Published:Updated:

விண்ணை முட்டிய கறிவேப்பிலை விலை... பின்னணி என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோயம்பேடு காய்கறிச் சந்தை | Koyambedu market
கோயம்பேடு காய்கறிச் சந்தை | Koyambedu market

மார்க்கெட்டில் காய்கறி வாங்கினால் பிஸ்க்கா கொடுக்கும் கறிவேப்பிலை தற்போது பிஸ்தா ரேஞ்சுக்கு விலையேறியுள்ளது. கறிவேப்பிலையின் விலை இந்தப் புதிய உச்சத்தைத் தொட்டிருப்பது ஏன் என்று அறிய கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு ஒரு விசிட் அடித்தோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி முன்னெப்போதும் இல்லாத வகையில் தினந்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. அந்தப் பட்டியலில் கறிவேப்பிலையும் சமீபத்தில் இணைந்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு கிலோ கறிவேப்பிலையின் விலை 150 ரூபாய்வரை சென்னையில் விற்பனை செய்யப்பட்டது (இது நான்கு நாள்களுக்கு முந்தைய நிலவரம். தற்போது 140 ரூபாயாம்!)

பெட்ரோல், டீசல் அன்றாடம் விலை உயர்வது அத்தியாவசியப் பொருட்களின் விலையைப் பாதிக்கிறது என்றாலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் கறிவேப்பிலையின் விலை இந்தப் புதிய உச்சத்தைத் தொட்டிருப்பது ஏன் என்று அறிய கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு ஒரு விசிட் அடித்தோம்.

`கிருமிநாசினி; தெர்மல் ஸ்கேனர்' - ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை!

கொரோனா ஊரடங்குத் தளர்வுக்குப் பிறகு மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பிக் கொண்டிருந்த கோயம்பேடு காய்கறிச் சந்தை வழக்கமான பரபரப்புடன் காலையில் இயங்கத் தொடங்கியிருந்தது. கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை விற்பனை செய்துகொண்டிருந்த நடைபாதை வியாபாரி ஒருவரிடம், “கறிவேப்பிலையைக் காணோமே?” என்றோம். கோயம்பேடு சந்தையில் கறிவேப்பிலை மொத்தமாக விற்பனை செய்யும் இடத்தைச் சொல்லி, “அங்குப் போய்க் கேளுங்கள்” என்று சற்றே கடுகடுத்த முகத்துடன் பதிலளித்தார்.

கறிவேப்பிலை மொத்த விற்பனை இடத்தை அடைந்தபோது, வாங்குவதற்காக வந்திருக்கிறோம் என்று வியாபாரிகள் போட்டிப் போட்டுக் கொண்டு அழைத்தனர். விஷயத்தைச் சொல்ல, அண்ணாமலை (வயது 40) என்ற வியாபாரி விவரத்தைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

அண்ணாமலை | Annamalai
அண்ணாமலை | Annamalai

“சென்னைக்குக் கறிவேப்பிலை சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்தும், ஆந்திர மாநிலத்திலிருந்தும் வருகிறது. தொடர் இப்போது பனிப்பொழிவின் காரணமாக ஆத்தூரிலிருந்து வரத்து குறைந்துவிட்டது; பனிப்பொழிவின் காரணமாக பொதுவாகவே வரத்து குறைந்திருக்கிறது. என்றாலும் கோயம்பேடு சந்தையில் கிலோ 50, 60 ரூபாய்களுக்குத் தான் விற்கப்படுகிறது. இங்கிருந்து வாங்கிச் செல்லும் கடைக்காரர்கள் மேலும் அதிக விலை வைத்து விற்பனை செய்வதால் வெளியில் விலை 120 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது” என்றார்.

ஆத்தூரில் என்ன நிலவரம்?

மார்க்கெட்டில் காய்கறி வாங்கினால் பிஸ்க்கா கொடுக்கும் கறிவேப்பிலை தற்போது பிஸ்தா ரேஞ்சுக்கு விலையேறியுள்ளது. தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சுற்றியுள்ள சித்தேறி, மஞ்சினி, பைத்தூர், சிறுவாச்சியூர், ஆறகழூர், கோவிந்தம்பாளையம் பகுதிகளில் கறிவேப்பிலை விவசாயம் செய்யப்படுகிறது. தலைவாசல் மார்க்கெட்டிலிருந்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற தமிழகத்தில் உள்ள பெரு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலத்திற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கறிவேப்பிலை மொத்த வியாபாரியும், விவசாயுமான சுப்பிரமணி, ''நான் 30 வருஷமா கறிவேப்பிலை விவசாயம் செய்யறேன். நர்மலா கறிவேப்பிலை ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாயிக்க்கு விற்கப்படும். விலை இறங்கும் போது ஒரு கிலோ 2 ரூபாயிக்கு வாங்க ஆள் இருக்காது. இப்ப தட்ப வெப்ப நிலை மாறியதாலும், தொடர்ந்து மழையும், பனியும் அதிகமாக இருப்பதாலும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கறிவேப்பிலை தோட்டத்திலேயே ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாயிக்கு விற்கிறோம். இது வரலாறு காணாத விலையேற்றம். இன்னும் ஒரு மாதத்தில் நார்மல் விலைக்கு வந்துவிடும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

15 ஆண்டுகளாக கோயம்பேடு சந்தையில் கறிவேப்பிலை வியாபாரம் செய்துவரும் விஜயா (வயது 55), “இங்கு கோயம்பேடு சந்தையில் கறிவேப்பிலை கிலோ 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் விலை வைத்து விற்க, ஊடகங்களில் செய்தி வெளியாக அப்படியே பரவிவிட்டது. எங்களுக்கு இதனால் ஒரு பலனும் இல்லை. இதற்கு முன் இப்படியெல்லாம் நடந்ததே இல்லை!” என்று இந்தத் திடீர் விலையேற்றம் பற்றிக் கவலை தெரிவித்தார்.

விஜயா | Vijaya
விஜயா | Vijaya

இவரைப் போலவே பல ஆண்டுகளால் கறிவேப்பிலை வியாபாரம் செய்துவரும் அன்னபூரணி (வயது 46) என்பவர், “ஆத்தூர், பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களிலும் வரத்து குறைந்துவிட்டதால், அவர்கள் மொத்தமாக ஆந்திராவுக்குச் சென்று வாங்கத் தொடங்கிவிட்டனர். அதனால் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. கொரோனாவுக்கு முன்பு 12 வண்டிகளில் வந்துகொண்டிருந்த கறிவேப்பிலை, 6 வண்டிகளில் மட்டுமே இப்போது வருகிறது” என்றார்.

`காய்கறி விற்கும் வாகன ஓட்டிகளிடம் கட்டாய வசூல்?’ - சர்ச்சையில் சிக்கிய புதுக்கோட்டை போலீஸார்

அப்படியே சந்தையை வலம்வந்துகொண்டிருந்தபோது, மொத்த விலைக்காரரும் சில்லறை வியாபாரி ஒருவரும் பேரத்தில் ஈடுபட்டிருந்தனர். கிலோ 70 ரூபாய் என்றவரிடம் 60 ரூபாய்க்கு 12 கட்டுக்களைச் சில்லறை வியாபாரி பெற்றுச் சென்றார். வர்ணப் பிள்ளை (வயது 38) என்ற கறிவேப்பிலை மொத்த விலைக்காரர், இந்த விலை உயர்வுக்குக் கடைக்காரர்களையே காரணம் சொல்கிறார். “எங்களிடம் கிலோ 60 ரூபாய்க்கு வாங்கிச் செல்லும் கடைக்காரர்கள், இங்கு வந்துசெல்வதற்காக வாகனச் செலவு இதரச் செலவுகளைக் கணக்கிட்டு அப்படியே இரண்டு மடங்கு வரை விலை வைத்து விற்கின்றனர். பனிப்பொழிவினால் வரத்து வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையில், கடைக்காரர்களின் இந்தப் போக்கு வேகமாகப் பரவி, விலை உயர்வுக்கு வழிவகுத்திருக்கிறது”, என்று பின்னணியை விளக்கினார்.

கறிவேப்பிலை | curry leaves
கறிவேப்பிலை | curry leaves

உணவகத்துக்காகக் காய்கறிகள் வாங்க வந்திருந்த ஒருவர், “முன்பெல்லாம் ஒருநாளைக்குத் தேவையான கறிவேப்பிலை 20 ரூபாயோடு முடிந்துவிடும், இன்று 120 ரூபாய்க்கு வாங்கிச் செல்கிறேன். எல்லாமே விலையேறிக் கொண்டிருக்கிறது... சமாளிக்க முடியவில்லை... என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை...” என்று அந்தக் காலையிலேயே கவலை மேலிட வண்டியைக் கிளப்பிச் சென்றார்.

மொத்த விற்பனையகத்தில் இருந்து அப்படியே சந்தைக்குள் சென்றோம். உள்ளே கறிவேப்பிலையின் விலை கிலோ 80, 90 ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது. கடைகளில் கறிவேப்பிலை போன்றே இலவசமாக, கொசுறாக வழங்கப்படும் புதினா, மல்லியின் வரத்து தற்போது நிலையாக இருப்பதால் விலையும் சராசரியாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்கள் | essential commodities
அத்தியாவசியப் பொருட்கள் | essential commodities

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே செல்வது, சற்றும் எதிர்பாரா வகையில் கறிவேப்பிலையைக் கூட விலை உயர்வுக்கு இட்டுச் செல்கிறது. இந்த நெருக்கடிகளுக்கு இயற்கை நிகழ்வுகள் ஓரளவு காரணம் என்றாலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற நடைமுறைப் பிரச்னைகளே இவற்றுக்கு அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன.

மக்களின் வாழ்க்கை கறிவேப்பிலை போல் உதிர்ந்துகொண்டிருக்கிறது. அரசு அக்கறை கொள்ளுமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு