Published:Updated:

திருச்சி ஊர்ப்பெருமை: 70 ஆண்டுகளாக தரமும், ருசியும் மாறாத `சீனிவாசா மோர்'!

எடை குறைப்பாகட்டும், வயிற்றுப் பிரச்சனையாகட்டும், வைட்டமின்கள், நீர்ச்சத்து என எந்த குறைபாடுகள் இருந்தாலும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நாம் உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுவது இந்த மோர்தான்.

"தரமான வெண்ணெய், உடலுக்கு இதமான நல்ல மோர் குடிக்கவேண்டும் என்றால் திருச்சி சந்துக்கடையில் உள்ள சீனிவாசா நெய் ஸ்டோருக்கு போங்க"என்று அக்கடையைப்பற்றித் புகழ்ந்து பேசுவதோடு, திருச்சிக்கும் இக்கடை எழுபது ஆண்டுகளைக் கடந்து, நான்கு தலைமுறை பந்தம் இருக்கிறது என்கிறார்கள்.

தயிர்
தயிர்

திருச்சிக்காரர்கள் இந்தக்கடையைப்பற்றி தெரியாமல் இருக்க முடியாது எனச் சொல்லும் அளவுக்கு இக்கடை பிரபலம். முக்கியமாகச் சொல்லப்போனால், இங்குள்ள இளைஞர்களுக்கு இந்தக் கடைதான் 'பேவரைட் ஹாட்ஸ்பாட்' எனச் சொல்கிறார்கள்.

நாம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய எளிய பொருட்களில்தான் நிறைய சத்துகள் உள்ளன என்பார்கள். அப்படி உடலுக்குத் தீங்கிழைக்காமல் இருக்கக்கூடிய உணவுப் பொருளில் முக்கிய பங்கு வகிப்பது 'மோர்'. எடை குறைப்பாகட்டும், வயிற்றுப் பிரச்சனையாகட்டும், வைட்டமின்கள், நீர்ச்சத்து என எந்த குறைபாடுகள் இருந்தாலும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நாம் உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுவது இந்த மோர்தான்.

வெண்ணெய்
வெண்ணெய்

ஆனால், இந்த 21ம் நூற்றாண்டில் மாட்டுப் பாலை வாங்கி அதைத் தயிர் எடுத்து மோர் கடைவதற்கு யாருக்கும் நேரமும் இல்லை. அதற்கான பொறுமையும் இல்லை. சரி கடையில் வாங்கலாம் என்றால் அதன் தரம் குறித்த பலகட்ட யோசனைகள் நமக்கு எழுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படியான சூழ்நிலையில் திருச்சியைச் சேர்ந்தவர்களுக்கு மோர், தயிர், வெண்ணெய் என்று எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அத்தனையையும் கிட்டத்தட்ட 70 வருடங்களாக எந்தவித கலப்படமும் இல்லாமல், சுத்தமான பசும்பாலை எடுத்துக் காய்ச்சி, அதை அப்படியே உறை போட்டு தயிராகவும், மோராகவும், வெண்ணெய்யாகவும் கிடைக்கிறது என கேள்விப்பட்ட உடனே வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம்.

தயிர்
தயிர்

திருச்சியின் மிக முக்கியமான இடம் சந்துக்கடை. பல பொருட்களும் கிடைக்கும் இந்த இடத்தில்தான் நாம் தேடிச் சென்ற சீனிவாசா மோர் கடையும் இருக்கிறது. கடையின் வாடிக்கையாளர்கள் நின்று மோர் குடித்துக் கொண்டிருக்க, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு வெண்ணெய்யை வாழை இலையில் வாங்கி கொடுத்துச் சாப்பிட வைத்துக் கொண்டிருந்தனர். நமக்குத்தான் ஆச்சர்யமாக இருந்தது. ஆச்சரியப்பட்டு கொண்டே இருக்க வேண்டாமே என ரெண்டு சொம்பு மோரை வாங்கிப் பருகினோம். பாட்டி கையால் குடித்த மோரின் ருசி அப்படியே இருந்தது.

மோர் கடை
மோர் கடை

ஐஸ், இஞ்சி, மிளகாய் என எதுவுமே இல்லாமல் வெறும் தயிரை மட்டும் நம் முன்னே மத்தில் கடைந்து, அதில் ஏற்கனவே எடுத்து வைக்கப்பட்டிருக்கும் மோர் எடுத்து அவற்றை நம் கண் முன்னே உப்பிட்டு ஆற்றி, சிறிது நீர் சேர்த்து நீர்மோராக அவர்கள் தந்தபோதுகூட இவ்வளவு ருசி இருக்கும் என்று நாம் நினைக்கவில்லை.

அந்த மோரின் குளுமை நம்மைப் பருகச் சொல்லிக் கேட்டுக்கொண்டே இருந்தது. மோரை குடித்ததும் வெண்ணெய்யைச் சாப்பிடத் தொடங்கினோம், ஐந்து ரூபாய்க்கும், பத்து ரூபாய்க்கும் வாழை இலையில் ஒரு கட்டி வெண்ணெய்யை எடுத்ததுக் கொடுத்தனர்.

மோர்
மோர்

பெரியவர்கள் மட்டுமில்லாமல், குழந்தைகளும் சாப்பிட்டுக் கொண்டிருக்க நாமும் அந்த வெண்ணெய்யைச் சுவைக்க வேண்டும் என்று வாங்கினோம். வாழை இலையில் வைத்துத் தரப்பட்ட வெண்ணெய் வாயினுள் வைக்க அப்படியே கரைந்து கொண்டே சென்றது. நாம் சாதாரணமாகக் கடையில் வாங்கும் வெண்ணெய், மோருக்கும், சீனிவாசா மோர் கடையில் வாங்குவதற்கும் நிறையவே வித்தியாசம் தெரிந்தது.

தொடர்ந்து, பரபரப்பாக மக்கள் வருவதும், வருபவர்களைக் கவனித்து அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பதும், பார்ஸல் காட்டுவதும் என பிஸியாக இருந்த கடையின் தற்போதைய நிர்வாகியான சீனிவாசனிடம் பேசினோம், "என்னோட தாத்தா ஆரம்பிச்ச கடைங்க இது. நாமக்கல்தான் அவருக்குப் பூர்வீகம். ஆனா, பிழைப்பைத்தேடி கடந்த 1935-ம் வருஷம் திருச்சிக்கு வந்துட்டாரு. ரொம்ப வறுமையான நிலையில இருந்த அவரு, சந்துக்கடையை சுத்தி வந்தப்ப இந்த கடை காலியா இருந்ததைக் கவனிச்சிருக்காரு.

உரிமையாளர் சீனிவாசன்
உரிமையாளர் சீனிவாசன்

அப்போ கடைக்கு அட்வான்ஸ்ன்னு ஏதுவும் கடையோட ஓனர் கேக்கல. ஏதாவது வியாபாரம் செஞ்சி பொழைச்சிக்கலாம்னுதான் இந்தக் கடைய வச்சாரு. ஆரம்பத்துல இங்க கிடைக்குற வாழைப்பழத்தை மொத்தமா வாங்கி விற்கத் தெடங்கினாரை். ஆனா எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கல. கடையை மூடிட்டு போகலாம்னு இருந்த சமயம் பக்கத்துல பால் கறக்குறவரு தயிர் பானையில் போட்டு மீதியை எங்க தாத்தா கடையில கொண்டு வந்து வச்சிட்டு போய்ட்டாரு.

அதை வாங்கி சாப்பிட்ட மக்கள், திரும்ப திரும்ப தயிர் கேட்க ஆரம்பிக்க அதையே தொழில் பண்ணலாம்னு நினைச்சிஆர்மபிச்சதுதான் இந்த கடைன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லிருகாங்க. அவர் ஒரு முப்பது வருஷம் கடைய நடத்த, தொடர்ந்து எங்க சித்தப்பாவும், அப்பறம் எங்க அப்பாவும் நடத்திட்டு வந்தாங்க.

வாடிக்கையாளர்கள்
வாடிக்கையாளர்கள்

அப்பாக்கு வயசானதுனால கடைல இருக்க முடியாது, நானும் கடைல நின்னு பழகுனதுனால 9-ம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு கடைக்கு வந்துட்டேன். தினமும் சீசன்ல 80ல இருந்து 90 லிட்டர் வரையும், சீசன் இல்லாதப்ப 30 முதல் 40 லிட்டர் வரையும் புதுசா பால் வாங்கி, அதை பக்குவமா காய்ச்சி உறை போடுவோம். அதுல வெண்ணெய் எடுப்போம். அதுவே தினமும் 3லிட்டர் வரை கிடைக்கும்.

நெய் ஸ்டோர்
நெய் ஸ்டோர்

அதுல பாதி எடுத்து மோர், தயிர்ன்னு வியாபாரம் பண்ண ஆரம்பிச்சிடுவோம். ஒரு நாளைக்கு சீசன் நேரத்துல ஆயிரம் பேர் கிட்டயும், மத்த நாட்கள்ல 300 பேர் வரையும் நம்ம கடைக்கு வந்துடுவாங்க. ரொம்ப பிஸியா இருந்தாலும் வேலைக்கு ஆள் வைக்கல, ரொம்ப தூரத்துல இருந்துலாம்கூட இங்க வந்து மோர் சாப்பிடுவாங்க. காலையில அஞ்சு மணிக்கு கடை ஓபன் பண்ணுவேன் சாயந்திரம மூணு மணி வரை வந்துகிட்டே இருப்பாங்க. பெரியவங்க அவங்க பேரப்பிள்ளைங்க, அவங்க பசங்கன்னு யாரை கூட்டிட்டு வந்தாலும் நம்மள விட நம்ம கடையைப் பத்தி அவங்க சொல்லுவாங்க அது ஒன்னு போதும் மனசு அவ்ளோ திருப்தியா இருக்கும்” எனப் பெருமிதம் பொங்கக் கூறினார்.

கடையின் வாடிக்கையாளரான சுந்தரிடம் பேசினோம்.”எனக்கு இங்க பெரியக்கடை வீதிதான் வீடு. அதுனால் அடிக்கடி இங்க வந்து மோர் குடிச்சிடுவேன். எனக்கு வேலைகாரனமா சரியாய் சாப்பிடாம அல்சர் வந்துடுச்சு. அப்போ டாக்டர்லாம் வெண்ணெய், மோர் லாம் நிறைய சாப்பிடச் சொன்னாங்க.

வாடிக்கையாளர்
வாடிக்கையாளர்

அப்படித்தான் இந்த கடைக்கு அடிக்கடி வர ஆரம்பிச்சோம். அஞ்சு ரூபாய்க்கு நல்ல நிறைய மோரும், வெண்ணெய்யும் கொடுப்பாங்க. அதை சாப்பிடும்போதே வயிறு எரிச்சல் அமுங்குற மாதிரி தெரியும். நிறையப் பேர் இந்த மாதிரிதான் இங்க வருவாங்க. விலை ரொம்பவே கம்மியா ஆரோக்கியமாகவும், இருக்கறதுனால எல்லாரும் தைரியமா சாப்பிடலாம்" எனக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு