Published:Updated:

கேரட் ரசமலாய், குலோப் ஜாமூன் சீஸ் கேக், சாக்லேட் ரசகுல்லா | ஸ்வீட் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்

வீக் எண்டு ரெசிப்பீஸ்

தீபாவளிக்கு முதல்நாள் அவசரம் அவசரமாக ஸ்வீட்ஸ் செய்ய முயற்சி செய்து, நினைத்தது ஒன்று வந்தது ஒன்று என சங்கடப்படுவதற்கு பதில், ஒரு வாரம் முன்பிருந்தே விதவிதமான ஸ்வீட்ஸ் செய்து பழகலாமே!

கேரட் ரசமலாய், குலோப் ஜாமூன் சீஸ் கேக், சாக்லேட் ரசகுல்லா | ஸ்வீட் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்

தீபாவளிக்கு முதல்நாள் அவசரம் அவசரமாக ஸ்வீட்ஸ் செய்ய முயற்சி செய்து, நினைத்தது ஒன்று வந்தது ஒன்று என சங்கடப்படுவதற்கு பதில், ஒரு வாரம் முன்பிருந்தே விதவிதமான ஸ்வீட்ஸ் செய்து பழகலாமே!

Published:Updated:
வீக் எண்டு ரெசிப்பீஸ்

`இந்த வருடம் தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்...' - இந்தக் கேள்வி உங்களுக்குள்ளும் இருக்கும்... உங்களைப் பார்ப்பவர்களிடமிருந்தும் வரும். சித்திரம் மட்டுமல்ல, சமையலும் கைப்பழக்கம்தான்! செய்து பழகப் பழகத்தான் சிறப்பாக வரும். தீபாவளிக்கு முதல்நாள் அவசரம் அவசரமாக முயற்சி செய்து, நினைத்தது ஒன்று வந்தது ஒன்று என சங்கடப்படுவதற்கு பதில், ஒரு வாரம் முன்பிருந்தே ஸ்வீட்ஸ் செய்து பழகுங்களேன்... அசத்தலாக வருபவற்றை மீண்டும் செய்து அடுத்தவருக்கு கொடுத்து மகிழலாமே.....

ஷாகி பூந்தி ஜார்

தேவையானவை:

மோத்தி சூர் லட்டு - 6

பால் - ஒரு லிட்டர்

ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

பாதாம், பிஸ்தா (நறுக்கியது) - அலங்கரிக்க

ஷாகி பூந்தி ஜார்
ஷாகி பூந்தி ஜார்

செய்முறை:

பாலை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொதிக்கவிட்டு பாதியாக வற்றவிடவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்துக் கலக்கி, கால் பாகமாக வற்றும்வரை சூடாக்கவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். இதுதான் ராப்டி.

மோத்தி சூர் லட்டை உதிர்த்து வைக்கவும். பிறகு, சிறிய கண்ணாடி ஜாடியில் கால் இஞ்ச் அளவுக்கு உதிர்த்த மோத்தி சூர் லட்டை சரி சமமமாகப் பரப்பவும். அதன் மேல் கால் இஞ்ச் அளவு ஆறிய ராப்டியை சரி சமமாகப் பரப்பிவிடவும். மறுபடியும் மோத்தி சூர் லட்டை உதிர்த்து பரவலாக்கவும். விருப்பமுள்ளவர்கள் இதன் மேலே மறுபடியும் ராப்டியை ஊற்றி சமன்படுத்தலாம். இறுதியாக ஷாகி பூந்தியின் மேலே பாதாம், பிஸ்தாவை தூவி அலங்கரித்து எட்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு வெளியே எடுத்து ஜில் என்று பரிமாறவும்.

கேரட் ரசமலாய்

தேவையானவை:

ரசமலாய் - 6

வேகவைத்து துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்

விப்பிங் க்ரீம் - ஒரு கப்

பாதாம், பிஸ்தா, ரோஜா இதழ்கள், துருவிய கேரட் - அலங்கரிக்க

கேரட் ரசமலாய்
கேரட் ரசமலாய்

செய்முறை:

ரசமலாய் என்றாலே அது பாலில் ஊறிக் கொண்டிருப்பதுதான். பாலில் ஊறும் ரசமலாயைப் பிழிந்து சரி சமமான இரண்டு துண்டுகளாக்கவும். நறுக்கிய ரசமலாய்த் துண்டுகளை மறுபடியும் அது ஊறிய பாலிலேயே ஊறவிடவும்.

விப்பிங் க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் கைவிடாமல் நன்கு அடித்து கிளறவும். க்ரீம் பஞ்சு போல வரவேண்டும். அதாவது எடுத்து ஒரு தட்டில் வைத்தால் அது கீழே விழாது... அந்தப் பதத்துக்கு அடித்துக் கொள்ளவும். இத்துடன் துருவிய கேரட்டைச் சேர்த்துக் கலக்கவும். பாலில் ஊறும் ஒரு ரசமலாய் துண்டை எடுத்து அதன் மேல் ஒரு டீஸ்பூன் கேரட் - விப்பிங் க்ரீமை சமமாகப் பரப்பவும். மற்றொரு ரசமலாய் துண்டை க்ரீமின் மேல் மெதுவாக வைக்கவும்.

இதேபோல மீதம் இருக்கும் ரசமலாய்களை சாண்ட்விச் போல அலங்கரிக்கவும். பரிமாறும்போது ரசமலாய் சாண்ட்விச் மேலே ரசமலாய் ஊறிய பாலை ஊற்றி, அதன் மேல் பாதாம், பிஸ்தா, துருவிய கேரட், ரோஜா இதழ் தூவி ஜில் என்று பரிமாறவும்.

குலாப் ஜாமூன் - சீஸ் கேக்

தேவையானவை:

க்ரீம் சீஸ் - 200 கிராம்

ஃப்ரெஷ் க்ரீம் - 100 கிராம்

விப்பிங் க்ரீம் - 200 கிராம்

சர்க்கரை - கால் கப் + 3 டேபிள்ஸ்பூன்

டைஜஸ்டிவ் பிஸ்கட் (பொடிக்கவும்) - 150 கிராம்

வெண்ணெய் - 50 கிராம்

தண்ணீர் - முக்கால் கப்

ஃபுட் ஜெலட்டின் - ஒரு டேபிள்ஸ்பூன் + 2 டீஸ்பூன்

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

குலாப் ஜாமூன் - 15 பீஸ் + அலங்கரிக்க

குலாப் ஜாமூன் - சீஸ் கேக்
குலாப் ஜாமூன் - சீஸ் கேக்

செய்முறை:

ஒரு ஸ்பூன் வெண்ணெயை புடிங் பவுலின் உள்ளே முழுவதுமாக தடவவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த பிஸ்கட்டையும் வெண்ணெயையும் சேர்த்துக் கலக்கவும். கலவை பரபரவென மண்போல் இருக்க வேண்டும். இதை புட்டிங் பாத்திரத்தில் சேர்த்து சமன் செய்யவும். பிறகு, அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஜீராவில் ஊறியிருக்கும் குலாப் ஜாமூனை எடுத்து ஜீராவை முழுவதுமாக வடியவிடவும். பிறகு, ஒவ்வொன்றையும் சரிசமமாக இரண்டு துண்டுகளாக்கி ஃப்ரீஸரில் வைக்கவும்.

ஃப்ரெஷ் க்ரீமில் குங்குமப்பூவை சேர்க்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் ஜெலட்டினை சிறிதளவு சுடுநீரில் ஊறவிடவும். விப்பிங் க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் கைவிடாமல் நன்கு அடித்துக் கிளறவும். க்ரீம் பஞ்சு போல வரவேண்டும். அதாவது, எடுத்து ஒரு தட்டில் வைத்தால் அது கீழே விழாது... அந்தப் பதத்துக்கு அடித்துக்கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் க்ரீம் சீஸ், கால் கப் சர்க்கரையைச் சேர்த்து நான்கு நிமிடங்கள் எக் பீட்டரால் நன்கு அடித்து வைக்கவும்.

ஊறவைத்த ஒரு டேபிள்ஸ்பூன் ஜெலட்டினை மைக்ரோவேவ் அவன் பாத்திரத்துக்கு மாற்றி, 30 விநாடிகள் அவனில் வைத்து சூடாக்கி எடுக்கவும். அதை ஆறவைத்து ஃப்ரெஷ் க்ரீம் - குங்குமப்பூ கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை க்ரீம் சீஸ் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் அடித்து வைத்த விப்பிங் க்ரீமைச் சேர்த்து மிதமாகக் கலக்கவும்.

ஃப்ரிட்ஜில் உள்ள புடிங் பவுலை வெளியே எடுக்கவும். இதன் மேல் பாதியாக்கிய குலாப் ஜாமூன்களை நெருக்கமாக அடுக்கவும். பிறகு க்ரீம் சீஸ் கலவையை குலாப் ஜாமூன்களின் மேல் சேர்த்து ஃப்ரிட்ஜில் ஆறு மணி நேரம் வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் மீதமிருக்கும் இரண்டு டீஸ்பூன் ஜெலட்டினை சுடுதண்ணீரில் ஊறவைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து முக்கால் கப் தண்ணீர் சேர்க்கவும். இத்துடன் மூன்று டேபிள்ஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை நன்கு கொதித்ததும் ஊறவைத்த 2 டீஸ்பூன் ஜெலட்டினை சேர்த்துக் கரையவிட்டு ஆறவிடவும். கலவை எல்லாம் ஒன்று சேர்ந்ததும் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த குலாப் ஜாமூன் கலவையில் ஜெலட்டின் கலவையை ஊற்றவும். பிறகு ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து குலாப் ஜாமூன் சீஸ் கேக்குகளை அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.

சாக்லேட் ரசகுல்லா
சாக்லேட் ரசகுல்லா

சாக்லேட் ரசகுல்லா

தேவையானவை:

கண்டென்ஸ்டு மில்க் - 140 மில்லி

பால் - ஒரு கப்

கோகோ பவுடர் - 4 டேபிள்ஸ்பூன்

வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்

பாதாம் பிஸ்தா, முந்திரி

அலங்கரிக்க) - சிறிதளவு

ரசகுல்லா - 12

செய்முறை:

ரசகுல்லாவை ஜீராவில் இருந்து பிழிந்து எடுத்து தனியாக வைக்கவும். அடுப்பில் அடிகனமான பாத்திரம் வைத்து பாலைச் சேர்த்து, அதனுடன் கோகோ பவுடர், கண்டென்ஸ்டு மில்க் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, ரசகுல்லாவை கொதிக்கும் பால் கலவையில் சேர்த்து மூன்று நிமிடங்கள் வேகவிடவும். இத்துடன் வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கவும். சாக்லேட் ரசகுல்லா ஆறியதும் ஒரு பவுலில் ஊற்றி ஆறு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, பாதாம், முந்திரி, பிஸ்தா தூவி ஜில்லென்று பரிமாறவும்.