Published:Updated:

உடலை இளைக்க வைக்கும் 30 வகை நீர்க்காய்கள் ரெசிப்பி!

எஸ்.மீனாட்சி

பிரீமியம் ஸ்டோரி
நீர்க்காய்கள் ரெசிப்பி
நீர்க்காய்கள் ரெசிப்பி
வெள்ளை முள்ளங்கி அக்கி ரொட்டி
வெள்ளை முள்ளங்கி அக்கி ரொட்டி

வெள்ளை முள்ளங்கி அக்கி ரொட்டி

தேவை: பச்சரிசி மாவு - ஒரு டம்ளர், சீரகம் - ஒரு டீஸ்பூன், துருவிய முள்ளங்கி - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 5, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பாத்திரத்தில் அரிசி மாவு, சீரகம், துருவிய முள்ளங்கி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்துகொள்ளவும். பின்பு மாவை உருண்டைகளாக எடுத்து மெல்லிய, சிறு ரொட்டிகளாகத் தட்டவும். தோசை தவாவில் எண்ணெய் தடவி ரொட்டிகளைப் போட்டு சுட்டெடுக்கவும்.

குறிப்பு: முள்ளங்கி ரெசிப்பிகள் அனைத்தையும் சிவப்பு முள்ளங்கியிலும் செய்யலாம்.

முள்ளங்கி மசாலா சப்பாத்தி
முள்ளங்கி மசாலா சப்பாத்தி

முள்ளங்கி மசாலா சப்பாத்தி

தேவை: கோதுமை மாவு - 500 கிராம், துருவிய முள்ளங்கி - 200 கிராம், புதினா - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு அதில் துருவிய முள்ளங்கி, இஞ்சி பூண்டு விழுது, புதினா, மிளகாய்த்தூள், சோம்பு, உப்பு சேர்த்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்துகொள்ளவும். பின்பு சப்பாத்திக் குழவியில் மாவைத் தொட்டு சிறு சிறு சப்பாத்திகளாகத் திரட்டவும். தவாவில் எண்ணெய்விட்டு சப்பாத்திகளைப் பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முள்ளங்கி பொரித்த கூட்டு
முள்ளங்கி பொரித்த கூட்டு

முள்ளங்கி பொரித்த கூட்டு

தேவை: முள்ளங்கி - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்), பயத்தம்பருப்பு - 100 கிராம், தக்காளி - 100 கிராம் (நறுக்கவும்), பச்சை மிளகாய் - 6 (நறுக்கவும்), பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்).

செய்முறை: பயத்தம்பருப்பை தண்ணீர்விட்டுக் கழுவி, குக்கரில் சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். பாதி வேகும்போது நறுக்கிய முள்ளங்கி, தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரை மூடி, வெயிட் போட்டு மூன்று விசில்விட்டு இறக்கவும். பின்பு சிறு கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, பயத்தம்பருப்பு கலவையில் சேர்த்துக் கலக்கவும். முள்ளங்கி பொரித்த கூட்டு தயார்.

இது சாதம், சப்பாத்தி எல்லாவற்றுக்கும் சுவையான சைடிஷ் ஆகும்.

முள்ளங்கித் துவையல்
முள்ளங்கித் துவையல்

முள்ளங்கித் துவையல்

தேவை: முள்ளங்கி - 100 கிராம் (துருவவும்), வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), பூண்டு - 10 பல், காய்ந்த மிளகாய் - 8, உளுத்தம்பருப்பு - 50 கிராம், கொள்ளு - 4 டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, கொள்ளு, காய்ந்த மிளகாயைப் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பின்பு அதிலேயே வெங்காயத்தையும் வதக்கிக்கொள்ளவும். பூண்டையும் வதக்கவும். முள்ளங்கித் துருவலையும் வதக்கவும். மிக்ஸியில் புளி, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பாதி அரைபடும்போது வதக்கிய வெங்காயம், முள்ளங்கித் துருவல் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்பு சிறிதளவு எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

இதை சாதத்தில் சேர்த்துப் பிசைந்தும் இட்லி, தோசை, சப்பாத்திக்கு சைடிஷ் ஆகவும் பயன்படுத்தலாம்.

முள்ளங்கி கோஃப்தா
முள்ளங்கி கோஃப்தா

முள்ளங்கி கோஃப்தா

தேவை: துருவிய முள்ளங்கி - ஒரு கப், கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 6, பூண்டு - 10 பல் (நறுக்கவும்), நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு, எண்ணெய் - 300 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் துருவிய முள்ளங்கி, இஞ்சித் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, சீரகம், உப்பு சேர்த்து 2 டீஸ்பூன் காய்ந்த எண்ணெய்விட்டு நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

இதை மாலை நேரச் சிற்றுண்டியாகப் பயன்படுத்தலாம்.

வெள்ளைப்பூசணி ஓலன்
வெள்ளைப்பூசணி ஓலன்

வெள்ளைப்பூசணி ஓலன்

தேவை: வெள்ளைப்பூசணி - கால் கிலோ (சதுரமான துண்டுகளாக நறுக்கவும்), தேங்காய்த் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - அரை கப், உப்பு - அரை டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப).

தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு.

செய்முறை: வாணலியில் நறுக்கிய பூசணிக்காய், உப்பு சேர்த்து, அரை டம்ளர் நீர்விட்டு வேகவைக்கவும். பின்பு அதில் தேங்காய்த் துருவல், சீரகம், பச்சை மிளகாயை விழுதாக அரைத்துச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெயில் சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலையைத் தாளித்து சேர்த்து, கொத்தமல்லித்தழையும் சேர்க்கவும்.

இதை டயட்டில் இருப்பவர்கள் அப்படியே சாப்பிடலாம். அடைக்கு இது சுவையான சைடிஷ்.

வெள்ளைப்பூசணி ஜூஸ்
வெள்ளைப்பூசணி ஜூஸ்

வெள்ளைப்பூசணி ஜூஸ்

தேவை: துண்டுகளாக நறுக்கிய வெள்ளைப்பூசணி - ஒரு கப், புதினா - ஒரு கைப்பிடி அளவு, சோம்பு - அரை டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - பாதியளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், (தேவைப்பட்டால்) கறுப்பு உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: 2 டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் பூசணித்துண்டுகள், சோம்பு, புதினா போட்டு மூடிவைக்கவும். ஆறிய பின்பு பூசணி, புதினா, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு அரைத்த விழுதை பூசணித்துண்டுகளைப் போட்டுவைத்த நீரில் சேர்த்து, அதில் கறுப்பு உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பருகவும்.

குறிப்பு: பூசணியை வெந்நீரில் போடாமல் பச்சையாக அரைத்தால் சளி பிடிக்க வாய்ப்புள்ளது.

வெள்ளைப்பூசணி அல்வா
வெள்ளைப்பூசணி அல்வா

வெள்ளைப்பூசணி அல்வா

தேவை: வெள்ளைப்பூசணி - கால் கிலோ (துருவவும்), சர்க்கரை - 100 கிராம், நெய் - 50 கிராம், முந்திரி - 20, உலர்திராட்சை - 20, பாதாம் - 10, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை.

செய்முறை: துருவிய பூசணியைப் பிழிந்து நீரைத் தனியாக வைக்கவும். வாணலியில் நெய்விட்டு பாதாம், முந்திரி, திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும். பின்பு வாணலியில் பிழிந்துவைத்துள்ள பூசணியைச் சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும். இப்போது அதே வாணலியில் பிழிந்த பூசணித் தண்ணீர்விட்டு, அதில் சர்க்கரை சேர்த்து கம்பி பாகு வைக்கவும். அதில் வதக்கிய பூசணித் துருவல் சேர்த்து நன்கு கிளறவும். சுருண்டு வரும்போது கேசரி பவுடர் சேர்க்கவும். கடைசியில் ஏலக்காய்த்தூள், வறுத்த பாதாம், முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து எடுத்தால், சுவையான பூசணி அல்வா தயார்.

வெள்ளைப்பூசணி கேழ்வரகு தோசை
வெள்ளைப்பூசணி கேழ்வரகு தோசை

வெள்ளைப்பூசணி கேழ்வரகு தோசை

தேவை: கேழ்வரகு மாவு - ஒரு டம்ளர், வெள்ளைப்பூசணி (நறுக்கியது) - ஒரு கப், பச்சரிசி மாவு - அரை கப், கொத்தமல்லித்தழை - அரை கப், ஓமம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 50 மில்லி, பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: மிக்ஸியில் பூசணிக்காய், பச்சை மிளகாய், ஓமம், சிறிதளவு உப்பு சேர்த்து அரைக்கவும். அந்த விழுதைப் பாத்திரத்தில் போட்டு கேழ்வரகு மாவு, பச்சரிசி மாவு, சிறிதளவு உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். பின்பு தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும்.

இதை நீரிழிவாளர்கள், டயட்டில் இருப்பவர்கள் ரெகுலராக சாப்பிடலாம்.

வெள்ளைப்பூசணி பயறு சாலட்
வெள்ளைப்பூசணி பயறு சாலட்

வெள்ளைப்பூசணி பயறு சாலட்

தேவை: துருவிய வெள்ளைப்பூசணி - ஒரு கப், முளைகட்டிய பச்சைப்பயறு - 50 கிராம், வேகவைத்த வேர்க்கடலை - 50 கிராம், கேரட் - ஒன்று (துருவவும்), வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு, சீரகத்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - பாதியளவு, கறுப்பு உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: துருவிய பூசணியை நீர் வடித்து பாத்திரத்தில் சேர்க்கவும். அத்துடன் முளைகட்டிய பச்சைப்பயறு, வேகவைத்த வேர்க்கடலை, கேரட், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, சீரகத்தூள், கறுப்பு உப்பு சேர்க்கவும். அதில் எலுமிச்சைச்சாறு பிழிந்து கலந்து சாப்பிடவும்.

டயட்டில் இருப்பவர்கள் இதை காலை உணவாக ஒரு சுக்கா ரொட்டியுடன் சாப்பிடலாம். ஜிம் செல்பவர்களும் காலையில் இதைச் சாப்பிடலாம்.

சுரைக்காய் மசாலா பிரட்டல்
சுரைக்காய் மசாலா பிரட்டல்

சுரைக்காய் மசாலா பிரட்டல்

தேவை: சுரைக்காய் - 300 கிராம் (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், தக்காளி - 50 கிராம் (நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (நீளத் துண்டுகளாக நறுக்கவும்), தேங்காய்த் துருவல் - அரை கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பூண்டு - 10 பல் (நறுக்கவும்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், நறுக்கிய சுரைக்காய் சேர்த்து வேகவைத்து இறக்குவதற்கு முன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கினால், சுரைக்காய் மசாலா தொக்கு தயார்.

இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சப்பாத்திக்கு சைடிஷ் ஆகவும் பயன்படுத்தலாம்.

சுரைக்காய் முளைகட்டிய கொள்ளுக்கூட்டு
சுரைக்காய் முளைகட்டிய கொள்ளுக்கூட்டு

சுரைக்காய் முளைகட்டிய கொள்ளுக்கூட்டு

தேவை: பொடியாக நறுக்கிய சுரைக்காய் - 2 கப், முளைகட்டிய கொள்ளு - 100 கிராம், பச்சை மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு - தேவைக்கேற்ப, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு, வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்).

செய்முறை: முளைகட்டிய கொள்ளு, நறுக்கிய சுரைக்காய், உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், அரிசி, மிளகு, சீரகத்தை விழுதாக அரைக்கவும். பிறகு குக்கரைத் திறந்து வேகவைத்த கூட்டில் அரைத்த விழுதைச் சேர்த்து சூடாக்கவும். எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்தவுடன், கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பை எண்ணெயில் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி கூட்டில் சேர்க்கவும்.

இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பிரெட், தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் தொட்டு சாப்பிடலாம்.

சுரைக்காய் கேழ்வரகு பக்கோடா
சுரைக்காய் கேழ்வரகு பக்கோடா

சுரைக்காய் கேழ்வரகு பக்கோடா

தேவை: துருவிய சுரைக்காய் - ஒரு கப், கேழ்வரகு மாவு - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்), பூண்டு - 10 பல் (தோலுடன் நறுக்கவும்), துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 6 (மெல்லிய, நீள துண்டுகளாக நறுக்கவும்), கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு, அரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 300 மில்லி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர்விடாமல் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பிசைந்துவைத்ததை உதிர் உதிராகப் போட்டு பொரித்தெடுத்தால், சுவையான பக்கோடா தயார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர்.

சுரைக்காய் கார்ன் மிக்ஸ்
சுரைக்காய் கார்ன் மிக்ஸ்

சுரைக்காய் கார்ன் மிக்ஸ்

தேவை: பொடியாகிய நறுக்கிய சுரைக்காய் - ஒரு கப், மக்காச்சோளம் - ஒரு கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

வொயிட் சாஸ் செய்ய: வெண்ணெய் - அரை டீஸ்பூன், பால் - அரை டம்ளர், பூண்டு - 4 பல் (நறுக்கவும்), சோள மாவு - 2 டீஸ்பூன், காயை வேகவைத்து வடித்த நீர் - ஒரு டம்ளர்.

செய்முறை: சுரைக்காய், மக்காச்சோளம் இரண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு வேகவைக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு பூண்டு சேர்த்து வதக்கி, சோள மாவைப் பாலில் கரைத்துச் சேர்த்துப் புரட்டவும். அது கெட்டிப்படும்போது, காய் வேகவைத்து வடித்த நீர் சேர்க்கவும். பின்பு இறக்கி வேகவைத்த சுரைக்காய், மக்காச்சோளம், நறுக்கிய கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள், உப்பு சேர்த்துப் பரிமாறவும்.

சுரைக்காய் மக்காச்சோளம் ரொட்டி
சுரைக்காய் மக்காச்சோளம் ரொட்டி

சுரைக்காய் மக்காச்சோளம் ரொட்டி

தேவை: காய்ந்த மக்காச்சோளத்தை மெஷினில் கொடுத்து அரைத்த மாவு - 500 கிராம், சுரைக்காய் - அரை கிலோ (துருவவும்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்), பச்சை மிளகாய் - 6, ஓமம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை (அ) புதினா (நறுக்கியது) - ஒரு கப், எண்ணெய் - 500 மில்லி, வெங்காயம் - ஒன்று (விழுதாக அரைக்கவும்), உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். மக்காச்சோள மாவில் சுரைக்காய்த் துருவல், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, வெங்காய விழுது, ஓமம், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும். வாழையிலையில் எண்ணெய் தடவி மாவை மெல்லிய ரொட்டிகளாகத் தட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும்.

இதற்குத் தொட்டுக்கொள்ள காரச் சட்னி, ஊறுகாய், தயிர் நன்றாக இருக்கும். இதை டயட்டில் இருப்பவர்கள் இரவு உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

புடலங்காய் பருப்பு உசிலி
புடலங்காய் பருப்பு உசிலி

புடலங்காய் பருப்பு உசிலி

தேவை: பொடியாக நறுக்கிய புடலங்காய் - அரை கிலோ, ஊறவைத்த கடலைப்பருப்பு (அ) துவரம்பருப்பு - அரை டம்ளர், காய்ந்த மிளகாய் - 6, மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், புளி - ஒரு துண்டு, உப்பு, மஞ்சள்தூள் - தேவைக்கேற்ப, தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 50 கிராம், கடுகு - சிறிதளவு, கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு.

செய்முறை: ஊறவைத்த கடலைப்பருப்பு (அ) துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், மல்லி, புளி, சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நீர்விடாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும், கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய புடலங்காயைச் சேர்த்து சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து வதக்கி வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய்விட்டு அரைத்த பருப்புக் கலவை சேர்த்து நன்கு உதிர் உதிராக வரும் வரை கிளறவும். அதில் வதக்கிய புடலங்காயைச் சேர்த்து நன்கு புரட்டியெடுக்கவும்.

இது ரசம், தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

புடலங்காய் மசால் வடை
புடலங்காய் மசால் வடை

புடலங்காய் மசால் வடை

தேவை: பொட்டுக்கடலை மாவு - 100 கிராம், புடலங்காய் - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 50 கிராம் (நறுக்கவும்), பச்சை மிளகாய் - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்), பூண்டு - 10 பல், சோம்பு - ஒரு டீஸ்பூன், ஓட்ஸ் (அ) ரவை - 100 கிராம், புதினா - ஒரு கைப்பிடி அளவு (நறுக்கவும்), எண்ணெய் - 300 மில்லி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, ரவை (அ) ஓட்ஸ், நறுக்கிய புடலங்காய், வெங்காயம், உப்பு, அரைத்த விழுது, புதினா சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், மாவை வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுத்தால், சுவையான புடலங்காய் மசால் வடை தயார்.

புடலங்காய் மிளகூட்டல்
புடலங்காய் மிளகூட்டல்

புடலங்காய் மிளகூட்டல்

தேவை: முளைகட்டிய பச்சைப்பயறு - 100 கிராம், புடலங்காய் - அரை கிலோ (நறுக்கவும்), மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க: துருவிய தேங்காய் - அரை கப், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பச்சரிசி - 2 டீஸ்பூன்.

தாளிக்க: சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு, உளுந்து - 2 டீஸ்பூன்.

செய்முறை: அரைக்கக்கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். முளைகட்டிய பச்சைப்பயறு, நறுக்கிய புடலங்காயை குக்கரில் சேர்த்து, 2 டம்ளர் தண்ணீர் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவைக்கவும். பிரஷர் அடங்கிய பிறகு குக்கரைத் திறந்து அதில் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

இது கலந்த சாதங்களுக்குத் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

புடலங்காய் ஸ்டஃப்டு கறி
புடலங்காய் ஸ்டஃப்டு கறி

புடலங்காய் ஸ்டஃப்டு கறி

தேவை: நீளமான மெல்லிய புடலங்காய் - அரை கிலோ (இரண்டு இன்ச் துண்டுகளாக கட் செய்து, உள்ளே உள்ள கொட்டையை எடுத்துவிட்டு வைக்கவும்) உருளைக்கிழங்கு - கால் கிலோ, நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், துருவிய கேரட் - ஒரு கப், பச்சைப் பட்டாணி - 100 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, கடலை மாவு - 50 கிராம் (கரைக்கவும்), எண்ணெய் - 50 மில்லி, கடுகு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து எடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து நறுக்கிய புடலங்காய் போட்டு மூடிவைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி அதில் பச்சைப் பட்டாணி, துருவிய கேரட், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கலவையைத் தனியே எடுத்து வைக்கவும். நீரில் உள்ள புடலங்காயை எடுத்து அதில் கலவையை அடைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு சூடாக்கி, ஸ்டஃப்டு புடலங்காயைக் கரைத்த கடலை மாவில் தோய்த்துப் போட்டு நன்கு வறுத்தெடுக்கவும்.

புடலங்காய் மசாலா கறி
புடலங்காய் மசாலா கறி

புடலங்காய் மசாலா கறி

தேவை: புடலங்காய் - கால் கிலோ, குடமிளகாய், கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 10, உருளைக்கிழங்கு - 100 கிராம், கோஸ் - ஒரு கப், பச்சைப் பட்டாணி (அ) வேர்க்கடலை - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு, தேங்காய்த் துருவல் - அரை கப், தக்காளி - 100 கிராம், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு, கடுகு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போட்டு, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். பிறகு நீளமாக நறுக்கிய புடலங்காய், கேரட், கோஸ், குடமிளகாய், உருளைக்கிழங்கு, பீன்ஸ், தக்காளி மற்றும் பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

இதை டயட்டில் இருப்பவர்கள் சுக்கா ரொட்டியுடன் சாப்பிடலாம்.

பீர்க்கங்காய் பால் கூட்டு
பீர்க்கங்காய் பால் கூட்டு

பீர்க்கங்காய் பால் கூட்டு

தேவை: பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் - அரை கிலோ, ஊறவைத்த கடலைப்பருப்பு - 100 கிராம், தேங்காய்ப்பால் - 2 டம்ளர், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: குக்கரில் கடலைப்பருப்பு, பீர்க்கங்காய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு வேகவைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வேகவைத்த கூட்டை சேர்த்து, தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும்.

இது தோசை, ஆப்பம், இடியாப்பத்துக்குத் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

பீர்க்கங்காய் காராமணி மசாலா
பீர்க்கங்காய் காராமணி மசாலா

பீர்க்கங்காய் காராமணி மசாலா

தேவை: பீர்க்கங்காய் - அரை கிலோ, பச்சைக் காராமணி - ஒரு கட்டு, வெங்காயம் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 3, தேங்காய்த் துருவல் - அரை கப், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பீர்க்கங்காயைத் தோல் நீக்கி, ஒரு இன்ச் அளவில் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். பச்சைக் காராமணியை நீளமாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தையும் நீளமாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பின்பு வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் புரட்டவும். அதனுடன் பீர்க்கங்காய், காராமணி சேர்த்து தண்ணீர் தெளித்த மூடி வேகவைக்கவும். தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இதைச் சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

பீர்க்கங்காய்த் துவையல்
பீர்க்கங்காய்த் துவையல்

பீர்க்கங்காய்த் துவையல்

தேவை: பீர்க்கங்காய்த் தோல் - ஒரு கப், பச்சை மிளகாய் - 4, காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு - 50 கிராம், கொள்ளு - 50 கிராம், புளி, உப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு, பீர்க்கங்காய்த் தோல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாயை நன்கு வதக்கி, தனியே வைக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, கொள்ளு இரண்டையும் நன்கு வறுக்கவும். பின்னர் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து மிக்ஸியில் போட்டு உப்பு, புளி, பெருங்காயத்தூள் சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். பீர்க்கங்காய்த் துவையல் தயார்.

பீர்க்கங்காய் பக்கோடா
பீர்க்கங்காய் பக்கோடா

பீர்க்கங்காய் பக்கோடா

தேவை: பீர்க்கங்காய் - கால் கிலோ (மெல்லியதாக நறுக்கவும்), வெங்காயம் - 100 கிராம் (நறுக்கவும்), தோலுடன் நசுக்கிய பூண்டு - 20 பல், துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 10 (மெல்லிய, நீள துண்டுகளாக நறுக்கவும்), சோம்பு - அரை டீஸ்பூன், கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சோம்பு, உப்பு, சூடான எண்ணெய் 4 டீஸ்பூன் விட்டு பிசிறவும். அதில் பீர்க்கங்காய், பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் தெளித்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவை உதிர் உதிராகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

இதை மாலை நேரச் சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

சௌசௌ மோர்க்கூட்டு
சௌசௌ மோர்க்கூட்டு

சௌசௌ மோர்க்கூட்டு

தேவை: சௌசௌ (பெங்களூரு கத்திரிக்காய்) - அரை கிலோ, காராமணி - 100 கிராம் (ஊறவைக்கவும்), மோர் - ஒரு டம்ளர், மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப, கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு.

அரைக்க: பச்சை மிளகாய் - 4, இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவவும்), மல்லி (தனியா) - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை கப்.

செய்முறை: அரைக்கக்கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். குக்கரில் பெரிதாக நறுக்கிய சௌசௌ, ஊறவைத்த காராமணி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு வேகவைக்கவும். வெந்தவுடன் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு கொதிவிடவும். பின்பு அதில் கடைந்த மோர் சேர்த்துக் கலந்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும். மோர்க்கூட்டு தயார்.

சௌசௌ உருளைக்கிழங்கு அல்வா
சௌசௌ உருளைக்கிழங்கு அல்வா

சௌசௌ உருளைக்கிழங்கு அல்வா

தேவை: துருவிய சௌசௌ - ஒரு கப், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், பால்கோவா - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 100 கிராம், சர்க்கரை - ஒரு கப், முந்திரி - 10.

செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரியை வறுத்துத் தனியாக வைக்கவும். பின்பு சிறிதளவு நெய்யில் சௌசௌ துருவலை வதக்கி தனியாக வைக்கவும். வாணலியில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து, கால் டம்ளர் தண்ணீர்விட்டு கம்பிப் பதத்துக்குப் பாகு வைக்கவும். அதில் வதக்கிய சௌசௌ, மசித்த உருளைக்கிழங்கு, உதிர்த்த பால்கோவா சேர்த்து நன்கு கிளறவும். மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

இது பிரெட்டுடன் சாப்பிடச் சுவையானது. சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.

சௌசௌ பட்டாணி கீர்
சௌசௌ பட்டாணி கீர்

சௌசௌ பட்டாணி கீர்

தேவை: துருவிய சௌசௌ - ஒரு கப் (வதக்கவும்), பச்சைப் பட்டாணி - 100 கிராம் (வேகவைக்கவும்), முந்திரி - 10, ஏலக்காய் - 2, கிராம்பு - ஒன்று, காய்ச்சி ஆறவைத்த பால் - அரை லிட்டர், ஐஸ்கட்டிகள் - 4, சர்க்கரை - 50 கிராம், நெய் - சிறிதளவு.

செய்முறை: வேகவைத்த பட்டாணி, வதக்கிய சௌசௌ, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைக்கவும். இத்துடன் சர்க்கரை சேர்க்கவும். பின்பு ஆறிய பாலைச் சேர்த்து நன்கு கலந்து டம்ளரில் ஊற்றி, ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும் (தேவைப்படுபவர்கள் முந்திரியை நெய்யில் வறுத்து கீருடன் சேர்த்துக்கொள்ளவும்).

வெள்ளரிக்காய் மின்ட் ஜூஸ்
வெள்ளரிக்காய் மின்ட் ஜூஸ்

வெள்ளரிக்காய் மின்ட் ஜூஸ்

தேவை: தோல் சீவி, துருவிய வெள்ளரிக்காய் - ஒரு கப், புதினா இலை - அரை கப், கறுப்பு உப்பு - ஒரு சிட்டிகை, எலுமிச்சைப்பழம் - பாதியளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் - 2.

செய்முறை: துருவிய வெள்ளரிக்காய், புதினா, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். இதை வடிகட்டி, எலுமிச்சையைப் பிழிந்து, ஐஸ்கட்டிகள் சேர்த்து, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். சுவையான வெள்ளரி மின்ட் ஜூஸ் ரெடி.

வெள்ளரிக்காய் வெஜ் சாலட்
வெள்ளரிக்காய் வெஜ் சாலட்

வெள்ளரிக்காய் வெஜ் சாலட்

தேவை: பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - அரை கப், துருவிய கேரட் - அரை கப், வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), ஊறவைத்த பயத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு எடுக்கவும்), உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க: எண்ணெய், கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய் - தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து இதனுடன் சேர்க்கவும். வெள்ளரிக்காய் வெஜ் சாலட் தயார்.

நீர்க்காய் அவியல்
நீர்க்காய் அவியல்

நீர்க்காய் அவியல்

தேவை: நீளநீளமாய் நறுக்கிய வெள்ளைப்பூசணி, புடலங்காய், சௌசௌ, பீர்க்கங்காய், சுரைக்காய், மஞ்சள்பூசணி - தலா ஒரு கப், தயிர் - ஒரு கப், உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க: தேங்காய் - ஒரு மூடி, பச்சை மிளகாய் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். எல்லா காய்களையும் குக்கரில் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்பு அதில் அரைத்த விழுது கலந்து, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். பின்பு தயிர் சேர்க்கவும். நீர்க்காய் அவியல் ரெடி.

இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது அடையுடன் தொட்டும் சாப்பிடலாம்.

 எஸ்.மீனாட்சி
எஸ்.மீனாட்சி

நலம் காக்கும் காய்கறிகள்...

நாவை சுண்டியிழுக்கும் ரெசிப்பிகள்!

நீர்க்காய்கறிகள் சத்துமிக்கவை... உடல் உஷ்ணத்தி லிருந்து நிவாரணம் அளிப்பவை... உடல் இளைக்க உதவுபவை. இப்படி இவை நமக்கு அளிக்கும் நன்மைகள் ஏராளம்...

  • முள்ளங்கி நீரிழிவாளர்களுக்கு மிகவும் நல்லது.

  • வெள்ளைப்பூசணி பெண்களுக்கு அழகையும் சரும பளபளப்பையும் அளிக்கும். மூளைக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும்.

  • சுரைக்காய் கர்ப்பிணிகளுக்கு நீர்ப் பெருக்கி கால் வீக்கத்தைக் குறைக்கும்.

  • புடலங்காய் மனச் சோர்வை நீக்கி, புத்திக் கூர்மை கொடுக்கும்.

  • பீர்க்கங்காய், சௌசௌ எடையைக் குறைக்க உதவும்.

  • வெள்ளரிக்காய் உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும்.

எவ்வளவுதான் சத்துகள் நிரம்பியிருந்தாலும் சுவையாக செய்து பரிமாறினால்தானே குடும்பத்தினர் விரும்பிச் சாப்பிடுவார்கள்? இதைக்கருத்தில்கொண்டு, நீர்க்காய்களைப் பயன்படுத்தி அசத்தலான ருசியில் சப்பாத்தி, தோசை, பக்கோடா, ஓலன், மிளகூட்டல், அல்வா, கீர், கோஃப்தா, சாட், ஜூஸ் என வெரைட்டியான ரெசிப்பிகளை இங்கே வழங்கி அசத்துகிறார் வேலூரைச் சேர்ந்த சமையற்கலைஞர் எஸ்.மீனாட்சி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு