தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சமையல் சந்தேகங்கள் - 18

சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சமையல் சந்தேகங்கள்

சுவையான உளுந்தங்கஞ்சி, சூப்பரான ஆம்லெட், பாரம்பர்ய பருத்திப்பால்... சமையல் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் செஃப் திவாகர்

சுகுன ரோஷிணி

சமையல் சந்தேகங்கள் - 18

`உளுந்தங்கஞ்சி’ என்னும் இனிப்புக் கஞ்சி ‘உடம்புக்கு மிகவும் நல்லது’ என்று கிராமப் புறங்களில் தருகிறார்கள். இதைத் தயாரிப்பது எப்படி?

- எஸ்.மல்லிகேஸ்வரி, சென்னை-19

உளுந்தங்கஞ்சி என்பது நம்முடைய பாரம்பர்ய உணவுகளில் ஒன்று. ஊட்டச்சத்து மிகுந்த இது, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு. இதை வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

உளுந்தங்கஞ்சி செய்வதற்குத் தேவையானவை:

தோல் நீக்கிய உளுந்து - 100 கிராம், வெல்லம் - 150 கிராம், துருவிய தேங்காய் - அரை மூடி, சுக்கு - 4 கிராம், ஏலக்காய் - 2 (சுக்கு, ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்) நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

செய்முறை: உளுந்தை நான்கு மணிநேரம் ஊறவைத்து, மாவாக அரைத்தெடுக்கவும். வெல்லத்தில் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அரைத்த உளுந்து மாவைச் சேர்த்து மரக் கரண்டியால் கிளறவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். உளுந்தின் பச்சை வாசனை போகும் வரை வேகவிடவும். 20 முதல் 30 நிமிடங்கள் வரை கொதித்ததும் வெல்லக்கரைசல், துருவிய தேங்காய், சுக்கு - ஏலப்பொடி சேர்த்துக் கொதிக்க வைத்து கெட்டியானதும் இறக்கவும். தேங்காய்த்துருவல் பிடிக்காதவர்கள், தேங்காய்ப்பால் எடுத்தும் சேர்த்துக் கொள்ளலாம். நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிடலாம்.

உளுந்தங்கஞ்சிக்கு பனைவெல்லம் பயன்படுத்துவது சிறப்பானது. பனைவெல்லத்துக்கு ஜலதோஷம் மற்றும் இருமல் போன்றவற்றைக் குணப்படுத்தும் சக்தி உண்டு. தவிர, உளுந்தங்கஞ்சியின் மணமும் சுவையும் கூடும். எந்த வெல்லம் பயன்படுத்தினாலும் தண்ணீரில் கரைத்து வடிகட்டிப் பயன்படுத்தினால், வெல்லத்தில் இருக்கும் கல், மண், தூசுகளை அகற்றி விட முடியும்.

சமையல் சந்தேகங்கள் - 18

ஆம்லெட் தயாரிக்கும்போது சில நேரம் கருகி விடுகிறது. இல்லாவிட்டால், ஆம்லெட் வேகாமலேயே இருக்கிறது. இதை எப்படிச் சரிப்படுத்துவது?

- தினகரி மனோகரன், திருச்சி-9

ஆம்லெட் தயாரிக்க நாம் எந்த மாதிரியான தோசைக்கல்லைப் பயன்படுத்துகிறோம் என்பது மிக முக்கியம். உதாரணமாக, நான்-ஸ்டிக் தவாவைப் பயன்படுத்தினால், அது எளிதில் சூடாகிவிடும். நம்முடைய பாரம்பர்ய தோசைக்கல்லைப் பயன் படுத்தினால் கல் சூடாக சற்று கூடுதலான நேரம் ஆகும். இரண்டிலுமே கல் மிதமாக சூடானதும், அடித்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட்டாகப் போட்டு எடுத்தால், சுவையாக இருக்கும். நான்-ஸ்டிக் தவாவில் செய்யும்போது அதிகம் எண்ணெய் ஊற்றத் தேவையில்லை. அதிக தீயில் வைத்துச் சமைப்பது, குறைந்த தணலில் சமைப்பது... இந்த இரண்டுமே ஆம்லெட்டை சுவையற்றதாக்கிவிடும்.

சமையல் சந்தேகங்கள் - 18

முற்றிய தேங்காயை வாங்கி சமைத்தால் நெஞ்சுக் கரிப்பு ஏற்படுமா... சமையலுக்கு தேங்காய் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை எவை?

- சுந்தரி கருணாகரன், வேலூர்-9

நல்ல கனமான காயாகவும் தண்ணீர் அதிகமுள்ள தாகவும் பார்த்து வாங்க வேண்டும். உணவில், தேங்காயைப் பயன்படுத்தும்போது நெஞ்சுக் கரிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், தேங்காயைக் கீற்றுகளாக நறுக்கி எடுத்ததும், அதன் பின்புறத்தில் உள்ள பிரவுன் நிறத்திலான தோல் பகுதியை நீக்கி விட்டுச் சமைக்க வேண்டும்.

முற்றிய தேங்காயைத் தவிர்ப்பது நல்லது. இளசாகவும் இல்லாமல் முற்றியதாகவும் இல்லாமல் மீடியமாக பார்த்து வாங்கினால் தேங்காய்ப்பாலும் அதிகம் கிடைக்கும். உணவின் சுவையும் கூடுதலாக இருக்கும்.

சமையல் சந்தேகங்கள் - 18

மதுரை போயிருந்தபோது ‘பருத்திப்பால்’ என்றொரு பானம் குடித்தோம். பருத்திப்பால் உடலுக்கு நல்லதா?

- எல்.லோகநாயகி, சென்னை-12

பருத்திப்பால் மிகவும் நல்லது. பாரம்பர்ய பானமான இதைக் கோடைக்காலத்தில் சாப்பிட்டால், உடல் குளிர்ச்சி அடையும். உடலின் உள்ளுறுப்புகளுக்கு இதம் தரும். தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கும் குழந்தை களுக்கும் மிகவும் நல்லது. பருத்திப்பால் உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும்.

பருத்திப்பால் எல்லோருக்கும் ஜீரணமாகும் என்று சொல்ல முடியாது. அவரவர் உடல்நிலையைப் பொறுத்து அது மாறுபடக்கூடும். எனவே, முதலில் குறைவான அளவு எடுத்துக்கொண்டு, இது செரிமானமாகிறதா என்று பார்த்துவிட்டு, பிறகு அடிக்கடி அருந்தலாம்.”

சமையல் சந்தேகங்கள் - 18

மில்க் ஷேக் தயாரிக்கும்போது காய்ச்சாத பாலை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன் படுத்தலாமா?

- கீதா கிருஷ்ணன், செங்கல்பட்டு

பாலைக் காய்ச்சி ஆற வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவதுதான் சரி. காய்ச்சாத பாலைப் பயன் படுத்தக் கூடாது. ஏனென்றால், காய்ச்சாத பாலில் பாக்டீரியா இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலும் பாக்கெட் பால் வாங்குகிறோம். பால் காய்ச்சும்போது திரிந்துபோவதற்கான பல காரணங் களில், அது பழைய பால் என்பதும் ஒன்று. மில்க் ஷேக் தயாரிக்க மட்டுமல்ல... தயிருக்கும் வேறு எந்த உபயோகத்துக்கும் காய்ச்சிய பாலை ஆறவைத்துப் பயன்படுத்துவதுதான் ஆரோக்கியமானது.

சமையல் சந்தேகங்கள் - 18

சாப்பாடு மற்றும் டிபன் வகையில் சின்ன வெங்காயத்தின் பயன்பாடு குறைந்து, பெரிய வெங்காயத்தின் பயன்பாடு அதிகமாகி விட்டதே... இரண்டின் சுவையிலும் வித்தியாசம் இருக்குமா?

- ஹெச்.ஜமுனா, பெங்களூரு-3

முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்ததால், சமையல் வேலைகளை ஆளுக்கு ஒன்றாகப் பகிர்ந்து செய்தார்கள். வேலைகளும் எளிதாக இருந்தன. ஒருவர் சாதம் வடிப்பார். ஒருவர் காய்கறிகளை நறுக்கித் தருவார். கிலோ கணக்கில் சின்ன வெங்காயத்தை உரித்து நறுக்குவதுகூட சுலபமாக இருந்தது. இப்போது கூட்டுக்குடும்பங்கள் காணாமல் போய் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதால், காலை வேளைகளில் அவசர அவசரமாகப் புறப்படுகின்றனர். இப்படிப்பட்டச் சூழலில் சிறிய வெங்காயத்தைவிட பெரிய வெங்காயம்தான் பயன்படுத்த எளிதாக இருக்கிறது.

சின்ன வெங்காயம் பயன்படுத்தினால் சமையலின் மணமும் சுவையும் கூடும் என்பது நிச்சயம். தவிர்க்க முடியாத பட்சத்தில் பெரிய வெங்காயம் பயன் படுத்துவதில் தவறில்லை. ஆனாலும், சின்ன வெங்காயத்தில் இருக்கும் ஒருவித இனிப்புச்சுவை சமையலில், குறிப்பாக, நம் தென்னிந்திய உணவு களுக்கு பிரத்யேக ருசி கூட்டும் என்பதை மறுப்பதற் கில்லை.