Published:Updated:

வண்ணம்... மூவண்ணம்

வண்ணம்... மூவண்ணம்
பிரீமியம் ஸ்டோரி
வண்ணம்... மூவண்ணம்

700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்ட ஒரு முக்கிய உணவு இட்லி

வண்ணம்... மூவண்ணம்

700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்ட ஒரு முக்கிய உணவு இட்லி

Published:Updated:
வண்ணம்... மூவண்ணம்
பிரீமியம் ஸ்டோரி
வண்ணம்... மூவண்ணம்

சுதா செல்வகுமார்

ண்ணங்கள்தாமே வாழ்வின் வசீகரம்! காலை எழுந்தது முதல், இரவு துயில் கொள்வது வரை எவ்வளவு வண்ணங்களை எதிர்கொள்கிறோம்? மொபைல்போனின் ஸ்க்ரீன் ஷேவரில்கூட அடிக்கடி மாறிக்கொண்டிருப்பவை வர்ணஜாலப் படங்கள்தானே? இப்படி வண்ணமயமான உலகில் வாழும் நமக்கு உணவிலும் வண்ணம் சேர்க்கும் ஆசை உண்டுதானே?

‘`ஆமாம்... இயற்கையான பழங்கள், காய்கறிகள், கீரைகளில்தான் எத்தனை எத்தனை வண்ணங்கள் ஒளிந்திருக்கின்றன! அவற்றைப் பயன்படுத்தியே கலர்ஃபுல் சமையல் செய்யலாம். அவசியத் தேவைக்கேற்ப அங்கீகரிக்கப்பட்ட ஃபுட் கலர்களைப் பயன்படுத்தி அழகூட்டலாம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் சுதா செல்வகுமார்.

வண்ணம்... மூவண்ணம்

ஆகஸ்ட் 15 அன்று நாம் கொண்டாடவிருக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இவர் அளிப்பது மூவண்ண ரெசிப்பிகள். வண்ணமயமான வாழ்த்துகள் உரித்தாகட்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூவண்ண க்ரீமி

தேவையானவை

பச்சை வண்ண க்ரீமி செய்ய:

 • ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி (உரித்தது) – ஒரு கப்

 • சர்க்கரை – கால் கப்

 • பிஸ்தா துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

 • ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

 • பால் – 50 மில்லி

 • விப்பிங் க்ரீம் – அரை கப்

 • வெள்ளை வண்ண க்ரீமி செய்ய:

 • விப்பிங் கிரீம் – அரை கப்

 • ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

 • பால்கோவா – 50 கிராம்

 • சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்

 • வெனிலா எசென்ஸ் – 2 துளிகள்

 • முந்திரித் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

 • ஆரஞ்சு வண்ண க்ரீமி செய்ய:

 • மாம்பழக்கூழ் – அரை கப்

 • விப்பிங் க்ரீம் – அரை கப்

 • மாம்பழ ஃப்ளேவர் எசென்ஸ் – ஒரு துளி

 • சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்

வண்ணம்... மூவண்ணம்

பச்சை வண்ண க்ரீமி செய்முறை: பட்டாணியை நீரில் வேகவைத்து மிக்ஸியில் மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் அடிகனமான பான் (pan) வைத்து சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்து, கரைந்ததும் அடுப்பைக் குறைந்த தீயில்வைத்து பட்டாணி விழுதைப் போட்டு ஏலக்காய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கிளறி இறக்கி ஆறவிடவும். வாய் அகன்ற பவுலில் விப்பிங் க்ரீம் சேர்த்து எலெக்ட்ரிக் பீட்டரால் (Electric Beater) அடிக்கவும் (விப் செய்யவும்). க்ரீம் அளவு இருமடங்காகும் வரை அடிக்கவும். பிறகு ஆறிய பட்டாணி விழுது, பால், பிஸ்தா துருவல் சேர்த்து விப் செய்து அனைத்தும் கலந்து பச்சை வண்ண க்ரீமாக ஆனவுடன் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி ஃப்ரீசரில் 8 மணி நேரம் வைக்கவும்.

வெள்ளை வண்ண க்ரீமி செய்முறை: பவுலில் விப்பிங் க்ரீம் சேர்த்து அதன் அளவு இருமடங்காகும் வரை எலெக்ட்ரிக் பீட்டரால் அடிக்கவும். அதனுடன் உதிர்த்துவிட்ட பால்கோவா, ஏலக்காய்த்தூள், முந்திரித் துருவல், சர்க்கரை சேர்த்து மீண்டும் நுரைக்க அடிக்கவும் வெனிலா எசென்ஸ் சேர்த்து அடித்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.

ஆரஞ்சு வண்ண க்ரீமி செய்முறை: விப்பிங் கிரீமை வாய் அகன்ற பவுலில் போட்டு அதன் அளவு 2 மடங்காகும் வரை எலெக்ட்ரிக் பீட்டரால் அடிக்கவும். அதனுடன் மாம்பழக்கூழ், சர்க்கரை, மாம்பழ ஃப்ளேவர் எசென்ஸ் சேர்த்து அடித்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பெரிய கண்ணாடி டம்ளரில் முதலில் (அடியில்) பச்சை வண்ண பட்டாணி க்ரீமி, அடுத்து வெள்ளை வண்ண கோவா க்ரீமி, அதன் மேல் ஆரஞ்சு வண்ண மாம்பழ க்ரீமி போட்டு 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: மம்பழ சீஸன் முடிந்துவிட்டு, மாம்பழக் கூழ் (ஆரஞ்சு வண்ணத்துக்கு) கிடைக்காதவர்கள், அதற்குப் பதில் கேரட்டைத் தோல் சீவி வேகவிட்டு மசித்து கூழாக்கி சேர்க்கலாம். மாம்பழ எசென்ஸுக்குப் பதில் வெனிலா எசென்ஸ் சேர்த்துக்கொள்ளலாம்.

பட்டாணியானது தாவரவியலில் பழமாகவும், சமையற்கலையில் காயாகவும் கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூவண்ண சாண்ட்விச்

தேவையானவை:

 • பிரெட் ஸ்லைஸ் – 6

 • சீஸ் ஸ்லைஸ் (துண்டுகள்) – 4

 • மயோனைஸ் – 4 டேபிள்ஸ்பூன்

 • மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

 • கேரட் துருவல் – கால் கப்

 • லெட்யூஸ் கீரை இலை – 2

 • வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

 • கிரீன் சட்னி – 4 டேபிள்ஸ்பூன்

 • உப்பு – சிறிதளவு

 • கிரீன் சட்னி செய்ய:

 • புதினா – கால் கப்

 • கறிவேப்பிலை – 2 டேபிள்ஸ்பூன்

 • உப்பு – சிறிதளவு

 • கொத்தமல்லித்தழை – 3 டேபிள்ஸ்பூன்

 • சிறிய பச்சை மிளகாய் - ஒன்று

வண்ணம்... மூவண்ணம்

செய்முறை:

கிரீன் சட்னிக்குக் கொடுக்கப்பட்டுள்ளவற்றைச் சிறிதளவு நீர் தெளித்து மிக்ஸியில் மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பிரெட் ஸ்லைஸ்களின் ஓரங்களை வெட்டி எடுத்துவிடவும். முதலில் மூன்று பிரெட் ஸ்லைஸ் எடுத்துக்கொள்ளவும். ஒரு பிரெட் ஸ்லைஸில் கிரீன் சட்னி சிறிதளவு தடவவும். அதன்மீது ஒரு லெட்யூஸ் இலை வைத்து, அதன்மீது இரண்டு சீஸ் துண்டுகள் வைத்து, ஒருபுறம் மயோனைஸ் தடவிய பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடவும். அதன் மேல் (மற்றொருபுறம்) கேரட் துருவல், உப்பு, மிளகுத்தூள் போட்டுப் பரப்பி வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸால் மூடவும். மூன்று பிரெட் ஸ்லைஸ்களை இப்படியாக ஒன்றன் மீது ஒன்று அடுக்கி குறுக்காக வெட்டிப் பரிமாறவும். பார்ப்பதற்குப் பச்சை, வெள்ளை, ஆரஞ்சு வண்ணத்தில் கண்ணைக் கவரும் வண்ணம் சாண்ட்விச் இருக்கும். சுவையும் அருமையாக இருக்கும். இதே மாதிரி எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் செய்து பரிமாறவும்.

கிரீன் சட்னி - லெட்யூஸ் இலை பச்சை வண்ணமும், சீஸ் – மயோனைஸ் வெள்ளை வண்ணமும், கேரட் துருவல் ஆரஞ்சு வண்ணமுமாகத் தெரியும்.

கி.மு 7000 ஆண்டு காலகட்டத்திலேயே பாலாடைக்கட்டி பயன்பாட்டில் இருந்ததாகக் கருதப்படுகிறது.

மூவண்ண குயிக் மில்க் கேக்

தேவையானவை:

 • பால் பவுடர் – ஒன்றரை கப்

 • கண்டன்ஸ்டுமில்க் – அரை கப்

 • பொடித்த பிஸ்தா – 2 டேபிள்ஸ்பூன்

 • ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

 • வெண்ணெய் (உப்பு இல்லாதது) – கால் கப்

 • லிக்விட் ஃபுட் கலர் பச்சை வண்ணம், பிஸ்தா ஃப்ளேவர் எசென்ஸ், லிக்விட் ஃபுட்கலர் ஆரஞ்சு வண்ணம், ஆரஞ்சு ஃப்ளேவர் எசென்ஸ் – தலா ஒரு துளி

வண்ணம்... மூவண்ணம்

செய்முறை:

நான்ஸ்டிக் பானில் (pan) வெண்ணெய் சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து சூடாக்கவும். வெண்ணெய் உருகியதும், பால் பவுடர், ஏலக்காய்த்தூள், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். நன்கு சுருள் பதம் வந்ததும் அடுப்பை நிறுத்தி வெந்த கலவையை மூன்று சரிசம பாகங்களாகப் பிரிக்கவும். ஒன்றில் ஆரஞ்சு வண்ண ஃபுட் கலர், ஆரஞ்சு ஃப்ளேவர் எசென்ஸ் கலந்து உருட்டிவைக்கவும். அடுத்த பங்கு கலவையுடன் பச்சை வண்ண ஃபுட் கலர், பிஸ்தா ஃப்ளேவர் எசென்ஸ், பிஸ்தா தூள் சேர்த்துக் கிளறி உருண்டையாக்கி வைக்கவும். மீதமுள்ள மாவை அப்படியே உருட்டி வைக்கவும். அதை வெள்ளை நிறத்துக்குப் பயன்படுத்த வேண்டும்.

மூன்று மாவையும் தனித்தனியே டப்பாவில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு சப்பாத்திக் குழவியால் ஒவ்வொரு வண்ண மாவையும் தனித்தனியே தடிமனாகத் தேய்க்கவும். ஒன்றன் மீது ஒன்று அடுக்கவும். அதாவது பச்சை வண்ணக் கலவை, அதன்மீது வெள்ளை வண்ணக் கலவை, அதன்மீது ஆரஞ்சு வண்ண கலவை என அடுக்கி விருப்பப்பட்ட வடிவத்தில் வெட்டி எடுத்து, மீண்டும் 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துச் சாப்பிடவும்.

வட ஐரோப்பாவில் இனிப்புகளில் பெரும்பாலும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.

மூவண்ண பனீர் டிக்கா

தேவையானவை:

 • பச்சை குடமிளகாய் – ஒன்று (சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்)

 • தக்காளி – 2 (சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்)

 • கெட்டித் தயிர் – ஒன்றரை கப்

 • எலுமிச்சைப்பழம் – ஒன்று (சாறு பிழிந்து விதை நீக்கிக்கொள்ளவும்)

 • சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்

 • மைதா – ஒரு டேபிள்ஸ்பூன்

 • வெள்ளை எள் பொடி, வெள்ளை மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்

 • முந்திரி விழுது – 2 டேபிள்ஸ்பூன்

 • இஞ்சி - பூண்டு விழுது – 3 டீஸ்பூன்

 • பெரிய வெங்காயம் – ஒன்று (சதுரமாக நறுக்கவும்)

 • பசலைக்கீரை (அலசி ஆய்ந்தது) – கால் கப்

 • பச்சை மிளகாய் – ஒன்று

 • கரம் மசாலாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்

 • மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

 • பனீர் க்யூப்ஸ் (துண்டுகள்) – ஒன்றரை கப்

 • ஆரஞ்சு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை

 • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • உப்பு – தேவையான அளவு

 • நெய் - சிறிதளவு

 • டிக்கா குச்சி – தேவையான அளவு

வண்ணம்... மூவண்ணம்

செய்முறை:

சோள மாவு, மைதாவை ஒன்றாக ஒரு பவுலில் சேர்த்துக்கொள்ளவும். மூன்று தனித்தனி பவுலில் தலா அரை கப் தயிர், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஒரு தயிர் பவுலில் மிளகாய்த்தூள், தக்காளி, கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - மைதா கலவை ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்து எலுமிச்சைச்சாறு சில துளிகள்விட்டு அரை கப் பனீர் க்யூப்பைப் போட்டுப் புரட்டி, சிறிதளவு உப்பு சேர்த்துப் புரட்டி, மூடி ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைக்கவும். ஆரஞ்சு நிற பனீர் டீக்கா ரெடி.

மற்றொரு தயிர் பவுலில் முந்திரி விழுது, இஞ்சி - பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள், வெள்ளை எள் பொடி, சிறிதளவு உப்பு, சோள மாவு - மைதா கலவை ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன் சேர்த்து, எலுமிச்சைச்சாறு சில துளிகள்விட்டு, நறுக்கிய பெரிய வெங்காயம், அரை கப் பனீர் சேர்த்துப் புரட்டி மூடி ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைக்கவும். வெள்ளை பனீர் டிக்கா தயார்.

பசலைக்கீரையுடன் பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு, மீதமுள்ள அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், மீதமுள்ள ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, மீதமுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் மைதா - சோள மாவு கலவை சேர்த்து மிக்ஸியில் அடித்து அரை கப் தயிரில் சேர்த்துக் கலந்து அரை கப் பனீர், எலுமிச்சைச் சாறு சில துளிகள், நறுக்கிய குடமிளகாய் போட்டுக் கிளறி 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பச்சை நிற பனீர் டீக்கா தயார்.

ஃப்ரிட்ஜிலிருந்து மூன்று நிற பனீர் டிக்காவையும் எடுத்து டிக்கா குச்சியில் முதலில் மசாலாவில் ஊறிய தக்காளித் துண்டு, அடுத்து ஆரஞ்சு வண்ண பனீர் குத்தி, அடுத்து ஊறிய வெங்காயத் துண்டு, வெள்ளை பனீர் குத்தி, அடுத்து ஊறிய குடமிளகாய்த் துண்டு, பச்சை வண்ண பனீர் செருகவும். அதாவது மூன்று வண்ணத்தையும் அருகருகே ஒரே குச்சியில் செருகவும். இதே மாதிரி அனைத்தையும் செய்துகொள்ளவும். ஒரு பானில் (pan) சிறிதளவு நெய்விட்டு சூடானதும் இவற்றைச் சுழற்றி லேசாக ஃப்ரை செய்யவும். பிறகு எடுத்து அடுப்பின் மேல் Grill (கிரில்) ஸ்டாண்ட் வைத்து டிக்கா குச்சியை சுழற்றி அல்லது கிரில்லில் அடுக்கி சுடவும். கருகவிட்டுவிடக் கூடாது. எல்லா பக்கமும் வேகவிட்டு சுட்டெடுத்துப் பரிமாறவும்.

உலகில் அதிக அளவு குடமிளகாய் பயிரிடப்படும் நாடுகளில் மெக்ஸிகோ முன்னணியில் உள்ளது.

மூவண்ண கேசரி

தேவையானவை:

 • ரவை, சேமியா (சேர்த்து) – ஒன்றரை கப்

 • சர்க்கரை – ஒன்றரை கப்

 • பால் – 3 கப்

 • நெய் – 50 கிராம்

 • குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் – தலா ஒரு சிட்டிகை

 • பிஸ்தா ஃபுட் கலர் பவுடர் - ஒரு சிட்டிகை

 • ஆரஞ்சு ஃபுட் கலர் பவுடர் – ஒரு சிட்டிகை

 • பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை

 • பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

வண்ணம்... மூவண்ணம்

செய்முறை:

வாணலியை அடுப்பில்வைத்து ரவை, சேமியாவை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு அடிகனமான கடாயில் 2 கப் பால் ஊற்றி ஒரு கொதிவந்ததும் ஒரு கப் சர்க்கரை சேர்த்துக் கிளறி, சர்க்கரை கரைந்ததும் அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து ஒரு கப் ரவை - சேமியாவை சேர்த்துக் கிளறி, இதனுடன் நெய் சேர்த்துக் கிளறி, பச்சைக் கற்பூரம் சேர்த்து நன்கு வெந்ததும் இறக்கவும். இதை இரு சரிசம பாகங்களாகப் பிரித்துக்கொள்ளவும். கேசரியைக் கிளறும்போது சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். கேசரி கட்டித்தட்டிவிடக் கூடாது.

ஒரு டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் பச்சை வண்ண ஃபுட் கலர், சிறிதளவு குங்குமப்பூ சேர்த்துக் கரைத்து ஒரு பாதி கேசரியில் சேர்க்கவும். பச்சை வண்ண கேசரி தயார்.

ஒரு டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் ஆரஞ்சு வண்ண ஃபுட் கலர், சிறிதளவு குங்குமப்பூ சேர்த்துக் கரைத்து, மறுபாதி கேசரியில் கலந்து கிளறிக்கொள்ளவும். ஆரஞ்சு வண்ண கேசரி தயார்.

அடிகனமான வாணலியைக் குறைந்த தீயில் அடுப்பில் வைத்து ஒரு கப் பால் ஊற்றி ஒரு கொதிவந்ததும் சர்க்கரை அரை கப் சேர்த்துக் கிளறி, சர்க்கரை கரைந்ததும் மீதமுள்ள அரை கப் ரவா, சேமியாவைச் சேர்த்து, பனீர் துருவல் சேர்த்துக் கிளறி ஏலக்காய்த்தூள் சேர்த்து வெந்ததும் இறக்கவும். வெள்ளை வண்ண பனீர் கேசரி தயார்.

இதை உங்கள் விருப்பப்படி தனித்தனியாகவோ, ஒன்றன் மீது ஒன்றை அடுக்கிவைத்தோ பரிமாறலாம்.

ரவையில் அதிக அளவு காணப்படுவது கார்போஹைட்ரேட் எனும் மாவுப்பொருளே (72%).

மூவண்ண பின்வீல் ரோல்

தேவையானவை:

 • மில்க் பிஸ்கட் – 30

 • வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

 • கண்டன்ஸ்டு மில்க் – அரை கப்

 • சர்க்கரை சேர்க்காத கோவா – கால் கப்

 • ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

 • உலர் பூசணி விதைப் பொடி, துருவிய பிஸ்தா – தலா ஒரு டேபிள்ஸ்பூன்

 • சீஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

 • முந்திரி பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்

 • பால் பவுடர் – 3 டேபிள்ஸ்பூன்

 • பொட்டுக்கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன்

 • வொயிட் ஹோம்மேட் சாக்லேட்

 • துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

 • வெதுவெதுப்பான பால் – தேவையான அளவு

 • ஆரஞ்சு ஃப்ளேவர் எசென்ஸ் - 2 துளிகள்

 • பிஸ்தா ஃப்ளேவர் எசென்ஸ் – 2 துளிகள்

வண்ணம்... மூவண்ணம்

செய்முறை:

மில்க் பிஸ்கட்டை உடைத்து கண்டன்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள், கோவா, வெண்ணெய், பால் பவுடர், பொட்டுக்கடலை மாவு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை மூன்று சரிசம பங்குகளாகப் பிரித்துக்கொள்ளவும்.

ஒரு பங்கு மாவில் ஆரஞ்சு ஃப்ளேவர் எசென்ஸ் சேர்த்து 2 டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான பால் தெளித்துப் பிசைந்து உருட்டி காற்றுப்புகாத டப்பாவில் சேர்த்து மூடி, 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

வெள்ளை வண்ணத்துக்கு அடுத்த பங்கு மாவில் சீஸ் துருவல், முந்திரி பவுடர், வொயிட் சாக்லேட் துருவல் சேர்த்து வெதுவெதுப்பான பால் தெளித்துக் கிளறி உருண்டையாக்கி காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில்

15 நிமிடங்கள் வைக்கவும்.

அடுத்து பச்சை வண்ணத்துக்கு மீதமுள்ள மாவில், பிஸ்தா துருவல் உலர் பூசணி விதை பவுடர், பிஸ்தா ஃப்ளேவர் எசென்ஸ் சேர்த்து சிறிதளவு வெதுவெதுப்பான பால் கலந்து உருட்டி காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

பிறகு மூன்றையும் எடுத்து சப்பாத்திக் குழவியால் தனித்தனியே உருட்டி ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கவும். முதலில் பச்சை வண்ண பிஸ்கட் லேயர், அடுத்து வெள்ளை வண்ண பிஸ்கட் லேயர் அதன்மீது ஆரஞ்சு வண்ண பிஸ்கட் லேயர் அடுக்கி பாய் சுருட்டுவது மாதிரி சுருட்டவும். பிறகு அந்த உருளையை ஒரு இன்ச் அளவுக்கு வெட்டிப் பரிமாறவும். அழகான சுவையான பின்வீல் ரோல் ரெடி.

பயணங்களில் (குறிப்பாக, கடற்பயணங்களின்) தேவைக்காகவே பிஸ்கட் கண்டுபிடிக்கப்பட்டது.

மூவண்ண இட்லி

தேவையானவை:

 • இட்லி அரிசி – 2 கப்

 • ஜவ்வரிசி, அவல் – தலா கால் கப்

 • முழு உளுந்து – அரை கப்

 • கேரட் துருவல் – ஒரு கப்

 • பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்

 • தேங்காய்த் துருவல் – ஒரு கப்

 • வெள்ளை மிளகு – ஒரு டீஸ்பூன்

 • கறிவேப்பிலை (ஆய்ந்தது) – அரை கப்

 • கொத்தமல்லித்தழை (ஆய்ந்தது) – கால் கப்

 • பச்சை மிளகாய் – 2

 • இஞ்சி – கால் அங்குலத் துண்டு (தோல் சீவவும்)

 • காய்ந்த மிளகாய் – 2

 • தக்காளி – ஒன்று

 • எண்ணெய், உப்பு – தேவையான அளவு

வண்ணம்... மூவண்ணம்

செய்முறை:

இட்லி அரிசியை நீரில் 2 மணி நேரமும், ஜவ்வரிசி, அவல், உளுந்தைச் சேர்த்து நீரில் ஒரு மணி நேரமும் ஊறவைக்கவும். பிறகு உப்பு சேர்த்து கிரைண்டரில் மையாக அரைத்துக்கொள்ளவும். 8 மணி நேரம் அப்படியே மூடிவைக்கவும். பிறகு மாவை மூன்று சரிசம பங்குகளாகப் பிரித்துக்கொள்ளவும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, இஞ்சி, சிறிதளவு உப்பு, பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இந்த பச்சை வண்ணக் கலவையை பிரித்துவைத்துள்ள ஒரு பங்கு மாவில் சேர்த்துக்கொள்ளவும். தேங்காய்த் துருவல், சிறிதளவு உப்பு, வெள்ளை மிளகுத்தூளை மிக்ஸியில் போட்டு தண்ணீர் தெளித்து அரைத்து எடுத்து, இந்த வெள்ளை வண்ணக் கலவையை அடுத்த பங்கு மாவில் கலந்துகொள்ளவும். மிக்ஸியில் கேரட் துருவல், காய்ந்த மிளகாய், சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து மையாக அரைத்து, இந்த ஆரஞ்சு வண்ணக் கலவையை மீதமுள்ள மாவில் கலந்துகொள்ளவும். இப்போது மூன்று வண்ண இட்லி மாவு ரெடி. இட்லி தட்டில் எண்ணெய்தடவி தனித்தனியே 3 வண்ண மாவுகளை இட்லியாக ஊற்றி ஆவியில் வேகவிட்டுப் பரிமாறவும்.

இவ்வகை இட்லிக்கு சைடிஷாகப் பரிமாற சாஸ் போதுமானது.

700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்ட ஒரு முக்கிய உணவு இட்லி.

மூவண்ணப் பொரியல்

தேவையானவை:

 • முட்டைகோஸ் (துருவியது) – அரை கப்

 • வெங்காயத்தாள் (நறுக்கியது), பீன்ஸ் (நறுக்கியது) - தலா கால் கப்

 • தேங்காய்த்துருவல், பனீர் துருவல் – தலா கால் கப்

 • பச்சை மிளகாய் – 2

 • வெள்ளை வெங்காயம் – 2 (நறுக்கவும்)

 • கேரட் – 2 (சதுரமாக நறுக்கவும்)

 • கடுகு – ஒரு டீஸ்பூன்

 • உடைத்த உளுந்து – ஒரு டீஸ்பூன்

 • காய்ந்த மிளகாய் – ஒன்று

 • கறிவேப்பிலை – சிறிதளவு

 • வறுத்த வேர்க்கடலைப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்

 • கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய், உப்பு – தேவையான அளவு

வண்ணம்... மூவண்ணம்

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உடைத்த உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து, வெங்காயத்தாள், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். இதனுடன் முட்டைகோஸ், உப்பு சேர்த்து வதக்கி, கேரட் துண்டுகளைப் போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்துப் புரட்டி வேகவிடவும். பிறகு தேங்காய்த் துருவல், பனீர் துருவல் சேர்த்து வதக்கி வறுத்த வேர்க்கடலைப் பொடி தூவி, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கிப் பரிமாறவும். மூவண்ணத்தில் இருக்கும் இந்தப் பொரியலில் சத்தும் சுவையும் அள்ளும்.

ரைபோஃப்ளேவின் எனும் உயிர்ச்சத்து முட்டைகோஸில் காணப்படுகிறது. இது வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism