Published:Updated:

டல்கோனா காபி முதல் பனானா கேக் வரை... லாக்டௌனில் டிரெண்டான உணவுகள்!

Representational Image
Representational Image

சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பல வெரைட்டியான உணவு வகைகளை வீட்டிலிருந்தபடி செய்து, அவற்றைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி இந்த க்வாரன்டீன் நாள்களில் டிரெண்டான சில உணவுகள் பற்றிப் பார்க்கலாம்.

`கடைசில என்னையும் கரண்டி தூக்க வெச்சுட்டீங்களேடா' என அடுப்பைப் பற்ற வைக்கக்கூடத் தெரியாதவர்களையும் `டல்கோனா காபி' போட வைத்திருக்கிறது இந்த லாக்டௌன். பொதுவாகவே, பிசியாக இருக்கும் சமூக வலைதளங்கள் இப்போது படுபிசியாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதிலும் டிக்டாக், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட செயலிகளில் கேட்கவே வேண்டாம். வீட்டில் அடங்கியிருக்கும் மக்கள், பொழுது விடிந்ததிலிருந்து இரவு உறங்கப்போகும்வரை என்னென்ன அட்ராசிட்டிகள் பண்ணுகிறார்களோ, அனைத்தையும் ஒளிப்பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் டாப் டிரெண்டில் இருப்பது என்னவோ கிச்சன் பதிவுகள்தான். சிறியவர்கள் முதல் முதியவர்கள்வரை பல வெரைட்டியான உணவு வகைகளை வீட்டிலிருந்தபடி செய்து, அவற்றைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி இந்த க்வாரன்டீன் நாள்களில் டிரெண்டான சில உணவுகள் பற்றிப் பார்க்கலாம்.

டல்கோனா காபி:

Dalgona Coffee
Dalgona Coffee

க்வாரன்டீன் டிரெண்டிங், அசத்தலான காபியுடன்தான் தொடங்கியது. சேலஞ்ச் என்ற பெயரில் டிக்டாக் பக்கங்களை நிரப்பியது இந்த டல்கோனா. இந்தியாவின் பீட்டன் காபிதான் டல்கோனா உருவில் உலகமெங்கும் தற்போது ஃபேமஸாகியுள்ளது என இதற்காகப் போர்க்கொடி தூக்கியவர்களும் உண்டு. இன்ஸ்டன்ட் காபி தூள், சர்க்கரை, வெந்நீர் மற்றும் பால் என வீட்டிலிருக்கும் பொருள்களை வைத்து எளிதாகச் செய்யக்கூடிய இந்த காபி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்தது. அவ்வளவு ஏன் நிச்சயம் படிக்கிற நீங்களும் ட்ரை பண்ணிப்பார்த்திருப்பீர்கள். இந்த லாக்டௌன் காலகட்டத்தில் இதுவரை இந்தியா மற்றும் உலகளவில் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளில் தற்போது முதலிடம் இந்த டல்கோனாவுக்குதான்.

சிக்கன் மோமோஸ்:

Momos
Momos

டல்கோனா காபியைத் தொடர்ந்து, இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட உணவு வகை சிக்கன் மோமோஸ் என கூகுள் டிரெண்டிங் லிஸ்ட் குறிப்பிடுகிறது. சாதாரண நாள்களிலேயே மாலை வேளையில் பஜ்ஜி, சமோசா, போண்டா போன்ற பதார்த்தங்களை அலேக்காக அள்ளிச் சாப்பிட்டுப் பழகிய நம் மக்களுக்கு, நிச்சயம் இந்த மோமோஸ் வித்தியாசமான உணர்வைக் கொடுத்திருக்கும். கொழுக்கட்டையின் மாடர்ன் வெர்ஷன்தான் இந்த மோமோஸ். நம் வீடுகளில் எப்போதும் இருக்கும் சமையல் பொருள்களை வைத்து, குறைந்த நேரத்தில் எளிதில் செய்து சாப்பிடும்படியான இந்த மோமோஸ் தற்போது பெரும்பாலான மக்களின் ஃபேவரைட் லிஸ்டில் இணைந்திருக்கிறது. `அதுசரி, நாங்களெல்லாம் சுத்த சைவம்' என்று குமுறுபவர்களின் கவனத்திற்கு... மாவு ஒன்றுதான், அதனுள் உங்கள் விருப்பத்திற்கேற்றபடி ஸ்டஃபிங் வைத்துச் சமைத்து அசத்தலாம்.

ஜிலேபி:

Jalebi
Jalebi

`லாக் டௌன் ஸ்பெஷல் ஜிலேபி' என அதிகாரபூர்வமாகப் பெயர் மட்டும்தான் மாற்றப்படவில்லை. அந்த அளவுக்கு மக்கள் ஜிலேபியைப் பிழிந்து தள்ளியிருக்கிறார்கள். மைதா மாவு இல்லையா கவலையே வேண்டாம் ஆரோக்கியமான கோதுமை மாவிலும் சுவையான ஜிலேபி செய்யலாம் எனச் சின்னச் சின்ன டிப்ஸையும் சேர்த்து வளரும் குக்கிங் நிபுணர்கள் பலரும் பாடம் எடுக்கின்றனர். சமைத்து வீடியோ போடுபவர்கள் அதோடு சும்மா விடுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. காணொளியோடு #Challenge என ஹேஷ்டாகையும் இணைத்து வெளியிடுவதுதான் அனைவரையும் தூண்டுகிறது. சவாலுக்கு நீங்களும் தயாராகிவிட்டீர்கள்போல் தெரிகிறதே.

பானி பூரி:

Pani Poori
Pani Poori

வடஇந்தியர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மிஸ் செய்யும் ஸ்நாக் வகை பானி பூரி. முழுதாக உப்பிய குட்டிக்குட்டி பூரியை, பட்டென மேலே குட்டு வைத்து விட்டு, தயாராக இருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை அதனுள் அடைத்து, அதன்மேல் பச்சை மற்றும் சிவப்பு தண்ணீர்... அதான் அந்தப் பானியை ஊற்றி, சாப்பிட வாயைத் திறப்பதற்கு முன் யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டமிட்டபடி `டபக்' என விழுங்கும் வித்தையெல்லாம் ஒரு கலை என ஃபீல் பண்ணுபவர்கள் இங்கு ஏராளம். `லாக் டௌன் முடிந்ததும் முதல் வேலையாக பானி பூரி சாப்பிடணும்' என எத்தனை பேருக்குக் கனவு வந்ததோ. பொறுத்தது போதும் பொங்கி எழு பாணியில் பானி பூரியை வீட்டிலிருந்தபடியே ஏராளமானவர்கள் செய்து பார்த்திருக்கின்றனர். இதற்கு குறைவான பொருள்களே தேவை என்பதால் வாரம் ஒருமுறை வீட்டிலேயே கடையைத் திறந்துவிடுகின்றனர் பலர்.

பிறந்தநாள் கேக்:

Pastery
Pastery

இப்போதெல்லாம் கேக் செய்வதற்கு, அதற்கேற்ற மாவு, வித்தியாச எசென்ஸ், முட்டை, மைக்ரோவேவ் ஓவன் வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. ஒரு பாக்கெட் பிஸ்கட் போதும். ஆம், `மூன்றே பொருள்களில் கேக்' என்ற ரெசிபி சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பகிரப்பட்டு வந்தது. சாமானிய மக்கள் பலரும் தங்களின் பிறந்தநாள் கேக்குகளை தாங்களே தயார் செய்து கொண்டாடியுள்ளனர். பிடித்தமான பிஸ்கட், சிறிதளவு பேக்கிங் பவுடர் மற்றும் பால் போதும், அரைமணிநேரத்தில் சூப்பரான கேக் ரெடி. இனி யாரும் பேக்கரி பக்கம் போகமாட்டார்களோ!

மாம்பழ ஐஸ்கிரீம்:

Ice cream
Ice cream

கோடைக்காலம் என்றாலே குளிர் பானங்கள் நம் கண்முன் தோன்றும். பலருக்கு இதைப் படிக்கும்போதே தாகம் எடுத்திருக்கும். அந்த அளவுக்கு தற்போது வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அலுவலகம் சென்றிருந்தால் ஏசியாவது இருந்திருக்கும் எனக் குமுறுபவர்கள் பலர் உண்டு. இந்த வேளையில் ஐஸ்கிரீம், அதிலும் தற்போது சீஸனில் கிடைக்கும் மாம்பழ ஐஸ்கிரீம் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் எனப் பலருக்கும் சிந்தனையில் தோன்றியிருக்கும்போல... கூகுள் டிரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது மேங்கோ ஐஸ்கிரீம். ஃப்ரெஷ் மாம்பழம், பால் மற்றும் சர்க்கரை போதும். சரியான பதத்தில் கலந்து, ஃபிரிட்ஜில் வைத்து எடுத்தால், சுவையான மாம்பழ ஐஸ்கிரீம் தயார். எல்லோரும் மாம்பழம் வாங்கக் கிளம்பிட்டீங்கபோல!

பனானா கேக்:

Banana Cake
Banana Cake

நிச்சயம் இதற்குத் தனி இன்ட்ரோ தேவைப்படாது. சமூக வலைதளங்களுக்குள் நுழைந்தாலே பனானா கேக் மற்றும் அதன் ரெசிபிக்கள்தான் தற்போது கொட்டிக்கிடக்கின்றன. சாமானிய மக்கள் முதல் செலிப்ரிட்டிகள்வரை அனைவரும் இந்த ரெசிபியை முயற்சி செய்திருக்கிறார்கள். கேக் என்றாலும் நாங்கள் ஆரோக்கியமான கேக்தான் சாப்பிடுவோம் என்ற பாணியில் பலரும் வாழைப்பழத்தின் நன்மைகளையும் பகிர்ந்து வருகின்றனர். உலகளவில் இந்த பனானா கேக் ரெசிபியைத் தேடியுள்ளனர். போகிற போக்கைப் பார்த்தல் நாளடைவில் வீட்டிற்கொரு செஃப் உருவாகிவிடுவார்கள் போல.

ரம்ஜான் மாதத்தில் மட்டுமல்ல, வருடம் முழுக்க சென்னையில் ஹலீம் கிடைக்கும் இடம் தெரியுமா?

மொஜிட்டோ:

Mojito
Mojito

துண்டாக நறுக்கிய எலுமிச்சைப்பழம், சர்க்கரை, புதினா, க்ரஷ்டு ஐஸ், சோடா உள்ளிட்ட பொருள்கள் இருந்தால்போதும், சில்லென மொஜிட்டோ ரெடி. கொரோனா பரவுதல் அதிகமாக இருப்பதனால், முடிந்தளவு வைட்டமின் சி அதிகம் இருக்கும் உணவு வகைகளைச் சாப்பிடுங்கள் என்ற தகவல் வந்ததும் போதும், எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றை வாங்கிக் குவிக்கத் தொடங்கிவிட்டனர் மக்கள். அதிலும், இந்த அதீத வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இந்த மொஜிட்டோ குடிப்பது... ஆஹா ஆனந்தம்!

அடுத்த கட்டுரைக்கு