Published:Updated:

சமையல் சந்தேகங்கள் 12 - பசுமை மாறாத கீரை, கசப்பில்லாத பாகற்காய் குழம்பு, டூ மினிட்ஸ் புதினா சர்பத்

சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள்

சமையல் சந்தேகங்களுக்குப் பதில் சொல்கிறார் செஃப் சுஜா

சமையல் சந்தேகங்கள் 12 - பசுமை மாறாத கீரை, கசப்பில்லாத பாகற்காய் குழம்பு, டூ மினிட்ஸ் புதினா சர்பத்

சமையல் சந்தேகங்களுக்குப் பதில் சொல்கிறார் செஃப் சுஜா

Published:Updated:
சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள்

- சுகுன ரோஷிணி

பாகற்காய்களை ஃபிரிட்ஜில் வைத்தால், அவை ஒன்றிரண்டு நாள்களிலேயே பழுத்துவிடுகின்றன. இதைத் தவிர்ப்பது எப்படி?

- எல்.கிருஷ்ணவேணி, சூலூர்

பாகற்காய்களை வாங்கியதும் அவற்றின் இரண்டு நுனிகளையும் நறுக்கிவிட்டு, ஃபிரிட்ஜில் வைத்தால் 10, 12 நாள்கள்வரைகூட பழுத்துப் போகாமல் பச்சை நிறத்துடன் இருக்கும்.

குழம்பு வைக்கும்போது தாளித்த பிறகு காய்கறி களைப் போடவேண்டுமா, காய்கறிகளை முதலில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, குழம்பை இறக்கும்போது தாளித்துவிட வேண்டுமா?

- மகேஸ்வரி சுகுமார், சென்னை-12

சமையல் சந்தேகங்கள் 12 - பசுமை மாறாத கீரை, கசப்பில்லாத பாகற்காய் குழம்பு, 
டூ மினிட்ஸ் புதினா சர்பத்

காய்கறிகள் சேர்த்துக் குழம்பு வைக்கும்போது, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கிய பிறகு காய்கறிகளைச் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு கொதித்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கும்போது, ஒரு டீஸ்பூன் சமையல் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு சிறிதளவு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து இறக்கலாம். குழம்பு நல்ல வாசனையுடன் இருக்கும்.

கீரை வகைகளைச் சமைக்கும்போது பச்சைநிறம் மாறாமல் சமைப்பது எப்படி?

- ராஜேஸ்வரி குமார், காட்பாடி

கீரை சமைக்கும் பாத்திரத்தை மூடாமல் வைத்துச் சமைக்க வேண்டும். சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்தால், கீரை பசுமையாகவே இருக்கும். கீரையைச் சமைப்பதற்கு முன் சிறிதளவு உப்புத்தூள் தூவிவைத்து, பிறகு சமைத்தாலும் கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.

புதினா, கொத்தமல்லி துவையல் அரைக்கும்போது அவை நிறம் மாறிவிடுகின்றனவே... இதைத் தவிர்க்க முடியாதா?

- பி.ரங்கநாயகி, திருச்சி-12

புதினா, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றில் துவையல் அரைக்கும்போது சிறிதளவு எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து அரைத்தால், பசுமை நிறம் மாறாமல் இருக்கும். சுவையும் கூடும்.

எந்த வகை பெருங்காயம் சேர்த்தால் உணவில் சுவை யும் மணமும் கூடும்?

- பத்மாவதி மாறன், பெங்களூரு-3

எண்ணெய்ப் பெருங்காயம், கட்டிப் பெருங்காயம், தூள் பெருங்காயம் என மூன்று வகை பெருங்காயங்கள் கடைகளில் விற்பனையாகின்றன. இவற்றில் கட்டிப் பெருங்காயம் மிகவும் நல்லது. நம் தேவைக்கேற்ப அவ்வப்போது உடைத்துப் பயன்படுத்துவதால், வாசனை மாறாமல் இருக்கும். ஆரோக்கியமானதும்கூட. அதிலுள்ள நறுமணம் முழுமையாக நம் உணவில் கிடைக்கும்.

சமையல் சந்தேகங்கள் 12 - பசுமை மாறாத கீரை, கசப்பில்லாத பாகற்காய் குழம்பு, 
டூ மினிட்ஸ் புதினா சர்பத்

பொதுவாக விருந்துகள் மற்றும் விழாக்களில் பலமாகச் சாப்பிட்டுவிட்டு, செரிமானக் கோளாறால் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்ன?

- திவ்யா கருணாகரன், ஈரோடு

விருந்தில் சாப்பிடுவதற்கு முன்பாகவோ, சாப்பிட்ட பிறகோ வெற்றிலை ஜூஸ் குடிக்கலாம். மூன்று வெற்றிலை, சீரகம், மிளகு, உப்பு தலா அரை டீஸ்பூன் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி 180 மில்லி அளவு அருந்தலாம். இப்படிச் செய்தால், அஜீரணம் ஏற்படாது.

தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். இரண்டே நிமிடங்களில் புதினா எசென்ஸ் தயாரித்து, ஐஸ் வாட்டரில் கலந்து, புதினா சர்பத் கொடுத்தார். அருமையாக இருந்தது. புதினா சர்பத் தயாரிப்பது எப்படி?

- வி.லட்சணா, செங்கல்பட்டு

புதினா சர்பத் தயாரிக்கத் தேவையானவை: புதினா - இரண்டு கைப்பிடி அளவு, சீரகம் - கால் டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், நாட்டுச்சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைப்பழம் - 2, ஐஸ்கட்டிகள்- தேவையான அளவு அல்லது குளிர்ந்த தண்ணீர்.

செய்முறை: மிக்ஸி ஜாரில் புதினா இலை, உப்பு, சீரகம், நாட்டுச்சர்க்கரை, எலுமிச்சைப் பழச்சாறு விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். இதை ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டிக் கொள்ளவும். இதில் தேவையான அளவு எடுத்து ஐஸ்கட்டி, சோடா அல்லது தண்ணீர் சேர்த்து ஒரு துண்டு எலுமிச்சைப் பழம், சிறிது புதினா இலை சேர்த்துப் பரிமாறலாம். புதினா சர்பத் உடல்சூட்டைத் தணிக்கும். புதினா எசென்ஸைத் தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால் தேவையானபோது உடனே சர்பத் தயாரிக்கலாம்.

கசப்புத் தன்மை அதிகம் இருப்பதால், பாகற்காயை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்வதில்லை. கசப்பில்லாமல் பாகற்காய் குழம்பு வைப்பது எப்படி?

- மித்ரா பிரேம்குமார், கடலூர்

பாகற்காயின் உள்ளிருக்கும் விதைகளை நீக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசறி அரை மணி நேரம் ஊறவைத்து, பிறகு சமைத்தால் கசப்புத் தன்மை குறையும்.

தேவையானவை: நல்லெண்ணெய் - 150 மில்லி, நறுக்கிய பாகற்காய் - 250 கிராம், பூண்டு - 10 பற்கள், கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், துருவிய வெல்லம் - ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, புளி - எலுமிச்சைப்பழ அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, அதில் நறுக்கிய பாகற்காய் துண்டுகளை நன்கு வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு எண்ணெய்விட்டு, கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து வதக்கி, கறிவேப்பிலை, பூண்டு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறி புளிக்கரைசலை ஊற்றவும். நன்கு கொதிக்கவிட்டு கடைசியில் வறுத்து எடுத்த பாகற்காய், துருவிய வெல்லம் சேர்த்து 5 நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்கவிட்டு இறக்கினால், கசப்பில்லாத சுவையான பாகற்காய் குழம்பு ரெடி.

சமையல் சந்தேகங்கள் 12 - பசுமை மாறாத கீரை, கசப்பில்லாத பாகற்காய் குழம்பு, 
டூ மினிட்ஸ் புதினா சர்பத்

குக்கரில் சாதம் வைக்கும்போது அடிக்கடி சாதம் மற்றும் அதன் கஞ்சி வெளியில் தெறித்து அடுப்பு மேடை எங்கும் சிதறி விடுகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

- ஹேம செளந்தர்யா, சென்னை-20

குக்கரில் சமைக்கும்போது சாதத்துடன் இருக்கும் தண்ணீர் ஓவர் ஃப்ளோவாகி வெளியில் தெறிப்ப துண்டு. குக்கரை மூடுவதற்கு முன் விசில் போடுகிற இடத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் சிறிதளவு எண்ணெயைத் தடவிச் சமைத்தால், இப்படி நிகழாது. ஆவி சீராக வெளியேறும்.

ஃபிரிட்ஜில் பலவிதமான பொருள்களை வைத்து எடுப்பதால், ஒருவித கெட்ட வாடை வருகிறது. இதற்கு என்ன செய்யலாம்?

- பா.சுகந்தி, காரைக்கால்

சைவ மற்றும் அசைவ உணவு வகைகள், இட்லி மாவு, காய்கறிகளை வைத்து எடுக்கும்போது துர் நாற்றம் வீசுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்ப்பதற்கு எலுமிச்சைப்பழத்தை இரண்டாக வெட்டி, ஃபிரிட்ஜின் மூலைகளில் வைக்கலாம். இல்லாவிட்டால், பேக்கிங் சோடாவை ஒரு கப்பில் கொட்டி ஃபிரிட்ஜின் உள்ளே இரண்டு மூலைகளிலும் வைத்தாலும் கெட்ட வாடை வீசாது.