Published:Updated:

திருச்சி ருசி : திணை அல்வா; சுழியம்; மொடகத்தான் தோசை அசத்தும் ` ஆப்பிள் மில்லட் ரெஸ்டாரென்ட்'!

திணை அல்வா
News
திணை அல்வா ( DIXITH )

திருச்சியின் தில்லைநகரில் இருந்த நாம் டீ சாப்பிடலாம் என சென்று கொண்டிருக்க அதே உளுந்தகஞ்சியின் வாசனையை நம்மால் உணர முடிந்தது.

Published:Updated:

திருச்சி ருசி : திணை அல்வா; சுழியம்; மொடகத்தான் தோசை அசத்தும் ` ஆப்பிள் மில்லட் ரெஸ்டாரென்ட்'!

திருச்சியின் தில்லைநகரில் இருந்த நாம் டீ சாப்பிடலாம் என சென்று கொண்டிருக்க அதே உளுந்தகஞ்சியின் வாசனையை நம்மால் உணர முடிந்தது.

திணை அல்வா
News
திணை அல்வா ( DIXITH )

பெரும்பாலான வீடுகளில் மாலை நேரங்களில் கண்டிப்பாக ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் கிடைத்துவிடும். அவை பஜ்ஜியாகவோ, மற்ற பலகாரங்களாகவோ, இல்லை என்றால் மோமோசாகவோ சில நேரங்களில் துரித உணவுகளாகவோ முடிந்துவிடுகிறது. ஆனால் இன்னுமும் நம் ஊர் பக்கம் செல்லும்போது, மாலை நேரத்தில் இட்லி அரைக்கும்போது, வடைக்கு தயார் செய்யும்போதோ மீதியான உளுந்தில், வெல்லமும் ஏலக்காயும் சேர்த்து நமது அம்மாவோ, பாட்டியோ அடுப்பில் கிண்டிக்கொண்டிருக்கும் உளுந்தங்கஞ்சியின் வாசம் நம்மை அப்படியே இழுக்கும், ரொம்ப தண்ணீர் மாதிரியோ, களி மாதிரியோ இல்லாமல் இரண்டிற்கும் நடுவில் இருக்கும் அந்த கஞ்சியை கிண்ணத்தில் கொடுக்க சூடாக அதை சாப்பிடுவதில் அப்படியொரு சுகம் வாயிற்கும், வயிற்றுக்கும் கிடைக்கும்.

உளுந்தங்கஞ்சி
உளுந்தங்கஞ்சி
DIXITH

ஆனால் கால சூழலில் நாம் ஓடிக்கொண்டிருக்க அப்படியான உணவுகளை ரொம்பவே மிஸ் செய்திருப்போம். தொடர்ந்து மனம் அவற்றை ருசி பார்க்க ஏங்கி கொண்டே இருக்கும் சூழலில் பணி நிமித்தமாக திருச்சியின் தில்லைநகரில் இருந்த நாம் டீ சாப்பிடலாம் என சென்று கொண்டிருக்க அதே உளுந்தகஞ்சியின் வாசனையை நம்மால் உணர முடிந்தது. வாசனையை நுகர்ந்து கொண்டே செல்ல அது நம்மை கொண்டு சேர்த்த இடம் `ஆப்பிள் மில்லட் ரெஸ்டாரன்ட்' என்னும் சிறுதானிய உணவகத்தின் வாசல் தான். முன்னதாகவே இந்த ரெஸ்டாரன்ட்டை பற்றி கேள்விப்பட்டிருந்ததால் யோசிக்காமல் உள் நுழைந்தோம்.

அங்கு சாலையை நோக்கி இருந்த அடுப்பில் ஒருபக்கம் காரப்பணியாரமும், மற்றொரு புறம் உளுந்தங்கஞ்சியும் தயாராகிக் கொண்டிருந்தது. இரண்டையும் ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்க சில மணித்துளிகளில் அவை நம் மேசைக்கு வந்தது. உண்மையாகவே வீட்டில் செய்யும் உளுந்தங்கஞ்சியின் சுவை தெரிந்தது, பணியாரம் அருமை. ஒருசேர இனிப்புடன், காரத்தையும் சாப்பிடுவதில் ஒரு அலாதி சுகமே கிடைக்கும், அதை அங்கு உணர முடிந்தது. தொடர்ந்து நாம் மறந்துவிட்ட சுழியம் என்னும் இனிப்பு வகையும் கிடைக்க அதையும் ருசி பார்த்தோம். கூடவே பணியாளர் நம்மிடம் சிறுதானிய உணவுகள் கடையோட ஸ்பெஷல் என கூற மாலை நேர ஸ்நாக்ஸ் நேரத்தை, டின்னராக மாற்றலாம் என முடிவு செய்து முடக்கத்தான் சிறுதானிய தோசை, வெந்தய சிறுதானிய தோசையுடன், சிறுதானிய சப்பாத்தியும் ஆர்டர் செய்தோம், எப்போதுமே மதியமே முடிந்துவிட கூடிய சிறுதானிய மினி மீல்ஸ்ம் அந்த மாலையிலும் அதிசயமாக நமக்கு கிடைக்க அதையும் ஆர்டர் செய்தோம்.

தோசை
தோசை
DIXITH

ஒன்றன்பின் ஒன்றாக அனைத்தும் டேபிளுக்கு வர சூடாக இருக்கும்போதே சாப்பிட்டு விடலாம் என முடக்கத்தான் தோசையை கையில் எடுத்தோம், சாம்பார் சட்னியுடன் அவற்றை வாயில் வைக்க முடக்கத்தான் கீரையின் வாசமும், சிறுதானிய மாவின் கலப்பும் தனிசுவையில் அருமையாக இருந்தது.

வெந்தய தோசை
வெந்தய தோசை
DIXITH

தொடர்ந்து வெந்தய தோசை வெந்தயத்தின் கசப்பும், அதனின் மணமும் அப்படியே தோசையில் இருந்தது. அந்த சிறிய வெந்தயத்தின் கசப்பு தெரிந்தாலும் சுவை அருமையாக இருந்தது. அடுத்து வந்த சிறுதானிய மினி மீல்ஸ் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.

சிறுதானிய மினி மீல்ஸ்
சிறுதானிய மினி மீல்ஸ்
DIXITH

பாரம்பரிய அரிசிகளான வரகு, குதிரைவாலி, சாமை அரிசிகளில் சாம்பார், தயிர், தக்காளி, வத்த குழம்பு, பூண்டு பொடி, கொள்ளு பொடி என கலந்த சாதங்களை ஒரே தட்டில் வைத்து கூடவே அதனுடன் அப்பளம், சோற்று வத்தலுடன், கொள்ளு சூப்பும் கூடவே, தினையில் செய்த அல்வாவும் பரிமாற, ஒவ்வொன்றையும் ருசி பார்க்கவே நமக்கு ஒரு வேளை போதுமானதாக இல்லை.

சிறுதானிய உணவகம் தானே டேஸ்டில் சில குறைகள் இருக்கலாம் என நினைத்து கொண்டு உள்ளே சென்ற நமக்கு ஒரு பெரிய விருந்தே கிடைத்துவிட்டது. தொடர்ந்து நாம் தேடி வந்த டீ அருந்தவில்லையே என தோன்ற, திரிகடுகம் டீ குடிங்க உடம்புக்கு நல்லது என பணியாளர் கொடுக்க நல்ல சூட்டுடன், சிறிது காரத்துடன் அதை பருக பருக அமிர்தமாக இருந்தது. அத்தனையும் அப்படி ஒரு ருசி, ரொம்ப முக்கியமான ஆரோக்கியமும் கூட.

திணை அல்வா
திணை அல்வா
DIXITH

அத்தனையையும் சாப்பிட்டு வயிறு திருப்தியுடன் பில்லை செட்டில் பண்ண மனமும் திருப்தி அடைந்தது. வீட்டிலேயே பலரும் சிறுதானிய சாப்பாடை மறந்து மொத்தமாக துரித உணவுகளுக்கு பழகிக் கொண்டிருக்கிறோம், ஆனால் ஆரோக்கிய உணவான சிறுதானியத்தை ருசியாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் உதயமானது தான் `ஆப்பிள் மில்லெட் ரெஸ்டாரன்ட்' என்று பேசத் தொடங்குகிறார் உணவகத்தின் உரிமையாளர் வீரசக்தி.

`` நான் பெரிய உணவு பிரியர், சைவம் மட்டுமே சாப்பிடுவேன் எனபதால் திருச்சியில் உள்ள பெரும்பாலான சைவ உணவகம் அத்துப்படி, படிச்சது பி.காம், ஆனா உணவு பிரியம்ங்கிறனால உணவு சம்பந்தமா எதுனா பண்ணனும், ஆனா அது ஆரோக்கியமா இருக்கணும்னு நினைச்சி 8 வருசத்துக்கு முன்ன ஆரம்பிச்சதுதான் இந்த உணவகம். ஆரம்பத்துல பல கஷ்டம் பணியாளர்கள்,வாடிக்கையாளர்களுக்கு சிறுதானியம் குறித்தான விழிப்புணர்வு பெரிதளவில் இல்லாம இருக்குறது, உணவின் சுவைன்னு ஆனா மக்கள் தரமான, ஆரோக்கியமான உணவைத் தேடி நம்ம கடைக்கு வர ஆரம்பிச்சாங்க, அதுனால என்னோட அனுபவத்தையும், முழு உழைப்பையும் போட்டு உணவகத்தை நடத்த ஆரம்பிச்சேன். இப்போ நெறைய மக்களுக்கு சிறுதானியத்தில் மேல விழிப்புணர்வு வர தொடங்கிற்கு அதுனாலையே நம்ம கடைக்கு நெறைய பேர் ரெகுலர் வாடிக்கையாளரா மாறிட்டாங்க. நான் தேடி தேடி சாப்பிட உணவையும், ஆரோக்கியத்தையும் எல்லாருக்கும் கொடுக்க நினைக்குறேன், அதுக்காக தான் இவ்ளோ மெனக்கெடல்களும், தொடர்ந்து என்னைப்போல பலரும் உணவக தொழிலை ஆரோக்கியமா பண்ணுனங்கறது தான் என்னோட ஆசை" என்றார்.

திருச்சியில் இருக்கும் உணவகங்களில் சிறுதானியத்தை பிரதானப்படுத்தி உணவை கொடுப்பது ஆப்பிள் மில்லெட் ரெஸ்டாரெண்ட் மட்டுமே என்பதால் வைரமுத்து, சுகி சிவம், டெல்லி கணேஷ் என பிரபலங்கள் பலரும் தேடி வந்து சாப்பிட்டு செல்கின்றனர். காலை ஏழு மணிக்கு சூப்புடன் ஆரம்பிக்கும் இவர்களின் உணவகம், இரவு பதினோரு மணி வரை இயங்குகிறது. திருச்சியின் பிரதான பகுதியான தில்லை நகரில் 11வது குறுக்கு சந்தின் முடிவில் இந்த ஆப்பிள் மில்லட் ரெஸ்டாரன்ட் இருக்கிறது. ஆரோக்கியத்துடன் ருசியை நாடுபவர்கள், திருச்சியில் இருக்கும் இந்த உணவகத்தை மிஸ் பண்ணிடாதீங்க