Published:Updated:

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

பணியாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
பணியாரம்

அகிலா விமல்

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

வெந்தயப் பணியாரம்

தேவை: இட்லி அரிசி - அரை கப், பச்சரிசி - அரை கப், உளுந்து - 3 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செய்முறை: இட்லி அரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை மூன்று மணி நேரம் ஊறவைத்து, மிருதுவாக அரைத்தெடுத்து உப்பு சேர்த்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும் அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பிவிடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்து சூடாக காரச் சட்னியுடன் பரிமாறவும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மக்காச்சோள பட்டர் பணியாரம்

தேவை: மக்காச்சோள ரவை - ஒரு கப், பேக்கிங் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், மைதா - முக்கால் கப், சமையல் சோடா - கால் டீஸ்பூன், பால் - அரை கப், கெட்டித்தயிர் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. ஹனி பட்டர் செய்ய: டேபிள் பட்டர் - கால் கப், தேன் - 3 டேபிள்ஸ்பூன். (இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும்.)

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: எண்ணெய் தவிர்த்து, இதர பொருள்களை ஒன்றாகக் கலக்கவும். மாவு கெட்டியாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பிவிடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்து சூடாக ஹனி பட்டருடன் பரிமாறவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொண்டைக்கடலைப் பணியாரம்

தேவை: வெள்ளைக்கொண்டைக்கடலை - ஒரு கப், நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று, கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு, நறுக்கிய பச்சை மிளகாய் - 2, பூண்டு - 6 பற்கள், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். கடலை மாவு, சமையல் சோடா, உப்பு எண்ணெய் தவிர்த்து மற்றவற்றை ஊறவைத்த கடலையோடு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் நைஸாக அரைக்கவும். இதனுடன் கடலை மாவு, உப்பு, சமையல் சோடாவைக் கலந்துவைக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து ஒவ்வொரு குழியிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இருபுறமும் நன்கு வெந்தவுடன் எடுத்து, சூடாகப் பரிமாறவும்.

அவல் பணியாரம்

தேவை: பச்சரிசி - ஒன்றரை கப், கெட்டி அவல் - முக்கால் கப், சின்ன வெங்காயம் - 12, பச்சை மிளகாய் - 2, நன்றாக புளித்த தயிர் - ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: பச்சரிசியைக் கழுவி தண்ணீரிலும் அவலை தயிரிலும் தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊறவிடவும். பின்னர் இவற்றைத் தனித்தனியே மிருதுவாக அரைத்து ஒன்றாகக் கலக்கவும். உப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்து காரச் சட்னியுடன் பரிமாறவும்.

ஓட்ஸ் வெஜ் பணியாரம்

தேவை: ஓட்ஸ் - முக்கால் கப், ரவை - முக்கால் கப், கோதுமை மாவு - ஒரு கப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவு, நீர்மோர் - கரைக்கத் தேவையான அளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை, நறுக்கிய காய்கறிகள் (வெங்காயம், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ்) - அரை கப், நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், ரவை, கோதுமை மாவு, நீர்மோர், சமையல் சோடா, உப்பு சேர்த்து தோசை மாவுப்பதத்துக்குக் கரைத்துவைக்கவும். இதை அரை மணி நேரம் ஊறவிடவும். ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து இத்துடன் காய்கறிகள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அரை பதத்துக்கு வெந்ததும் இறக்கி மாவுடன் கலக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பிவிடவும். நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

கறுப்பு உளுந்துப் பணியாரம்

தேவை: பச்சரிசி, இட்லி அரிசி, உடைத்த கறுப்பு உளுந்து - தலா முக்கால் கப், காய்ந்த மிளகாய் - 3, மிளகு - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: அரிசி, உளுந்தை ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும். காய்ந்த மிளகாய், மிளகு இரண்டையும் வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து அரைத்து மாவுடன் கலக்கவும். ஆறு மணி நேரம் புளிக்கவைக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு லேசாக காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்து சூடாகப் பரிமாறவும்.

ராகி தண்டுக்கீரைப் பணியாரம்

தேவை: ராகி மாவு - ஒரு கப், பச்சரிசி - அரை கப், இட்லி அரிசி - அரை கப், உளுந்து - முக்கால் கப், தண்டுக்கீரை - ஒரு கப், சிறிய வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 2 சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: அரிசி வகைகள் மற்றும் உளுந்து ஆகியவற்றைக் கழுவி, தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். கிரைண்டர் அல்லது மிக்ஸியில் ராகி மாவுடன் அரிசி வகைகள், உளுந்தைச் சேர்த்து அரைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். கீரை, மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சீரகம் சேர்த்து, பின்னர் நறுக்கிய கீரை, மிளகாய், வெங்காயம், உப்பு ஒரு சிட்டிகை, சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். பின்னர் இந்தக் கலவையை மாவுடன் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பிவிடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்து சூடாகப் பரிமாறவும்.

ராகி இனிப்புப் பணியாரம்

தேவை: ராகி மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - கால் கப், கருப்பட்டித்தூள் அல்லது நாட்டுச் சர்க்கரை - அரை கப், பால் - அரை கப், சமையல் சோடா - 2 சிட்டிகை, எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: மாவு வகைகள், பால், நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டித்தூள் ஒன்றாகச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு கரைத்துவைக்கவும். சமையல் சோடா சேர்த்து லேசாக கலந்துகொள்ளவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய்விட்டு லேசாக காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில் வைத்து நன்றாக வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

கம்பு தேங்காய்ப் பணியாரம்

தேவை: கம்பு மாவு - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுந்து - மூன்றில் ஒரு பங்கு கப், தேங்காய்த்துருவல் - கால் கப், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: பச்சரிசி, உளுந்து இரண்டையும் கழுவி, ஒன்றாகக் கலந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். கம்பு மாவை சிறிதளவு தண்ணீரில் தனியே கரைத்து ஊறவிடவும். பின்னர் தேங்காய்த்துருவல், ஊறவைத்த அரிசி, பருப்பு, கம்பு மாவுடன், தேவையான அளவு தண்ணீர்விட்டு, தோசை மாவுப் பதத்துக்கு அரைக்கவும். இதில் உப்பு கலந்து ஒரு மணி நேரம் வைத்திருக்கவும். இத்துடன் சமையல் சோடா கலந்துவைக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு லேசாக காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

கோதுமை பேரீச்சைப் பணியாரம்

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், விதை நீக்கிய பேரீச்சைப் பழம் - 10, பால் - அரை கப், பச்சரிசி மாவு - கால் கப், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: பேரீச்சைப் பழத்தைப் பொடியாக நறுக்கவும். எண்ணெய் தவிர்த்து, இதர பொருள்களை ஒன்றாகக் கலக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய்விட்டு லேசாக காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

பிரண்டைப் பணியாரம்

தேவை: இட்லி அரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுந்து - மூன்றில் ஒரு பங்கு கப், பொடியாக நறுக்கிய பிரண்டை - கால் கப், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: அரிசி வகைகள் மற்றும் உளுந்தைக் கழுவி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். இதை மிக்ஸியில் சேர்த்து அரைக்கும்போதே நறுக்கிய பிரண்டையையும் சேர்த்து மிருதுவாக அரைத்தெடுக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து இரு மடங்காகும் வரை புளிக்க விடவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு லேசாக காய்ந்ததும் அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும். நன்றாகப் புளிக்கவிடுவதால் பிரண்டை, நாக்கில் அரிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும்.

சாமை பச்சைப்பட்டாணிப் பணியாரம்

தேவை: சாமை அரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுந்து - மூன்றில் ஒரு பங்கு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, வேகவைத்த பச்சைப்பட்டாணி - முக்கால் கப், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: சாமை, பச்சரிசி, உளுந்தை ஒன்றாகக் கலந்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு அரைக்கவும். இத்துடன் உப்பு சேர்த்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் தக்காளி, சிறிதளவு உப்பு, பட்டாணி, மசாலா வகைகளைச் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும். இதை சாமை மாவுக் கலவையுடன் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு காய்ந்ததும் அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பிவிடவும். நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

சாமை பரங்கிப் பணியாரம்

தேவை: சாமை அரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுந்து - ஒரு கப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவு, துருவிய பரங்கிக்காய் - ஒரு கப், சோம்பு - ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, காய்ந்த மிளகாய் - 5, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: சாமை, பச்சரிசி, உளுந்தை ஒன்றாகக் கலந்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்கவும். இதில் உப்பு சேர்த்து ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும். பரங்கிக்காய், சோம்பு, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் தண்ணீர் சேர்க்காமல் ஒன்றாக விழுதுபோல் அரைக்கவும். இவற்றை சாமை மாவுக் கலவையுடன் கலக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு லேசாக காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

துவரம்பருப்புப் பணியாரம்

தேவை: இட்லி அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், உளுந்து - கால் கப், பச்சை மிளகாய் - 2, தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - 2 சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: அரிசி, பருப்பு, உளுந்தை ஒன்றாகக் கழுவி இரண்டு மணி நேரம் ஊறவிடவும். அரைக்கும்போது மிளகாய், தேங்காய் சேர்த்து அரைத்தெடுத்து தேவையான அளவு உப்பு, சமையல் சோடா சேர்த்துக் கலந்துவைக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு லேசாக காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பிவிடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

பாசிப்பருப்புப் பணியாரம்

தேவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சரிசி - கால் கப், உளுந்து - கால் கப், சின்ன வெங்காயம் - 10, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, சமையல் சோடா - 2 சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: அரிசி, பருப்பு, உளுந்தை ஒன்றாகக் கழுவி இரண்டு மணி நேரம் ஊறவிடவும். அரைக்கும்போது உப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து மிருதுவாக அரைக்கவும். அரைத்த மாவில் சமையல் சோடா கலந்து வைக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பிவிடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

குதிரைவாலி பொன்னாங்கண்ணி பனீர் பணியாரம்

தேவை: குதிரைவாலி அரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுந்து - மூன்றில் ஒரு பங்கு கப், பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கப், துருவிய பனீர் - 100 கிராம், பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - ஒன்று உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: குதிரைவாலி அரிசி, பச்சரிசி, உளுந்தைக் கழுவி ஒன்றாகக் கலந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். இதில் உப்பு சேர்த்து, ஆறு மணி நேரம் புளிக்க விடவும். கீரை, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் சீரகம் சேர்த்துப் பொரிந்ததும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கீரையைச் சேர்த்து வதக்கவும். கீரை நன்றாக வதங்கியவுடன், துருவிய பனீர், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு புரட்டு புரட்டி இறக்கவும். இதை ஆறவைத்து குதிரைவாலி மாவுடன் கலக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.

குதிரைவாலி தக்காளி சில்லி பணியாரம்

தேவை: குதிரைவாலி அரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுந்து - ஒரு கப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவு, தக்காளி - 3, காய்ந்த மிளகாய் - 8, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: குதிரைவாலி அரிசி, பச்சரிசி, உளுந்தைக் கழுவி ஒன்றாகக் கலந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். மிக குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து, மிருதுவாக அரைத்தெடுக்கவும். இதில் உப்பு சேர்த்து, ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். தக்காளி, காய்ந்த மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதை குதிரைவாலி மாவுடன் சேர்த்துக் கலந்துகொள்ளவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு லேசாக காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

தினை கேரட் சீஸ் பணியாரம்

தேவை: தினை மாவு - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுந்து - மூன்றில் ஒரு பங்கு கப், சற்று பெரிய கேரட் - ஒன்று, சீஸ் ஸ்லைஸ் - 5, மிளகுத்தூள்- 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: பச்சரிசி, உளுந்தைக் கழுவி ஒன்றாகக் கலந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். தினை மாவைத் தண்ணீர் சேர்த்து தனியாகக் கரைத்துவைக்கவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, தோசை மாவுப் பதத்துக்கு அரைத்து ஆறு மணி நேரம் புளிக்க விடவும். சீஸ் ஸ்லைஸைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கேரட்டைச் சுத்தம்செய்து துருவிக்கொள்ளவும். அரைத்துவைத்திருக்கும் தினை மாவில், கேரட் துருவல், சீஸ், மிளகுத்தூள் கலந்துவைக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பிவிடவும். மிதமான தீயில் வைத்து, நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

தினை மரவள்ளிக்கிழங்குப் பணியாரம்

தேவை: தினை மாவு - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுந்து - ஒரு கப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவு, மரவள்ளிக்கிழங்கு - ஒன்று, காய்ந்த மிளகாய் - 6, சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: பச்சரிசி, உளுந்தைக் கழுவி, ஒன்றாகக் கலந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். தினை மாவைச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தனியாகக் கரைத்து வைக்கவும். கிழங்கைத் தோல் சீவி நன்றாகக் கழுவிக்கொள்ளவும். பின்னர் சமையல் சோடா எண்ணெய் தவிர்த்து, எல்லாவற்றையும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாக, தோசை மாவுப் பதத்துக்கு அரைக்கவும். பின்னர் சமையல் சோடா கலந்து வைக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பிவிடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

புட்டரிசிப் பணியாரம்

தேவை: புட்டரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுந்து - கால் கப், இஞ்சி - ஓர் அங்குல துண்டு, பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: புட்டரிசி, பச்சரிசி, உளுந்து ஆகியவற்றை கழுவி ஒன்றாகக் கலந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு அரைத்து ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும். இஞ்சியைத் தோல் சீவி துருவிக்கொள்ளவும். வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி மாவில் சேர்த்துக் கலந்துகொள்ளவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு லேசாக காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பிவிடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

ரவை ஃப்ரூட் அண்டு நட்ஸ் பணியாரம்

தேவை: வறுத்த ரவை - கால் கப், மைதா மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், பால் - அரை கப், சர்க்கரை - ஒரு கப், டூட்டி ஃப்ரூட்டி, கிஸ்மிஸ், பொடித்த முந்திரிக்கலவை - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, சமையல் சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: எண்ணெய் தவிர்த்து, இதர பொருள்களை ஒன்றாகச் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்துவைக்கவும். இதை அரை மணி நேரம் ஊறவிடவும். மாவு கெட்டியாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பிவிடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

ஜவ்வரிசிப் பணியாரம்

தேவை: இட்லி அரிசி - ஒன்றரை கப், மாவு ஜவ்வரிசி - ஒரு கப், பச்சை மிளகாய் - 4, சின்ன வெங்காயம் - 10, நன்கு புளித்த தயிர் - ஒரு கப், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் தண்ணீரிலும், ஜவ்வரிசியை நான்கு மணி நேரம் தயிரிலும் ஊறவைக்கவும். முதலில் இட்லி அரிசியை அரைத்தெடுத்து, பின்னர் ஜவ்வரிசியை அரைத்தெடுக்கவும். இவற்றை உப்பு, சமையல் சோடா சேர்த்து ஒன்றாகக் கலந்துவைக்கவும். இவற்றுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாகி நறுக்கிச் சேர்க்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பிவிடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்து சூடாகப் பரிமாறவும்.

சோளம் மல்லி புதினா பணியாரம்

தேவை: வெள்ளைச்சோள மாவு - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுந்து - ஒரு கப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவு, பச்சை மிளகாய் - 3, நறுக்கிய மல்லித்தழை, புதினா இலைகள் - ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: பச்சரிசியையும் உளுந்தையும் கழுவி ஒன்றாகக் கலந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். சோள மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும். பின்னர் அரிசி, உளுந்து, சோள மாவு ஆகியவற்றைத் தேவையான அளவு உப்பு சேர்த்து, தோசை மாவுப் பதத்துக்கு அரைத்துவைக்கவும். இதை ஆறு மணி நேரம் புளிக்க விடவும். இதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மல்லி, புதினா கலக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பிவிடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

சோளம் வேப்பம்பூ பணியாரம்

தேவை: வெள்ளைச்சோள மாவு - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுந்து - ஒரு கப்பில் மூன்றில் பங்கு அளவு, காய்ந்த வேப்பம்பூ - கால் கப், காய்ந்த மிளகாய் - 2, மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: பச்சரிசியையும் உளுந்தையும் கழுவி ஒன்றாகக் கலந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். சோள மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும். பின்னர் அரிசி, உளுந்து, சோள மாவு ஆகியவற்றில் தேவையான அளவு உப்பு சேர்த்து, மிருதுவாக தோசை மாவுப் பதத்துக்கு அரைத்துவைக்கவும். இதை ஆறு மணி நேரம் புளிக்க விடவும். கடாயில் 2 டீஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் வேப்பம்பூ, மிளகுத்தூள், சீரகத்தூள், காய்ந்த மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். இதை ஆறவைத்து ஒன்றிரண்டாகப் பொடித்து மாவில் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில்வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்து சூடாகப் பரிமாறவும்.

வரகரிசி ஸ்வீட் கார்ன் பணியாரம்

தேவை: வரகரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுந்து - ஒரு கப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவு, வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: வரகரிசி, பச்சரிசி, உளுந்தை ஒன்றாகக் கழுவி தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து, தோசை மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். இதை ஆறு மணி நேரம் புளிக்க விடவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் ஸ்வீட் கார்ன் முத்துகள், சிறிதளவு உப்பு சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கி இறக்கி ஆறவைத்து மாவுடன் கலக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பிவிடவும். நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

வரகரிசி பீட்ரூட் பணியாரம்

தேவை: வரகரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுந்து - ஒரு கப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவு, துருவிய பீட்ரூட் - ஒரு கப், மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: வரகரிசி, பச்சரிசி, உளுந்தை ஒன்றாகக் கழுவி தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து, தோசை மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். இதை ஆறு மணி நேரம் புளிக்க விடவும். ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும் துருவிய பீட்ரூட், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். லேசாக தண்ணீர் தெளித்து மூடிபோட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பிறகு இதை ஆறவைத்து வரகரிசி மாவில் கலந்துவிடவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

ஷெஸ்வான் ஸ்டைல் காரப்பணியாரம்

தேவை: இட்லி அரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுந்து - கால் கப், வினிகர் - கால் கப், காய்ந்த மிளகாய் - 15, பூண்டு - 15 பற்கள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: அரிசி வகைகள், உளுந்தைக் கழுவி ஒன்றாகக் கலந்து ஊறவைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, தோசை மாவுப் பதத்துக்கு அரைத்தெடுத்து ஆறு மணி நேரம் புளிக்க விடவும். வினிகரில் பூண்டுப் பற்கள், காய்ந்த மிளகாய் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு இதை மிக்ஸியில் விழுதுபோல அரைத்து மாவுடன் கலக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், மாவை ஊற்றி ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில்வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

மிக்ஸ்டு ஹெர்பல் பணியாரம்

தேவை: இட்லி அரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுந்து - கால் கப், நறுக்கிய ஓமவல்லி, துளசி, வெற்றிலை - எல்லாம் கலந்து அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: அரிசி வகைகள் மற்றும் உளுந்தைக் கழுவி ஒன்றாகக் கலந்து ஊறவைக்கவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, தோசை மாவுப் பதத்துக்கு அரைத்தெடுத்து ஆறு மணி நேரம் புளிக்க விடவும். இதில் நறுக்கிய ஹெர்பல் இலைகளைச் சேர்த்துக் கலந்துவிடவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

மஷ்ரூம் மசாலா பணியாரம்

தேவை: இட்லி அரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுந்து - கால் கப், பட்டன் அல்லது சிப்பிக் காளான் - 100 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள்- 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: அரிசி வகைகள் மற்றும் உளுந்தைக் கழுவி ஒன்றாகக் கலந்து ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து தேவையான அளவு உப்பு சேர்த்து, தோசை மாவுப் பதத்துக்க அரைத்தெடுத்து ஆறு மணி நேரம் புளிக்க விடவும். வெங்காயம், தக்காளி, மஷ்ரூமைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும் வெங்காயம், மஷ்ரூம் இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். பிறகு தக்காளி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும். இதை ஆறவைத்து மாவில் கலந்துவிடவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, எண்ணெய்விட்டு காய்ந்ததும், மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில்வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

மீல் மேக்கர் பீன்ஸ் பணியாரம்

தேவை: இட்லி அரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுந்து - கால் கப், வேகவைத்த சிறிய மீல் மேக்கர் - ஒரு கப், பச்சை பீன்ஸ் - 10, உப்பு, மிளகுத்தூள், எண்ணெய் - தேவையான அளவு.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்... 30 வகை குழிப்பணியாரங்கள்!

செய்முறை: அரிசி வகைகள் மற்றும் உளுந்தைக் கழுவி ஒன்றாகக் கலந்து ஊறவைக்கவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, தோசை மாவுப் பதத்துக்கு அரைத்தெடுத்து ஆறு மணி நேரம் புளிக்க விடவும். பீன்ஸைக் கழுவி, நார் எடுத்துப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், பீன்ஸைச் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். பாதி அளவு வெந்து நிறம் மாறியவுடன், மீல் மேக்கரைச் சேர்த்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்க்கள் வதக்கி இறக்கவும். இதை ஆறவைத்து மாவுடன் கலக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பிவிடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

திடீரென வீட்டுக்கு விருந்தினர்கள் வந்துவிட்டால், வீட்டில் இருக்கும் இட்லி மாவில் ஒரு சிறிதளவு வெங்காயம், இரண்டு பச்சை மிளகாயை நறுக்கிச் சேர்த்து, சீரகம் சேர்த்து, எண்ணெய்விட்டு நிமிடங்களில் சுவையான குழிப்பணியாரத்தை நம்மால் தயாரித்து விட முடியும்.

குழிப்பணியாரம் தமிழ் இலக்கியங்களிலும், தமிழர் உணவு வகைகளிலும் முக்கியமான ஒரு சிற்றுண்டி வகையாக இருந்திருக்கிறது. காரப் பணியாரம், இனிப்புப் பணியாரம் என இரண்டு வகைகளிலும் இதைத் தயாரிப்பார்கள். பண்டிகை மற்றும் திருவிழா நாள்களில் எல்லோர் வீடுகளிலும் இந்த இரண்டு வகை பணியாரங்களும் தவறாது இடம்பிடிக்கும். பஜ்ஜி, வடை, போண்டா போன்ற எண்ணெய் அதிகம் பிடிக்கும் ஸ்நாக்ஸ் வகைகளைவிட அதிக எண்ணெய் தேவைப்படாத குழிப்பணியாரத்தைப் பலரும் விரும்பி உண்பார்கள்.

காரச் சட்னி, பூண்டுச் சட்னி போன்றவற்றை சைடிஷ்ஷாகச் சேர்த்துச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். பலரும் காலை நேர டிபனாகவும் மாலை நேரத்தில் சிற்றுண்டியாகவும் குழிப்பணியாரத்தை விரும்பிச் சாப்பிடுவதைப் பார்க்கலாம்.

இதுவரை இட்லி மாவிலும், கோதுமை மாவிலும் மட்டுமே குழிப்பணியாரத்தை ருசித்த உங்களுக்கு, 30 வகையான குழிப்பணியார ரெசிப்பிகளை அழகிய படங்களுடன் பகிரும் ராஜபாளையத்தைச் சேர்ந்த சமையற் கலைஞர் அகிலா விமல், “இது வயதானவர்களுக்கும் பருமனைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் ஏற்ற உணவு. பிரமாதமாகச் சமைக்கத் தெரியாதவர்கள்கூட அரை மணி நேரத்தில் செய்து மற்றவர்களை அசத்தக்கூடிய ஒரு பலகார வகை” என்று உற்சாகமூட்டுகிறார்.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் பணியாரங்களை நீங்களும் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.

அட்டையில்: அகிலா விமல்

அட்டைப்படம்: ஆர்.எம்.முத்துராஜ்