Published:Updated:

மினிஸ்டரி ஆஃப் சட்னிஸ்!

களைகட்டிய ஆங்கிலோ - இந்தியன் உணவுத் திருவிழா

பிரீமியம் ஸ்டோரி

ந்திய சினிமா பாடல்களைத் தங்கள் கிடாரின் வழியே இசைத்துக்கொண்டே பாடும் ஆங்கிலேய இளைஞர்கள்; அவர்களின் இசைக்கு ஏற்றாற்போல நடன மாடும் இந்தியர்கள்... இவர்களைச் சுற்றி கண்ணைக் கவரும் எண்ணற்ற கண்ணாடிப் பாத்திரங்களும் அவற்றில் நிரம்பியிருக்கும் ஆங்கிலோ - இந்தியன் உணவுப் பதார்த்தங்களும்.

மினிஸ்டரி ஆஃப் சட்னிஸ்!

இப்படித்தான் களைகட்டியது சென்னை ரேடிசன் புளூ ஹோட்டல் ஜி.ஆர்.டி-யில் `மினிஸ்டரி ஆஃப் சட்னிஸ்’ என்ற பெயரில் நடைபெற்ற ஆங்கிலோ - இந்தியன் உணவுத் திருவிழா. இதன் தொடக்க விழாவில் `ஆங்கிலோ - இந்தியன் உணவுக் கலையின் இளவரசி’ என அழைக்கப்படும் உணவுக் கலை நிபுணர் பிரிட்ஜெட் ஒயிட் குமார் கலந்துகொண்டார். அவர் தயாரித்த உணவு வகைகள்தாம் இந்த விழாவின் ஹைலைட்ஸ்!

ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில், இந்தியாவுக்கு வந்து, இங்கேயே வாழ்ந்து, இந்தியருடன் கலப்புமணம் புரிந்து கொண்டவர்களின் தலைமுறையினரான `ஆங்கிலோ இந்திய’ சமூகத்தினரின் உணவு முறையும் உணவு வகைகளும் வித்தியாச மானவை. அவை, நம் இந்திய உணவு முறைகளின் பல சிறப்புகளை ஏற்றிருந்தாலும், சுவையிலும் மணத்திலும் தனித்துவத்தோடு காணப்படுகின்றன.

பிரிட்ஜெட் ஒயிட் குமார்
பிரிட்ஜெட் ஒயிட் குமார்

புதிது புதிதாக நிறைய உணவு முறைகள் வந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் மறக்கப்பட்டு வரும் ஆங்கிலோ - இந்தியன் உணவு முறைகளை மீட்டெடுக்கும் முயற்சி யில் நடைபெற்ற இந்த உணவுத் திருவிழாவின் தொடக்க நாளில் நாமும் கலந்துகொண்டு உணவுகளைச் சுவைத்தோம்.

இதில் பல வகையான சைவ - அசைவ உணவுகள் இடம்பெற்றிருந்தன. பொதுவாகவே ஆங்கில உணவுகள் என்றால் `அதிகம் அசைவம்தாம் இடம் பெற்றிருக்கும்; அவையும் முழுமையாக வேக வைக்கப் பட்டிருக்காது’ என்பது போன்ற எண்ணம் ஏற்படலாம். இங்கு காணப்பட்ட ஆங்கிலோ - இந்தியன் உணவுகளைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் அனைத்து உணவுகளும் முழுமையாக வேகவைக்கப்பட்டு, மசாலா பொருள்கள் சேர்க்கப்பட்டு இந்திய சமை யல் முறைக்கு இணையாகவே இருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆங்கிலோ - இந்தியன் உணவு வகைகளோடு, பழரசங்கள், இனிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஆங்கிலோ - இந்தியன் சிக்கன் சூப், வெஜிடபிள் சூப், சிக்கன் டிங்-டிங், யாம் டிங்-டிங், போர்க்-டெவில் ஃப்ரை, மட்டன் மின்ஸ் பால் கறி, பட்டர் ஃப்ரைடு காலிஃப்ளவர், டெவில் சட்னி, சஃப்ரான் கோகனட் ரைஸ், கிராண்டுமா’ஸ் சிக்கன் கன்ட்ரி கேப்டன் போன்றவை குறிப்பிடத் தக்கவை.

மினிஸ்டரி ஆஃப் சட்னிஸ்!

இனிப்புகள், பழ சாலட் வரிசையில் ரா கோகனட் கேக், ஸ்பைஸி ஆரஞ்சு - அவகோடா சாலட், கிராண்டுமா’ஸ் மில்க் புடிங், ரோஸ்டட்டு பம்கின் சாலட் போன்றவை முக்கியமானவை.

இந்திய உணவுகளைப் போலவே ஆங்கிலோ - இந்தியன் உணவு வகைகளிலும் மிளகு, சீரகம், பட்டை, லவங்கம் போன்ற மசாலாப் பொருள்களும் வாசனைப் பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் இந்திய உணவுகளில் உள்ளது போல இந்த உணவுகள் அதிக காரமாக இருப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன?

இந்திய உணவுகளில் கார மசாலா பொருள்களை அரைத்து அப்படியே சேர்ப்போம். ஆங்கிலோ - இந்தியன் உணவுப் பொருள்களில் இந்த மசாலாப் பொருள்களை முதலில் உலரவைத்து, பிறகு அரைத்து, சலித்துப் பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த உணவுகள் அதிக காரமாக இருப்ப தில்லை. சுவைத்துப் பார்க்கும்போது ஒரு மெல்லிய காரத்தை உணரலாம்.

இந்த உணவுத் திருவிழாவின் முக்கிய உணவு `டெவில் சட்னி’. கிட்டத்தட்ட இது தமிழகத்தில் தயாரிக்கப்படும் `சிவப்பு காரச் சட்னியை’ப் போலவே இருந்தது. ஆனால், காரத்துக்குப் பதில் புளிப்பும் இனிப்புச் சுவையுமே அதிகம் இருந்தன. வெங்காயம், மிளகாய்த்தூள், உலர்திராட்சை, சர்க்கரை, உப்பு, வினிகரின் கலவையே இந்த டெவில் சட்னி.

அடுத்து இந்த விழாவில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த உணவுகள் சிக்கன் டிங் டிங் மற்றும் யாம் டிங் டிங். இது போன்ற வித்தியாசமான உணவுகளால் களைகட்டிக்கொண்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உணவுகளைச் சுவைத்துக்கொண்டிருந்தவர்களிடம் இது பற்றி கேட்டபோது. “உண்மையில், இந்த ஆங்கிலோ - இந்தியன் உணவு வகைகள் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேல் சுவையாக உள்ளன. பெரும்பாலான உணவுகள் இந்திய உணவுகளின் பிரதிகள் போல இருக்கின்றன. இங்குள்ள எல்லா உணவுகளும் நாங்கள் இதுவரை ருசிக்காத புது வகையானவை” என்றனர்.

உணவுக்கலை நிபுணர் பிரிட்ஜெட் ஒயிட் குமார் ஆங்கிலோ - இந்தியன் உணவு களைச் சமைப்பது குறித்து பொது மக்களுக்கான மாஸ்டர் கிளாஸ் வகுப்புகளை யும் எடுத்தார். அந்த ஆங்கிலோ - இந்தியன் உணவு வகைகளின் செய்முறைகள் இங்கே இடம்பெறுகின்றன.

இது இங்கிலீஷ் சமையல்!

கிராண்டுமா’ஸ் சிக்கன் கன்ட்ரி கேப்டன்

தேவையானவை:

 • சிக்கன் - அரை கிலோ

 • வெங்காயம் - 2

 • பச்சை மிளகாய் - 3

 • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 • எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

 • எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

கிராண்டுமா’ஸ் சிக்கன் கன்ட்ரி கேப்டன்
கிராண்டுமா’ஸ் சிக்கன் கன்ட்ரி கேப்டன்

செய்முறை:

சிக்கனை நன்றாகச் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, மெலிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு இதனுடன் மிளகுத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை இதனுடன் சேர்த்து தண்ணீர்விட்டு வேகவைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். சிக்கன் வெந்தவுடன் எலுமிச்சைச்சாறு விட்டு இறக்கவும்.

பழங்கால தென்கிழக்கு ஆசியாவிலிருந்தே வளர்ப்பு கோழிகள் உலகெங்கும் பரவியிருக்கின்றன.

சஃப்ரான் கோகனட் ரைஸ்

தேவையானவை:

 • தேங்காய்ப்பால் - 2 கப்

 • பாஸ்மதி அரிசி - ஒரு கப் (ஊறவைக்கவும்)

 • மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

 • குங்குமப்பூ - ஒரு டீஸ்பூன்

 • நெய் - 4 டேபிள்ஸ்பூன்

 • கிராம்பு - 3

 • ஏலக்காய் - 3

 • வறுத்த முந்திரி - 5

 • உப்பு - தேவையான அளவு

சஃப்ரான் கோகனட் ரைஸ்
சஃப்ரான் கோகனட் ரைஸ்

செய்முறை:

ஒரு குக்கரில் நெய்யைவிட்டு சூடுபடுத்தி அதில் கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் ஊறவைத்துள்ள அரிசி, தேங்காய்ப்பால், மஞ்சள்தூள், குங்குமப்பூ மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி நன்றாக வேகவைக்கவும். இரண்டு விசில் வந்ததும் குக்கரை இறக்கினால், சூடான சஃப்ரான் கோகனட் ரைஸ் தயார். இதனுடன் நெய்யில் வறுத்த முந்திரியைச் சேர்த்துப் பரிமாறலாம். இந்த ரெசிப்பியில் காரம் சேர்க்கப்படுவதில்லை.

தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் பாரம்பர்ய உணவுகளில் தேங்காய்ப்பால் இடம்பெறுகிறது.

மட்டன் பெப்பர் ஃப்ரை

தேவையானவை:

 • மட்டன் - அரை கிலோ

 • மிளகுத்தூள் - 3 டீஸ்பூன்

 • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 • பெரிய வெங்காயம் - 2 (மெலிதாக நறுக்கவும்)

 • உருளைக்கிழங்கு - 3 (தோல் சீவியது)

 • எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

மட்டன் பெப்பர் ஃப்ரை
மட்டன் பெப்பர் ஃப்ரை

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, நறுக்கிவைத்துள்ள வெங்காயத்தைப் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் இதனுடன் மிளகுத்தூள், இஞ்சி - பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்க்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் மட்டனை இவற்றுடன் சேர்த்து நன்றாகக் கிளறி வேக வைக்கவும். உப்பு மற்றும் தண்ணீரைத் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளலாம். மட்டன் நன்றாக வெந்தவுடன் இறக்கினால் சுவையான மட்டன் பெப்பர் ஃப்ரை தயார்.

கருமிளகின் தாயகம் கேரளாவே.

இறால் டெம்பெராடோ

தேவையானவை:

 • இறால் - அரை கிலோ

 • வெங்காயம் - 2 (நறுக்கவும்)

 • தக்காளி - 2

 • மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

 • மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 • சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

 • சர்க்கரை - அரை டீஸ்பூன்

 • இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

 • வினிகர் - சிறிதளவு

 • எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

இறால் டெம்பெராடோ
இறால் டெம்பெராடோ

செய்முறை:

இறாலை ஓடு நீக்கி நன்றாகச் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, நறுக்கிவைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். இந்தக் கலவையுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கிளறவும். இறுதியாக, சுத்தம் செய்து வைத்துள்ள இறால் மற்றும் சிறிதளவு வினிகர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். இந்தக் கலவை நன்றாகக் கெட்டிப்பட்டு கிரேவியானதும் இறக்கினால், இறால் டெம்பெராடோ ரெடி.

மன்னார் வளைகுடா பகுதியில் பிடிக்கப்படும் இறால்கள் கனடா, பிரான்ஸ், நேபாளம், வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

யாம் டிங் டிங்

தேவையானவை:

 • சர்க்கரைவள்ளிக்கிழங்கு - அரை கிலோ

 • மிளகுத்தூள் - 3 டீஸ்பூன்

 • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 • வினிகர் - 2 டேபிள்ஸ்பூன்

 • சோள மாவு - 50 கிராம்

 • எண்ணெய் - தேவையான அளவு

 • உப்பு - தேவையான அளவு

யாம் டிங் டிங்
யாம் டிங் டிங்

செய்முறை:

முதலில் சர்க்கரைவள்ளிக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் வினிகரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் இந்தக் கலவையை சிறிய அளவில் உருண்டை யாகவோ அல்லது உங்களுக்குப் பிடித்த வடிவத்திலோ எடுத்துக்கொண்டு சோள மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுத்தால், மொறுமொறு யாம் டிங் டிங் தயார்.

ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை சர்க்கரை வள்ளிக்கிழங்குக்கு உண்டு.

டெவில் சட்னி

தேவையானவை:

 • வெங்காயம் - 2

 • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • உலர்திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்

 • சர்க்கரை - 2 டீஸ்பூன்

 • வினிகர் - 2 டேபிள்ஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

டெவில் சட்னி
டெவில் சட்னி

செய்முறை:

வெங்காயத்தைத் தோல் நீக்கி மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் மிளகாய்த்தூள், உலர்திராட்சை, சர்க்கரை, வினிகர் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்தால், டெவில் சட்னி தயார். இதை அனைத்து வகையான சாதங்களுடனும் சேர்த்துப் பரிமாறலாம்.

வெங்காயத்தில் 89 சதவிகிதம் நீர்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு