Published:Updated:

`மேங்கோ குல்ஃபி' சச்சின்,`கீற்று மாங்காய்' தீபிகா... பிரபலங்களின் மாம்பழ லவ்!

Mango
Mango ( Pixabay )

செலிபிரிட்டிகளின் சமூக வலைதளங்களில் வலம் வந்தால், `யம்மி', `டேஸ்ட்டி' என்று ஒரே மாங்காய் மற்றும் மாம்பழங்களின் புகழாரமாகத்தான் இருக்கிறது.

பச்சை மாங்காய் கீற்றுகளின் மேல் மிளகாய்ப்பொடியும் உப்பும் தூவி, அதைப் புகைப்படம் எடுத்துப்போட்டு, `நான் சந்தித்தவற்றில் நீயே பெஸ்ட். உன்னைவிட பெஸ்ட்டாக நான் யாரையும் இதுவரை சந்திக்கவில்லை' என்று மவுத் வாட்டரிங் போஸ்ட் போட்டிருக்கிறார் பாலிவுட் பேரழகி தீபிகா படுகோன். சச்சின் டெண்டுல்கரோ, `எங்களுடைய 25-வது திருமண நாளுக்காக மொத்தக் குடும்பத்துக்கும் சர்ப்ரைஸ் மேங்கோ குல்ஃபி செய்துகொண்டிருக்கிறேன் என்று வீடியோ போடுகிறார்.

ஆல்ரவுண்டர் ஸ்ருதிஹாசனோ `மாங்காய் பப்பு' ரெசிபியை செய்தே காட்டியிருக்கிறார் தன்னுடைய இன்ஸ்டாவில். ஓர் அடுப்பில் பருப்பு வேக வைக்கிறார். இன்னோர் அடுப்பில் கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தோல் சீவி நறுக்கிய மாங்காய்த்துண்டுகளை வதக்கி, வேக வைக்கிறார். வெந்த பருப்பை மாங்காயில் போட்டு ரெசிபியை முடிக்கிறார். 'இந்த மாங்காய் பப்பு ரெசிப்பியை நான் முதன் முதலில் ஹைதராபாத்தில் தான் சாப்பிட்டேன். அப்போது நான் சிறு குழந்தை. முதல் முறை சாப்பிடும்போதே இந்த ரெசிபி எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. உங்கள் ருசிக்கு ஏற்றபடி நீங்கள் மசாலா சேர்த்துக்கொள்ளலாம். நான் மாங்காவின் ருசி குறைந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு சில மசாலாக்களை மட்டும் சேர்த்திருக்கிறேன்' என்றிருக்கிறார். இங்கே மாவிலை, பூ, மாம்பிஞ்சு, மாங்காய், மாம்பழம் ஆகியவற்றின் மருத்துவப் பலன்கள் பற்றி சித்த மருத்துவர் வரலட்சுமி சொல்கிறார். யம்மி மாங்காய், மாம்பழ ரெசிப்பிகள் தருகிறார் விகடன் வாசகி மீனலதா.

மாவிலையின் பலன்கள்...

மாவிலை ஊறிய தண்ணீர் நல்ல கிருமிநாசினி. அதனால்தான் அதை வீட்டில் தெளிக்கிறோம். கூட்டம் கூடுகிற பண்டிகை நேரங்களில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம். மாவிலையின் துவர்ப்பு குணம் வயிற்றுக்கடுப்பை, வெள்ளைப்படுதலை சரி செய்யும். நீரிழிவுப் பிரச்னை இருப்பவர்கள் மூன்று மாவிலைகளை நறுக்கி, நீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். இதே தண்ணீரில் தேன் கலந்து தொண்டைக்கட்டு பிரச்னைக்குக் கொடுக்கலாம். மாவிலை எரித்த புகையை விக்கல் அடங்காதவர்கள் முகரலாம். ஆனால், மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் இதைச் செய்யக் கூடாது. கிரேடு ஒன் எனப்படும் லேசான தீப்புண்ணுக்கு மாவிலையைச் சுட்டு அதனுடன் தேன் அல்லது விளக்கெண்ணெய் கலந்து தடவலாம்.

மாம்பூவின் பலன்கள்...

வயிற்றுப்போக்கு இருப்பவர்கள் மாம்பூவை நீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

மாம்பூ வெந்த தண்ணீரில் ரசம் வைத்துச் சாப்பிடலாம்.

மாங்காயின் பலன்கள்...

வைட்டமின் `சி' அதிகம் என்பதால் மாங்காய் நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். அதே நேரம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். சருமப் பிரச்னை இருப்பவர்களும் வெள்ளைப்படுதல் பிரச்னை இருப்பவர்களும் ஒன்றிரண்டு துண்டுகளுடன் நிறுத்திக்கொள்வதே நல்லது.

பசியுணர்வு குறைவாக இருப்பவர்கள் மாங்காய் சாப்பிட்டால் நன்கு பசியெடுக்கும்.

www.instagram.com/deepikapadukone/
www.instagram.com/deepikapadukone/

மாவடு பலன்கள்...

காய்ச்சலின்போது ஏற்படுகிற ருசியின்மை, குமட்டுதல், வாந்தி போன்ற பிரச்னைகளுக்கு மாவடு ஊறுகாய் சாப்பிடலாம்.

மாம்பழத்தின் பலன்கள்...

வைட்டமின் `ஏ' அதிகம் என்பதால், கண்களுக்கும் சருமத்துக்கும் நல்லது.

நார்ச்சத்து அதிகம் என்பதால், குடல் பகுதி சுத்தமாகும்.

தினமொரு மாம்பழம் சாப்பிட்டால் சத்து டானிக் குடித்த பலம் உடலுக்குக் கிடைக்கும்.

பெரியவர்கள் ஒரு நாளைக்கு நடுத்தர அளவில் இரண்டு மாம்பழங்கள் சாப்பிடலாம். குழந்தைகள் ஒன்று சாப்பிடலாம். ஆனால், வயிற்றுப்போக்கு இருக்கிற நேரத்திலும், ஃபுட் பாய்சன் ஆகியிருக்கிற நேரத்திலும் மாம்பழம் சாப்பிட்டால் பிரச்னையை அதிகப்படுத்திவிடும்.

சித்த மருத்துவர் வரலட்சுமி
சித்த மருத்துவர் வரலட்சுமி

மாம்பருப்பின் பலன்கள்...

மாம்பழம் சாப்பிட்டு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், கால் மாங்கொட்டையைச் சுட்டு சாப்பிட்டால், உடனே சரியாகி விடும்.

ரத்தபேதியைக்கூட மாம்பருப்பு கட்டுப்படுத்தும். இதில் குழம்பு வைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலுள்ள பூச்சிகள் மடியும்.

மிளகாய் மாங்காய்

ஒரு மாங்காயை கழுவி, துடைத்து, பொடியாக நறுக்கவும். கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பிசறி வைக்கவும். நல்லெண்ணெயில் தலா கால் டீஸ்பூன் கடுகு, பெருங்காயம், வெந்தயம் தாளித்து மாங்காய் கலவையைக் கொட்டி கலந்து வைத்தால் இரண்டு நாள் தாங்கும். இந்த `உடனடி மாங்காய் ஊறுகாய்’ என் பாட்டியின் ரெசிபி.

ரெசிபிக்கள் வழங்கிய மீனலதா
ரெசிபிக்கள் வழங்கிய மீனலதா

மாங்காய் தொக்கு

ஒரு மாங்காயைத் துருவி, உப்பு போட்டு கலந்து வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து பிழிந்துவிட்டு, ஒரு கப் வெல்லம் சேர்த்துப் பிசறி வைக்கவும். பிறகு அடிகனமான பாத்திரத்தில் போட்டுக் கிளறினால் பாகு மாதிரி ஆகி சுருண்டு வரும். இதனுடன் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் சீரகப்பொடி போட்டு மிளகாய் வாசனை போகும் வரை கிளறவும். இது தோசை, சப்பாத்தி, அடை என எல்லாவற்றுக்கும் பொருந்தும். ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரத்துக்கு கெடாது.

மசாலா மாங்காய்

5 மாங்காய்களைக் கழுவி, துடைத்து, நறுக்கி உப்பு போட்டு ஊற வைக்கவும்.

வறுத்துப்பொடித்த வெந்தயப்பொடி அரை டேபிள் ஸ்பூன், கிராம்பு 6, லவங்கப்பட்டை 3 (வறுத்துப் பொடிக்கவும்), கடுகுப்பொடி ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்ப்பொடி அரை டேபிள் ஸ்பூன் ரெடி செய்து வைக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயில் கால் டீஸ்பூன் மஞ்சள்பொடியைக் கலந்து, நன்கு குழைத்து வைக்கவும். இதில் மாங்காய்த் துண்டுகளைப் பிசறி வைக்கவும். எண்ணெயை சூடு செய்து பெருங்காயப்பொடி, வெந்தயப்பொடி, கடுகுப்பொடி, மிளகாய்ப்பொடி, கிராம்பு, பட்டை பொடி போட்டுக் கலக்கவும். இதனுடன் பிசறி வைத்த மாங்காயைப்போட்டு கலக்கி, அடுப்பை அணைத்து விடவும். கலவை ஆறியதும் ஒரு ஜாடியில் போட்டு மூடி வைக்கவும். மூன்று நாள்கள் கழித்துக் கிளறி. வெயிலில் வைத்து எடுத்தால் மசாலா மாங்காய் 6 மாதம் வரைக்கும் கெடாது. இதை ஊறுகாய் போலப் பயன்படுத்தலாம்.

ஒரு கப் தேங்காய், தோல் சீவிய ஒரு மாங்காய், 2 பச்சை மிளகாய், இஞ்சி சிறிய துண்டு, 10 கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கியோ அல்லது பச்சையாகவோ உப்பு சேர்த்து அரைத்தால் மாங்காய் சட்னி ரெடி.

மாம்பழ மோர்க்குழம்பு

கெட்டியான, புளிக்காத மோர் 2 கப், 2 பச்சை மிளகாய், சீரகம் ஒரு டீஸ்பூன், சின்ன துண்டு இஞ்சி, ஒரு கப் தேங்காய்த்துருவல், அரை டீஸ்பூன் அரிசி ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து, மோருடன் கலக்கவும். கூடவே தேவையான அளவு உப்பும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூளும் சேர்க்கவும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு கால் டீஸ்பூன் கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து, கலந்து வைத்துள்ள மோரை ஊற்றவும். மோர் ஒரு பொங்கு பொங்கியவுடன் தோல் சீவிய மாம்பழத்துண்டுகளைப் போட்டு அடுப்பை அணைத்துவிடவும். கறிவேப்பிலை, கொத்துமல்லி தூவிக்கொள்ளலாம். மோர்க்குழம்பைக் கொதிக்கவிட்டால் நீர்த்துவிடும்.

Vikatan

மாம்பழ சர்பத்

பழுத்த மாம்பழம் ஒன்றை தோல் சீவித் துண்டுகளாக நறுக்கவும். அரை லிட்டர் பாலைக் காய்ச்சி, அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் ஏலப்பொடி சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் மாம்பழத் துண்டுகளைப் போட்டுப் பரிமாறவும்.

mango
mango
ஜல்ஜீரா முதல் பஜ்ஜிவரை... கொளுத்தும் வெயிலுக்கு கூலான நுங்கு ரெசிப்பீஸ்!

மாங்கொட்டை முக்வாஸ்

மாங்கொட்டையை உலர்த்தி, உடைத்து, பிரஷர் குக்கரில் 2 விசில் வேக விடவும். இதைக் காய வைத்து, துருவி, துணியில் போட்டு உலர விடவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் மாம்பொடி, பொடித்த கல் உப்பு இரண்டையும் கலந்தால், மாங்கொட்டை முக்வாஸ் ரெடி. மும்பையில் சாப்பிட்ட பிறகு பாக்குக்குப் பதில் இந்த முக்வாஸை சாப்பிடுகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு