பிரீமியம் ஸ்டோரி

முட்டை இல்லாமலே ஆம்லெட் செய்வது எப்படி?

சமையல் சந்தேகங்கள்

தேவையானவை:

கடலை மாவு - அரை கப்

சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்

பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்

கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

பொடியாக பீன்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 4 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கப்

நறுக்கிய கொத்தமல்லித்தழை - 3 டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய் - 8 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

சமையல் சந்தேகங்கள்

செய்முறை:

வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு பெரிய வெங்காயம், பீன்ஸ், வெங்காயத்தாள், குடமிளகாய், கேரட் துருவல் ஆகியவற்றை உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வெந்ததும் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், மிளகுத்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து, நீர்விட்டு கட்டியில்லாமல் தோசை மாவுப் பதத்துக்குக் கலக்கவும். அதில் வெந்த காய்கறிகளைச் சேர்த்து நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும்.

தவாவில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி கலந்த மாவை ஊற்றி, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு, மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும். கலந்த மொத்த மாவையும் இதேபோல் செய்து எடுக்கவும். சுவையான, முட்டை இல்லாத வெஜிடபிள் ஆம்லெட் தயார்.

காலையில் நீண்ட நேரம் பசி தாங்கக்கூடிய அரிசிக் கஞ்சி செய்வது எப்படி? டிபன் சாப்பிட முடியாத நேரத்திலும் சத்தானதாகவும் இருக்கும்படி இதைச் செய்வது எப்படி?

தேவையானவை:

பச்சரிசி - அரை கப்

பயத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் (வறுத்து, கொரகொரப்பாகப் பொடித்தது) - அரை டீஸ்பூன்

பூண்டு - 4 பல் (நறுக்கவும்)

பச்சை மிளகாய் - ஒன்று

சின்ன வெங்காயம் - 4 (நறுக்கவும்)

பெரிய வெங்காயம் - பாதியளவு (நறுக்கவும்)

கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்

நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலைகள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

தேங்காய்ப்பால் - அரை கப்

தக்காளி - ஒன்று (நறுக்கவும்)

உடைத்த முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்

பட்டை - ஒரு சிறிய துண்டு

கிராம்பு - 2

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

சமையல் சந்தேகங்கள்

செய்முறை:

அரிசி, பருப்பைக் கழுவிக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு முந்திரித் துண்டுகள் சேர்த்து வதக்கி, பச்சை மிளகாயை நறுக்காமல் லேசாக முழுதாகக் கீறிப் போட்டு வதக்கவும். இதனுடன் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, பூண்டு, கேரட் துருவல், வெந்தயம், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு அரிசி, பருப்பு சேர்த்து, 4 கப் நீர்விட்டு தக்காளி, புதினா கொத்தமல்லி, இலைகள் சேர்ந்து குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். குக்கரில் பிரஷர் அடங்கியதும் திறந்து, தேங்காய்ப்பால் ஊற்றிக் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். சத்தான, சுவையான, நீண்ட நேரம் பசி தாங்கக்கூடிய கஞ்சி தயார்.

காய்கறி அதிகம் தேவைப்படாத, விரைவில் செய்யக்கூடிய சால்னா செய்வது எப்படி? இதை எதற்கெல்லாம் தொட்டுச் சாப்பிடலாம்?

தேவையானவை:

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 3

பூண்டு - 6 பல்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

அரைப்பதற்கு:

தேங்காய்த் துருவல் - கால் கப்

முந்திரி - 6

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)

மேலே தூவதற்கு:

நறுக்கிய கொத்தமல்லித்தழை - 3 டேபிள்ஸ்பூன்

சமையல் சந்தேகங்கள்

செய்முறை:

அரைப்பதற்குக்கொடுத்தவற்றை நீர்விட்டு அரைத்துவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் வதக்கி ஒன்றரை கப் நீர்விட்டுக் கொதிக்கவிடவும். காய்கள் வெந்ததும் அரைத்தவற்றைச் சேர்த்து மேலும் இரண்டு கொதிவிட்டு கரம் மசாலாத்தூள் சேர்த்து இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிக் கலந்துவிடவும். இந்த சால்னா (குருமா, குழம்பு, சாம்பாரைவிட) சற்று நீர்க்கத்தான் இருக்கும்.

குறிப்பு: இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி போன்றவற்றுக்குத் தொட்டுச் சாப்பிட இந்த சல்னா ஏற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிக நேரம் புளிக்கவைக்காமல் அரைத்த சில மணி நேரத்தில் சாப்பிடக் கூடிய புளிப்பும் காரமும் கலந்த தோசை தயாரிப்பது எப்படி?

தேவையானவை:

புழுங்கல் அரிசி - அரை கப்

பச்சரிசி - ஒரு கப்

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

முழு வெள்ளை உளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

நன்கு பழுத்த தக்காளி - 3

தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 6 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

சமையல் சந்தேகங்கள்

செய்முறை:

புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் உப்பு, தேங்காய்த் துருவல், தக்காளி சேர்த்து நைஸாக அரைத்து, ரவா தோசை மாவு பதத்தில் கரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, வெங்காயம், கொத்தமல்லித்தழை, சீரகம், இஞ்சித் துருவல் சேர்த்துக் கலக்கவும். தவாவில் ஒரு கரண்டி மாவை ஊற்றி ஓரங்களில் சிறிதளவு எண்ணெய்விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும். மொத்த மாவையும் இவ்வாறு செய்து புதினா சட்னி (அ) சாம்பாருடன் சுவைக்கவும்.

சோள மாவு கரைத்து ஊற்றாமல் சூப் நன்றாக வருமா? சோள மாவு இல்லாத போது வேறு ஏதாவது சேர்க்கலாமா?

சமையல் சந்தேகங்கள்

ஒரு ஸ்பூன் அவலை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பவுடராக்கி கரைத்து சூப்பில் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கினால் சூப் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.

தோசைக்கல்லில் தோசை ஒட்டாமல் வர புதிய வழி என்ன?

சமையல் சந்தேகங்கள்

தோசைக்கல் நன்றாகக் காய்ந்ததும் கால் கப் நீரை அதன் மேல் ஊற்றி, கல் முழுவதும் பரவலாக வரும்படி தோசை கரண்டியால் தேய்க்கவும். தண்ணீர் முழுவதும் வற்றுவதற்கு சற்று முன் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி எண்ணெயும் தண்ணீருமாகக் கலந்ததை தோசை கரண்டியால் கல் முழுவதும் நன்றாகத் தேய்க்கவும். எண்ணெய், தண்ணீர் இரண்டும் வற்றியதும் துடைத்துவிட்டு பிறகு தோசை ஊற்றினால் தோசை இறுதிவரை ஒட்டாமல் வரும்.

அடுப்பு பற்றவைக்காத, மிக்ஸி உபயோகப் படுத்தாத எளிமையான ஸ்வீட் செய்வது எப்படி?

சமையல் சந்தேகங்கள்
  • நன்றாகக் கனிந்த, விதையற்ற பேரீச்சை - 10

  • மெலிதாகச் சீவிய முந்திரி, பிஸ்தா - தலா 2 டேபிள்ஸ்பூன்

  • மெலிதாக சீவிய பாதாம் - 5 டேபிள்ஸ்பூன்

  • மெலிதாகத் துருவிய தேங்காய் - அரை கப்

  • நெய் - 2 டேபிள்ஸ்பூன்

கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தை யும் (நெய் நீங்கலாக) ஒரு பவுலில் போட்டு கைகளால் நன்றாகப் பிசைந்து நெய்யைத் தொட்டுக்கொண்டு லட்டுகளாகப் பிடிக்கவும். மிகவும் சுவையான, சத்தான லட்டு தயார்.

இரவில் செய்த சாதம் மீந்துவிட்டால் காலையில் அதைப் புதுமையாக என்ன டிஷ் செய்யலாம்?

இரவில் மீந்த சாதத்துடன் அது மூழ்கும் வரை நீர்விட்டு மூடி வைக்கவும். மறுநாள் காலை தண்ணீரை வடிகட்டிவிட்டு ஒரு கப் சாதத்துக்கு 4 டேபிள்ஸ்பூன் என்ற அளவில் அரிசி மாவு சேர்த்து மிக்ஸியில் நீர்விடாமல் இரண்டு சுற்று சுற்றி எடுத்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்து பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி இட்லி பானையில் இட்லித் தட்டில் வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து, ஐந்து நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வெந்ததும் சிறிது நேரம் ஆறவிடவும்.

வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு ஒரு டீஸ்பூன் தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி (தலா ஒன்று) சேர்த்து வதக்கி, 2 டேபிள்ஸ்பூன் கேரட் துருவல் சேர்த்து, மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கிளறி, வெந்த உருண்டைகளைச் சேர்த்து வதக்கி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். எளிதில் செய்யக்கூடிய இந்த மசாலா ரைஸ் பால்ஸ், புதுமையான சுவையுடன் இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு