Published:Updated:

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

கோதுமை பரோட்டாக்கள்
பிரீமியம் ஸ்டோரி
கோதுமை பரோட்டாக்கள்

சுபாஷிணி அருண்

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

சுபாஷிணி அருண்

Published:Updated:
கோதுமை பரோட்டாக்கள்
பிரீமியம் ஸ்டோரி
கோதுமை பரோட்டாக்கள்

டிபன் வகைகளில் பரோட்டா தனிச்சுவை மிக்கது. சிறுவர் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடித்தமான இரவு உணவு. பொதுவாக, பரோட்டா சாப்பிட வேண்டுமென்றால் கடைகளுக்குத்தான் சென்று சாப்பிட வேண்டி யிருக்கும். மைதாவில் செய்வதால் பரோட்டா ஆரோக்கியமற்ற உணவு என்ற பிரசாரம் ஒருபக்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் அதெல்லாம் பரோட்டா பிரியர்களுக்கு பொருட்டே இல்லை.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

வழக்கமாக பரோட்டாவுக்கு மைதா மாவை தண்ணீர், உப்பு, சிறிதளவு சர்க்கரை ஆகியவை கலந்து முதலில் இரண்டு மணி நேரம் வரை ஊறவைப்பார்கள். பிறகு எண்ணெய்விட்டு பிசைந்து மீண்டும் ஒரு மணி நேரம் ஊறவைத்து பரோட்டா தயாரிப்பார்கள். இந்த இணைப்பிதழில் உள்ள கோதுமை பரோட்டாக்களுக்கு அப்படிச்செய்ய வேண்டியதில்லை. சப்பாத்திக்குச் செய்வது போன்று கோதுமை மாவைப் பிசைந்துகொண்டால் போதும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்
ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

அந்த வகையில் மைதாவுக்கு மாற்றாக விதவித மான கோதுமை பரோட்டாக்களை வீட்டிலேயே செய்து அசத்தியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் சுபாஷிணி அருண். இதுவரை எப்போதாவது ஒருநாள் மட்டும் பரோட்டாவை அனுமதித்த நீங்கள், இந்தச் செய்முறைகளைப் பார்த்தால் தினம் தினம் கோதுமை பரோட்டாக்களுக்கு நிச்சயம் மாறுவீர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பச்சைப்பட்டாணி பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், பச்சைப்பட்டாணி - ஒரு கப், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். பச்சைப்பட்டாணியைத் தனியாக வேகவைத்து தண்ணீரை வடித்து ஒன்றிரண்டாகப் பிசிறிக்கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடாக்கி வேகவைத்த பட்டாணி, நறுக்கிய பச்சை மிளகாய், மல்லித்தழை, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து புரட்டி இறக்கி ஆறவைக்கவும். பிசைந்துவைத்த கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக உருட்டித் தட்டி, அதில் பட்டாணிக்கலவையை வைத்து மூடி, வட்ட வடிவில் தட்டவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

பனீர் பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், பனீர் துருவல் - ஒரு கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, உலர்ந்த மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மற்ற பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். கோதுமை மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, அதில் மசாலா கலவையை வைத்து சப்பாத்தி வடிவில் தட்டிவைக்கவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

பனீர் சீஸ் பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், பனீர் துருவல் - ஒரு கப், சீஸ் துருவல் - ஒரு கப், ஓரிகானோ - ஒரு டீஸ்பூன், உலர்ந்த பேசில் இலைகள் (Basil Leaves) - அரை டீஸ்பூன், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - அரை டீஸ்பூன், வெண்ணெய் - 25 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். ஒரு கிண்ணத்தில் சீஸ், பனீர், ஓரிகானோ, பேசில் இலைகள், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து கலந்துகொள்ளவும். மாவைச் சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தி போல் வட்டமாகத் தேய்க்கவும். இதில் பனீர் - சீஸ் கலவையைச் சேர்த்து அதை நான்கு புறமும் மடித்து வட்டவடிவில் தட்டவும். சூடான தவாவில் சிறிதளவு வெண்ணெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

உருளைக்கிழங்கு பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், வேகவைத்த உருளைக்கிழங்கு - ஒரு கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, உலர்ந்த மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் அல்லது நெய் தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்குடன் மற்ற பொருள்களைக் கலந்து நன்கு பிசிறி வைக்கவும். கோதுமை மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டி, அதில் உருளைக்கிழங்கு மசாலா கலவையை வைத்து சின்ன சின்னதாகத் தட்டி வைத்துக்கொள்ளவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

புரொக்கோலி பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், புரொக்கோலி - ஒரு கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, உலர்ந்த மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் ஏற்றிக் கொதிக்கவிட்டு அதில் புரொக்கோலியைச் சேர்த்து ஒரு நிமிடம் வைத்து இறக்கி தண்ணீரை வடிகட்டவும். புரொக்கோலி பூக்களைச் சிறிதாக நறுக்கவும். ஒரு வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கவும். அதில் நறுக்கிய பச்சை மிளகாய், புரொக்கோலி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உலர்ந்த மாங்காய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டி, அதில் புரொக்கோலி மசாலா கலவையை வைத்துத் தட்டி வைத்துக்கொள்ளவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

நெய் சர்க்கரை பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், நெய் - 4 டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், சர்க்கரை - 3 டீஸ்பூன்.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மாவில் இருந்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து உலர்ந்த மாவுடன் உருட்டி வைக்கவும். அதை மூன்று அங்குல சுற்றளவு கொண்ட வட்டமாகத் தட்டி அதன் மேல் சிறிது நெய்விட்டு சர்க்கரை வைக்கவும். எல்லா பக்கங்களையும் இணைத்து வட்டமாகத் தட்டி உலர்ந்த மாவில் புரட்டி எடுக்கவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

பாலக் பரோட்டா

தேவை: கோதுமை மாவு - 2 கப், பாலக் கீரை - 250 கிராம், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, ஓமம் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: பாலக் கீரையைத் தண்ணீரில் நன்றாகக் கழுவி வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். பாதி கீரையை மசித்துக் கூழாக்கிக்கொள்ளவும். மீதி கீரையை அப்படியே வைத்துக்கொள்ளவும். ஒரு பெரிய கிண்ணத்தில் கோதுமை மாவு, ஓமம், நறுக்கிய பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, கீரைக்கூழ் மற்றும் சிறிதளவு தண்ணீர், இரண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். மாவை எலுமிச்சைப்பழ அளவு உருண்டையாக உருட்டி நெய்விட்டு தட்டவும். இதில் நறுக்கிய பாலக் கீரையை வைத்து மடித்து பரோட்டா வடிவில் தட்டவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

சீஸ் பரோட்டா

தேவை: கோதுமை மாவு - 2 கப், பீட்சா சாஸ் - அரை கப், மொஸரெல்லா சீஸ் - ஒன்றரை கப், எண்ணெய் அல்லது நெய், உப்பு - தேவையான அளவு .

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மொஸரெல்லா சீஸைத் துருவிக்கொள்ளவும். சிறிதளவு மாவை எடுத்து பீட்சா சாஸைப் பயன்படுத்தி உருட்டி தேவையான அளவு சீஸ் வைத்து மூடி தட்டவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

முள்ளங்கி பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், முள்ளங்கித்துருவல் - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, சீரகத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,,மல்லித்தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: மேற்கூறிய அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும், அரை மணி நேரம் கழித்து, சிறு உருண்டைகளாக்கி கொஞ்சம் கனமான சப்பாத்தி போல் தட்டிக்கொள்ளவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

வெங்காய பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, சீரகத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: மேற்கூறிய அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். அரை மணி நேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக்கி கொஞ்சம் கனமான சப்பாத்தி போல் திரட்டவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

சோளம் சீஸ் பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், வேகவைத்த சோளம் - ஒரு கப், துருவிய சீஸ் - ஒரு கப், பீட்சா சாஸ் - 2 டீஸ்பூன், உப்பு, வெண்ணெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, வெண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தி போல் வட்டமாகத் தேய்க்கவும். இதன் மேல் பீட்சா சாஸ் தடவி, சோளம் மற்றும் சீஸ் தூவி அதை இரண்டாக மடிக்கவும். சூடான தவாவில் சிறிதளவு வெண்ணெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

சாக்லேட் பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், இனிப்பில்லாத கோகோ பவுடர் - 2 டீஸ்பூன், சர்க்கரை - 3 டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். ஒரு கிண்ணத்தில் சர்க்கரை, கோகோ பவுடர் சேர்த்துக்கொள்ளவும். மாவை சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தி போல் வட்டமாகத் தேய்த்து, இதன் மேல் சர்க்கரைக் கலவையைத் தூவி, மீண்டும் சிறு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்திபோல் வட்டமாகத் தேய்க்கவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும். இதில் சாக்லேட் சிரப் ஊற்றினால் மேலும் சுவை கூடும்.

புதினா கொத்தமல்லி பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், புதினா - அரை கப், மல்லித்தழை - அரை கப், பச்சை மிளகாய் - 2, பூண்டு - 3 பற்கள், உப்பு, நெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: மிக்ஸியில் புதினா, மல்லித்தழை, பச்சை மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையை கோதுமை மாவுடன் சேர்த்து பிசைந்து வைக்கவும். மாவை சிறு உருண்டைகளாக்கி வட்டமாகத் தேய்க்கவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

தயிர் பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை புதினா - அரை கப், தயிர் - முக்கால் கப், உப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் எல்லா பொருள்களையும் சேர்த்து தேவையான அளவு எண்ணெய், தண்ணீர்விட்டுப் பிசைந்து வைக்கவும். இதை பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு, அதை சிறிய உருண்டைகளாக உருட்டி உலர்ந்த கோதுமை மாவு சேர்த்துத் தட்டவும். இதன் மேல் சிறிதளவு எண்ணெய் தடவவும். சிறிதளவு மாவைத் தெளிக்கவும். இதுபோல் இரண்டு முறை செய்துவிட்டு சதுர வடிவமாகத் தட்டவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

உருளைக்கிழங்கு மேத்தி பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், உருளைக்கிழங்கு - ஒரு கப், உலர்ந்த வெந்தயக்கீரை (கஸூரி மேத்தி) - அரை கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, உலர்ந்த மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் அல்லது நெய் தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கை வேகவைத்துப் பிசிறிக்கொள்ளவும். கஸூரி மேத்தியை நன்றாகக்கழுவி தண்ணீரை வடிகட்டி நறுக்கிக்கொள்ளவும். எல்லா பொருள்களையும் நன்றாக கலக்கவும். மாவை சிறிய உருண்டைகளாக உருட்டித் தட்டி அதில் உருளைக்கிழங்கு மேத்தி கலவையை வைக்கவும். உருட்டும்போது தேவையான அளவு உலர்ந்த கோதுமை மாவு தூவவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

மஷ்ரூம் பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், சுத்தம் செய்யப்பட்ட காளான் - 10, நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 டீஸ்பூன், நறுக்கிய பூண்டு - 3, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பாவ் பாஜி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய்விட்டு சூடானதும் சீரகத்தூள், நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய காளான் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கி அத்துடன் மசாலாப்பொடிகளைச் சேர்த்து நன்கு வேகவிட்டு கிளறி இறக்கவும். நறுக்கிய மல்லித்தழையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இப்போது இரண்டு சிறிய எலுமிச்சை அளவிலான சப்பாத்தி மாவை உருண்டைகளாகத் தட்டவும். ஒரு சப்பாத்தியில் மூன்று காளான் துண்டுகளை வைத்து மற்றொரு சப்பாத்தியை வைத்து விளிம்புகளை அழுத்துவதன் மூலம் அதை மூடவும். மெல்லிய பரோட்டாக்களாகத் தட்டவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

காலிஃப்ளவர் பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், சுத்தம் செய்யப்பட்ட காலிஃப்ளவர் - 200 கிராம், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். பின்னர் காலிஃப்ளவரை சிறிய துண்டுகளாக்கி சூடான நீரில் கழுவி மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும். இதில் நறுக்கிய பச்சை மிளகாய், இரண்டு சிட்டிகை உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தழை சேர்க்கவும். கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி அதனுள் காலிஃப்ளவர் மசாலா கலவையை சிறிதளவு வைத்துத் தட்டவும். தட்டும்போது மாவு கையில் ஒட்டாமல் இருக்க உலர்ந்த மாவை உருண்டைகள் மேல் தேய்த்துக்கொள்ளவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

பனீர் மேத்தி பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், பனீர் துருவல் - ஒரு கப், கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - அரை கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, உலர்ந்த மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மேத்தி இலைகளை நன்றாகக் கழுவி தண்ணீரை நன்றாக வடிகட்டி சிறிதாக நறுக்கவும். இத்துடன் மசாலாப் பொடிகள் மற்றும் பனீர் துருவல் எல்லாம் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி அதனுள் பனீர் துருவல், மேத்திக் கலவையை வைத்துத் தட்டி எடுக்கவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

பீட்ரூட் பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், பீட்ரூட் துருவல் - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, சீரகத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். அரை மணி நேரம் கழித்து மாவை சிறு உருண்டைகளாகத் தட்டவும். அடுப்பில் சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

உலர்பழங்கள் பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், நறுக்கிய பாதாம் - அரை கப், நறுக்கிய முந்திரி - அரை கப், நறுக்கிய திராட்சை - கால் கப், துருவிய வெல்லம் - கால் கப் (விரும்பினால்), ஓமம் - அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மற்ற பொருள்களை ஒன்றாகக் கலந்துவைக்கவும். மாவை சிறிய உருண்டைகளாக்கி தட்டி அதனுள் கலந்து வைத்த கலவையை வைத்துத்தட்டவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும். இந்த உலர்பழ பரோட்டாவின் மேல் சாக்லேட் சிரப், கேரமல் சிரப் ஊற்றிப் பரிமாறவும்.

புரொக்கோலி சோளம் பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், வேகவைத்த புரொக்கோலி, சோளம் - தலா அரை கப், இஞ்சி விழுது - அரை டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், உலர்ந்த மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) - அரை டீஸ்பூன், தனியா (மல்லி)த்தூள் - கால் டீஸ்பூன், ஓமம் - சிறிதளவு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, பனீர் - ஒரு கப், நறுக்கிய மல்லித்தழை - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மற்ற பொருள்களை ஒன்றாகக் கலந்து புரொக்கோலி சோளக் கலவையைத் தயார் செய்யவும். கோதுமை மாவைச் சிறிய உருண்டைகளாக்கித் தட்டி அதில் தயாரிக்கப்பட்ட கலவையை வைத்து வட்டமாகத் தேய்க்கவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

நம்கீன் பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், சீரகம் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தய இலைகள்) - 2 சிட்டிகை, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. (நம்கீன் என்பது நெய், சீரகம், கஸூரி மேத்தி மற்றும் மிளகாய்த்தூளின் கலவையைக் குறிக்கும்.)

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். இதற்கிடையில் சீரகம், மிளகாய்த்தூள், கஸூரி மேத்தி, மஞ்சள்தூள் சேர்த்து மசாலா கலவையைத் தயாரிக்கவும். மாவை சிறிய உருண்டைகளாக்கி அதில் கலவையை வைத்து விளிம்புகளை மூடி, முக்கோணமாகத் தேய்க்கவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

கொண்டைக்கடலை பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், வேகவைத்த கொண்டைக்கடலை - அரை கப், நறுக்கிய வெங்காயம் - கால் கப், நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - ஒரு டீஸ்பூன், சென்னா மசாலா - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், ஓமம் - கால் டீஸ்பூன், மல்லித் (தனியா)தூள் - அரை டீஸ்பூன், மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேகவைத்த கொண்டைக்கடலையைப் பிசறிக்கொள்ளவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை மற்றும் அனைத்து மசாலாப் பொருள்களையும் சேர்க்கவும். மாவை உருண்டைகளாக்கி ஒரு சிறிய வட்ட வடிவில் தேய்க்கவும். அதில் இரண்டு டீஸ்பூன் கலவையை வைத்து விளிம்புகளை மடித்து, அதை மீண்டும் ஒருமுறை தேய்க்கவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

சுரைக்காய் பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், பொடியாக வெட்டப்பட்ட சுரைக்காய் - 2 கப், கிராம்பு - 3, பூண்டு விழுது - அரை டீஸ்பூன், நறுக்கிய சிறிய வெங்காயம் - ஒன்று, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: சுரைக்காய், கோதுமை மாவு, கிராம்பு, பூண்டு விழுது, நறுக்கிய சிறிய வெங்காயம், சீரகம், உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சுரைக்காய் ஏற்கெனவே தண்ணீரைக் கொண்டுள்ளதால், தேவைப்பட்டால் மட்டுமே மாவை சிறிய உருண்டைகளாகத் தேய்க்கும்போது மட்டும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் திரட்டி, சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

டபுள் டக்கர் பரோட்டா

தேவை: கோதுமை மாவு - 2 கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

பட்டாணி கலவைக்கு: வேகவைத்த பட்டாணி - ஒரு கப், நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டீஸ்பூன், வறுத்த சீரகத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், மல்லித் (தனியா)தூள் - தலா ஒரு டீஸ்பூன், சாட் மசாலா - கால் டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - அரை டீஸ்பூன்.

உருளைக்கிழங்கு கலவைக்கு: வேகவைத்த உருளைக்கிழங்கு - 2, பனீர் துருவல் - அரை கப், நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், (தனியா) மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். ஒரு கிண்ணத்தில் பட்டாணி கலவைக்குரிய அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலக்கவும். மற்றொரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கு கலவைக்குரிய அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலக்கவும். தவாவைச் சூடாக்கி சிறிதளவு எண்ணெய்விட்டு நான்கு பரோட்டாக்களை லேசாக வாட்டிவைக்கவும். வாட்டாத ஒரு பரோட்டாவின் மீது பட்டாணி கலவையை வைக்கவும். இதன் மேல் சமைத்த பரோட்டாவை வைத்து மூடி உருளைக்கிழங்கு கலவையைப் பரப்பவும். மீண்டும், வாட்டாத இன்னொரு பரோட்டாவை வைத்து மூடி சாண்ட்விச் வடிவில் விளிம்புகளை இறுக்கமாக மூடவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

ராஜ்மா பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், வேகவைத்த ராஜ்மா - அரை கப், கிராம்பு - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: ராஜ்மாவை குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு மணிநேரத்துக்கு ஊறவைத்துக் கொள்ளவும். குக்கரில் கிராம்புடன் ராஜ்மாவைத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து விசில்விட்டு இறக்கவும். கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து சிறிது பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின்னர் வேகவைத்த ராஜ்மாவைச் சேர்க்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். அனைத்து மசாலாப் பொடிகளும் ஒன்றாகக் கலக்கும்படி புரட்டியெடுக்கவும். மல்லித்தழைகளை சேர்த்து இறக்கவும். சப்பாத்தி மாவை சற்று தடிமனாக உருட்டி தட்டி மையத்தில் ராஜ்மா கலவையைச் சேர்த்து மூடி தட்டவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

சோயா பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், சோயா துண்டுகள் - ஒரு கப், நறுக்கிய குடமிளகாய் - அரை கப், நறுக்கிய மல்லித்தழை - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். சோயா துண்டுகளை வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயை ஒரு வாணலியில்விட்டு சூடானதும் ​​சீரகம் சேர்க்கவும். பின்னர் பச்சை மிளகாய் விழுது, பெருங்காயம் மற்றும் குடமிளகாய் சேர்த்து வதக்கி, சோயா துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் கலவையைக் கிளறி, மல்லித்தழை சேர்த்து இறக்கவும். சிறிய வட்ட வடிவில் கோதுமை மாவைத் தேய்த்து இரண்டு டீஸ்பூன் கலவையை வைத்து அதன் விளிம்புகளை மடித்து மீண்டும் ஒருமுறை தேய்க்கவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

கேரட் முட்டைகோஸ் பாலக் பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், பாலக் கீரை - ஒரு கப், நறுக்கிய கேரட் - கால் கப், நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப், தயிர் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: பாலக் கீரையை மூன்று நிமிடங்கள் சூடான நீரில் கொதிக்கவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். பாலக்கில் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து கூழாக அரைத்துக்கொள்ளவும். கோதுமை மாவில் தயிர், உப்பு சேர்த்து, மென்மையான மாவைப் பிசைவதற்குத் தேவையான பாலக் கூழைச் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர், எண்ணெய் தடவி நன்கு பிசைந்து, இரண்டு நிமிடங்கள் வைக்கவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், கேரட், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, மூன்று நிமிடங்கள் வதக்கி இறக்கி வைத்துக்கொள்ளவும். மாவை சிறிய உருண்டைகளாக்கி தட்டி இதன் மேல் வதக்கிய முட்டைகோஸ் - கேரட் கலவையை வைத்து அதை மீண்டும் ஒருமுறை வட்ட வடிவில் தேய்த்தெடுக்கவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

கறுப்புக் கொண்டைக்கடலை பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், வேகவைத்த கறுப்புக் கொண்டைக்கடலை - அரை கப், நறுக்கிய வெங்காயம் - கால் கப், நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - ஒரு டீஸ்பூன், சென்னா மசாலா - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், ஓமம் - கால் டீஸ்பூன், மல்லித் (தனியா)தூள் - அரை டீஸ்பூன், மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேகவைத்த கறுப்புக் கொண்டைக்கடலை எடுத்து பிசைந்துகொள்ளவும். நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை, உப்பு மற்றும் அனைத்து மசாலாப்பொருள்களையும் சேர்க்கவும். மாவை நான்கு பகுதிகளாகப் பிரித்து உருண்டைகளாகத் தேய்க்கவும். சிறிய வட்ட வடிவில் தேய்த்து இதில் வேகவைத்த கொண்டைக்கடலை மசாலா கலவையை வைத்து விளிம்புகளை மடித்துக் கொள்ளவும். அதை மீண்டும் ஒருமுறை தேய்க்கவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

பீட்சா பரோட்டா

தேவை: கோதுமை மாவு - ஒரு கப், மொஸரெல்லா சீஸ் - ஒன்றரை கப், நறுக்கிய வெங்காயம் - 2 டீஸ்பூன், சதுரங்களாக நறுக்கிய சிவப்பு, பச்சை நிற குடமிளகாய் - ஒன்று, நறுக்கிய ஆலிவ் - 5, நறுக்கிய ஆலப்பெனா (மிளகாய் வகை) - 5, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் அல்லது நெய் அல்லது வெண்ணெய் தேவையான அளவு, பீட்சா சாஸ் - அரை கப், சில்லி ஃப்ளேக்ஸ் - 2 டீஸ்பூன், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 2 டீஸ்பூன், உலர்ந்த பேசில் இலைகள் - அரை டீஸ்பூன்.

ஹெல்த்தி - டேஸ்ட்டி... 30 வகை கோதுமை பரோட்டாக்கள்

செய்முறை: கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மாவைத் தட்டையாக தேய்த்துவைக்கவும். மொஸரெல்லா சீஸ், நறுக்கிய வெங்காயம், சதுரங்களாக நறுக்கிய குடமிளகாய், ஆலிவ், ஆலப்பெனாவைத் தேய்த்துவைத்த பரோட்டாவின்மீது பரவலாக வைக்கவும். இதன் ஓரங்களில் 2 டீஸ்பூன் பீட்சா சாஸைப் பரப்பவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும். அதன்மீது சில்லி ஃப்ளேக்ஸ், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், உலர்ந்த பேசில் இலைகள் ஆகியவற்றை தூவிப் பரிமாறவும்.