பிரீமியம் ஸ்டோரி
30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

1) வெஜிடபிள் பிரியாணி

தேவை: பாஸ்மதி அரிசி - 2 உழக்கு, கேரட் - ஒன்று, பீன்ஸ் - 10, முட்டைகோஸ் - ஒன்று (சிறிய அளவு), காலிஃப்ளவர் - ஒன்று (சிறிய அளவு), பட்டாணி - (உரித்தது) ஒரு கப், சோளம் - 2, வெங்காயம் -2, பூண்டு - 10 பல், இஞ்சி - சிறிய துண்டு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, புதினா - சிறிதளவு, தேங்காய்ப்பால் - ஓர் உழக்கு, முந்திரி - 6, பாதாம் - 6, தக்காளி - 4 (நறுக்கவும்), பட்டை - சிறு துண்டு, கிராம்பு - 3, வாசனை (பிரிஞ்சி) இலை - சிறிதளவு, ஏலக்காய் - 2, தயிர் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மல்லித்தழை - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன், தண்ணீர் - 3 டம்ளர், எண்ணெய் - 2 குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை:

அரிசியை நீரில் சிறிது நேரம் ஊறவைத்து களைந்துவைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி அரிசியை லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். சோளத்தை அவியவைத்து முத்துகளாக எடுத்து வைக்கவும். காய்கறிகளைச் சிறிய அளவில் நறுக்கிவைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.பூண்டு, இஞ்சி, முந்திரி, பாதாமை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை, வாசனை இலை, கிராம்பு, ஏலக்காய் போடவும்.பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின்னர் தக்காளி, மிளகாய்த்தூள், மல்லித்தழை, கறிவேப்பிலை, புதினா, அரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கவும். நன்றாக எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். பிறகு தயிர் சேர்க்கவும். அடுத்து நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அரிசியையும் சோள முத்துகளையும் சேர்த்து, உப்பு தூவி நன்றாகக் கலக்கி தண்ணீரையும் தேங்காய்ப்பாலையும் ஊற்றி குக்கரை மூடவும். குக்கரில் இரண்டு விசில் வந்தவுடன் இறக்கி, ஆவி வெளியேறிய பின்பு எடுத்துப் பரிமாறவும்.

2) முருங்கைக்கீரை அடை

தேவை: பச்சரிசி - அரை உழக்கு, புழுங்கல் அரிசி - அரை உழக்கு, துவரம்பருப்பு - அரை உழக்கு, கடலைப்பருப்பு - அரை உழக்கு, உளுத்தம்பருப்பு - அரை உழக்கு, காய்ந்த மிளகாய் - 12, சோம்பு - 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - ஒரு கப், வெங்காயம் - 3 (மெலிதாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு (மெலிதாக நறுக்கவும்), மல்லித்தழை - சிறிதளவு (மெலிதாக நறுக்கவும்), முருங்கைக்கீரை - சிறிதளவு (ஆய்ந்து கொள்ளவும்), பெருங்காயம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை:

அரிசி, பருப்பு வகைகளை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியபின்அரிசி, பருப்புகளுடன் காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பின்னர், பெருங்காயம், முருங்கைக்கீரை, உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து மாவை நன்றாகக் கலக்கி, தோசைக்கல்லில் மாவைச் சிறிதளவு கனமாக ஊற்றி அதன்மீது எண்ணெய்விட்டு நன்றாகச் சிவந்த பின் எடுத்துப் பரிமாறவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3) அவல் உப்புமா

தேவை: கனமான அவல் - 2 உழக்கு, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 4, கேரட் - ஒன்று, உருளைக்கிழங்கு - ஒன்று, வெங்காயம் - ஒன்று, மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை:

அவலை காய்கறிகள் வடிகட்டும் கூடையில் போட்டுக் கழுவி ஊறவிடவும். கேரட், உருளைக்கிழங்கைத் தோல் சீவி நன்கு துருவிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் துருவிய கேரட், உருளைக்கிழங்கைச் சேர்த்து சிறிதளவு வதங்கியதும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் அவல் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

4) கேரட் தயிர்ப் பச்சடி

தேவை: கேரட் - 2, தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), தயிர் - ஒரு கப், தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), மல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை:

கேரட்டைக் கழுவி தோல் சீவி, மெல்லியதாகத் துருவிக்கொள்ளவும். இந்தத் துருவலுடன்தக்காளி, தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தயிர் ஊற்றி ஒன்றாகக் கலக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, கலவையில் சேர்த்துப் பரிமாறவும்.

கருப்பட்டி திரட்டுப்பால்

தேவை: பால் – ஒரு லிட்டர், கருப்பட்டி – 200 கிராம்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பில்வைத்து பால், பாதியாக சுண்டுகிற வரைக்கும் காய்ச்சவும். கருப்பட்டியைப் பொடித்து, தண்ணீரில் கரைத்துவைத்துக் கொள்ளவும். அந்தத் தண்ணீரை வடிகட்டி, சுண்டிய பாலில் சிறிதளவு சிறிதாக ஊற்றவும். நன்கு திரண்டுவரும். கரண்டியால் அதிகம் கிளற வேண்டாம். தீயை மிதமாகவைத்து நன்கு சுண்டியதும் இறக்கவும். சுவையான திரட்டுப்பால் தயார்.

சிவப்பு அரிசி பணியாரம்

தேவை: சிவப்பு அரிசி - 2 கப், பொன்னி புழுங்கல் அரிசி - அரை கப், உளுந்து - அரை கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சுமார் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, கிரைண்டரில் நைஸாக அரைத்து எடுத்து உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். அரை மணி நேரம் கழித்து, அதிகம் குழிவாக இல்லாத வாணலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, நன்கு காய்ந்ததும், தீயைச் சற்றே குறைத்து வைத்துக்கொண்டு, சற்று குறைவான குழியுள்ள கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும். ஊற்றிய ஓரிரு விநாடிகளில், பணியாரம் மேலே எழும்பி வரும். உடனடியாக அதைத் திருப்பிவிட்டு, முறுகவிடாமல் எடுத்துவிட வேண்டும். இப்போது சுவையான செட்டிநாட்டு சிவப்பு அரிசி பணியாரம் தயார். இதைக் காரச் சட்னி சேர்த்துச் சாப்பிடலாம்.

குறிப்பு: இந்த வகை பணியாரங்களைக் கல்கத்தா சட்டியில்தான் செட்டிநாட்டு பகுதிகளில் செய்வார்கள்.

சிவப்பு அரிசி அம்மணிக் கொழுக்கட்டை

தேவை: சிவப்பு பச்சரிசி இடியாப்ப மாவு - ஒன்றரை கப்‌, மெல்லிய தேங்காய்ப்பல் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு, தண்ணீர்‌ - முக்கால்‌ கப்‌. தாளிக்க: கடுகு - கால்‌ டீஸ்பூன்‌, உளுத்தம்பருப்பு - கால்‌ டீஸ்பூன்‌, காய்ந்த மிளகாய் - 2.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: சிவப்பு பச்சரிசி இடியாப்ப மாவில் தேவையான அளவு உப்பு, தேங்காய்ப்பல் சேர்த்துக்‌ கலந்து, மிதமான சூட்டில்‌ உள்ள நீரை விட்டு மாவை கெட்டியாகப்‌ பிசைந்து கொள்ளவும்‌. மாவு மென்மையாக இருக்க வேண்டும்‌. ஆனால்‌, கையில்‌ ஒட்டக்‌ கூடாது. பிறகு, சிறு சிறு கோலி குண்டு அளவு கொழுக்கட்டைகளாக உருட்டி இட்லித்‌ தட்டில்‌ ஏழு நிமிடங்கள்‌ ஆவியில்‌ வேகவைத்து இறக்கவும். இதை கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய்‌ சேர்த்துத் தாளித்துச் சாப்பிடவும்.

தயிர் வடை

தேவை: உளுத்தம்பருப்பு - ஓர் உழக்கு, பச்சரிசி - ஒரு பிடி, தயிர் - ஓர் உழக்கு, பால் - கால் டம்ளர், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, காராபூந்தி - அலங்கரிக்க.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, வழுவழுவென்று அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், வெள்ளை துணி அல்லது பாலிதீன் பேப்பரில் மாவை எடுத்து, தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சூடான நீரில் வடையை ஒவ்வொன்றாகப் போட்டு உடனே தண்ணீரிலிருந்து எடுக்கவும். தயிரைக் கடைந்து அதில் பச்சை மிளகாய், இஞ்சியை அரைத்துச் சேர்க்கவும். இத்துடன் பச்சரிசி, பால், உப்பு சேர்த்து, இந்தக் கலவையில் வடைகளை ஊறவிடவும். நன்றாக ஊறிய பின் வடைகளைத் தனியாக எடுத்து, அதன்மீது காராபூந்தியைத் தூவிப் பரிமாறவும்.

பச்சரிசி பாயசம்

தேவை: பச்சரிசி - அரை உழக்கு, தேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்), வெல்லம் - 10, முந்திரி - 10, நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய் - 5 (பொடிக்கவும்).

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: பச்சரிசியைக் கழுவி சுத்தம் செய்து குக்கரில் 4 டம்ளர் தண்ணீர்விட்டு வேகவிடவும். நன்றாக வெந்தபின் வெல்லத்தை உடைத்து அரிசியில் போட்டு பச்சை வாசனைபோகும் வரை கொதிக்க விடவும். அத்துடன் தேங்காய்த்துருவலையும், முந்திரியை நெய்யில் வறுத்தும் சேர்க்கவும். பிறகு பொடித்த ஏலக்காயைத் தூவி நன்கு கரண்டியால் கலக்கி இறக்கவும்.

பால் பணியாரம்

தேவை: பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - முக்கால் கப், தேங்காய்ப்பால் - 2 கப், காய்ச்சிய பால் - கால் கப், ஏலக்காய்ப்பொடி - கால் டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: பச்சரிசியையும் உளுந்தையும் சேர்த்து இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஊறவைத்து நைஸாக அரைக்கவும். அதில் உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக்கொள்ளவும். மாவு கெட்டியாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில்வைத்து அதில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் இந்த மாவைச் சுண்டைக்காய் அளவில் கிள்ளி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பால், காய்ச்சிய பால், ஏலக்காய்ப்பொடி, சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கலந்துவைக்கவும். பரிமாறுவதற்குச் சற்றுமுன் பொரித்துவைத்துள்ள பணியாரங்களை வெந்நீரில் கொட்டி உடனே எடுத்து, கலந்துவைத்துள்ள பாலில் போட்டு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை ஊறவைத்து எடுத்துப் பரிமாறவும். அதிகம் ஊறினால் பணியாரம் கரைந்துவிடும்.

பால் பாயசம்

தேவை: பாஸ்மதி அரிசி - ஒரு பிடி, பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஓர் உழக்கு, ஏலக்காய் - 5 (பொடிக்கவும்), முந்திரி - 10, குங்குமப்பூ - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி, நெய் ஊற்றி சிறிது நேரம் வறுத்து எடுத்துக்கொள்ளவும். குக்கரில் பாலையும் அரிசியையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும். குக்கரில் விசில் வந்தவுடன் குக்கரை சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் வைக்கவும். அடுத்த விசில் வந்ததும் திறந்து சர்க்கரைச் சேர்த்து கரண்டியால் நன்கு மசித்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். சிறிதளவு குங்குமப்பூவைச் சூடான பால் ஊற்றி சிறிது நேரம் கழித்து பாயசத்தில் ஊற்றவும். முந்திரியைச் சிறிதளவு நெய்யில் வறுத்து போடவும். பின்பு, பொடித்த ஏலக்காயைச் சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கி இறக்கவும்.

முருங்கைக்காய் சாம்பார்

தேவை: துவரம்பருப்பு - அரை உழக்கு (வேகவைத்துக்கொள்ளவும்), முருங்கைக்காய் – 3 (விரல் நீளத்துக்கு நறுக்கவும்), சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (விழுதாக அரைக்கவும்), மிளகாய்த்தூள் – தேவையான அளவு (காரத்துக்கேற்ப), புளிக்கரைசல் - சிறிதளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், வெந்தயம் - சிறிதளவு, பெருங்காயம் - சிறிதளவு, சீரகம் - கால் டீஸ்பூன்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள் களைச் சேர்த்து சிவந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளி விழுதை ஊற்றி நன்றாகக் கிளறவும். பின்னர் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள் சேர்த்து புளிக்கரைசல் ஊற்றி கிளறி துவரம்பருப்பை நன்றாக மசித்துச் சேர்க்கவும். பிறகு உப்பு சேர்த்து தண்ணீர் 2 டம்ளர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்தபின் முருங்கைக்காய் துண்டுகளைச் சேர்த்து முருங்கைக்காய் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

வாழைத்தண்டுக் கூட்டு

தேவை: வாழைத்தண்டு – ஒரு துண்டு, பாசிப்பருப்பு – அரை உழக்கு, பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்), உப்பு, நெய் - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: பாசிப்பருப்பைக் கழுவித் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். வாழைத்தண்டை மெல்லியதாக நறுக்கவும். குக்கரில் வாழைத்தண்டு, பச்சை மிளகாய், சீரகம், உப்பு, வேகவைத்த பருப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து இறக்கவும். வாணலியில் நெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து சிவந்தபின் கறிவேப்பிலை போடவும். இந்தக் கலவையை வேகவைத்த கூட்டில் சேர்க்கவும். பிறகு. தேங்காய்த்துருவல் சேர்த்து ஒருமுறை கொதிக்கவிட்டு இறக்கவும்.

வாழைக்காய்க் குழம்பு

தேவை: வாழைக்காய் - 2, வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 6 பல் (தட்டிக்கொள்ளவும்), சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், புளிக்கரைசல் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, வறுத்த வேர்க்கடலைப் பொடி - சிறிதளவு. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், வெந்தயம் - சிறிதளவு, பெருங்காயம் - சிறிதளவு, சீரகம் - கால் டீஸ்பூன்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து சிவந்ததும் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் வாழைக்காயைச் சேர்த்து வதக்கியதும் சாம்பார் பொடி சேர்க்கவும். இதில் புளிக் கரைசல் சேர்த்து உப்பு போட்டு, மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். வாழைக்காய் நன்கு வெந்தபின் வேர்க்கடலை பொடி தூவி இறக்கவும்.

வாழைக்காய்ப் புட்டு

தேவை: வாழைக்காய் – 2, தேங்காய்த்துருவல் – 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: வாழைக்காயைத் தோலுடன் உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்து, தோலுரித்து கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து சிவந்தபின் பச்சை மிளகாய், துருவிய வாழைக்காய் சேர்த்துக் கிளறவும். பிறகு, தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

வாழைக்காய் வடை

தேவை: வாழைக்காய் - 2, வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கவும்), மல்லித்தழை - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, கடலை மாவு - 2 கப், சோள மாவு (கார்ன் ஃப்ளார்) - ஒரு கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: வாழைக்காயைத் தோலுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்து நன்றாக மசித்துக்கொள்ளவும். மசித்த வாழைக்காயுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை, கடலை மாவு, கார்ன் ஃப்ளார், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

வெள்ளை கொண்டைக்கடலை வடை

தேவை: வெள்ளை கொண்டைக்கடலை - ஓர் உழக்கு, வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - ஒரு கப், கறிவேப்பிலை – சிறிதளவு (பொடியாக நறுக்கவும்), மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கவும்), உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: கொண்டைக்கடலையை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கொழுக்கட்டை மாதிரி உருட்டிப்போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து உருண்டைகளைப் பொரித்தெடுக்கவும்.

வெள்ளைப் பணியாரம்

தேவை: பச்சரிசி – 3 கப், உளுந்து - அரை கப், பால் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நைசாக அரைத்தெடுத்து அதில் பால், சர்க்கரை சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து வைக்கவும். அரை மணி நேரம் கழித்து, சற்று குழிப்பணியாரக் கல்லில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, நன்கு காய்ந்ததும் தீயைச் சற்றே குறைத்து வைத்துக்கொண்டு, மாவை அடித்து ஊற்றவும். ஊற்றிய ஓரிரு விநாடிகளில், பணியாரம் மேலே எழும்பி வரும். வந்தவுடன் உடனடியாக அதைத் திருப்பிவிட்டு, முறுகவிடாமல் வெள்ளையாக எடுத்துவிட வேண்டும். இப்போது சுவையான செட்டிநாட்டு வெள்ளைப் பணியாரம் தயார். இதை காரச் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.

ஜவ்வரிசி உப்புமா

தேவை: ஜவ்வரிசி - ஓர் உழக்கு, வறுத்த வேர்க்கடலை – கால் உழக்கு, உருளைக்கிழங்கு - 2, வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - சிறிதளவு, தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: ஜவ்வரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டவும். உருளைக்கிழங்கைத் தோல் சீவி மெல்லியதாக நறுக்கவும். வேர்க்கடலையைக் கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்துத் தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பிறகு ஜவ்வரிசியைச் சேர்க்கவும். ஜவ்வரிசியின் நிறம் தெரியாமல் இருக்கும் வரை கிளறவும். பின்னர் உருளைக்கிழங்கைப் போட்டு வதக்கவும். அத்துடன் கறிவேப்பிலை, மஞ்சள்தூள், உப்பு போட்டு நன்றாக வெந்தபின் வேர்க்கடலைப் பொடி தூவி கிளறி, தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.

கோதுமை இடியாப்பம்

தேவை: கோதுமை மாவு - ஒன்றரை கப், தண்ணீர் – அரை கப், உப்பு – தேவையான அளவு. மாவு தயாரிக்க: ஒரு கிலோ முழு கோதுமையை தூசி, கல் நீக்கி வாணலியில் இரண்டு கப் கோதுமையை மட்டும் சேர்த்து வறுக்கவும். கோதுமை பொன்னிறமாக மாறி வெடிக்க ஆரம்பிக்கும். இதுதான் சரியான பதம். வறுத்த கோதுமையை எடுத்து அகன்ற தட்டில் கொட்டி ஆறவிடவும். இதேபோல மீதமிருக்கும் கோதுமையை வறுத்து ஆற விட்டு அரைக்கவும். அரைத்ததைச் சலித்தெடுத்துக்கொள்ளவும். இந்த மாவை இடியாப்பம் மற்றும் இனிப்புக் கொழுக்கட்டை செய்ய பயன்படுத்தலாம். இதிலிருந்து இடியாப்பம் செய்ய ஒன்றரை கப் மாவெடுத்துக் கொள்ளவும்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: அகன்ற பாத்திரத்தில் ஒன்றரை கப் மாவுடன் தேவையான அளவு உப்பு போட்டு பிசிறவும். பிறகு, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும். மாவு மென்மையாக இருக்க வேண்டும். ஆனால், கையில் ஒட்டக் கூடாது. இந்தப் பதத்துக்கு வந்த பிறகு, மாவை இடியாப்ப அச்சில் வைத்து இட்லித்தட்டில் பிழியவும். பிறகு, ஐந்து நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். சாப்பிடும்போது நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஒரு டீஸ்பூன் நெய் (விருப்பப்பட்டால்) ஊற்றி நன்றாகக் கலந்து சாப்பிடவும்.

முருங்கைக்காய் மசாலா

தேவை: முருங்கைக்காய் - 5, தக்காளி - 3, வெங்காயம் - 2, பூண்டு - 10 பல், வேகவைத்த பாசிப்பருப்பு - 3 டீஸ்பூன், சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி. தாளிக்க: உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பட்டை, பிரிஞ்சி இலை - சிறிதளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: முருங்கைக்காயைத் துண்டுகளாக நறுக்கி அரைவேக்காடாக வேகவைத்துக்கொள்ளவும்.தக்காளி, வெங்காயம், பூண்டை நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து நன்றாகச் சிவந்தபின் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நன்றாக வதக்கியபின் சாம்பார் பொடியைப் போட்டு கிளறி, வேகவைத்த முருங்கைக் காயைச் சேர்க்கவும். பிறகு உப்பு, வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி மூடி, அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக வேகவிட்டு இறக்கவும்.

பிஸ்கட் லட்டு

தேவை: மேரி பிஸ்கட் - ஒரு பாக்கெட், வெண்ணெய் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், பொடித்த பாதாம், முந்திரி - கால் கப், உப்பு - ஒரு சிட்டிகை, வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன், சாக்லேட் பவுடர் - ஒரு டீஸ்பூன், கோக்கோ பவுடர் - ஒரு டீஸ்பூன், ஐசிங் சுகர் - அரை கப், உலர்தேங்காய்த்துருவல் - சிறிதளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: பிஸ்கட்டை மிக்ஸியில் பவுடராக்கிக்கொள்ளவும். சர்க்கரையைப் பொடித்து பவுடராக்கி, வெண்ணெயுடன் நன்றாகக் கலக்கவும். இத்துடன் சாக்லேட் பவுடர், பிஸ்கட் பவுடரைப் போட்டு நன்கு கலக்கவும். பிறகு உப்பு, பொடித்த பாதாம், முந்திரியைச் சேர்த்து நன்கு கலக்கி, சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். தண்ணீரைச் சுடவைத்து அதில் ஐசிங் சுகரையும் கோக்கோ பவுடரையும் சேர்த்து கலந்து, பிறகு வெனிலா எசென்ஸ் விடவும். இதில் பிஸ்கட் கலவையை உருண்டைகளாக உருட்டி முக்கியெடுத்து, உலர்தேங்காய்த்துருவலில் புரட்டியெடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

கவுனி அரிசி பாயசம்

தேவை: கவுனி அரிசி - அரை உழக்கு, பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஓர் உழக்கு, ஏலக்காய் - 5, நெய் - சிறிதளவு, முந்திரி - 10, தேங்காய்த்துருவல் - ஒரு கப்.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: நெய்யில் முந்திரியை வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். கவுனி அரிசியை ரவையாக உடைத்துக்கொள்ளவும். குக்கரில் ரவையைப் போட்டு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைக்கவும். நன்றாக கரண்டியால் மசிக்கவும். பிறகு பாலை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து நன்றாகக் கொதிக்க விடவும். நன்கு கொதித்தபின் சர்க்கரையைப் போட்டு கிளறி கரைந்ததும் வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காய், தேங்காய்த்துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

கருப்பட்டிப் பணியாரம்

தேவை: பச்சரிசி - ஒரு கிலோ, கருப்பட்டி - முக்கால் கிலோ, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: முதலில் பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து காய்ந்த துணியில் அரிசியைப் பரப்பி உலர விடவும். அரிசி லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்போதே அரைத்து, ரவை சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ளவும். கருப்பட்டியை நன்றாகத் தட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தட்டிய கருப்பட்டி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும். கருப்பட்டி முழுவதும் கரைந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டிக்கொள்ளவும். கருப்பட்டிக் கரைசலைச் சிறிது சிறிதாகப் பச்சரிசி மாவில் சேர்த்துக் கிளறி, நெய் தடவி மூடி வைக்கவும். பணியாரம் செய்யும்போது மாவில் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி இட்லி மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். இதுவே பணியாரம் சுட ஏற்ற பதம். வாணலியை அடுப்பில்வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்துச் சூடானதும், அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். ஓர் அகலமான குழிக்கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும். மாவு ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போடவும். பிரவுன் கலர் வந்ததும் எடுத்துவிடவும். சுவையான கருப்பட்டிப் பணியாரம் தயார். நகரத்தார் வீட்டுப் பிள்ளையார் நோன்பில் கட்டாயம் இடம்பெறும் இந்தப் பணியாரம்.

கார வடை

தேவை: புழுங்கல் அரிசி - அரை கப், பச்சரிசி - அரை கப், கடலைப்பருப்பு - கால் கப், துவரம்பருப்பு - கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - கால் கப், ஜவ்வரிசி - 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - அரை மூடியில் இருந்து எடுத்தது, காய்ந்த மிளகாய் - 9, பெருங்காயம் - சிறிதளவு, சோம்பு - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: ஜவ்வரிசியைத் தனியாக ஊறவைக்கவும். அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். இத்துடன் சோம்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். பிறகு தேங்காய்த்துருவல், ஊறவைத்த ஜவ்வரிசியைச் சேர்த்து நன்றாக மாவுப் பதத்துக்குக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை ஊற்றி ஒருபக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பிப்போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.

முருங்கைக்காய்‌ ரசம்‌

தேவை: முருங்கைக்காய்‌ - 3 (விரல்‌ நீளத்துக்கு நறுக்கவும்‌) தக்காளி - 4 (விழுதாக அரைக்கவும்‌), பருப்புத்‌தண்ணீர்‌ - ஒரு டம்ளர்‌, புளிக்கரைசல்‌ - சிறிதளவு, பூண்டு - 10 பல்‌ (நசுக்கவும்‌), மல்லித்தழை - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகு - ஒரு டீஸ்பூன்‌, சீரகம்‌ - ஒரு டீஸ்பூன்‌, காய்ந்த மிளகாய்‌ - ஒன்று, வெல்லம்‌ - சிறிதளவு, மஞ்சள்தூள்‌ - சிறிதளவு, உப்பு, எண்ணெய்‌ - தேவையான அளவு தாளிக்க: கடுகு - கால்‌ டீஸ்பூன்‌, வெந்தயம்‌ - சிறிதளவு, பெருங்காயம்‌ - சிறிதளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: முருங்கைக்காயைத் தண்ணீர்விட்டு வேகவைக்கவும். மிளகு, சீரகம்‌, காய்ந்த மிளகாயை மிக்ஸியில்‌ கொரகொரப்பாக அரைக்கவும்‌. வாணலியில்‌ எண்ணெய்விட்டு காய்ந்ததும்‌ தாளிக்கும்‌ பொருள்களைச்‌ சேர்த்துத் தாளித்து தக்காளி விழுதை ஊற்றவும்‌. பின்பு அரைத்தவற்றைத்‌ தனியாகக்‌ கரைத்து ஊற்றவும்‌. அத்துடன்‌ வேகவைத்த முருங்கைக்காய் அதன் தண்ணீருடன் ஊற்றவும். பிறகு புளிக்கரைசல்‌, பருப்புத்‌தண்ணீர்‌, நசுக்கிய பூண்டைச்‌ சேர்க்கவும்‌. பிறகு மஞ்சள்தூள்‌, வெல்லம்‌, உப்பு சேர்த்து கொதித்த பின்‌ மல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவும்‌.

வெள்ளை கொண்டைக்கடலை பிரியாணி

தேவை: வெள்ளை கொண்டைக்கடலை - ஓர் உழக்கு, பாஸ்மதி அரிசி - ஓர் உழக்கு, வெங்காயம் - 2 (நறுக்கவும்), பூண்டு - 10 பல், இஞ்சி - சிறிய துண்டு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, புதினா - சிறிதளவு, தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன், முந்திரி - 6, தக்காளி - 4 (விழுதாக அரைக்கவும்), பட்டை - சிறிதளவு, கிராம்பு - 3, வாசனை (பிரிஞ்சி) இலை - சிறிது, ஏலக்காய் - 2, தயிர் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன், தண்ணீர் - 4 டம்ளர், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: கடலையை மூன்று மணி நேரம் ஊறவைத்து வேகவைக்கவும். அரிசியைச் சிறிதளவு நெய் ஊற்றி லேசாக வறுக்கவும். தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய்த்தூள், தேங்காய்த்துருவல், முந்திரி, மல்லித்தழை, புதினா ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, வாசனை இலை, ஏலக்காய் போடவும். சற்று வதங்கியதும் அரைத்த வற்றைச் சேர்த்து மேலும் வதக்கவும். பின்னர் தயிர் சேர்த்து வதக்கவும். இத்துடன் கொண்டைக்கடலை, அரிசி, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கிளறி குக்கரை மூடவும். இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்.

பீட்ருட் கோலா

தேவை: பீட்ருட் துருவியது - 2 கப், பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் - 5, பொட்டுக்கடலை மாவு – 4 டீஸ்பூன், பூண்டு – 5 பல், இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), முந்திரி - 10, தேங்காய்த்துருவல் - 3 டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் எல்லா பொருள்களையும் சேர்த்து நன்கு வதக்கி தண்ணீர் இல்லாமல் அரைத்து, சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

துவரம்பருப்புத் துவையல்

தேவை: துவரம்பருப்பு - கால் கப், தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பூண்டு - 2 பல், உப்பு - தேவைகேற்ப.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: துவரம்பருப்பை வெறும் வாணலியில் நன்கு நிறம் மாறும் வரை மிதமான சூட்டில் வறுக்கவும். ஆறிய பிறகு மற்ற அனைத்து பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சூடான சாதத்துடன் பரிமாறவும்.

சிறப்பு: தாய்ப்பால் தரும் பெண்கள் தினமும் துவரம்பருப்புத் துவையலை உண வில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

சிவப்பு அரிசி இடியாப்பம்‌

தேவை: சிவப்பு பச்சரிசி மாவு - ஒன்றரை கப்‌, தேங்காய்த்‌துருவல்‌ - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு, தண்ணீர்‌ - முக்கால்‌ கப்‌, நாட்டுச்‌ சர்க்கரை - தேவையான அளவு. மாவு தயாரிக்க: ஒரு கிலோ சிவப்பு பச்சரிசியை அரை மணி நேரம்‌ ஊறவைத்து நிழலில்‌ உலரவைக்கவும்‌. அரிசி நன்றாக உலர்ந்ததும்‌ மிக்ஸியில்‌ அல்லது மாவு மெஷினில் கொடுத்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்‌. அதிலிருந்து ஒன்றரை கப்‌ மாவை எடுத்துக்கொள்ளவும்‌.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

செய்முறை: ஒன்றரை கப்‌ மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து, மிதமான சூட்டில்‌ உள்ள நீரைவிட்டு மாவைக் கெட்டியாகப்‌ பிசைந்துகொள்ளவும்‌. மாவு மென்மையாக இருக்க வேண்டும்‌. ஆனால்‌, கையில்‌ ஒட்டக்‌ கூடாது. பிறகு, இடியாப்ப அச்சில்‌ மாவைப்‌ போட்டு இட்லித்‌ தட்டில்‌ மாவைப்‌ பிழிந்துவிட்டு ஐந்து நிமிடங்கள்‌ ஆவியில்‌ வேகவைத்து இறக்கினால்‌ சுவையான சிவப்பு அரிசி இடியாப்பம்‌ தயார்‌. சாப்பிடும்‌போது நாட்டுச்‌ சர்க்கரை, தேங்காய்த்‌துருவல்‌, ஒரு ஸ்பூன்‌ நெய்‌ (விருப்பப்பட்டால்‌) ஊற்றி, நன்றாக கலந்து சாப்பிடவும்‌.

இதை கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம்‌, வெங்காயம்‌, பச்சை மிளகாய்‌, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள்‌ சேர்த்து தாளித்தும்‌ சாப்பிடலாம்‌.

இதுவே பிரமாதம்!

தமிழ்நாட்டின் சகல பகுதிகளிலும் ‘செட்டிநாடு’ என்கிற அடைமொழியுடன் ஹோட்டல்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான ஹோட்டல்களுக்கும் செட்டிநாட்டின் உணவுக் கலாசாரத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது மட்டுமல்ல... செட்டிநாடு உணவு என்றாலே அசைவம்தான் என்கிற எண்ணத்தையும் இந்த ஹோட்டல்கள் ஏற்படுத்தியிருக்கின்றன. செட்டிநாட்டு சைவ உணவுகளும் அசைவ உணவுகளைப் போலவே தனித்துவமானவையே.

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்
உணவுகள்!

நம் தமிழ்நாட்டின் குறிப்பாக நகரத்தாரின் விருந்தோம்பல் மிக முக்கியமானது. சாப்பிடும் விஷயத்தில் குறையே வைக்காத குணமுடையவர்கள் நகரத்தார்கள். சைவ உணவுகளிலும் தமிழ்நாட்டின் வேறெந்த பகுதியிலும் கிடைக்காத புதிய ருசி வகைகள் செட்டிநாட்டில் உண்டு.

ஓர் உதாரணம்... மாங்காய், கத்திரி, அவரை, கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளை அவை அதிகம் கிடைக்கும் பருவத்தில் மொத்தமாக வாங்கி, உலர்த்தி, வற்றலாக்கி சேமித்துவைப்பது செட்டிநாட்டு மக்களின் வழக்கம். இந்த வற்றல்களை ஒரு கைப்பிடி போட்டு வைக்கும் குழம்பே வற்றல் மண்டி. சாதத்துக்கு மட்டுமன்றி இட்லி, தோசைக்கும் இதுவே பிரமாதம். இதுபோன்ற அருமையான உணவு வகைகளை உடல்நலத்துக்கு உகந்த வகையில் தயாரிக்க ரெசிப்பிகள் அளிக்கிறார் செட்டிநாட்டுச் சமையற்கலைஞர் விசாலாட்சி இளையபெருமாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு