லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

தீபாவளி ஸ்பெஷல்
பிரீமியம் ஸ்டோரி
News
தீபாவளி ஸ்பெஷல்

பூஜா எம்.சிவகுமார்

விதவிதமான இனிப்பு, கார வகைகள் செய்து உறவுகளோடும் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்வதும், விருந்தோம்பலும் இந்த வருட தீபாவளிக்கு சாத்தியமா என்பது சந்தேகமே.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

திருமணம் போன்ற பிரமாண்ட நிகழ்ச்சிகளே எளிமையாக மாறிவிட்ட இந்த கொரோனா காலத்தில் பண்டிகைகளையும் வீடுகளுக்குள்ளேயே எளிமையாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்காக சம்பிரதாயங்களையும் சந்தோஷத்தையும் விட்டுக்கொடுக்க முடியுமா... ஒவ்வொரு நிமிடத்தையும் ஆரோக்கியமாக வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள நாம், இந்த வருட தீபாவளியிலும் அதைப் பின்பற்றுவோம்.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

வழக்கமாகச் செய்யும் இனிப்பு, காரங்களைத் தவிர்த்து ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தரக்கூடிய பலகாரங் களையும் விருந்தில் பரிமாறும் உணவு வகைகளையும் செய்து காட்டியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த பூஜா

எம்.சிவகுமார். சமையற்கலையின் மீதான ஆர்வத்தில் ஊட்டச்சத்து இயல் துறை படிக்கும் மாணவி இவர்.

பூஜா செய்துள்ள பலகாரங்கள் அனைத்தும் உங்கள் தீபாவளியை மேலும் சிறப்பாக்கும்.

ஹேப்பி தீபாவளி.

அட்டையில்: பூஜா எம்.சிவகுமார்

அட்டை, படங்கள்: ஆர்.எஸ்.வெற்றி

தேங்காய் புட்டிங்

தேவை: இளநீர் - 2 கப், அகர் அகர் (கடற்பாசி) - 15 கிராம், சர்க்கரை - கால் கப், தேங்காய்ப்பால் - ஒரு கப்.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: ஒரு கடாயில் இளநீர், அகர் அகர் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். அகர் அகர் கரையும்வரை அதை கொதிக்கவைத்து அடிப்பிடிக்காமல் கிளறி இறக்கவும். ஒரு பாத்திரத்தில் மூன்றுக்கு ஒரு பங்கு தேங்காய்ப்பாலை ஊற்றி ஃப்ரிட்ஜில் (ப்ரீசரில் அல்ல) 30 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் அதன் மேல் மூன்றுக்கு ஒரு பங்கு இளநீர் - அகர் அகர் கலவையை ஊற்றி, இரண்டு நிமிடங்கள் ஃப்ரீசரில் வைக்கவும். அடுத்து ஒரு பங்கு தேங்காய்ப்பால் - ஒரு பங்கு இளநீர் - அகர் அகர் கலவை என்று ஊற்றி கலவை முழுவதும் முடியும் வரை மாற்றி சேர்த்து இறுதியாக ஐந்து மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின்னர் க்யூப்களாக வெட்டிப் பரிமாறவும்.

தேங்காய் லட்டு

தேவை: முழு கொழுப்புள்ள பால் - ஒரு கப், தேங்காய்த்துருவல் - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், கடலை மாவு - கால் கப்.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: ஒரு கடாயில் கடலை மாவு தவிர்த்து மற்ற பொருள்களைச் சேர்த்து நன்றாகக் கலந்துகெட்டியாகும் வரை கிளறவும். பின்பு, கடலை மாவைச் சேர்த்து நன்கு கலந்து ஒரு நிமிடம் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். இதை முழுவதுமாக குளிர்வித்துப் பின் உருண்டையாகப் பிடித்தால், சுவையான தேங்காய் லட்டுகள் தயார்.

குறிப்பு: கைகளில் நெய் தடவிக்கொண்டு உருண்டைகளைப் பிடித்தால் லட்டு பிடிக்க சுலபமாக இருக்கும்.

தேங்காய்ப்பால் பணியாரம்

தேவை: உளுத்தம்பருப்பு - 150 கிராம், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, தேங்காய் - ஒன்று, வெல்லம் - 150 கிராம், உப்பு - தேவையான அளவு.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: தேங்காய்ப்பால் எடுத்து அத்துடன் வெல்லம் சேர்த்துக் கரைத்து வைத்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பு, அரிசியைச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் அதில் அரைத்த மாவை போண்டா போல உருட்டிப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். அதை அப்படியே எடுத்துத் தேங்காய்ப்பாலில் சேர்த்து நன்கு ஊறவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

ராகி பிஸ்கட்

தேவை: ராகி மாவு - ஒரு கப், கோதுமை மாவு - ஒரு கப், வெண்ணெய் - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப், பால் - தேவையான அளவு, பேக்கிங் பவுடர் - அரை டேபிள்ஸ்பூன்.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: ராகி (கேழ்வரகு) மாவை வெறும் வாணலியில் சேர்த்து சில நிமிடங்கள் நன்றாக வறுக்கவும். அதை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி நன்கு ஆறவிடவும். இதில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து இரண்டு முறை சலிக்கவும். மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். இத்துடன் சலித்த மாவைச் சேர்த்து சப்பாத்தி மாவைப்போல தேவையான அளவு பால் சேர்த்துப் பிசையவும். மாவை அரை அங்குல தடிமனாக உருட்டி, விருப்பமான வடிவத்துக்கு வெட்டிக்கொள்ளவும். இதை வெண்ணெய் அல்லது நெய் தடவிய தட்டில்வைத்து கனமான பாத்திரம் அல்லது கடாயில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை இட்லி பாத்திரத்தில் வேக விடவும். `அவன்’ என்றால், 300 டிகிரி ஃபாரன்ஹீட்டில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

ராகி கேக்

தேவை: ராகி (கேழ்வரகு) மாவு - முக்கால் கப், கோதுமை மாவு - கால் கப், தயிர் - ஒரு கப், பொடித்த சர்க்கரை - முக்கால் கப், எண்ணெய் - கால் கப், பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், பால் - 2 டீஸ்பூன், வெண்ணிலா எசென்ஸ் - சிறிதளவு.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: ராகி மாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவைச் சேர்த்து இரண்டு முறை சலிக்கவும். ஒரு பாத்திரத்தில் தயிர், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் எண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும். சலித்த மாவை அதோடு சேர்த்துக் கலக்கவும். இந்த மாவுக் கலவையில் வெண்ணிலா எசென்ஸ், பால் சில துளிகள் சேர்த்துக் கிளறவும். அனைத்தும் சேர்த்து மீண்டும் நன்கு கிளறவும். ஒரு தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி கிளறிய மாவை பாதி அளவு மட்டும் ஊற்றி, 45 நிமிடங்கள் மிதமான சூட்டில் இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுத்தால் சுவையான ராகி கேக் ரெடி.

ராகி லட்டு

தேவை: ராகி (கேழ்வரகு) மாவு - ஒரு கப், நறுக்கிய பேரீச்சைப்பழம் - ஒரு கப், முந்திரிப்பருப்பு - அரை கப், வேர்க்கடலை - முக்கால் கப், துருவிய வெல்லம் - ஒரு கப்.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: பேரீச்சைப்பழம், முந்திரி ஆகியவற்றை 10 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைக்கவும். வெறும் வாணலியில் ராகி மாவை இரண்டு நிமிடங்கள் வரை நன்றாக வறுத்து ஆறவைக்கவும். ஊறவைத்த பேரீச்சை, முந்திரி மற்றும் வேர்க்கடலையை வெல்லத்துடன் சேர்த்து ஒரு மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும். அதில் ராகி மாவைச் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் இரண்டு சுழற்று சுழற்றி இறக்கவும். இதை சிறு உருண்டைகளாகப் பிடித்து எடுத்துவைத்தால் ராகி லட்டு ரெடி.

வேர்க்கடலை பர்ஃபி

தேவை: வறுத்து தோல் நீக்கப்பட்ட வேர்க்கடலை - ஒரு கப், வெல்லம் - ஒரு கப்.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: மிக்ஸியில் வேர்க்கடலையைப் பொடித்துக்கொள்ளவும். வெல்லத்தைக் காய்ச்சி பாகு எடுக்கவும். வெல்லப்பாகுடன் பொடித்த வேர்க்கடலைச் சேர்த்து நன்கு கலந்து விருப்பமான வடிவத்தில் செய்து பரிமாறவும்.

ரவா லட்டு

தேவை: ரவை - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப், தேங்காய்த்துருவல் - 50 கிராம், நெய் - 5 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 15 கிராம், ஏலக்காய் - 2.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து ரவையைப் பழுப்பு நிறமாக மாறும் வரை வறுத்து இறக்கி ஆறவைக்கவும். பிறகு அதே கடாயில், நெய்விட்டு முந்திரியை வறுக்கவும். ஒரு பாத்திரத்தில், சர்க்கரை, தேவையான அளவு நீர், தேங்காய்த்துருவல் சேர்த்து சூடாக்கி கம்பிப் பாகுப் பதத்துக்குக் கிளறவும். இதில் வறுத்த ரவை மற்றும் முந்திரியைச் சேர்த்து நன்கு கிளறவும். கைப்பொறுக்கும் சூட்டில் இருக்கும்போது உருண்டைகளாகப் பிடித்துவைத்தால் ரவா லட்டு ரெடி.

குறிப்பு: கலவை முழுமையாகக் குளிர்ந்துவிட்டால் உருண்டைகளாகப் பிடிக்க முடியாது.

கடலை மாவு லட்டு

தேவை: கடலை மாவு - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப், நெய் - கால் கப்.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: ஒரு வாணலியில் கடலை மாவைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து நன்றாக ஆறவிடவும். பின்னர் ஒரு மிக்ஸியில் கடலை மாவையும் சர்க்கரையையும் சேர்த்து நன்கு அரைக்கவும். நெய்யைச் சூடாக்கி அந்தக் கலவையில் ஊற்றி, மிதமான சூட்டில் உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளலாம். கடலை மாவை அதிகமாக வறுக்க வேண்டாம்.

கடலை மாவு பர்ஃபி

தேவை: கடலை மாவு - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப், நெய் - 4 டீஸ்பூன்.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: வாசனை வரும்படி கடலை மாவை வறுத்துக்கொள்ளவும். இதை முழுவதுமாக குளிர்விக்கவும். ஒரு கடாயில் தேவையான அளவு நீர், சர்க்கரை சேர்த்துக் கம்பிப் பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். இதில் கடலை மாவைச் சேர்த்து நெய்விட்டுக் கிளறவும். இந்தக் கலவையை நெய் தடவப்பட்ட தட்டில் கொட்டி ஒரு மணி நேரம் ஆறவிடவும். பின்னர் சிறு துண்டுகளாக வெட்டியெடுத்துப் பரிமாறவும்.

கோதுமை அல்வா

தேவை: கோதுமை ரவை - ஒரு கப், தண்ணீர் - நான்கு கப், சர்க்கரை - இரண்டே கால் கப், நெய் - கால் கப்.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: கோதுமை ரவையை மூன்று கப் தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். இதை முழுமையாகப் பிழிந்து பால் எடுக்கவும். மெல்லிய பருத்தித் துணியில் அதை வடிகட்டவும். மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து பிழிந்தெடுக்கவும். சர்க்கரையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கம்பிப்பதத்துக்குப் பாகு காய்ச்சவும். இதில் கோதுமைப்பாலைவிட்டு அல்வா பதத்துக்குக் கிளறி இறக்கவும்.

பீட்ரூட் அல்வா

தேவை: துருவிய பீட்ரூட் - ஒரு கப், துருவிய தேங்காய்த்துருவல் - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், பால் - ஒரு கப், கடலை மாவு - கால் கப், நெய் - கால் டீஸ்பூன்.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை ஒரு வாணலியில் பால், பீட்ரூட், தேங்காய்த்துருவல், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிக் கொதிக்கவைக்கவும். கெட்டியானதும் இதில் கடலை மாவு, நெய் சேர்த்துக் கிளறவும். பால் முழுவதுமாக உறிஞ்சப்பட்டு அல்வா பதம் வரும் வரை நன்றாகக் கிளறி இறக்கவும்.

மாம்பழ அல்வா

தேவை: நறுக்கிய மாம்பழம் - 400 கிராம், வெல்லம் - 175 கிராம், நெய் - 5 டீஸ்பூன்.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: ஒரு தடிமனான பாத்திரத்தில் நறுக்கிய மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறவும். அது கூழாக மாறும்போது வெல்லம் சேர்த்துக்கிளறவும். வெல்லம் கரைந்து கலவை கெட்டியாகும்வரை கிளறவும். ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக்கிளறவும். நெய் கசிய தொடங்கியதும் அல்வா தயாராகிவிட்டது என்பதை அறிந்து இறக்கவும்.

பூசணி விதை திரட்டு

தேவை: பூசணி விதைகள் - இரண்டு கப், நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் - முக்கால் கப்.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: பூசணி விதைகளை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும். இதை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து மீதமான தீயில் வைக்கவும். நன்கு சுருண்டு வரும்போது இறக்கவும்.

பலாப்பழ ஜாம்

தேவை: பலாப்பழச் சுளைகள் - 10, வெல்லம் - 200 கிராம், நெய் - ஒரு டீஸ்பூன்

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: ஒரு வாணலியில் பலாச்சுளைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைக்கவும். வேகவைத்த பலாச்சுளைகளை முழுவதுமாக ஆறவிட்டு, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். ஒரு வாணலியில் வெல்லத்தில் தேவையான அளவு தண்ணீர்விட்டு காய்ச்சி வெல்லம் கரையும்வரை சூடாக்கி வடிகட்டவும். வாணலியில் நெய் சேர்த்து, அரைத்துவைத்திருக்கும் பலாப்பழக்கூழ் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கிளறவும். இதில் வெல்லப்பாகைச் சேர்த்து ஜாம் பதம் வரும்வரை கிளறி இறக்கினால் பலாப்பழ ஜாம் தயார்.

பால் கோவா

தேவை: கொழுப்பு நீக்காத பால் - ஒரு லிட்டர், பனங்கற்கண்டு - 250 கிராம்.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பால்விட்டு கொதிக்க வைக்கவும். பால் பாதியாகச் சுண்டும்வரை சூடாக்கவும். இந்த நிலையில் பனங்கற்கண்டு சேர்த்துக் கரைக்கும் வரை கிளறவும். பால் திரண்டு வரும்போது நன்கு கிளறி இறக்கவும். அடிப்பிடிப்பதைத் தடுக்க மிதமான தீயில் தொடர்ந்து கிளறவும். குளிர்ந்த பிறகு, இது மேலும் கெட்டியாகிவிடும்.

கோதுமை ஐஸ்க்ரீம்

தேவை: கோதுமை மாவு - அரை கப், கொழுப்பு நீக்காத பால் - ஒரு லிட்டர், பனங்கற்கண்டு - 200 கிராம், பால் பவுடர் - கால் கப், ரோஸ் மில்க் எசென்ஸ் - 1 டீஸ்பூன்.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: ஒரு கப் பாலைத் தனியாக எடுத்துவைக்கவும். மீதி பாலை பாதியாகும் அளவுக்குச் சுண்ட காய்ச்சவும். இதில் பனங்கற்கண்டு சேர்த்துக் கிளறவும். இதற்கிடையில், ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பால் பவுடர் மற்றும் ஒரு கப் பால் ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறி இறக்கிக்கொள்ளவும். இந்தக் கலவையை ஏற்கெனவே கொதிக்கவைத்த பாலில் சேர்த்து சில நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். கூழ் பதம்வரும்வரை நன்றாகக் கிளறவும். இதை முழுமையாக ஆறவைத்தால், அதில் கட்டிகள் உண்டாகும். இதில் ரோஸ் மில்க் எசென்ஸ் சேர்த்து, மிக்ஸியில் நன்கு அடிக்கவும். பின்னர் காற்றுபுகாத டப்பாவில் அதை ஊற்றி இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைத்துப் பரிமாறினால் சுவையான கோதுமை ஐஸ்க்ரீம் ரெடி.

ஜவ்வரிசி புட்டிங்

தேவை: ஜவ்வரிசி - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப், சோள மாவு - கால் கப், பால் - நான்கு கப்.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: ஜவ்வரிசியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகும் வரை வேகவைத்து இறக்கி இரண்டு முறை குளிர்ந்த நீரில் கழுவவும். ஒரு பாத்திரத்தில் சோள மாவு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு வாணலியில் பால், சர்க்கரை, சோள மாவுக் கரைசல் சேர்த்து நன்கு கலக்கவும். கெட்டியாக ஆரம்பிக்கும்போது ​வேகவைத்த ஜவ்வரிசிக் கூழைச் சேர்த்து நன்கு கலக்கி கொதித்ததும் நெய் அல்லது எண்ணெய் தடவப்பட்ட தட்டில் ஊற்றி இரண்டு மணி நேரம் ஆறவைத்துப் பரிமாறவும்.

கேரட் கீர்

தேவை: கேரட் - அரை கிலோ, முந்திரிப்பருப்பு - 10, பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 100 கிராம், பொடித்த பாதாம்பருப்பு - 5, குங்குமப்பூ - சிறிதளவு.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: தோல் நீக்கி கேரட்டைச் சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கவும். முந்திரிப்பருப்பை 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். நறுக்கிய கேரட் மற்றும் ஊறவைத்த முந்திரி ஆகியவற்றை தேவையான நீர்விட்டு வேகவைக்கவும். பின்னர் இதை ஆறவைத்து மிக்ஸியில் நன்கு கூழாக அரைத்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். ஒரு வாணலியில் பால்விட்டு கொதிக்கவிடவும், பின்னர் கேரட் - முந்திரி விழுது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். இது கெட்டியாகத் தொடங்கும். அப்போது குங்குமப்பூ, பாதாம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கினால் கேரட் கீர் ரெடி.

இட்லி தேங்காய் இனிப்பு

தேவை: இட்லி அரிசி - இரண்டு கப், துருவிய தேங்காய் - அரை கப், உப்பு - சிறிதளவு, வெல்லம் - ஒரு கப், கசகசா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், நெய், தேங்காய்த்துருவல் - சிறிதளவு (மேலே தூவ)

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து உப்பு, தண்ணீர்விட்டு கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். பின்பு இரண்டு அங்குலக்குழி உள்ள தட்டில் நெய் தடவி மாவை ஊற்றி பத்து நிமிடங்கள் வேகவிடவும். பின்பு அதை எடுத்து ஆறவிட்டு, பின்னர் சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டிவைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை கலந்து சூடாக்கவும். பின்னர் அதை வடிகட்டவும். மிக்ஸியில் துருவிய துருவிய தேங்காய், கசகசா, கடலைப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில், வெல்லப்பாகைவிட்டு அதில் வெட்டப்பட்ட இட்லித் துண்டுகளைச் சேர்க்கவும். நன்றாகக் கிளறி இட்லியை ஊறவைக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். மிதமான தீயில் ஊறவைத்த இட்லியை மூடி போட்டு ஐந்து நிமிடங்கள்வரை சூடாக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து விழுதைச் சேர்க்கவும். மீண்டும் இரண்டு நிமிடங்கள்வரை சூடாக்கி இறக்கவும். இதில் நெய் சேர்த்து தேங்காய்த்துருவல் தூவி பரிமாறவும்.

தேங்காய்ப்பால் ரசம்

தேவை: தேங்காய் - ஒன்று, ஆமணக்கு எண்ணெய் - சிறிதளவு, கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - தேவையான அளவு, நசுக்கிய பூண்டு - 15 பற்கள், துவரம்பருப்பு - முக்கால் கப், தக்காளி - 6, மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், ரசப்பொடி - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, சமையல் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: தக்காளியை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து விழுது எடுக்கவும். இதில் தண்ணீர் சேர்க்க வேண்டாம். தேங்காயைத் துருவி தண்ணீர் சேர்த்து இரண்டு முறை அரைக்கவும். நன்கு வடிகட்டவும். தேங்காய்ப்பால் அடர்த்தியாக இருக்க வேண்டும். துவரம்பருப்பைச் சிறிது ஆமணக்கு எண்ணெய் சேர்த்து வேகவைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு பற்கள் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் தக்காளி விழுது, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பச்சை வாசனை போகும்வரை சூடாக்கவும். இதில் வேகவைத்த பருப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொதித்ததும் சிறிதளவு உப்பு, மிளகாய்த்தூள், ரசப்பொடி சேர்த்துக் கலக்கவும். பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து மூடி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். இறுதியாக மல்லித்தழைகளைச் சேர்க்கவும். சுவையான தேங்காய்ப்பால் ரசம் தயார்.

பீட்ரூட் அடை

தேவை: இட்லி அரிசி - அரை கிலோ, பீட்ரூட் (நடுத்தர அளவு) - 3, பெரிய வெங்காயம் - 2, காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் - ஒன்று (துருவவும்), கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, பின்னர் தண்ணீரை வடித்து காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வெங்காயம், பீட்ரூட்டை நறுக்கிக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, இத்துடன் நறுக்கிய பீட்ரூட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும். இந்தக் கலவையை அரிசி மாவுடன் கலந்து அடை மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து மாவை ஊற்றியெடுத்தால் சுவையான பீட்ரூட் அடை தயார்.

வாதநாராயண இலை அடை

தேவை: இட்லி அரிசி - 400 கிராம், துவரம்பருப்பு - 200 கிராம், வாதநாராயண இலைகள் - ஒரு கைப்பிடி அளவு, சீரகம் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: இட்லி அரிசி, துவரம்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அரிசியுடன் சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இவற்றோடு வாதநாராயண இலைகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து மாவை ஊற்றியெடுத்தால், மொறுமொறுப்பான அடை தயார்.

உருளைக்கிழங்கு வறுவல்

தேவை: சின்ன (பேபி) உருளைக்கிழங்கு - 250 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரிக்கவும். அதை இரண்டு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் புரட்டியெடுத்துப் பரிமாறவும்.

சொதிக் குழம்பு

தேவை: தேங்காய்ப்பால் - ஒரு லிட்டர், கேரட் - 3, பீன்ஸ் - 10, உருளைக்கிழங்கு - 2, பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 10, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சைப் பட்டாணி - 50 கிராம், உப்பு - தேவையான அளவு.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: தேங்காயைத் துருவி இரண்டு முறை பிழிந்து ஒரு லிட்டர் அளவு பால் தயார் செய்யவும். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நடுத்தர அளவில் நறுக்கிக்கொள்ளவும். ஒரு கடாயில் தண்ணீர்விட்டு காய்களுடன் பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வேகவைக்கவும். நன்கு வெந்தபின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து, மூடி போட்டு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். இதில் கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கவும்.

வெந்தய இட்லி

தேவை: இட்லி அரிசி - 4 கப், வெந்தயம் - கால் கப், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: உளுத்தம்பருப்பு, வெந்தயத்தைச் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். இட்லி அரிசியைத் தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். இட்லி அரிசியைத் தனியாக அரைத்தெடுக்கவும். உளுத்தம்பருப்பு, வெந்தயத்தைத் தனியாக அரைத்து, பின்னர் இரண்டையும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்கவைக்கவும். பிறகு மாவை நன்றாக கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்துப் பரிமாறவும். இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காய மல்லிச்சட்னி சுவையான துணையாக இருக்கும்.

பாவ் பாஜி மசாலா

தேவை: வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 2, தக்காளி - 4, உருளைக்கிழங்கு - 4, பச்சைப் பட்டாணி - 100 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், மல்லித்(தனியா)தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணியை ஒன்றாக வேகவைக்கவும். உருளைக்கிழங்கைத் தோலுரித்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும். ஒரு வாணலியில் வெண்ணெய், இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு கிளறவும். அடுத்து வேகவைத்து பிசைந்த உருளைக்கிழங்கு, பட்டாணியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மல்லித்(தனியா)தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வரை வேகவிடவும். இத்துடன் வெண்ணெய் சேர்த்தால் சூப்பரான பாவ் பாஜி மசாலா தயார்.

இட்லி சியாலி

தேவை: சிறிய அளவு இட்லி - 25, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, இஞ்சி - ஓர் அங்குல துண்டு, பூண்டு - 7, கிராம்பு - சிறிதளவு, மல்லி (தனியா) - அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, தேங்காய் - அரை மூடி, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: இட்லிகளை சிறிய துண்டுகளாக்கிக்கொள்ளவும். ஒரு மிக்ஸியில் நறுக்கிய தக்காளி, பூண்டு, இஞ்சி, கிராம்பு, தனியா, காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலையைச் சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் அரைத்த தக்காளி கலவை, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கிளறவும். பின்னர் இட்லித்துண்டுகளை சேர்த்து சூடாகும் அளவுக்கு புரட்டியெடுத்தால் இட்லி சியாலி தயார்.

பாலக் சூப்

தேவை: பாலக் கீரை - ஒரு கட்டு, பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, பச்சை மிளகாய் - ஒன்று, பூண்டு - 2, பாசிப்பருப்பு - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: ஒரு வாணலியில் தண்ணீர்விட்டு பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, சீரகம் சேர்த்து நன்கு கலந்து வதக்கவும். இதில் கீரை, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அதை முழுவதுமாகக் குளிரவைத்து மிக்ஸியில் அரைக்கவும். ஒரு வாணலியில் அரைத்த கலவையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். இத்துடன் உப்பு, மிளகுத்தூள், சிறிதளவு வெண்ணெய் சேர்த்துப் பரிமாறினால் சூப்பரான பாலக் கீரை சூப் தயார்.

சப்பாத்தி நூடுல்ஸ்

தேவை: சப்பாத்தி (பெரிய அளவு) - 10, பெரிய வெங்காயம் - 3, பீன்ஸ் - 20, உருளைக்கிழங்கு - 3, கேரட் - 2, தக்காளி - 3, பச்சை மிளகாய் - 4, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித் (தனியா) தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

தீபாவளி ஸ்பெஷல்... ஹெல்த்தி - ஈஸி 30 வகை ஸ்வீட் - காரம் - சூப்

செய்முறை: சப்பாத்திகளை நீள நீளமாக நூடுல்ஸ் போல நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றை சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்சேர்த்து காய்ந்ததும் கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் வேகவைத்த காய்கறிகளை இத்துடன் சேர்த்து கரம் மசாலாத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் சப்பாத்தித் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறினால் வித்தியாசமான சுவையுடன் சப்பாத்தி நூடுல்ஸ் தயார்.