Published:Updated:

வேர், பிசின்... டர்கிஷ் ஐஸ்க்ரீம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா?! #Video

விற்பனையாளர் இரண்டாம் பாதியில் ஐஸ்க்ரீம் கோன் வைத்து விளையாட்டு காட்டுகிறார். ஏமாற்று வேலைக்கு நடுவே, `நிறைய ஐஸ்க்ரீம் வேணுமா, இந்தாங்க...' என்றுகூறி இரண்டு கிலோ ஐஸ்க்ரீமை அந்தச் சிறிய கோன் மேல் பொருத்த முயற்சி செய்ததெல்லாம் வேற லெவல்.

Turkish ice cream
Turkish ice cream

பொதுவாக `ஐஸ்க்ரீம்' என்றால் சுவை உணவாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், டர்கிஷ் ஐஸ்க்ரீமில் சுமார் 5 நிமிடப் பொழுதுபோக்கு அம்சத்தோடு ஏராளமான மருத்துவக் குணங்களும் உள்ளன. தற்போது சென்னை ஐஸ்க்ரீம் பிரியர்களின் லிஸ்ட்டில் டர்கிஷ் ஐஸ்க்ரீமிற்கும் ஓர் இடமிருக்கிறது.

Turkish ice cream
Turkish ice cream

சென்னையில் தற்போது பிரபலமாகி வரும் டர்கிஷ் ஐஸ்க்ரீமின் டெஸ்டினேஷனான கீழ்ப்பாக்கம், பர்னபி சாலையிலுள்ள `ட்விஸ்டிங் ஸ்கூப்ஸ்' கடைக்குச் சில்லென்ற ஒரு மாலை வேளையில் சென்றோம். உணவகத்தை அடைந்ததும், வித்தியாச தொப்பி மற்றும் ஜாக்கெட் அணிந்து விறுவிறுவெனத் தயாரானார் விற்பனையாளர் சம்ப்யூ.

``உங்களுக்கு ஐஸ்க்ரீம் வேணும்னா முதல்ல என்கூட விளையாடணும்" என்ற விதிமுறையோடு ஆரம்பமானது கொண்டாட்டம். பபுள் கம் போன்றிருக்கும் இந்த ஐஸ்க்ரீமின் ஒரு ஸ்கூப்பைத் தருவது போன்று ஏமாற்றி ஏமாற்றி விளையாடும் விளையாட்டு, இதன் ஹைலைட். விதவிதமான யுக்தியில் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு இந்த ஏமாற்று விளையாட்டு நிகழ்ந்தது. விளையாட்டின் நடுவே, அங்கு கட்டப்பட்டிருக்கும் மணியை அவ்வப்போது அடித்து, தொடர்ந்து விளையாடினார். அப்படி மணி அடிப்பது அவர்களின் பண்பாடு என்கிறார் சம்ப்யூ.

Turkish ice cream
Turkish ice cream

முதலில் நீண்ட கரண்டியை மட்டுமே உபயோகப்படுத்தி நம்மை ஏமாற்றும் விற்பனையாளர், இரண்டாம் பாதியில் ஐஸ்க்ரீம் கோன் வைத்து விளையாட்டு காட்டுகிறார். ஏமாற்று வேலைக்கு நடுவே, `நிறைய ஐஸ்க்ரீம் வேணுமா, இந்தாங்க...' என்றுகூறி இரண்டு கிலோ ஐஸ்க்ரீமை அந்தச் சிறிய கோன் மேல் பொருத்த முயற்சி செய்ததெல்லாம் வேற லெவல்.

இறுதியில், தோற்றுப்போன எங்களை உற்சாகப்படுத்தும்விதமாக, புதிய ரெட் வெல்வெட் ஐஸ்க்ரீமை ஏமாற்றாமல் கொடுத்தார். இப்படித்தான் ஆரம்பமானது எங்களின் ஐஸ்க்ரீம் ட்ரீட். இவர்களின் இந்தச் சாமர்த்திய விளையாட்டுக்கு 15 நாள்கள் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்களாம்.

Turkish ice cream
Turkish ice cream

சென்னையில் பரவலாகி வரும் இந்த வகை ஐஸ்க்ரீமின் தனித்துவம், இது எளிதில் உருகாது. அவ்வளவு ஏன், கோனைத் தலைகீழாக திருப்பிக்கூடச் சாப்பிடலாம். இதன் பெயர் `டோன்டுர்மா'. 1850-களில் இந்த டோன்டுர்மா ஐஸ்க்ரீம், துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளில் முதன்முதலில் தயாரிக்கப்பட்டதாக வரலாறு உண்டு. துருக்கியில் ஆட்டுப்பாலைப் பயன்படுத்தி இந்த வகை ஐஸ்க்ரீம்கள் தயார் செய்யப்படுகின்றன. இதனால், ஐஸ்க்ரீமின் தன்மை அடர்த்தியாக இருக்கும். ஆனால், இந்தியாவில் பசும்பால் கொண்டு தயார் செய்யப்படுவதால், அடர்த்தியில் அளவு சற்று குறைந்தே இருக்கும். விலை 150 ரூபாய்.

செயற்கை நிறமிகள் எதுவுமின்றி, இயற்கைப் பொருள்களைக் கொண்டு மட்டுமே தயார் செய்யப்படும் டர்கிஷ் ஐஸ்க்ரீம்களில் இனிப்புச் சுவை குறைவாகவே இருக்கிறது. மற்ற ஐஸ்க்ரீம்களைப்போன்று இல்லாமல், இதைச் சாப்பிடும்போது பபுள் கம் சாப்பிடுவதைப்போன்ற உணர்வு ஏற்படுகிறது.

Turkish ice cream
Turkish ice cream

இதற்குக் காரணம், இதில் சேர்க்கப்படும் சாலப் (salep) எனும் ஒருவிதச் செடியின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் மாவு மற்றும் மெஸ்டிக் எனும் அராபிக் பிசின் (Gum). இவற்றோடு பால் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படுகின்றன.

அதுமட்டுமன்றி, இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ``வேர் தொண்டை வலி, அஜீரணக் கோளாறு போன்றவற்றைக் குணப்படுத்தும் நற்குணங்கள் கொண்டவை" என்கிறார் சம்ப்யூ.

Turkish ice cream
Turkish ice cream

எங்களை ஏமாற்றி விளையாடிவரை, நாங்களும் ஏமாற்றி இரண்டு, மூன்று ஐஸ்க்ரீம்களைச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். விளையாட்டு, சுவை, ஆரோக்கியம் எல்லாம் கிடைத்தன இந்த 'சில் ஐஸ்க்ரீம் அவுட்டிங்'கில்!