என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

வீட்டிலேயே செய்யலாம் டேஸ்ட்டியான ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!

டேஸ்ட்டியான ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
டேஸ்ட்டியான ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!

சு. பொன்மணி ஸ்ரீராமன்

ன்னதான் வீட்டில் பார்த்துப் பார்த்து சமைத்தாலும், ‘ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்’ என்றால் நம் நாக்குக்கு எக்ஸ்ட்ராவாகப் பிடிக்கிறதுதானே... தமிழகத்தின் பிரபலமான ‘ரோட்டுக்கடை’ உணவுகளின் ரெசிப்பிகள் இதோ... இனி, வீட்டிலேயே சப்புக்கொட்டலாம் ரோட்டுக்கடை டேஸ்ட்டை!
சு. பொன்மணி ஸ்ரீராமன்
சு. பொன்மணி ஸ்ரீராமன்

அத்தோ

தேவையானவை:

நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் - 3

பொடியாக நறுக்கிய பூண்டு -10 பல்

வேகவைத்த நூடுல்ஸ் - 200 கிராம் பொடியாக நறுக்கிய

முட்டைகோஸ் - ஒரு கப்

துருவிய கேரட் - கால் கப்

புளி - கொட்டை பாக்கு அளவு

காய்ந்த மிளகாய் - 10

வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன்

பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்

வேகவைத்த முட்டை - 2

தட்டு வடை - 4

மிளகாய்த்தூள் - சிறிது

பொடியாக நறுக்கிய

மல்லித்தழை - சிறிது

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

வீட்டிலேயே செய்யலாம் டேஸ்ட்டியான ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!

செய்முறை: ஒரு கடாயில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை வறுத்து நன்கு பொடிக்கவும். அதே கடாயில் காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடிக்கவும். புளியைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். தேவையான அளவு உப்பை சிறிது தண்ணீரில் கரைத்துவைக்கவும்.

கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் நறுக்கிவைத்துள்ளதில் முக்கால் அளவு வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். அதே கடாயில் பூண்டை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் வைத்துக் கொதித்ததும் சிறிதளவு உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு நூடுல்ஸை அதில் போட்டு சரியான பதத்தில் வேகவைத்து எடுத்து வடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், மீதமுள்ள வெங்காயம், துருவிய கேரட், வேகவைத்து வடிகட்டிய நூடுல்ஸ், பொடித்த வேர்க்கடலை - பொட்டுக்கடலை பொடி, காய்ந்த மிளகாய்ப்பொடி, புளித்தண்ணீர் சிறிது, உப்பு கலந்த தண்ணீர் சிறிது ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு அதில் தட்டு வடைகளைச் சிறிது சிறிதாக உடைத்துப் போடவும். வெங்காயம், பூண்டைப் பொரிக்கப் பயன்படுத்திய எண்ணெயை 2 டீஸ்பூன் ஊற்றி, பின் அந்தக் கலவையை நன்கு கலக்கவும். மல்லித்தழையை தூவவும். வேகவைத்த முட்டையை லேசாகக் கீறி, அதற்குள் பொரித்த வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சிறிது வைத்து, சிறிது உப்பு, மிளகாய்த்தூள் சிட்டிகை தூவி பரிமாறவும்.

சேலம் தட்டுவடை செட்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2

துருவிய கேரட், பீட்ரூட் - தலா ஒரு கப்

துருவிய மாங்காய் - அரை கப் (விரும்பினால்)பொடியாக நறுக்கிய

மல்லித்தழை - சிறிது

எலுமிச்சை - அரை மூடி

ரெட் சட்னி, கிரீன் சட்னி, உப்பு - சிறிது

சிறிய தட்டு வடை - தேவையான எண்ணிக்கை

வீட்டிலேயே செய்யலாம் டேஸ்ட்டியான ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!

ரெட் சட்னி செய்ய... ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி 10 பல் உரித்த பூண்டு, 8 காய்ந்த மிளகாய், சிறிது கடலைப்பருப்பு, 2 கொட்டைப்பாக்கு அளவு புளி, நறுக்கிய தக்காளி 4, தேவையான உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கி ஆறவைத்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

கிரீன் சட்னி செய்ய... ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி 6 பல் உரித்த பூண்டு, 4 பச்சை மிளகாய், சிறிது கடலைப்பருப்பு, ஒரு கைப்பிடி மல்லித்தழை, 2 கைப்பிடி புதினா, தேவையான உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி ஆறவைத்து அரைத்துக்கொள்ளவும்.

தட்டு வடை செட் செய்முறை: ஒரு பாத்திரத் தில் துருவிய கேரட், பீட்ரூட், நறுக்கிய வெங்காயம், சிறிது உப்பு, துருவிய மாங்காய் (விரும்பினால்), பொடியாக நறுக்கிய மல்லித்தழை ஆகியவற்றை போட்டு நன்கு கலக்கவும். பின்பு ஒரு தட்டு வடையில் கிரீன் சட்னியை தடவி ஒரு தட்டில் வைத்து, அதன்மீது காய்கறிக் கலவையை சிறிதளவு வைத்து, சிறிது எலுமிச்சைச்சாறு பிழிந்து, இன்னொரு தட்டு வடையை எடுத்து அதன்மீது ரெட் சட்னியை தடவி, காய்கறிக் கலவையின் மீது வைக்கவும். சேலம் தட்டு வடை செட் ரெடி!

முட்டை கலக்கி

தேவையானவை:

முட்டை - 2

மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - சிறிது சிக்கன்/மட்டன் குழம்பு

அல்லது சால்னா - 2 கரண்டி

நறுக்கிய மல்லித்தழை - சிறிது

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

வீட்டிலேயே செய்யலாம் டேஸ்ட்டியான ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!

செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும். பின்பு அதில் சிக்கன்/மட்டன் குழம்பு அல்லது சால்னாவை இரண்டு கரண்டி ஊற்றி, அதில் சிறிது மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். தோசை கல் சூடானதும் சிறிது எண்ணெய்விட்டு, அதில் கலந்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஊற்றவும். பாதி வெந்ததும் முட்டை கலவையை உள்புறமாக மடித்துவிடவும். நான்கு பக்கமும் மடித்து விட்டு மீண்டும் சிறிது மிளகுத்தூள் தூவி, மல்லித்தழையைத் தூவி அடுப்பை அணைக்கவும். முட்டை கலக்கி ரெடி!

தகி பூரி

தேவையானவை:

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 3

சர்க்கரை - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள், சீரகத்தூள் - சிறிது

வேகவைத்த பச்சைப்பட்டாணி - அரை கப்

இனிப்பும் புளிப்பும் கலந்த சட்னி - சிறிது

கிரீன் சட்னி - சிறிது

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - அரை கப்

துருவிய கேரட் - சிறிது

புளிக்காத தயிர் - அரை கப்

ஓமப்பொடி - சிறிது

பூரி - தேவையானவை

உப்பு - சிறிது

வீட்டிலேயே செய்யலாம் டேஸ்ட்டியான ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!

புளிப்பு, இனிப்பு கலந்த சட்னி செய்ய... சிறிய எலுமிச்சை அளவு புளி எடுத்து கரைத்துக்கொள்ளவும். நறுக்கிய பேரீச்சம் பழங்கள் 6, சிறிதளவு நாட்டுச்சர்க்கரை, சிறிதளவு மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி 4, 5 நிமிடங்கள் வேகவைத்து ஆறவிட்டு அரைத்துக்கொள்ளவும். கிரீன் சட்னி செய்ய... ஒரு கைப்பிடி புதினா, 2 பச்சை மிளகாய், சிறிய துண்டு தோல் நீக்கிய இஞ்சி, கால் மூடி எலுமிச்சைச்சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.

செய்முறை: புளிக்காத தயிரில் சர்க்கரை, துளி உப்பு கலந்து வைத்துக்கொள்ளவும். பூரியை உட்புறமாக சிறிய அளவு உடைக்கவும். அதில் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் வேக வைத்த பச்சைப்பட்டாணி சிறிது வைக்கவும். நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட் ஆகியவற்றையும் சிறிதளவு உள்ளே வைக்கவும். பின்பு அதன்மீது இனிப்புக் கலந்த புளி சட்னி மற்றும் கிரீன் சட்னி ஆகியவற்றை சிறிதளவு ஊற்றவும். அதன்மீது தயிர் சிறிதளவு ஊற்றி, மிளகாய்த்தூள் சிறிது தூவிக்கொள்ளவும் (விரும்பினால் சாட் மசாலா சிறிது தூவிக்கொள்ளலாம்). ஓமப்பொடி மற்றும் பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி ருசிக்கலாம்!