Published:Updated:

வெரைட்டி தோசை, மாசம் 60,000 ரூபாய் வருமானம்... சவாலில் ஜெயித்த தள்ளுவண்டிக் கடை மோகன்!

செந்தில் பாலாஜி, கே.சி.பழனிசாமி தொடங்கி நடிகர் கருணாஸ் வரை பல வி.ஐ.பி-கள் என் கடைக்கு கஸ்டமர்கள்.

மோகன் தோசைக் கடை
மோகன் தோசைக் கடை ( நா.ராஜமுருகன் )

வழிநெடுக சவால்கள் நிறைந்த மனித வாழ்வில், எங்கோ யாரோ ஒருவரிடம் விடுக்கும் சவால், ஒருவரின் முன்னேற்றத்துக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. கரூர் நகரில், தள்ளுவண்டியில் தோசைக் கடை நடத்தும் மோகனின் கதையும் அதுதான். ஆட்டோ டிரைவராக இருந்து வறுமையில் உழன்றுகொண்டிருந்த அவர், நண்பர் ஒருவரிடம் விட்ட சவாலை நிறைவேற்ற, தள்ளுவண்டியில் தோசை விற்கத் தொடங்கினார். இன்று, சவாலையும் வறுமையையும் ஒருசேர வென்று, மாதம் 60,000 வரை சம்பாதிக்கிறார்.

கரூர் ஜவஹர் பஜார் மாரியம்மன்கோயில் செல்லும் வழியில், சாலையோரம் இருக்கிறது இவரது தள்ளுவண்டிக் கடை.

மோகன் தோசைக் கடை
மோகன் தோசைக் கடை
நா.ராஜமுருகன்

இரவு மட்டுமே இவர் கடை நடத்துவதால், ஒருநாள் மாலை மங்கும் வேளையில் அவரது கடைக்குச் சென்றோம். தள்ளுவண்டிக் கடையைச் சுற்றி நல்ல கூட்டம். விதவிதமான தோசைகளை அநாயாசமாகப் போட்டுக்கொண்டிருந்த மோகனிடம் பேசினோம்.

"நான், பக்கத்துல இருக்கும் துரைசாமி சந்தையைச் சேர்ந்தவன். அப்பா சக்திவேல், அம்மா சந்திரா, மனைவி கல்பனா, மகள் ஐஸ்வர்யா, மகன் நித்திஷ்னு வாழுறோம். எனக்கு, இப்போ 49 வயசு. 2000–ம் வருஷம் வரைக்கும் ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருந்தேன். அப்போ, 10 வருஷத்துக்கு மேல ஆட்டோ ஓட்டியும், வாடகை வீட்டுலதான் இருக்க முடிஞ்சுச்சு. சாப்பாட்டுக்கே கஷ்டமான சூழல்.

பால்கோவா தோசை போடும் மோகன்
பால்கோவா தோசை போடும் மோகன்
நா.ராஜமுருகன்

அப்பதான், என்னைப்போல ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருந்த நண்பர் செல்வம், 1998–ல ஆட்டோ ஓட்டுற தொழிலை விட்டுட்டு, வெள்ளக்கோயில்ல ஹோட்டல் தொழிலை ஆரம்பிச்சார். ஆனா, இரண்டே வருஷத்துல மறுபடியும் கரூருக்கு ஆட்டோ ஓட்டவே வந்துட்டார். 'ஹோட்டல் தொழிலைப் பார்க்காம, வருமானமில்லாத ஆட்டோ ஓட்டுற தொழிலுக்கு ஏன் வந்தீங்க?'னு கேட்டேன். அதுல, ரெண்டுபேருக்கும் வாக்குவாதம் ஆனுச்சு. உடனே செல்வம், 'நீ ஹோட்டல் தொழிலை ஆரம்பிச்சுப் பாரு, அப்ப தெரியும் கஷ்டம்?'னு சொன்னார்.

அதை சவாலா ஏத்துக்கிட்டு, 2000–ல மாரியம்மன்கோயில் எதிரே தள்ளுவண்டியில் தோசைக் கடையை ஆரம்பிச்சேன். முதல்நாள் 500 ரூபாய் எடுத்தேன். இன்னைக்கு, மாசம் 60,000 சம்பாதிக்கிற அளவுக்கு முன்னேறிட்டேன். 'சவாலில் ஜெயிச்சுட்டே'னு செல்வம் தினமும் பாராட்டுற அளவுக்கு இன்னைக்கு முன்னேறி இருக்கேன்" என்று பெருமிதப்பட்டார்.

மோகன் கடை தோசைகள்
மோகன் கடை தோசைகள்
நா.ராஜமுருகன்

"ஆரம்பத்துல, சமையலைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. 'சவால் விட்டுட்டோம். ஜெயிக்க முடியுமா?'னு பயந்தேன். வீட்டுலயும், 'தேவையில்லாம தொழிலை மாத்தி மாட்டிக்க போறே'னு சொன்னாங்க. இருந்தாலும், வைராக்கியமா இந்தத் தொழில்ல இறங்குனேன். எங்க அம்மா நல்லா சமைப்பாங்க. அவங்கள வச்சு தோசை, இட்லி, சப்பாத்தினு டிபன் தயாரிச்சு விற்க ஆரம்பிச்சோம். டேஸ்ட் நல்லா இருந்ததால கூட்டம் வர ஆரம்பிச்சது.

பத்து வருஷத்துக்கு முன்னாடி, இந்த இடத்துக்கு கடையை மாத்திட்டோம். அஞ்சு வருஷத்துக்கு முன்ன அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமப்போச்சு. அதனால மாரியம்மனை வேண்டிக்கிட்டு, கல்லு முன்னாடி நானே நிக்க ஆரம்பிச்சேன். அம்மாவோட கைப்பக்குவம் எனக்கும் வந்துட்டு. தரம், சுவை மட்டுமில்லாம, புதுசுபுதுசா நானே பல தோசைகளை அறிமுகப்படுத்தினேன்.

Vikatan

மல்லித்தோசை, பூண்டுத்தோசை மாதிரி நான் புதுசா, பஞ்சவர்ண தோசை, சுரக்காய் தோசை, மாங்காய் தோசை, பீர்க்கங்காய் தோசை, கருணைக்கிழங்கு, காலிஃபிளவர் தோசை, சேனைக்கிழங்கு தோசைனு பலவகை தோசைகளை அறிமுகப்படுத்தினேன். இதுல, நான் முயற்சி பண்ணுன பஞ்சவர்ண தோசை, கஸ்டமர்கள்கிட்ட படு ஃபேமஸாச்சு. அந்த தோசையில், அஞ்சு இடங்கள்ல பூண்டு, மல்லி, தக்காளி, ஆந்திரா காரம், மசால் ஆகியவற்றை அப்ளை பண்ணுவேன். ஒரே தோசையில் அஞ்சுவகை சுவை இருக்கும். கஸ்டமர்களுக்கும் அது ரொம்பப் பிடிச்சுப்போச்சு. தவிர, கேரளாவில் மட்டுமே இருக்கும் பால்கோவா தோசையை கரூரில் அறிமுகப்படுத்துனேன்.

கம்பு, கேழ்வரகு, பாசிப்பருப்பு, முளைகட்டுன பயிர்கள்னு பல வெரைட்டி தோசைகளையும் போடுறேன். எண்ணெய், குடிக்க மினரல் வாட்டர்னு எல்லாத்துலயும் தரமானதைப் பயன்படுத்துறேன். தக்காளி, மல்லி, காரம், தேங்காய், சாம்பார்னு பலவகை சட்டினிகளை வீட்டுல அம்மா ரெடி பண்ணிருவாங்க.

பஞ்சவர்ண தோசை
பஞ்சவர்ண தோசை
நா.ராஜமுருகன்
என் கடைக்கு பேரே இல்லாம இருந்துச்சு. கஸ்டமர் சக்தி, பத்து வருஷத்துக்கு முன்னாடி, 'மோகன் தோசைக் கடை'னு பேர் வச்சதோட, 1000 விசிட்டிங் கார்டுகளை அடிச்சு, இலவசமா கொடுத்தார். நான் நெகிழ்ந்துபோயிட்டேன்.
மோகன்

என் கடையைப் பத்தி கேள்விப்பட்டு, பாங்காங்குல இருக்கிற தமிழர் ஒருத்தர் போன் பண்ணி விசாரிச்சார். பெருமையா இருந்துச்சு. அதேபோல், எனது கடைக்கு சாதாரண நபர்கள் தொடங்கி, கார்களில் வரும் பெரும்புள்ளிகள் வரை பலமட்டத்திலும் கஸ்டமர்கள் இருக்காங்க. உள்ளூர் அரசியல்வாதிகள் செந்தில் பாலாஜி, கே.சி.பழனிசாமி தொடங்கி நடிகர் கருணாஸ் வரை பல வி.ஐ.பி கஸ்டமர்களும் இருக்காங்க.

மோகன் குடும்பத்துடன்
மோகன் குடும்பத்துடன்
நா.ராஜமுருகன்
ஆட்டோ ஓட்டும்போது, 'நமக்கு திருமணம் நடக்குமா?'னுகூட நினைச்சிருக்கேன். இந்த தள்ளுவண்டிக் கடை வச்சதுக்குப் பிறகுதான், 37 வயசுல கல்யாணம் ஆனுச்சு. இந்த வருமானத்துலதான் சொந்தமா இடம் வாங்கி, இப்போ மாடி வீடு கட்டியிருக்கிறேன். குடும்பத்தை நல்லபடியா வச்சுருக்கிறேன்.
மோகன்

இந்த வளர்ச்சிக்கு முதல் காரணம் செல்வம் அண்ணன்தான். அவரிடம் விட்ட சவால்தான். அவரை காலத்துக்கும் மறக்க மாட்டேன். அடுத்து, கட்டடத்துல கடை நடத்தலாமானு யோசிச்சிகிட்டு இருக்கேன். 'மூன்று வேளையும் சாப்பாடு கொடுங்க'ன்னு கஸ்டமர்கள் சொல்றாங்க. அந்த முயற்சியிலும் இருக்கேன். சவால்கள் எங்கே இருந்து வேண்டுமானாலும் வரலாம். அந்தச் சவாலை நிறைவேற்ற முழுமனசா முயற்சி பண்ணுங்க, நீங்களும் வெற்றிக்கொடி நாட்டலாம்" என்று தன்னம்பிக்கையுடன் முடித்தார்.

வாடிக்கையாளர்கள் சௌமியா, நவீன்.
வாடிக்கையாளர்கள் சௌமியா, நவீன்.
நா.ராஜமுருகன்

ரெகுலர் கஸ்டமர்களான அண்ணன் தங்கை நவீன்-சௌமியா இருவரும், "இங்கே எல்லா தோசைகளும் அவ்வளவு ருசியா இருக்கும். வீட்டுல எவ்வளவு தடுத்தாலும், வாரத்துல மூணு நாள் இங்கே சாப்பிட வந்துருவோம். நாங்க ரெண்டு பேரும் மோகன் அண்ணன் கைப் பக்குவத்துக்கு அடிமைகள்!" என்றார்கள் கோரஸ்ஸாக.