Published:Updated:

``எங்கள் ரெசிப்பிகளில் இந்தியச் சுவையும் கலந்திருக்கும்!" - ஆங்கிலோ இந்தியன் செஃப் பிரிட்ஜெட்

`ஆங்கிலோ இந்திய உணவுமுறைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு என் கையில் இருப்பதை நான் உணர்ந்தேன்.’

பிரிட்ஜெட் ஒயிட் குமார்
பிரிட்ஜெட் ஒயிட் குமார்

'பிரிட்ஜெட் ஒயிட் குமார் (Bridget White-Kumar)'... ஆங்கிலோ இந்தியன் செஃப் . சென்னை, ரேடிசன் புளூவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் `ஆங்கிலோ இந்தியன்' உணவுத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்தவரைச் சந்தித்தோம். தன் அறிமுகத்துடன், ஆங்கிலோ இந்தியன் ரெசிப்பிகளின் தனித்தன்மை குறித்துப் பேசினார் பிரிட்ஜெட்.

பிரிட்ஜெட்  ஒயிட் குமார்
பிரிட்ஜெட் ஒயிட் குமார்

''இளமைக் காலத்தில், தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தேன். வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அடுத்தது என்ன என்ற கேள்வி எழவே, சமையல்கலை பக்கம் வந்தேன். பொதுவாக எல்லா நாட்டினருக்கும் அவரவர்களுக்கான பிரத்யேக பாரம்பர்ய உணவு வகைகள் என்றிருக்கும். அவர்கள் வாழும் இடத்தில் கிடைக்கக்கூடிய உணவுப்பொருள்களின் சுவை அதில் அதிகமாக இருக்கும். இந்தியா போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த நாடுகளில், மாநிலங்கள், ஊர்களுக்கு ஏற்ப உணவின் சுவையும் தரமும் இருக்கும். உதாரணமாக, ஆந்திர உணவுகளில் காரம் அதிகமிருக்கும், கேரள உணவுகளில் எண்ணெய் அதிகமிருக்கும், தமிழக உணவுகளில் மசாலா அதிகமிருக்கும்.

வேர், பிசின்... டர்கிஷ் ஐஸ்க்ரீம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா?! #Video

இந்த வகையில் பார்த்தால், எங்கள் உணவில் காரமும் மசாலாவும் குறைவாக இருக்கும். ஆங்கிலோ இந்தியன் என வரும்போது, எங்கள் சுவையும் இருக்க வேண்டும்; இந்திய உணவுகளின் சுவையும் மங்கிவிடக் கூடாது. ரெசிப்பிகள் யாவும் அதற்கேற்றபடி இருக்கும்" என்பவர், மக்கள் மத்தியில் மற்ற உணவுகளுக்கு இருக்கும் ரீச், ஆங்கிலோ இந்தியன் உணவுகளுக்கு இல்லை என்கிறார் வருத்தத்துடன்.

பிரிட்ஜெட் ஒயிட் குமார்
பிரிட்ஜெட் ஒயிட் குமார்

''சொல்லப்போனால், எங்களின் பாரம்பர்ய உணவுக்கான ரெசிப்பிகளை இதுவரை யாரும் தொகுக்கக்கூட இல்லை. அதை உணர்ந்த நேரத்தில்தான், ஆங்கிலோ இந்திய உணவுமுறைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு என் கையில் இருப்பதை நான் உணர்ந்தேன். மக்களுக்குப் புரியும் விதத்தில், எங்கள் ரெசிப்பிகளைத் தொகுக்க வேண்டும் என முடிவெடுத்து, அதற்கான வேலைகளில் உடனடியாக இறங்கினேன். ஆனால், எங்கள் ரெசிப்பிகள் அதுவரை எதிலுமே பதிவுசெய்யப்படவில்லை என்பதால், இதில் எனக்கு எந்த முன்னுதாரணமும் இல்லை. அந்த நேரத்தில் எனக்குக் கைகொடுத்தவை, என் அம்மாவும் பாட்டியும் எனக்குக் கொடுத்துச் சென்றிருந்த சமையல் குறிப்பு டைரிகள். அவற்றை அடிப்படையாக வைத்து இயங்கத் தொடங்கினேன்.

சிமிலி, இளநீர் அல்வா, கம்பு லட்டு... களைகட்டும் மதராசபட்டினம் விருந்து! #Video

இங்கும் ஒரு பிரச்னை வந்தது. என்னவெனில், அந்தக் காலத்துக் குறிப்புகள் எதிலுமே அளவுகள் தெளிவாக இல்லை. `ஒரு கைப்பிடி சக்கரை', `கொஞ்சமாகக் காரம்', `சிறிதளவு பால்' - இப்படித்தான் டைரி முழுக்கவே இருந்தது. எனவே, ஒவ்வொரு ரெசிப்பியையும் நானே செய்துபார்க்கத் தொடங்கினேன். டைரியில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து ரெசிப்பிகளையும் எனக்குத் தெரிந்த சமையல் அளவுகோலை வைத்துத் தயாரித்தேன். `சுவை டபுள் ஓகே' என எனக்குத் தோன்றும்வரை, மீண்டும் மீண்டும் சமைப்பேன், சுவைப்பேன். ஏறத்தாழ நான்கு வருடங்களுக்கும் மேலாக, இப்படி ஒவ்வோர் உணவாகச் சமைத்துப் பார்த்தேன். இறுதியில், உணவுப்பட்டியலைத் தயார் செய்தேன்" எனக்கூறிச் சிரித்த பிரிட்ஜெட், இதுவரை நான்கு நூல்களை வெளியிட்டுள்ளாராம்.

பிரிட்ஜெட் ஒயிட் குமார்
பிரிட்ஜெட் ஒயிட் குமார்
தமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா... மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன? #VikatanInfographics

வயதுக்கான சோர்வு சிறிதும் தென்படாத அளவுக்குச் சுறுசுறுப்பாக இயங்கும் பிரிட்ஜெட்டின் அடுத்த ஆசை, ஆங்கிலோ இந்தியன் உணவுகளை இந்திய வீடுகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது. ''இதுவும் இந்திய வழியைச் சேர்ந்த பாரம்பர்ய உணவுதான். ஒருமுறை சாப்பிட்டுப் பாருங்கள்... நிச்சயம் பிடித்துப் போகும்" என்றவர், உணவுத் திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த அவரின் உணவுகளை நமக்குச் சுவைக்கக் கொடுத்தார்.

யம்மி!

சாம்பிளுக்கு உங்களுடனும் ஒரு ரெசிப்பியின் செய்முறையைப் பகிர்ந்துகொள்கிறார். செய்து பாருங்கள்..

சிக்கன் டிங் டிங்
சிக்கன் டிங் டிங்

சிக்கன் டிங் டிங்

தேவையானவை: சிக்கன் - அரை கிலோ. மிளகுத்தூள் - 3 டீஸ்பூன். மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன். மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன். இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன். வினிகர் - 2 டேபிள்ஸ்பூன். சோள மாவு - 50 கிராம். எண்ணெய் - தேவையான அளவு. உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சிக்கனை நன்றாக வேகவைத்து, எலும்பு நீக்கி, மிக்ஸியில் மசித்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு விழுது, வினிகர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை சிறிய அளவில் உருண்டையாகவோ, உங்களுக்குப் பிடித்த வடிவத்திலோ எடுத்து, சோளமாவில் தோய்த்தெடுத்து, எண்ணெய்யில் பொரித்தெடுத்தால்... க்ரிஸ்பி சிக்கன் டிங் டிங்கை சுவைக்கலாம்!