Published:Updated:

திருச்சி ருசி: சிக்கன் பிரியாணி; எண்ணெய் பரோட்டா; அசத்தும் மட்டன் பிரியாணி - ஜெய்லானி உணவகம்!

ஜெய்லானி உணவகம் ( DIXITH )

ஆனால் ஜெய்லானி உணவகத்தில் கிடைக்கும் பாசுமதி பிரியாணிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது

திருச்சி ருசி: சிக்கன் பிரியாணி; எண்ணெய் பரோட்டா; அசத்தும் மட்டன் பிரியாணி - ஜெய்லானி உணவகம்!

ஆனால் ஜெய்லானி உணவகத்தில் கிடைக்கும் பாசுமதி பிரியாணிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது

Published:Updated:
ஜெய்லானி உணவகம் ( DIXITH )

சின்னதாக கூரை வேயப்பட்ட கடை. அதனுள் நான்கைந்து மேசைகள். அதை சுற்றிலும் சில நாற்காலிகள். ஆனால் அனைத்திலும் மக்கள் நிறைந்திருக்கின்றனர். அதனைத் தாண்டினால் ஒரு சமையற்கூடம். அதில் முழுவதும் விறகு அடுப்பு, பெரிதாக எந்த மறைவும் இல்லாமல், சமையல் தயாராகிக்கொண்டே இருக்கிறது. தினமும் சிக்கன் பிரியாணி, மக்கள் அதிகமாக விரும்பிக் கேட்கும் குஸ்கா, அப்புறம் முக்கியமாக இவர்களின் மிக அசத்தலான உணவாக தயாரிக்கப்படும் பொரித்த பரோட்டா, சால்னா என மதிய நேரத்தில் சாப்பிடுவதற்கு அருமையான உணவகமாக இருக்கிறது திருச்சியின் ஜெய்லானி உணவகம். திருச்சியைப் பொறுத்தவரை பிரியாணி என்றாலே சீரக சம்பா பிரியாணியை தான் பெரும்பாலானோர் எதிர்பார்ப்பார்கள். அதனாலையே திருச்சியில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் சீரக சம்பா பிரியாணி தான் கிடைக்கும்.

பிரியாணி
பிரியாணி
DIXITH

ஆனால் ஜெய்லானி உணவகத்தில் கிடைக்கும் பாசுமதி பிரியாணிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பிரியாணியை ரசிக்கும் அளவிற்கு பரோட்டாவிற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். இதனாலயே பலவிதமான வகைகளில் பரோட்டா தயாரிக்கப்படுகிறது, பல ஊர்களில் தயாரிக்கப்படும் பரோட்டாக்களும் இங்கு நம் ஊர்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. பரோட்டா ரசிகர்களால் சுவைக்கப்படும் பரோட்டாக்களில் பொரிச்ச பரோட்டாவிற்கு என பெரிய இடம் இருக்கும். அதும் ஜெய்லானி உணவகத்தில், விறகடுப்பில் பரப்பப்பட்டிருக்கும் பொரித்த பரோட்டாவிற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பெரிய இரும்பு தோசைக்கல்லில், சுத்தமான எண்ணையை ஊற்றி, பொரித்த பரோட்டா என்றாலே நம் மனதுக்கு வரும் சிறிய அளவிலான பரோட்டாவை தூக்கி ஓரங்கட்டிவிட்டு வருகிறது இவர்களின் பொரித்த பரோட்டா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெரிய சப்பாத்தி அளவில் தேய்க்கப்படும் மாவை, பாந்தமாக எண்ணெய்யில் பொரித்து, அதனை அப்படியே வாடிக்கையாளர் முன் விரிக்கப்பட்டிருக்கும் இலையில் பிய்த்துப்போட்டு இல்லையில்லை முறுக்கிப் போட்டு, அவர்களின் ஸ்பெசல் சால்னாவை ஊற்றி சாப்பிட ரொம்ப காரமாக இல்லாமல், வெண்ணெய் போல் வாயில் கரைந்தது. கிட்டத்தட்ட 1970-களில் ஆரம்பித்த உணவகம் இந்த ஜெய்லானி உணவகம். ஆரம்பத்தில் பிரியாணியை அறிமுகப்படுத்தும்போது, மக்களில் பலரின் சுவை மொட்டுகளுக்கு விருந்தளிக்க ஆரம்பித்தது இந்த உணவகம். அடுத்தடுத்து மக்களின் உணவு சுவைக்கு ஏற்ப பிரியாணியில் மாற்றங்கள் செய்யப்பட , தற்போது பாசுமதி அரிசியில் நல்ல ஜூஸியான சிக்கனுடன், உதிரி உதிரியாக உள்ள பிரியாணியை சாப்பிடுகையில் சுவையுடன் நிறைவாகவும் இருக்கிறது. சாப்பிட்டதும் ஏற்படும் மனநிறைவான உணர்வே அருமையாக இருந்தது. இங்கு தயாராகும் குஸ்காதான் பலருக்கும் பிடித்தமானது. இந்தக் கடையின் பிரதான உணவு வகையாக குஸ்காதான் இருக்கிறது. அதை சுவைத்துப் பார்க்காமல் இருக்க முடியுமா ? விறகடுப்பில் செய்யப்படும் குஸ்கா, அந்த விறகடுப்பின் சுவையவும் சேர்த்து கொண்டு வந்தது. அருமையான சுவை.

பரோட்டா
பரோட்டா
DIXITH

கண்டிப்பாக பிரியாணி சாப்பிட்டால் ஒரு இனிப்பு சாப்பிட வேண்டும் என்பது சொல்லி வைக்கப்படாத விதியாக இருப்பதால், பிரெட் அல்வா என்னும் இனிப்பை தருகிறார்கள், பிரெட் பீஸ்கள் கடிபட உடன் பாதம், முந்திரி போன்ற நட்ஸ்களின் சுவையுடன் அதி அற்புதமாக இருந்தது. இந்த கடையில் ஆச்சர்யப்படுத்திய முக்கியமான ஒன்று இங்குள்ள உணவுப் பண்டங்களுக்கான விலை. அனைத்தும் விலை குறைவாகவே இருக்கிறது. ஆனால், அளவில் சமரசம் செய்யாமல் நிறைவாகவே கொடுக்கிறார்கள். உணவகத்தின் தற்போதைய நிர்வாகிகளுள் ஒருவர் கூறுகையில், "எங்கள் அப்பா ஆரம்பித்த உணவகம் இது. தொடர்ந்து என்னுடைய சகோதர, சகோதரிகள் உடன் தொடர்ந்து நாங்கள் நடத்தி வருகிறோம். ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் கேட்பதைத் தொடர்ந்து சுவையில் மாற்றங்கள் கொண்டு வர நினைத்தோம். அப்படி உருவானது தான் இந்த பிரியாணி. ஆனால் பரோட்டா முழுக்க முழுக்க எங்க அப்பாவோட உழைப்பு. மக்களுக்கு ஏதாவது புதுசா கொடுக்கணும்னு உருவாக்கபட்டது. அது மக்களுக்கு இவ்ளோ பிடிச்சிப்போகும்னு நினைக்கவே இல்ல" என்று நெகிழ்கிறார். கூடவே எங்களின் சுவையில் மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இன்றளவும் விறகில்தான் சமைக்கிறோம் என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாடிக்கையாளர்கள் கூறுகையில், "இங்கு வார நாட்களில் கிடைக்கும் சிக்கன் பிரியாணி அருமை என்றால், வார இறுதியில் கிடைக்கும் சீராக சம்பாவில் செய்யப்படும் மட்டன் பிரியாணி தனிச்சுவை." எனச் சொல்லிவிட்டு நகர்ந்தார். நாங்கள் வார இறுதி வரை காத்திருக்க ஆரம்பித்துவிட்டோம். நீங்களும் காத்திருக்க ஆரம்பித்து விட்டீர்களா?! மறந்து விடாமல் வார இறுதியில் சிக்கன், மட்டன் பிரியாணியுடன் பொரித்த பரோட்டாவையும் சுவைத்து விடுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism