Published:Updated:

மதுரைத் தெருக்களின் வழியே-8: உலகமயமாக்கலால் சிதைகிறதா உணவு கலாசாரம்? மதுரை ஸ்பெஷல் உணவுகள் ரவுண்டப்!

மதுரைத் தெருக்களின் வழியே

இனிப்பில் செய்யப்பட்ட பேனியா, சுருள் பூரி, பால் பன், ஆட்டுக்கால் கேக், சுசியம், வெள்ளைச்சீயம் போன்றவை குறிப்பிடத்தக்கன. அழிந்துவரும் பாரம்பரியமான உணவு வகைகளைக் கைவிடுவதைத்தவிர வேறு வழியில்லையா?

மதுரைத் தெருக்களின் வழியே-8: உலகமயமாக்கலால் சிதைகிறதா உணவு கலாசாரம்? மதுரை ஸ்பெஷல் உணவுகள் ரவுண்டப்!

இனிப்பில் செய்யப்பட்ட பேனியா, சுருள் பூரி, பால் பன், ஆட்டுக்கால் கேக், சுசியம், வெள்ளைச்சீயம் போன்றவை குறிப்பிடத்தக்கன. அழிந்துவரும் பாரம்பரியமான உணவு வகைகளைக் கைவிடுவதைத்தவிர வேறு வழியில்லையா?

Published:Updated:
மதுரைத் தெருக்களின் வழியே
எழுபதுகளின் தொடக்கத்தில் எங்கள் கிராமத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய சிறப்புப் பேச்சாளர், ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்திற்குத் தமிழகமெங்கும் இருக்கிற கிளைகளைவிட மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டலுக்கு அதிகமான கிளைகள் இருக்கு என்று பேசியதைக் கேட்டு, கூட்டத்தினர் எல்லோரும் சிரித்தனர். ம.பொ.சியை மட்டம் தட்டுவதற்காகச் சொல்லியிருந்தாலும் அந்தப் பேச்சு உண்மையானது.
மதுரையில் தொடரும் பிரமாண்ட பிரியாணி திருவிழா!
மதுரையில் தொடரும் பிரமாண்ட பிரியாணி திருவிழா!

மதுரை நகரில் மட்டுமன்றி, தமிழ்நாடு எங்கும் பரவியிருக்கிற மதுரை முனியாண்டி விலாஸ் என்ற அசைவ உணவகம் இன்றும் பிரபலமாக இருக்கிறது. அந்தப் பெயரில் போலிகள் உருவானதால் மதுரை ஒரிஜினல் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் அசைவ உணவகம் தொடங்கியது தனிக்கதை. மதுரை முனியாண்டி விலாஸ் என்ற பெயரைக் கேட்டாலே மதுரைக்காரர்களுக்குச் சுவையான அசைவ உணவு நினைவுக்கு வரும்; நாவில் எச்சில் ஊறும். மதுரையில் அசைவ உணவுக்குப் பெயர் பெற்ற உணவகமாக மதுரை முனியாண்டி விலாஸ் இன்றளவும் விளங்குகிறது. மதுரைக்கு அருகிலுள்ள வடக்கம்பட்டி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களால் மதுரை முனியாண்டி விலாஸ் உணவகம் நடத்தப்படுகிறது. தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்ட மா.வெ.சு. சுப்பாநாயுடு காரைக்குடிப் பகுதியில் வடக்கம்பட்டி கிராமக் காவல் தெய்வம் முனியாண்டி பெயரில் முதல் உணவக விடுதியை 1935 வாக்கில் ஆரம்பித்தார்.

சுப்பாநாயுடுவைத் தொடர்ந்து ரெட்டியார் சமூகத்தினர் தமிழகமெங்கும் மதுரை முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் அசைவ உணவகங்களைத் தொடங்கி நடத்துகின்றனர். திருமங்கலம் அருகிலுள்ள வடக்கம்பட்டியில் உள்ள குலதெய்வமான முனியாண்டியின் பெயரைத்தான் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் உணவகத்துக்கு வைத்திருக்கின்றனர். ஆண்டுதோறும் தை மாதத்தில் மூன்று நாள்கள் வடக்கம்பட்டியில் பெரிய திருவிழா நடத்தப்படுகிறது. அந்தத் திருவிழாவில் பிரியாணி விருந்து படையல் நடக்கும். ஆட்டுக் கிடாய் வெட்டி 2,000 கிலோ பிரியாணி செய்து முனியாண்டிக்குப் படைத்து, எல்லோருக்கும் சாப்பிட வழங்குகின்றனர். இந்நிகழ்வு மதுரை முனியாண்டி விலாஸின் இன்னொரு முகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரை ஸ்பெஷல் தின்பண்டங்கள்
மதுரை ஸ்பெஷல் தின்பண்டங்கள்

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எதிரில் நூற்றாண்டுப் பழைமையான ஒரிஜினல் நாகப்பட்டினம் ஒரிஜினல் நெய் மிட்டாய்க் கடை புராதனத் தோற்றத்துடன் இன்றும் உள்ளது. பட்டர் காகிதத்தில் சுற்றப்பட்ட அல்வாவை அக்கடையிலிருந்து என் தந்தையார் அறுபதுகளில் வாங்கி வருவார். நெய் வழியும் அந்த அல்வாவின் சுவையே தனிப்பட்டது. இன்று அதே பெயரில் மதுரை நகரில் கடைகள் தோன்றியுள்ளன. இன்றைக்கும் ‘ஒரிஜினல்’ என்ற பெயருடன் தூங்கி வழிந்துகொண்டிருக்கும் மிட்டாய்க் கடைக்கெனத் தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் இல்லாமலா இருக்கும்? நாகப்பட்டினத்தைச் சார்ந்த நண்பர் கவின் மலர் அப்படியொரு கடை நாகப்பட்டினத்தில் இல்லவே இல்லை என்று சாதிக்கிறார். பின்னர் எப்படி அந்தப் பெயரில் மதுரையில் ஒரு கடை? யோசிக்க வேண்டியுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அல்வா என்றவுடன் மேல ஆவணி மூல வீதியில் பண்டாபீஸ் அருகில் மாலை மூன்று மணிக்குத் தொடங்கும் பாம்பே அல்வா ஸ்டாலும், அந்தக் கடைக்காரரும் நினைவுக்கு வருகின்றனர். பெரிய பித்தளைச் சட்டியில் நெய்யில் மிதக்கும் சூடான அல்வாவைச் சாப்பிடுவதற்காகவே ஒரு கூட்டம் அந்தச் சிறிய கடையின் முன்னர் காத்திருக்கும். கடை திறந்தவுடன் இரண்டு மணி நேரத்திற்குள் அல்வா தீர்ந்துவிடும். அப்புறம் கடையை மூடிவிட்டுக் கிளம்பிவிடுவார் உரிமையாளர். எப்படி அந்த இரண்டு மணி நேரத்திற்கு மட்டும் வாடிக்கையாளர்களை அல்வாக் கடைக்காரர் உருவாக்கினார் என்பது வியப்பூட்டும் கேள்வி. பல தடவைகள் அந்தக் கடையின் முன்னர் காத்திருந்து அல்வா வாங்கி விழுங்கியிருக்கிறேன். அந்தச் சுவை போல இன்று சாப்பிடும் அல்வா எதுவுமில்லை என்பதுதான் உண்மை.

திணை அல்வா
திணை அல்வா
DIXITH
டவுன் ஹால் சாலையின் தொடக்கத்தில் இருக்கிற பிரேமா விலாஸ் என்ற ஸ்வீட் ஸ்டாலில், சூடான அல்வாவைக் காய்ந்த தாமரை இலையில் வைத்து வழித்துச் சாப்பிடுகிற கூட்டம் இப்பவும் இருக்கிறது. கொரோனா காலத்தில் மக்கள் கூட்டமாகக் கூடி நின்று இனிப்பு, கார வகைகளை வாங்கிச்சென்ற காட்சி நினைவுக்கு வருகிறது.

முனிச்சாலை நாற்சந்தியில் இருக்கும் அன்னபூரணி பொங்கல் கடை, சௌராஷ்டிரர் ஒருவரால் நடத்தப்படுகிறது. புளியோதரை + கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், தக்காளிச் சோறு, தயிர்ச் சோறு எனப் பல்வேறு சித்திரான்னங்களைச் சுவைபடத் தயாரித்து வழங்கிக் கொண்டிருக்கும் உணவுகளை உலகமயமாக்கல் சிறிதளவுகூட அசைக்கவில்லை. முன்னர் உணவு தயாரித்துச் சிறப்பாக வழங்கப்பட்ட முறையினைத் தொடர்ந்து பின்பற்றுவதுதான் இத்தகைய கடைகள் வெற்றியடைவதன் ரகசியம். தலைமுறைகள் மாறினாலும் பொங்கல் கடையின் உணவுச் சுவை மாறாமல் இருப்பதுதான் விசேஷம்.

புளியோதரை
புளியோதரை

கோயில், திருவிழாக்களுக்குச் செல்லும்போது, வீட்டில் தயாரிக்கப்பட்ட புளியோதரை, தயிர்ச்சோறு போன்ற உணவுகளை எடுத்துச்சென்று சாப்பிடும் வழக்கம் அண்மைக்காலம் வரையிலும் நிலவியது. மதுரையில் நடைபெறுகிற சித்திரைத் திருவிழாவின்பொது ஆற்றில் அழகர் இறங்கிய நாளின் இரவுவேளையில் மதுரைக்காரர்கள் கட்டுச்சோறு எனப்பட்ட கட்டுணாவுடன் வைகை ஆற்றில் போடப்பட்டிருக்கிற மண்டகப்படிகளில் தங்கியிருந்து சாப்பிடுவார்கள்; அழகர் இரவில் தசாவதார வேடத்தில் தோன்றுவதைக் கண்டு மகிழ்வார்கள். இப்பொழுது இன்னொரு கூவமாக மாறியுள்ள வைகையில் இரவில் தங்குவது சாத்தியமே இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் மேற்குச் சித்திரை வீதியில் இருக்கிற கோபி ஐயங்கார் கடையில் வெள்ளையப்பம், அடை போன்றவையுடன் வித்தியாசமான சுவையில் சாம்பார், சட்னியும் பல்லாண்டுகளாகக் கிடைக்கின்றன. அந்த உணவகத்தில் கிடைக்கிற உணவுகளின் சுவைக்கு அடிமையாகித் தொடர்ந்து சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகம்.

எழுபதுகளில் தொடங்கப்பட்ட மதுரை முருகன் இட்லிக் கடையின் வழங்கப்பட்ட பல்வேறு வகையான சட்டினிகளும் மிளகாய்ப் பொடியும் வாசமான சாம்பாரும் இட்லி சாப்பிடுவதைத் தூண்டின. தமிழரின் பாரம்பரியமான இட்லியை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்ததில் முருகன் இட்லிக் கடையின் பங்கு குறிப்பிடத்தக்கது.

முருகன் இட்லி கடை
முருகன் இட்லி கடை

இன்று பெரும்பாலான உணவகங்களில் ஒரே மாதிரியான உணவு வகைகள் கிடைக்கின்றன. எழுபதுகளில் குறிப்பிட்ட ஹோட்டல்களுக்கெனச் சிறப்பான உணவுகள் இருந்தன. ஜீரா தோசை எனப்படும் இனிப்புத் தோசை, சிறுவர்களுக்குப் பிடித்தமானது. வயிற்றுக் கடுப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஜீரா தோசையை வாங்கி விழுங்கினர். இன்று அந்தத் தோசை கிடைக்கிறதா எனத் தெரியவில்லை. பட்டணம் பக்கோடா எனப்படும் சிற்றுண்டி மாலைவேளைகளில் சில ஹோட்டல்களில் கிடைத்தது. அது சாப்பிட சுவையாக இருக்கும். பட்டணம் பக்கோடா இப்பொழுது எங்கும் கிடைப்பது இல்லை.

ஹோட்டல்களிலும் தேநீர்க் கடைகளிலும் தயாரான சில வகையான பலகாரங்கள் மதுரையில் மட்டும் கிடைக்கின்றன. இனிப்பில் செய்யப்பட்ட பேனியா, சுருள் பூரி, பால் பன், ஆட்டுக்கால் கேக், சுசியம், வெள்ளைச்சீயம் போன்றவை குறிப்பிடத்தக்கன. அழிந்துவரும் பாரம்பரியமான உணவு வகைகளைக் கைவிடுவதைத்தவிர வேறு வழியில்லையா?

எழுபதுகளில் மேல மாசி வீதியில் தொடங்கப்பட்ட ஆரிய பவன், வட இந்தியாவில் பிரபலமான பெரிய அளவிலான சோலா பூரி, சன்னா மசாலாவை அறிமுகப்படுத்தியது. இரவு உணவாக அறிமுகப்படுத்தப்பட்ட பூரிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆரிய பவன் பை நைட் என்று அறிமுகமான கடையில் உணவு சுவையாக இருக்கும்.

சிக்கன்
சிக்கன்

நேதாஜி சாலையில் இருக்கும் ராஜா பார்லி கடை, கேக் வகைகளுக்குப் பிரபலம். தமிழக எண்ணெய்ப் பலகாரக் கடை, பிரேமா விலாஸ், தெற்கு வாசல் உத்தண்டன் பக்கோடா கடை, ஜெயராம் பேக்கரி போன்றவை பாரம்பரியமானவை. இன்று நகரெங்கும் பரவலாக இருக்கும் பேக்கரிகளைப் பார்க்கையில், மதுரைக்காரர்கள் கேக்குகளை விரும்பிச் சாப்பிடுகின்றனர் எனத் தோன்றுகிறது. தெருவோரத்தில் விற்பனையாகிற பாவ்பாஜி, பானிபூரி, மசாலா பூரி போன்ற வட இந்திய உணவுகளைச் சாப்பிடுகிறவர்கள் எண்ணிக்கையும் பெருகியுள்ளது. சவர்மா, தந்தூரி சிக்கன், கபாப், கிரில் சிக்கன் விற்பனைக்காக உருவாகியுள்ள தனிக்கடைகளில் இளைய தலைமுறையினர் ஆர்வத்துடன் சாப்பிடுகின்றனர்.

தஞ்சை மாவட்டத்து நண்பர் பேராசிரியர் தா.மணி என்னிடம் சொன்னார். “மதுரை தெருக்களில் நடக்கும்போது, வழியெங்கும் இருக்கும் கடைகளில் ஏதாவது வாங்கிச் சாப்பிடலாம்” என்று. அது ஒருவகையில் உண்மை. கீழவாசல் பக்கம் போனால் ‘ஜிகர் தண்டா’ எனச் சுவையான பானம் கிடைக்கும். கடல்பாசி, ஐஸ்கிரீம், பால் கலந்து தயாரிக்கப்பட்ட ஜிகர்தண்டாவைக் கண்டுபிடித்தது யார் எனத் தெரியவில்லை. ஜிகர்தண்டாவை ஒரு தடவை ஜில்லெனச் சாப்பிட்டால் அப்புறம் அதைப் பார்க்கிறப்ப சாப்பிடுமாறு மனதைத் தூண்டும். புது மண்டபம் அருகில் முதன்முதலாக விற்கப்பட்ட ஜிகர்தண்டா பின்னர் சிந்தாமணி திரையரங்கம், முனிச்சாலை போன்ற இடங்களிலும் கிடைத்தது. எண்பதுகளில் சிந்தாமணி திரையரங்கின் அருகில், முஸ்லிம் பெரியவர் தள்ளு வண்டியில் விற்ற ஜிகர் தண்டாவை நடிகர் எஸ்.வி.சேகர் விரும்பிச் சாப்பிடுவதை நேரில் பார்த்திருக்கிறேன். மதுரையில் மட்டும் விற்பனையான ஜிகர் தண்டா இப்பொழுது சென்னையிலும் கிடைக்கிறது.

பழைய தினமணி திரையரங்கு அருகே பெரிய பித்தளைப் பானையின்மீது திருநீற்றுப் பட்டை பூசி, நடுவில் சந்தனம், குங்குமம் வைத்துச் சூடாக விற்கப்படும் பருத்திப் பால் மதுரையைத்தவிர வேறு எங்கும் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை. பருத்தி விதையை ஊறவைத்து ஆட்டி எடுக்கப்படும் பாலுடன் கருப்பட்டி அல்லது மண்டை வெல்லம், அரிசி மாவு கலந்து சூடாகத் தயாரிக்கப்படும் பருத்திப்பால் ‘குடல் புண்ணுக்கு நல்லது’ என்று நம்பி வாங்கிக் குடிக்கின்றனர். இனிப்புச் சுவையுடன் கலந்த பருத்திப்பால், உடலுழைப்புச் செய்கிறவர்களின் பசியைத் தற்காலிகமாகப் போக்கும் ஆற்றல் மிக்கது.

கருப்பட்டி பருத்திப்பால்
கருப்பட்டி பருத்திப்பால்
என்.ஜி.மணி

‘பீம புஷ்டி அல்வா’ என்ற விளம்பரத்துடன் இரவு வேளைகளில் தள்ளுவண்டியில் பெட்ரோமாக்ஸ் விளக்கின் ஒளியில் விற்கப்படும் கெட்டியான அல்வா, எண்பதுகளில்கூட மதுரையில் பிரபலமாக இருந்தது. தள்ளு வண்டியில் பெரிய அளவில் உடல் வலுவான பயில்வானின் படத்துடன் விற்கப்படும் அல்வா பெரிய பித்தளைத் தாம்பாளத்தில் சதுர வடிவில் குவித்து வைக்கப்பட்டிருக்கும். அல்வா விற்பனையாளர் இரு அடி நீளமுள்ள பட்டாக் கத்தியினால் அல்வா குவியல்மீது ஓங்கி வெட்டித் துண்டாக்கி எடை போட்டு விற்பனை செய்யும் லாகவம் தனியானது. முந்திரிப்பருப்பு கலந்த அல்வாவை வாயில் போட்டு மென்றால், இளம் ரப்பரை மெல்வது போலிருக்கும். அந்த வண்டியில் ஒரு அங்குல விட்டமுள்ள இனிப்புப் பூந்தியும் வண்ணத்தில் விற்பனைக்கு இருக்கும். இத்தகைய வண்டிகள் கிராமத்துத் திருவிழாக்களிலும், சித்திரைத் திருவிழாவின் போதும் அதிகமாகக் காணப்படும். அண்மைக்காலமாக பீம் புஷ்டி அல்வா வண்டிகளைக் காண முடியவில்லை.

வெட்டப்பட்ட தென்னை மரத்தின் குருத்தினை மட்டும் கொண்டுவந்து தெருவோரத்தில் வைத்துப் பெரிய கத்தியினால் சீவி விற்கப்படும் குருத்து, சாப்பிடச் சுவையாக இருக்கும். தென்னங்குருத்தைக் காசு கொடுத்து வாங்கிச் சாப்பிடுகிறவர்கள், மதுரையில் நிரம்ப உள்ளனர்.

கொடுக்காப்புளி
கொடுக்காப்புளி

கிலோ நானூறு ரூபாய்க்கு விற்கப்படும் கொடுக்காப்புளிக் காயை விரும்பி வாங்கிச் சாப்பிடுகிற பெண்கள் மதுரையில் நிறைய இருக்கின்றனர். அறுபதுகளில் வேலியிலும் ஆற்றங்கரையிலும் காய்த்துத் தொங்கிய கொடுக்காப்புளிக் காய்க்கு இப்ப மௌசு அதிகம். பனங்கிழங்கை வாங்கி அவிச்சுச் சாப்பிடுகிறவர்கள் எண்ணிக்கை மதுரையில் அதிகம். சீசன் நேரத்தில் தென் மாவட்டங்களில் இருந்து மதுரை யானைக்கல் மார்க்கெட்டுக்குக் லாரிகளில் கொண்டு வரப்படும் பனங்கிழங்குகள் ஓரிரு நாள்களில் விற்பனையாகின்றன. கடைகளில் மலைபோலக் குவிக்கப்பட்டிருக்கிற பனங்கிழங்குகளை அவித்துத் தின்னுகிற மாபெரும் மக்கள் கூட்டம் எனது நினைவுக்கு வரும்.

நாக்கின் சுவையில் தோய்ந்தவர்களின் பசி ஒருபோதும் அடங்கிடாது. அதிலும் இளமையில் பசியுடன் சுவையான உணவு இல்லாமல் வாடியவர்கள் பின்னர் வசதியான வாழ்க்கை வாழ்ந்தாலும் பேய்த்தீனி தின்பது ஒருபோதும் மாறாது. எப்பொழுதும் எதையாவது அரைத்துப் பெருந்தீனி தின்னுகிறவர்களின் புத்தியும் செயல்பாடும் மந்தமாக இருக்க வாய்ப்புண்டு. ‘பன்றிபோல் தின்றால் பன்றித்தனம் வருமா’ என்ற ப.சிங்காரத்தின் கேள்வி முக்கியமானது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism