ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சமையல் சந்தேகங்கள் 14 - தூதுவளை சூப்... முடக்கத்தான் தோசை... சோயா கிரேவி...

சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சமையல் சந்தேகங்கள்

சுகுன ரோஷிணி

சமையல் சந்தேகங்களுக்குப் பதில் சொல்கிறார் செஃப் எல்.கே.சித்தார்த்தன்

சமையல் சந்தேகங்கள் 14 - தூதுவளை சூப்...
முடக்கத்தான் தோசை...
சோயா கிரேவி...

கொரோனா காலத்தில், லேசாக சளி, இருமல் ஏற்பட்டால்கூட பயமாக இருக்கிறது. இந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை சூப் ஒன்றின் செய்முறையை விளக்க முடியுமா?

- மங்கை சண்முகம், திருச்சி-9

சளி, இருமல் ஏற்படாமல் இருக்க, மல்லி (தனியா) சூப், மிளகு சூப், கொள்ளு சூப், கறிவேப்பிலை சூப், வெற்றிலை சூப், முருங்கைக்கீரை சூப் போன்றவற்றைச் செய்து அருந்தலாம். அசைவ உணவுப் பிரியர்கள் நண்டு மிளகு சூப், நாட்டுக்கோழி சூப், ஆட்டு நெஞ்செலும்பு சூப், ஆட்டுக்கால் சூப் ஆகியவற்றைச் செய்து சாப்பிடலாம். எந்த வகையான சூப்பாக இருந்தாலும், இஞ்சி, பூண்டை மறக்காமல் சேர்க்க வேண்டும்.

நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும் தூதுவளை சூப் தேவையானவை: தூதுவளை இலைகள் - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - 10 கிராம், பூண்டுப் பற்கள் - 10, சின்ன வெங்காயம் - 50 கிராம், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய்விட்டு மிதமான தீயில் உப்பு தவிர மற்ற பொருள் களைப் பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். இதில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஏழு நிமிடங்கள் கொதித்ததும், இறக்கி வடிகட்டாமல் அப்படியே குடிக்கலாம். சளி, இருமலுக்கு இந்த தூதுவளை சூப் மிகவும் நல்லது.

சமையல் சந்தேகங்கள் 14 - தூதுவளை சூப்...
முடக்கத்தான் தோசை...
சோயா கிரேவி...

ராகியில் இட்லி, தோசை எப்படிச் செய்வது?

- எஸ்.லக்‌ஷிதா, சென்னை-19

ராகி இட்லி

தேவையானவை: இட்லி அரிசி, ராகி (கேழ்வரகு) தலா அரை கப், உளுந்து - கால் கப், உப்பு - தேவையான அளவு.

இவை மூன்றையும் மூன்று மணிநேரம் தனித்தனியே நன்கு ஊறவைத்து, இட்லி மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். இதில் உப்பு சேர்த்துக் கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். காலையில் இட்லி பாத்திரத்தில் ஊற்றி எடுத்தால், சுவையான ராகி இட்லி ரெடி.

இதே மாவில் தோசையும் வார்க்கலாம். இனிப்புச் சுவையில் வேண்டுவோர் ராகி வாழைப்பழ தோசையும் செய்து சாப்பிடலாம்.

தேவையானவை: ராகி (கேழ்வரகு) - அரை கப், பச்சரிசி, உளுந்து - தலா கால் கப், பால்- 100 மில்லி, நாட்டுச்சர்க்கரை- கால் கப், வாழைப்பழம் - ஒன்று, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: முதலில் ராகி, பச்சரிசி, உளுந்து ஆகியவற்றைத் தனித்தனியே மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். இவற்றுடன் பால், வாழைப்பழம், நாட்டுச்சர்க்கரை சேர்த்து தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். விருப்பப்பட்டால் பாலுக்குப் பதில் இதில் தேங்காய்ப்பால் சேர்த்துக்கொள்ளலாம். அடுப்பில் தோசைக்கல் வைத்து தோசையாக வார்த்து, திருப்பிப் போட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்தால், சூடான சுவையான வாழைப்பழ ராகி தோசை ரெடி.

சமையல் சந்தேகங்கள் 14 - தூதுவளை சூப்...
முடக்கத்தான் தோசை...
சோயா கிரேவி...

முடக்கத்தான் தோசை, தூதுவளை தோசை - இவற்றின் செய்முறையை விளக்கவும்.

- கண்ணாத்தாள் மூர்த்தி, சிவகங்கை

முடக்கத்தான் தோசை, தூதுவளை தோசை இரண்டுக்கும் ஒரேவிதமான செய்முறைதான். புழுங்கலரிசி ஒரு கப், வெந்தயம் ஒரு டீஸ்பூன் இரண்டையும் மூன்று மணி நேரத்துக்கு ஊறவைத்துக் கொள்ளவும். இதை தோசை மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். உப்பு சேர்த்து நான்கு மணி நேரம் நொதிக்க விடவும். இந்த மாவுடன் சுத்தம் செய்து நறுக்கிய முடக்கத்தான் கீரை அல்லது தூதுவளைக்கீரையை ஒரு கைப்பிடி அளவு சேர்த்து தோசையாக வார்த்தெடுக்கவும். கீரையை அரைத்தும் மாவில் சேர்த்து தோசை வார்க்கலாம்.

சமையல் சந்தேகங்கள் 14 - தூதுவளை சூப்...
முடக்கத்தான் தோசை...
சோயா கிரேவி...

சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ள சோயா கிரேவி எப்படிச் செய்வது?

- சுந்தரி குமார், பெங்களூரு - 3

தேவையானவை: சோயா சங்க்ஸ் எனப்படும் உருண்டைகள் - ஒரு கப், தக்காளி - 2, பெரிய வெங்காயம் -2, தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 6 பற்கள், சோம்பு - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன், முந்திரி - 6, மல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிப்பதற்கு: பட்டை, சோம்பு , எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து சோயா உருண்டைகளை ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தேங்காய்த்துருவல், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் பட்டை, சோம்பு, முந்திரிப்பருப்பைச் சேர்க்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்து நன்கு கிளறவும். சோயாவையும் பிழிந்து சேர்த்து வதக்கவும்.

5 நிமிடங்களுக்குப் பிறகு மிளகாய்த்தூள் சேர்த்து, அரைத்து வைத்துள்ள கலவையையும் உப்பையும் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும். மல்லித்தழைகளைத் தூவிப் பரிமாறவும். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்கு நல்ல சைடிஷ் ஆக இருக்கும்.

சமையல் சந்தேகங்கள் 14 - தூதுவளை சூப்...
முடக்கத்தான் தோசை...
சோயா கிரேவி...

குழம்பு, பொரித்த மீன், தவிர எண்ணெய் இல்லாமல், வயதானவர்கள் சாப்பிட மீன்களை வேறு எப்படிச் சமைக்கலாம்?

- சுசீலா ராஜேந்திரன், காரைக்கால்

அவித்த மீன் முயற்சி செய்து பாருங்கள்.

தேவையானவை: மீன் -2, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைப்பழம் - ஒன்று, மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு கப் உப்பு - தேவையான அளவு, வாழையிலை - ஒன்று.

செய்முறை: முதலில் மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, எலுமிச்சைப்பழச் சாறு, மிளகுத்தூள் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும். சுத்தம் செய்த மீன்களை, இந்தக் கலவையில் 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். ஊறிய பிறகு, அந்த மீனை எடுத்து வாழையிலை யில் வைத்து மடித்து, இட்லிப் பாத்திரத்தில் வைத்து மூடி அடுப்பை 25 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும். அவித்த மீன் ரெடி. கொழுப்புச்சத்து குறைவாகவும் புரதம் மிகுதியாகவும் உள்ள நல்ல உணவு இது.