Published:Updated:

4 கிலோ `புல்லட் சாப்பாடு’ ; முடித்தால் புத்தம் புது புல்லட்! - புனே உணவகத்தின் பலே ஐடியா

வாடிக்கையாளர்களுக்காக நிறுத்தப்பட்டுள்ள புல்லட்
வாடிக்கையாளர்களுக்காக நிறுத்தப்பட்டுள்ள புல்லட்

`புனேயில் ஓட்டல் ஒன்று சாப்பாடு போட்டியை அறிவித்து, அதில் வெற்றி பெறும் நபர்களுக்கு ரு.1.70 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் பரிசாக வழங்கப்படும்’ என்று அறிவித்திருப்பதால் மக்கள் ஓட்டலுக்குப் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

புனேயில், மும்பை செல்லும் சாலையில் வட்காவ் பகுதியிலுள்ள சிவ்ராஜ் ஹோட்டலில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. `வெண்ணிலா கபடிக்குழு’வில் புரோட்டா சாப்பிடப் போட்டிவைத்ததுபோல், புதுமையான போட்டியை ஓட்டல் உரிமையாளர் அதுல் வாய்கர் அறிவித்திருக்கிறார். கொரோனாவால் ஏற்கெனவே ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

போட்டியில் பங்கேற்ற வாடிக்கையாளர்
போட்டியில் பங்கேற்ற வாடிக்கையாளர்

இதனால் வாடிக்கையாளர்களை இழுக்க என்ன செய்யலாம் என்று ஆலோசித்த அதுல் மனதில் நொடிப்பொழுதில் உதித்ததுதான் இந்த புல்லட் திட்டம். இதற்கு `புல்லட் சாப்பாடு’ என்றே பெயரிட்டிருக்கிறார். அதாவது இந்தியில் `புல்லட் தாளி.’ இந்தச் சாப்பாடு முழுக்க அசைவ உணவுகளைக் கொண்டதாக இருக்கும். புல்லட்டை வெல்ல வேண்டுமானால் ஓட்டல் நிர்வாகம் கொடுக்கும் நான்கு கிலோ அசைவச் சாப்பாட்டை ஒரு மணி நேரத்துக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். இதில் பல்வேறு வகையான பொரித்த மீன் மற்றும் குழம்பு, அடுப்பில் சுட்ட கோழி, கோழிக்கறி, ஆட்டிறைச்சி என மொத்தம் 16 வகையான சாப்பாட்டு வகைகளை வைக்கின்றனர். இந்தச் சாப்பாட்டின் விலை 2,500 ரூபாய்.

`பலரும் புல்லட்டை வெல்ல வேண்டும் என்ற ஆர்வக்கோளாறில் சாப்பாடு ஆர்டர் செய்துவிடுகின்றனர். ஆனால், அவர்களால் பாதிச் சாப்பாடுகூட சாப்பிட முடியவில்லை’ என்று அதுல் தெரிவித்தார். இந்த ஓட்டல் குறித்த செய்தியைக் கேள்விப்பட்டு மாநிலம் முழுவதுமிருந்து ஏராளமானோர் புனே நோக்கி படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் போட்டியில் வெல்வதற்கு ஓய்வுபெற்ற மும்பை உதவி போலீஸ் கமிஷனர் அசோக் ஜாதவ்கூட தயாராகிவருவதாக தெரிவித்திருக்கிறார். `இந்தச் சவாலை ஏற்று, போட்டியில் கலந்துகொண்டு புல்லட்டை வெல்வேன்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.

ஓட்டல் உரிமையாளர் அதுல், தலா ரு.1.70 லட்சம் செலவில் ஐந்து பைக்குகளை வாங்கி, தனது ஓட்டல் முன்பாக நிறுத்திவைத்திருக்கிறார். தினமும் புல்லட்டுக்கு ஆசைப்பட்டு 60 பேர் வரை புல்லட் சாப்பாட்டைச் சாப்பிடுகின்றனர் என்று அதுல் பெருமையுடன் கூறுகிறார். ஜனவரி 1-ம் தேதியிலிருந்து இந்தப் போட்டி தொடங்கியபோதிலும் எளிதில் யாராலும் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், சோலாப்பூரைச் சேர்ந்த சோம்நாத் பவார் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் அனைத்துச் சாப்பாட்டையும் சாப்பிட்டு முதல் ராயல் என்ஃபீல்டு புல்லட்டை தட்டிச் சென்றிருக்கிறார். வாங்கிய புல்லட் முடியும் வரை இப்போட்டி தொடரும் என்று அதுல் தெரிவித்திருக்கிறார்.

வாடிக்கையாளர்களுக்காக நிறுத்தப்பட்டுள்ள புல்லட்
வாடிக்கையாளர்களுக்காக நிறுத்தப்பட்டுள்ள புல்லட்

இதனால் போட்டியில் கலந்துகொள்ள பலர் வீட்டில் சாப்பிட்டுப் பழகிக்கொண்டிருக்கின்றனர். `புல்லட் தாளி’யைப்போன்று சிக்கன் தாளி, மட்டன் தாளி, ராவணன் தாளி, பஹல்வான் மட்டன் தாளி, மால்வானி மீன் தாளி போன்றவையும் கிடைக்கிறது. அனைத்துமே தலா ரு.2,500 ஆகும். இதைத் தயாரிக்க 50 சமையல்காரர்கள் இருக்கின்றனர். இதற்கு முன்பு 8 கிலோ ராவணன் தாளியை இந்த ஓட்டல் நிர்வாகம் அறிமுகம் செய்தது. அதில் வெற்றி பெறுபவருக்கு 5,000 ரூபாய் பரிசு அறிவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் அதுல். இந்த ஓட்டலுக்கு மும்பை, தானே, பால்கர், புனே, நாசிக், ஒளரங்காபாத், சதாரா உட்பட பல பகுதிகளிலிருந்து விடுமுறை நாள்களில் தங்களுடைய உறவினர்களுடன் மதியச் சாப்பாட்டுக்கு வருவதை அதிகமானோர் வாடிக்கையாகக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறும் அதுல் இந்த ஓட்டலை எட்டு ஆண்டுகளாக நடத்திவருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு