Published:Updated:

``கல்யாண சாப்பாடு மாதிரி இருந்திச்சி... ஆனா 10 ரூபாதான்!" - கல்லல் உணவகத்தின் சிறப்பு

`10 ரூபாய்க்கு வயிறு நிறைய சாப்பாடு. அதுவும் கூட்டு, பொரியல், குழம்பு, ரசம், மோர்னு எல்லாமே கிடைக்குது. டோக்கன் வாங்கித்தான் சாப்பிடணும்!’ - வாட்ஸ் அப்பில் வந்த தகவல் கேள்விப்பட்டு கல்லல் புறப்பட்டோம்.

10 ரூபாய் சாப்பாடு
10 ரூபாய் சாப்பாடு

சிவகங்கை மாவட்டம் கல்லல் பஸ்நிலையம் அருகே உள்ளது, பிச்சம்மை கேன்டீன். செப்டம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்ட இந்த கேன்டீனில் கூட்டம் அலைமோதுகிறது. குறைந்த விலையில் நிறைவான சேவை அளித்துவரும் இந்த கேன்டீன் நிர்வாகத்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன. தகவல் கேள்விப்பட்டு 10 ரூபாய் டோக்கன் வாங்கிக்கொண்டு சாப்பிடுவதற்காக கேன்டீனுக்குள் நுழைந்தோம்.

சில்வர் தட்டு, சில்வர் கிண்ணங்களில் சாப்பாடு, கூட்டு, பொரியல், ரசம், மோர், குழம்பு என்று எல்லாம் வரிசையாகப் பரிமாறப்பட்டிருந்தது. கூடுதலாக சாதம் கேட்டாலும் மனம்கோணாமல் பரிமாறுகின்றனர். உணவு உண்டு முடித்த கையோடு அங்கே சாப்பிட வந்த சிலரிடம் பேச்சு கொடுத்தோம். வயிறு மட்டுமல்ல மனமும் நிறைந்தது என்று வாழ்த்தினர்.

நிழலில் அமர்ந்துள்ள பொதுமக்கள்
நிழலில் அமர்ந்துள்ள பொதுமக்கள்

மூதாட்டி நாச்சாளிடம் பேச்சு கொடுத்தோம். ``எனக்கு 80 வயசாச்சு. எனக்குன்னு யாரும் கிடையாது. கல்லல்ல ஒரு வீட்டுல தங்கி பாத்திரம் கழுவிக் கொடுக்கிறது, துணி துவைக்கிறதுனு என்னால முடிஞ்ச சின்னச் சின்ன வேலைகளைச் செய்வேன். அவங்களும் என்னை அவங்க வீட்டுல ஒரு அங்கமாதான் பார்க்கிறாங்க. அதனால் எனக்கு சம்பளமெல்லாம் கொடுத்து என்னை ஒதுக்க மாட்டாங்க. ஆனாலும், இங்க 10 ரூபாய்க்கு சாப்பாடு போடுறதைக் கேள்விப்பட்டு வந்தேன். கல்யாணச் சாப்பாடு மாதிரி இருந்திச்சு. வயிறு நிறைஞ்சுபோச்சு. எல்லாம் கடவுள் செயல்" என்று இறைவனை நோக்கிக் கும்பிட்டார்.

அடுத்து அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்த சாத்தையாவிடம் பேசினோம். ``நான் ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றேன். இங்க இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துல இருக்குது எங்க ஊர். வெளிநாட்டுல உள்ள என்னோட உறவுக்காரப் பசங்க இந்தக் கடையைப்பத்தி வாட்ஸ் அப்புல பார்த்ததா சொன்னாங்க. உடனே நான் சாப்பாடு எப்படி இருக்குன்னு சாப்பிட்டுப் பார்த்துட்டு வருவோமேனு வந்தேன். நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. அது இன்னைக்குக் கிடைச்சது. 100 ரூபாய்க்கு பெரிய பெரிய ஹோட்டல்கள்ல கிடைக்கிற அதே சாப்பாட்டை 10 ரூபாய்க்கு தர்றாங்க. மனசுக்கும் வயிற்றுக்கும் திருப்தி" என்று வாழ்த்தினார் சாத்தையா.

நாச்சாள்
நாச்சாள்

இவர்களைப் போலவே திருப்பத்தூரில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மங்கைபாலன், கல்லலில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். ஏற்கெனவே வாட்ஸ் அப்பில் பார்த்ததால் கேன்டீனுக்கு வந்து சாப்பிட்டுத் திருப்தியடைந்ததாகக் கூறினார். அப்போது அவர், திருப்பத்தூர் மக்கள் சார்பில் கேன்டீன் நடத்துபவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார். கேன்டீனில் வேலை செய்யும் முத்துலெட்சுமியிடம் பேசியபோது, ``நாங்கள் இங்கே வேலை செய்வதைப் பெருமையாக நினைக்கிறோம். வேலையுடன் சேவையும் செய்வதாக உணர்கிறோம்'' என்றார்.

கேன்டீன் நடத்திவரும் ஆ.மு.ஆ குடும்பத்தினரில் ஒருவரான கருப்பையாவிடம் பேசினோம். ``எங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பம். ஒற்றுமையே எங்கள் பலம். கல்லல் பகுதியில் ஐந்து தலைமுறையாக சேவைப் பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறோம். கல்லல் பஸ்நிலையத்துக்கு எங்கள் முன்னோர்தான் இலவசமாக இடம் கொடுத்தார்கள். அதேபோல் காரைக்குடியையும் கல்லலையும் இணைக்கும் விதமாகப் பாலம் அமைத்துக் கொடுத்துள்ளோம். இப்படிப் பல சேவைகளைச் செய்துள்ளோம். பல்வேறு தொழிலில் ஈடுபடும் எங்கள் குடும்பத்தினர் சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களில் உள்ளனர். நான் முருகப்பா பள்ளி தாளாளராக இருந்து பள்ளியைப் பார்த்துக்கொள்கிறேன்.

திறப்புவிழா
திறப்புவிழா
Vikatan

எங்கள் முன்னோர் பல்வேறு உதவிகளைச் செய்தாலும் எங்கள் தலைமுறை சார்பில் ஏதாவது செய்ய நினைத்தோம். அதன்படி கோவை சாந்தி கியர்ஸ் நிறுவனத்தைப்போல உணவகம் தொடங்க முடிவு செய்தோம். சுமார் 6 மாத காலம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த பல்வேறுகட்ட பணிகளைச் செய்தோம். சேவைக்காகத் தொடங்கிய இந்த உணவகம் தொடர்ந்து இயங்க வேண்டும் என நினைக்கிறோம். அரசு புதிய வரிகள் விதித்தாலும் எங்கள் கேன்டீனில் உணவின் விலையை அதிகப்படுத்தக் கூடாது என்று முடிவு செய்து கடந்த 16-ம் தேதி உணவகத்தைத் தொடங்கினோம்.

மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன், சிவகங்கை எஸ்.பி ரோஹித்நாத் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். எங்கள் தாத்தாவின் சகோதரி பிச்சம்மை நினைவாக கேன்டீனுக்குப் பெயர் வைத்துள்ளோம். இலவசமாக நடத்தினால் அதற்கு மதிப்பு இருக்காது என்பதால் 10 ரூபாய்க்கு உணவு வழங்குகிறோம்.

Pichammai canteen
Pichammai canteen

இதனால் எங்களுக்கும் ஒரு திருப்தி இருக்கிறது. சாப்பிடுபவர்கள் தாங்கள் பணம் கொடுத்துதான் சாப்பிடுகிறோம் என்று அவர்களுக்கும் ஒரு திருப்தி இருக்கும். கேன்டீன் வெற்றிகரமாக நடந்தால் சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களில் இதேபோன்று தொடங்கலாம் என நினைத்துள்ளோம். எதுவாக இருந்தாலும் சொந்த ஊரில் இருந்து தொடங்க நினைத்தோம். அதனால் கல்லலில் தொடங்கினோம்'' என்றார்.

கேன்டீனில் வாரம் முழுவதும் காலை, மதியம் உணவு வழங்கப்படும். எல்லாமே 10 ரூபாய்தான். காலை உணவில் ஞாயிற்றுக்கிழமை பூரி, இட்லி. திங்கள்கிழமை ஊத்தாப்பம், கோதுமை உப்புமா என ஒவ்வொருநாளும் வெவ்வேறுவகை உணவு வழங்கப்படுகிறது.

Rs.10 meals
Rs.10 meals

மதிய உணவில் கூட்டு, பொரியல், குழம்பில் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. குறைந்த விலையில் சுவையான உணவு வழங்கப்படுவதால் கேன்டீன் தொடங்கிய முதல் நாளிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல விஷயத்தை யார் செய்தாலும் அதைப் பாராட்டுவதுதானே சரி.

`ஒரு ரூபாய் இட்லி' பாட்டிக்கு அரசு வீடு!