Published:Updated:

ஆவணி மாத பிரசாதங்கள்

ஆவணி மாத பிரசாதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஆவணி மாத பிரசாதங்கள்

சௌந்தரி சபரீசன்

ஆவணி மாத பிரசாதங்கள்

சௌந்தரி சபரீசன்

Published:Updated:
ஆவணி மாத பிரசாதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஆவணி மாத பிரசாதங்கள்

சிம்ம மாதம் என்றும் அரச மாதம் என்றும் சிறப்பிக்கப்படுவது ஆவணி. சூரியனின் பலத்தோடு விளங்கும் இந்த மாதத்தில் சகல நல்ல காரியங்களும் நடைபெறுவது வழக்கம். ஆவணி மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகள் விசேஷமானவை. அவை சூரியனின் நாள்கள் என்பதால், அன்று தொடங்கப்படுபவை அனைத்தும் நன்மையாக முடியும் என்பார்கள் பெரியோர். ஆவணி திருவோணத்தில் வாமனர் அவதரித்த விழா, விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஓணம், ஆவணி மூலத் திருவிழா என விழாக்களும் ஆவணி அவிட்டம், ஆவணி ஞாயிறு, புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி, கஜலக்ஷ்மி விரதம், ஹரிதாளிகா கெளரி விரதம், ரிஷி பஞ்சமி விரதம், விபத்தார கெளரி விரதம் எனப் பல்வேறு விரதங்களும் கொண்டாடப்படும் மாதமிது.

ஆவணி மாத பிரசாதங்கள்

இந்த மாதத்தில் பல வகையான பிரசாதங்களுக்கும் குறைவில்லை எனலாம். சீடை, முறுக்கு, கொழுக்கட்டை, மோதகம் என்று திகட்டாத பட்சணங்கள் யாவும் குழந்தைகளுக்கு இந்த மாதத்தில் கிடைக்கும். காரணம், கண்ணனும் கணபதியும் பிறந்த மாதமல்லவா இது! சுவை குறையாத பாரம்பர்ய பட்சணங்களைச் செய்வதில் வல்லவரான சௌந்தரி சபரீசன், `அவள் கிச்சன்’ வாசகர்களுக்காகச் செய்துதரும் ஆவணி மாத பண்டிகை விருந்து இதோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிருஷ்ண ஜயந்தி - 2019 ஆகஸ்ட் 23

சத்து மாவு சீடை

பகவான் கண்ணனுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பிடித்த தின்பண்டம் சீடை. கிருஷ்ண அவதாரத்தில் அநேக அசுரர்களை கண்ணன் சம்ஹாரம் செய்து அழித்தான். அப்போது அவர்கள் பற்கள் நறநறவென நெரிக்கப்பட்டன என்பதை உணர்த்தும் விதமாகவே கண்ணனுக்கு முறுக்கு, சீடை போன்றவற்றைப் படையலிட்டு உண்கிறோம் எனப் பெரியவர்கள் சொல்வதுண்டு. ரவை, கேழ்வரகு, அரிசி, உளுந்து என விதவிதமான சீடைகள் உண்டு. இதில் சத்து மாவு சீடை இதோ...

தேவையானவை:

 • சிறுதானியங்கள் கலவை - 2 கப் (சோளம், வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சிறுபருப்பு, காராமணி - இவற்றில் ஏதாவது ஐந்து சேர்த்தால் போதும்)

 • உளுத்த மாவு - ஒரு கப் (உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்)

 • அரிசி மாவு - அரை கப்

 • சீரகம், எள் - தலா ஒரு டீஸ்பூன்

 • வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஆவணி மாத பிரசாதங்கள்

செய்முறை:

சிறுதானியங்கள் அனைத்தையும் வறுத்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். எல்லா மாவுகளையும் கலந்து ஒன்றுக்கு இரண்டுமுறை சலித்துக்கொள்ளவும். உப்பு, சீரகம், எள், வெண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மாவைக் கெட்டியாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக விரிசல் இல்லாமல் உருட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, மிதமான தீயில் சீடை உருண்டைகளைக் கொஞ்சம் கொஞ்ச மாகப் போட்டுப் பொரித்தெடுத்து, ஆறியதும் கிருஷ்ணருக்குப் படைக்கவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிருஷ்ண ஜயந்தி - 2019 ஆகஸ்ட் 23

கடலை மாவுக் குழல்

வடஇந்தியப் பலகாரமான இந்த கடலை மாவு குழல், நம்முடைய ரிப்பன் பக்கோடாவைப்போல எளிமையாகச் செய்யக்கூடியது. கண்ணனின் வழக்கமான நைவேத்தியங்களோடு இதையும் படைத்து அந்தப் பரந்தாமனின் பேரருளைப் பெறுவோம். காரம், இனிப்பு என இருவகைகளிலும் இந்தப் பலகாரத்தைச் செய்து கண்ணனின் வருகையைக் கொண்டாடுவோம்.

தேவையானவை:

 • கடலை மாவு - ஒரு கப்

 • அரிசி மாவு - அரை கப்

 • பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

 • ஓமம், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்

 • பொடித்த மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • சூடுபடுத்திய எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 • தண்ணீர், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

ஆவணி மாத பிரசாதங்கள்

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், ஓமம், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சூடான எண்ணெய், தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியான பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளாகப் பிடித்து சப்பாத்தி போல தேய்த்து, அதை லேசாக முள் கரண்டியால் குத்தி, நீள நீளமாக ரிப்பன் போல வெட்டிக்கொள்ளவும். வெட்டிய ரிப்பன் குழலை நன்கு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இது குழந்தைகளுக்குப் பிடித்த கரகரப்பான பலகாரம். இதையே பெருங்காயத்தூள், மிளகுத்தூள் இல்லாமல் வெல்லப்பாகு சேர்த்து இனிப்பாகச் செய்யலாம்.

கிருஷ்ண ஜயந்தி - 2019 ஆகஸ்ட் 23

எள்ளுருண்டை

எல்லாவிதமான சத்துகளையும் கொண்டது எள். அதனால்தான் `இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்பார்கள். கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கிய கண்ணபிரானின் பிறந்த நாளில் அவன் பெயர் சொல்லி நம் குழந்தைகளுக்கு இந்த எள்ளுருண்டையைச் செய்து தாருங்கள்; பலம் பெறட்டும்.

தேவையானவை:

 • கறுப்பு எள் - ஒரு கப்

 • பொடித்த வெல்லம் - அரை கப்

 • ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்

 • வெள்ளரி விதைகள் - 2 டீஸ்பூன்

 • நெய் - 2 டீஸ்பூன்

ஆவணி மாத பிரசாதங்கள்

செய்முறை:

வாணலியைச் சூடாக்கி அதில் எள்ளைப் போட்டு சிறிது நேரம் வறுத்து இறக்கி வைத்துக்கொள்ளவும். சூடு குறைந்த பின்பு மிக்ஸியில் எள்ளைச் சேர்த்து, அத்துடன் வெல்லம், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். இடித்துச் செய்தால் நல்லது. அரைத்த எள் கலவையில் வெள்ளரி விதைகள் சேர்த்து உருக்கிய நெய்விட்டு கலந்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.

குறிப்பு: எள்ளின் சூட்டை சமன் செய்யவே வெள்ளரி விதைகள் சேர்க்கிறோம்.

விநாயகர் சதுர்த்தி - 2019 செப்டம்பர் 2

கதம்ப சுண்டல்

சுண்டல் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமே இல்லை எனலாம். அதிலும் எல்லாப் பயறுகளும் கலந்த இந்த நவரத்தின சுண்டல் விநாயகப் பெருமானுக்கு விருப்பமானது... குழந்தைகளுக்கும்தான். அதிக ஊட்டச்சத்துகொண்ட இந்தப் பிரசாதத்தை அனைவருக்கும் அளித்து இன்புறுவோம்.

தேவையானவை:

 • மொச்சை, காராமணி, பச்சைப் பட்டாணி, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, சிவப்பு ராஜ்மா - தலா 100 கிராம்

 • காய்ந்த மிளகாய் - 6

 • தேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் - தலா அரை கப்

 • கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

 • கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

ஆவணி மாத பிரசாதங்கள்

செய்முறை:

பயறுகளை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளிக்கவும். இதில் வேகவைத்த சுண்டலைச் சேர்த்துக் கலந்து, தேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

குறிப்பு: இன்னும் காரமாக, சுவையாக இந்த சுண்டலைப் படைக்க வேண்டுமானால் கடலைப்பருப்பு, தனியா - தலா அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4 சேர்த்து வறுத்துப் பொடித்து இதில் தூவி கமகமவென கணபதிக்குப் படைத்து அருள் பெறலாம்.

விநாயகர் சதுர்த்தி - 2019 செப்டம்பர் 2

மோதகம் - பூரணக் கொழுக்கட்டை

விநாயகப் பெருமான் தமது இடது திருக்கரத்தில் தாங்கியிருக்கும் சிறப்பான நைவேத்தியம் மோதகம். மோதகத்தின் தத்துவம் அருமையானது. மோதகம் என்றால் அமிர்த கலசம். அதாவது அழிவற்ற தன்மை அல்லது நிஜாநந்தம் கொண்டது என்று பொருள். அண்டத்தின் உள்ளே இருக்கும் பூரணம் பிரம்மம். மாயையை அகற்றினால் இனிப்பான பிரம்மத்தை அடையலாம் என்று விநாயகர் தத்துவத்தை மோதகம் உணர்த்துகிறது. மோதகப்பிரியனை வரவேற்று வணங்குவோம்.

தேவையானவை:

 • பச்சரிசி மாவு - 2 கப்

 • கறுப்பு எள் - அரை கப்

 • தேங்காய்த் துருவல் - அரை கப்

 • பொடித்த வெல்லம் - ஒரு கப்

 • ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்

ஆவணி மாத பிரசாதங்கள்

செய்முறை:

வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைத்து அதை வேறொரு பாத்திரத்தில் வடிகட்டி சுத்தமாக்கவும். மீண்டும் வெல்லக்கரைசலைக் கொதிக்க வைத்து அதில் வறுத்த எள், தேங்காய்த் துருவலைச் சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். பின்னர் ஏலக்காய்த்தூளை தூவிக் கிளறி, இறக்கி வைக்கவும். பூரணம் தயார்.

வாணலியில் அரிசி மாவைப் போட்டு, மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு நான்கு கப் தண்ணீரில், உப்பு மற்றும் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு, கொதிக்கவிடவும். கொதித்த நீரை, அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, ஒரு கரண்டிக்காம்பால் கிளறிவிடவும். இப்போது அரிசி மாவு பாதி வெந்து பதமாகிவிடும். சிறிது ஆறி கைபொறுக்கும் சூடு வந்தவுடன், நன்றாகப் பிசைந்து எலுமிச்சைப்பழ அளவு மாவை எடுத்து உருட்டவும். அந்த உருண்டையின் நடுவே அழுத்திப் பிடித்து ஒரு சிறு கிண்ணம் போல் செய்துகொள்ளவும். அதனுள், தேவையான அளவு பூரணத்தை வைத்து, மாவின் எல்லா ஓரத்தையும் ஒன்றாகச் சேர்த்து பிரிந்துவிடாமல் அழுத்தி உருண்டையாக்கினால் மோதகம். அதுவே கொழுக்கட்டை என்றால், உருண்டையான மாவைச் சப்பாத்தி போல லேசாகத் தேய்த்து பூரணத்தை நடுவில் வைத்து, இரண்டாக மடித்து ஓரங்களை அழுத்திவிடவும். மோதகமாகவோ, கொழுக்கட்டையாகவோ செய்தவற்றை இட்லித் தட்டில் துணி போட்டு அதன்மீது வைத்து 10 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். கணநாதருக்குப் பிடித்த மோதகங்களும் கொழுக்கட்டைகளும் தயார்.

விரதக் கஞ்சி

விரதங்கள் என்பது உணவை மறுக்கும் சடங்கு மட்டுமே அல்ல. இறைவனின் சிந்தனையோடு லயித்திருக்கும் மோனநிலையே விரதம். உணவே நம் எண்ணங்களைத் தீர்மானிக்கிறது என்று உணர்ந்த நம் முன்னோர், விசேஷ நாள்களில் உபவாசம் இருக்கச் சொன்னார்கள். உபவாசம் இருக்க முடியாத அன்பர்கள் இதுபோன்ற எளிமையான கஞ்சி, உலர்ந்த பழங்களை உண்டு தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம் என ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகிறார்கள்.

தேவையானவை:

 • கேழ்வரகு, உடைத்த கடலை, வேர்க்கடலை, பாசிப் பயறு (பச்சைப் பயறு), கோதுமை, அரிசி (எல்லாம் சேர்த்து) - ஒரு கப்

 • தயிர் - அரை கப்

 • உப்பு - தேவையான அளவு (அல்லது)

 • சர்க்கரை - தேவையான அளவு

ஆவணி மாத பிரசாதங்கள்

செய்முறை:

எல்லா தானியங்களையும் வறுத்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். 3 கப் நீரைக் கொதிக்கவைத்து அதில் இந்தக் கலவை மாவைச் சேர்த்து நன்கு கிளறவும். மாவு கொதித்து கஞ்சி பதமாக வந்ததும் இறக்கிக் குளிரவைத்து உப்பு, தயிர் சேர்த்துப் பருகலாம். விரதங்கள் அதிகம் வரும் இந்த மாதத்தில் உடல் பலவீனமானவர்கள், கர்ப்பிணிகள், நீரிழிவு உள்ளவர்கள் இந்தக் கஞ்சியை அருந்தி உபவாசம் இருக்கலாம்.

இனிப்பு பிடித்தவர்கள் தயிர், உப்புக்குப் பதிலாக சர்க்கரைச் சேர்த்துப் பருகலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism