்சுட பரிமாறவும்.

பனீர் பட்டர் மசாலா

தேவை: பனீர் – கால் கிலோ (சிறு துண்டுகளாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் – 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்) தக்காளி – 4 (மிகவும் பொடியாக நறுக்கவும்) பூண்டு – 6 பல் இஞ்சி – சிறு துண்டு (தோல் சீவவும்) மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2 வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு – தேவையான அளவு.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

செய்முறை: பூண்டு, இஞ்சி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். தக்காளியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு காய்ந்ததும் வெங்காயம், தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி விழுது, பனீர், அரைத்த பூண்டு மசாலா விழுது, கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கிரேவி பதத்தில் வந்ததும் இறக்கி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சமையல் உலக ஆல்ரவுண்டர்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை... குறிப்பாக, இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறியிருக்கிறது பனீர். இன்றைய நாகரிக உலகில் பனீர் பெரும்பாலானவர்களின் இல்லங்களைச் சென்றடைந்துவிட்டது. புரதச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ள பனீர், உடலுக்கு பலத்தையும் ஆரோக்கியத்தையும் தருகிறது.

புரதச்சத்து நிறைந்த 30 வகை பனீர் ரெசிப்பி

பனீரைக்கொண்டு குழந்தைகளைக் குஷிப்படுத்தும் ஸ்நாக்ஸ், சத்தான இனிப்புகள், ருசியான சைடிஷ்கள், ரிச்சான `டெசர்ட்’டுகள் போன்றவற்றைச் செய்ய முடிவதால், பனீரை சமையல் உலகின் ஆல் ரவுண்டர் என்று கூறினால் மிகையாகாது.

பனீர் கொண்டு உணவு தயாரிப்பதில் ஹோட்டல்கள்தாம் சிறந்தவை என்ற காலம் மாறிவிட்டது. சுவையான, சத்தான பனீர் ரெசிப்பிகளை வீட்டிலேயே செய்துவிட வேண்டும் என்று இக்காலத்து பெண்கள் நிரூபித்து வருகிறார்கள்.

வடஇந்திய மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் சுவைகளில் எளிமையான, ருசிகரமான பனீர் ரெசிப்பிகள் பலவற்றை இங்கே வழங்குகிறார், லண்டனிலிருந்து விடுமுறையில் வந்திருக்கும் அவள் விகடன் வாசகியான சந்தியா கார்த்திகேயன்.

உங்கள் குடும்பத்தினருக்கும் விருந்தினருக்கும் பனீர் ரெசிப்பிகளை மணக்க மணக்க, ருசிக்க ருசிக்க செய்து கொடுத்து அசத்துங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism