Published:Updated:

மிளகாய்ப் பொடி தூவி, காரமா ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?! #ChilliGuavaIcecream

விதவிதமான ஃப்ளேவர்களில் எண்ணிலடங்கா ஐஸ்க்ரீம் வகைகள் உலகெங்கும் உள்ளன. அந்த வரிசையில், 'மிளகாய் ஐஸ்க்ரீம்' சென்னையின் தற்போதைய சூப்பர் ஹிட்.

Ice cream
Ice cream

என்னதான் பிரியாணி, சுக்கா, ஃப்ரைடு ரைஸ் என விதவிதமான உணவுகளை அடுத்தடுத்து சாப்பிட்டாலும், ஐஸ்க்ரீம் இல்லாமல் எந்த விருந்தும் நிறைவு பெறாது. நண்பர்களுடன் 'மினி ஐஸ்க்ரீம் ட்ரீட்', அலுவலகத்தில் 'ஹேப்பி ஐஸ்க்ரீம் தினம்' என ஐஸ்க்ரீம்களைச் சுவைப்பதற்கும் கொண்டாடுவதற்கும் ஏராளமான காரணங்களைக் கண்டுபிடித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

'ஸ்கூப்', 'ரோல் அப்', 'சாண்ட்விச்', 'நூடுல்ஸ்' முதலிய வடிவங்கள் தொடங்கி வெனிலா, ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம், சாக்லேட், பிஸ்தா உள்ளிட்ட விதவிதமான ஃப்ளேவர்கள் வரை எண்ணிலடங்கா ஐஸ்க்ரீம் வகைகள் உலகெங்கும் உள்ளன. அந்த வரிசையில், 'மிளகாய் ஐஸ்க்ரீம்' சென்னையின் தற்போதைய சூப்பர் ஹிட்.

சென்னையில் உள்ள 'ஸ்மூஸீஸ் (Shmoozies)' ஐஸ்க்ரீம் பார்லரின் உரிமையாளர் ஷாமா அட்கா இந்த 'சில்லி ஐஸ்க்ரீம்' பற்றியும், 'ஹேண்ட் கிராஃப்டெட்(Hand Crafted)' எனும் புதுமையான கான்செப்ட் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Kshama
Kshama

"கைநிறைய சம்பளத்துக்கு, ஒரு ஐ.டி நிறுவனத்துல வேலைபார்த்துட்டு இருந்தேன். ஆனா, ஐஸ்க்ரீம் மேல் உள்ள காதல்தான், அந்த வேலையை விட்டுட்டு இந்த பிசினஸை ஆரம்பிக்க என்னைத் தூண்டுச்சு. தமிழ்நாட்டுல ஐஸ்க்ரீம் பிசினஸுக்கான போட்டி ரொம்பவே அதிகம். அதுல எப்படி நம்ம தனித்தன்மையைக் காட்டுறதுனு நிறைய யோசிச்சேன். அந்தச் சிந்தனையில தோன்றியதுதான் சுத்தமான 'ஹேண்ட் கிராஃப்டெட்' ஐஸ்க்ரீம். இதுல, சாஸ், எசென்ஸ்னு எந்தவித சிந்தடிக் ஃப்ளேவர்ஸும் சேர்க்கிறதில்ல. 100% ஃப்ரெஷ்."

இதுக்கான இன்ஸ்பிரேஷன்?

Ice Creams
Ice Creams

உண்மையச் சொல்லணும்னா, இதுபோல எங்கேயும் நான் பார்த்ததுகூட இல்லை. பொதுவாவே, ஐஸ்க்ரீம் தயாரிப்புல 'நேச்சுரல்' மற்றும் 'நேச்சுரல் ஐடென்டிகள்'னு ரெண்டு வகை இருக்கு. நேச்சுரல்னு சொல்லுறதுலகூட பேஸ்ட் (Paste) அல்லது எசென்ஸ்தான் உபயோகிப்பாங்க. அது எல்லாமே ரெடிமேடா இருக்கும். நாம இன்ஸ்டன்ட்டா கலந்து கொடுத்தாலே போதும். ஐஸ்க்ரீமை பொறுத்தவரை சரியான செயல்முறைனு எதுவும் இல்லை. ஏன்னா, அதுல வேலை ரொம்ப அதிகம். ஆனா, சவால்களை எதிர்நோக்கிப் பார்க்கலாம்னு செயல்முறைகளைக் கொண்டுவந்து களத்துல இறங்கிட்டேன். இதுக்கு மக்கள்கிட்ட நல்ல வரவேற்பும் கிடைச்சிட்டிருக்கு.

நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

எனக்கு ஐஸ்க்ரீம் ரொம்பப் பிடிக்கும்ங்கிறதால, ஃப்ளேவர் உருவாக்குறது அவ்வளவு கஷ்டமா தெரியல. இங்க இருக்கிற ஒவ்வொரு ரெசிப்பியும் நான் பார்த்துப் பார்த்து உருவாக்கினதுதான். என்னோட தனித்தன்மையான ஃப்ளேவர் எந்தக் காரணத்துக்காகவும் மாறிடக் கூடாதுனு ரொம்ப கவனமாயிருந்தேன். ஆனா, இந்த முயற்சிக்கு எனக்கு உறுதுணையா இருக்கிற சரியான குழுவை உருவாக்கத்தான் அதிகமா கஷ்டப்பட்டேன். எல்லோரும் நினைக்கலாம், சாதாரண ஐஸ்க்ரீமுக்கு இவ்வளவு பில்ட்-அப்பான்னு. ஆனா, எந்த பிஸினஸும் அவ்வளவு சுலபமில்லை. ஆரம்பத்துல வெறும் டெலிவரி மட்டும்தான் பண்ணிட்டிருந்தோம். அதுக்கு அப்புறம்தான், பார்லர், சமையலறைனு எல்லாத்துக்கும் தனித்தனியா குழு உருவாக்கினோம். இதுக்கே சரியா ஒரு வருஷம் தேவைப்பட்டுச்சு.

`குழந்தை ஜனிக்கும்போது..!' - தம்பதிகளுக்குச் சில மனநல ஆலோசனைகள் - இப்படிக்கு... தாய்மை - தொடர் 04

அதென்ன 'சில்லி ஐஸ்க்ரீம்'?

Chilli Guava icecream
Chilli Guava icecream

பொதுவா டெஸெர்ட்னா இனிப்புதான். அந்த இனிப்பைக் கொஞ்சமா ஓரம்கட்டி, காரத்தைச் சேர்த்துப் பார்க்கலாமேனு ஒரு சின்ன ட்ரை. எல்லோருக்கும் இனிப்புப் பிடிக்கும்னு சொல்ல முடியாது. இனிப்புல ட்விஸ்ட் கொடுத்துப் பார்க்கலாம்னு பண்ணினதுதான், 'மிளகாய் - கொய்யா' ஃப்ளேவர். பீச், பேருந்து நிலையத்துல எல்லாம் கொய்யாவில் மிளகாய்ப் பொடி தூவிக் கொடுப்பாங்க. அந்த காம்போவ நினைச்சாலே சாப்பிடணும்போல இருக்கும். அதுதான் இந்த 'சில்லி - கோவா' ஃப்ளேவருக்கான இன்ஸ்பிரெஷன். இதை அப்படியே நாங்க ஐஸ்க்ரீம் வடிவுல கொண்டு வந்திருக்கோம். இதுக்காகச் சிவப்புநிற பெங்களூரு கொய்யாப் பழங்களைப் பயன்படுத்துறோம். தவிர, எந்த நிறமிகளையும் நாங்க உபயோகிக்கலை.

இதேபோல, 'சால்ட்டட் கேரமல்'னு ஒரு புது ஐஸ்க்ரீம் ஃப்ளேவரும் இப்போ மக்களோட ஃபேவரைட் லிஸ்ட்ல சேர்ந்திருக்கு. கேரமல் ரொம்பவே இனிப்பா இருக்கும். அதுகூட கொஞ்சமா உப்பு சேரும்போது, அதோட ஸ்வீட்னஸ் குறைஞ்சிடும். இப்படியான கான்ட்ராஸ்ட் சுவைதான் லேட்டஸ்ட் டிரெண்டும்கூட. ஒரு ஸ்கூப்புக்குப் பதில் ரெண்டு, மூணுன்னு சாப்பிட்டுட்டே இருக்கலாம்! யம்மி!