Published:Updated:

பீகார், குஜராத், ஒடிசா... பெயர் சொல்லும் உணவுகள்

தால் பாட்டி சூர்மா, லிட்டி சோக்கா, வெஜிடபிள் பொட்டேட்டோ சாப்ஸ் என இங்கே உள்ள ரெசிப்பிகள் உங்களை புதுமையான சுவை

பிரீமியம் ஸ்டோரி
ந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களின் பிரத்யேக உணவுகளைத் தேடித் தேடி ருசிக்கும் பழக்கம் பரவிவருகிறது.

ஒவ்வொரு மாநில உணவுக்கும் தனிச்சுவை உண்டு. அந்த வகையில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில ரெசிப்பிகளில் குறிப்பிடத்தக்கவற்றை அழகிய படங்களுடன் இங்கே வழங்குகிறார் சமையற்கலை நிபுணர் தனுஜா தர்மேந்திரா. ருமாலி ரொட்டி, கமன் டோக்ளா, தால் பாட்டி சூர்மா, லிட்டி சோக்கா, வெஜிடபிள் பொட்டேட்டோ சாப்ஸ் என இங்கே உள்ள ரெசிப்பிகள் உங்களை புதுமையான சுவை அனுபவத்தில் ஆழ்த்தும் என்பது நிச்சயம்!

ரூமாலி ரொட்டி

தேவையானவை:

  • மைதா - 2 கப்

  • வாழைப்பழம் - ஒன்று அல்லது முட்டை - ஒன்று

  • உப்பு - தேவைக்கேற்ப

  • எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

  • பால் - சிறிதளவு

  • தண்ணீர் - தேவையான அளவு

  • செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலக்கவும். விரல்களால் கிளறிக் கிளறி நன்றாகக் கலந்த பின், டியரிங் மெதட் (Tearing Method) அதாவது கிழித்து ஒன்றாகப் பிசைந்துகொண்டே இருக்க வேண்டும். இதை ஒரு ஈரத்துணியால் மூடி ஒரு மணி நேரம் வைக்கவும். இந்த ருமாலி ரொட்டியின் ஸ்பெஷாலிட்டி மிருதுதன்மையும் நெகிழ்வுத்தன்மையும் ஆகும். ரொட்டி பிசையும் டெக்னிக் மிகவும் முக்கியம்.

ரூமாலி ரொட்டி
ரூமாலி ரொட்டி

ஓர் அடுப்பில் கடாயைத் திருப்பிவைத்து சூடாக்கவும். சப்பாத்தி மாவைச் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி, பெரிய பெரிய மெல்லிய வட்டங்களாகத் தேய்த்து எடுத்து அதை கைகளால் சிறிதளவு நீட்சி (ஸ்ட்ரெச்சிங்) செய்து கனமாக கடாயின் மேல் போட்டு இரண்டு புறமும் பிரவுன் புள்ளிகள் வரும்வரை வைத்து எடுக்கவும்.

வாழைப்பழம் முதலில் ஆசியாவில் தோன்றியது. பின்னர் மத்திய அமெரிக்கா, வட அமெரிக்காவுக்குச் சென்றது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெஜிடேபிள் பொட்டேட்டோ ஷாப்ஸ்

தேவையானவை:

  • உருளைக்கிழங்கு - 4

  • கேரட் - 2

  • வெங்காயம் - 2

  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு

  • சர்க்கரை - அரை டீஸ்பூன்

  • மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மைதா மாவு - 3 டேபிள்ஸ்பூன்

  • முட்டை - ஒன்று

  • கான்ஃப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

  • செய்முறை:

வெஜிடேபிள் பொட்டேட்டோ ஷாப்ஸ்
வெஜிடேபிள் பொட்டேட்டோ ஷாப்ஸ்

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து எடுக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய கேரட், வெங்காயம், கொத்தமல்லித்தழை, உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள் உள்ளிட்டவையைச் சேர்த்து பிசைந்து வடைபோல் தட்டி தனியே வைத்துக்கொள்ளவும். மைதா மாவு, கான்ஃப்ளார், முட்டை அனைத்தையும் நன்றாகக் கலக்கி, திடமான பதத்துக்கு கொண்டுவரவும். தயார் செய்து வைக்கப்பட்ட உருளைக்கிழங்கை மைதா மாவு கலவையில் முக்கியெடுத்து, சூடான எண்ணெயில் புரட்டி எடுத்தால் வெஜிடேபிள் பொட்டேட்டோ ஷாப்ஸ் தயார்.

ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே உருளைக்கிழங்கு அடிப்படை உணவு வகைகளில் ஒன்றாக மாறியது.

கமன் டோக்ளா

தேவையானவை:

  • கடலை மாவு - ஒன்றரை கப்

  • ரவை - 2 டேபிள்ஸ்பூன்

  • எலுமிச்சைச்சாறு - ஒன்றரை டீஸ்பூன் (அ) சிட்ரிக் ஆசிட் - ஒரு டீஸ்பூன்

  • சர்க்கரை - 2 டீஸ்பூன்

  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

  • தண்ணீர் - ஒரு கப்

  • பச்சை மிளகாய் - இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்

  • ஃப்ரூட் சால்ட் - ஒரு டீஸ்பூன்

  • தயிர் - ஒரு கப்

  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

  • தாளிக்க:

  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • சீரகம் - ஒன்றரை டீஸ்பூன்

  • கடுகு - அரை டீஸ்பூன்

  • வெள்ளை எள் - ஒன்றரை டீஸ்பூன்

  • சர்க்கரை ­- ஒரு டேபிள்ஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 4 (நீளவாக்கில் நறுக்கவும்)

  • நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

  • தேங்காய் (துருவியது) - 2 டேபிள்ஸ்பூன்

  • பெருங்காயத்தூள் - சிறிதளவு

  • தண்ணீர் - கால் கப்

  • செய்முறை:

கமன் டோக்ளா
கமன் டோக்ளா

ஒரு இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். ஸ்டீமர் தட்டுகள் இல்லை என்றால் குக்கர் தட்டுகளில் எண்ணெய் தடவி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு அதில் சர்க்கரை, எலுமிச்சைச்சாறு, மஞ்சள்தூள், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். இத்துடன் ரவை சேர்க்கவும். கடலை மாவை சலித்து இதனுடன் சேர்க்கவும். கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து நன்றாக அடிக்கவும். இதைக் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருந்தால் இதில் காற்றுப் புகுந்து உப்பிவிடும் (பீட்டர் இருந்தால் அதிலும் பீட் பண்ணலாம்). இத்துடன் எண்ணெய் சேர்த்து சிறிது நேரம் மூடிவைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, தயிர் சேர்த்து இட்லி மாவு போல் தயார் செய்யவும். கட்டி இல்லாமல் இருக்க வேண்டும்.

தனுஜா
தனுஜா

ஃப்ரூட் சால்ட்டை இதனுடன் கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி. ஒரே பக்கமாக நன்றாகக் கலக்கிவிடவும். இது இரண்டு மடங்காக வரும். உடனே தட்டில் ஊற்றி இட்லிப் பாத்திரத்தில் வைக்கவும். 15 நிமிடங்கள் மீடியம் தீயில் ஆவியில் வேகவைக்கவும். ஒரு சிறிய கடாயில், எண்ணெய் ஊற்றி, பெருங்காயத்தூள், சீரகம், கடுகு, வெள்ளை எள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, தண்ணீர்விட்டு அத்துடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். பின்பு ஒரு நிமிடம் ஆறியபின் இதை டோக்ளா மேல் ஊற்றவும் கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவலை மேலாகத் தூவவும். இதை கொத்தமல்லி - புதினாச் சட்னியுடன் பரிமாறவும்.

எலுமிச்சை ஆசியாவை தாயகமாகக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் வளர்கிறது.

தால் பாட்டி சூர்மா

தேவையானவை:

  • பஞ்ச் மேலா தால் செய்வதற்கு:

  • உடைத்த பாசிப்பருப்பு - 50 கிராம்

  • துவரம்பருப்பு - 50 கிராம்

  • கடலைப்பருப்பு - 50 கிராம்

  • மைசூர் பருப்பு - 50 கிராம்

  • உளுத்தம்பருப்பு 50 கிராம்

  • மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

  • கடுகு - கால் டீஸ்பூன்

  • சீரகம் - கால் டீஸ்பூன்

  • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

  • பிரியாணி இலை - ஒன்று

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • காய்ந்த மிளகாய் - 3

  • கிராம்பு - 3

  • பெருங்காயத்தூள் - சிறிதளவு

  • நறுக்கிய பச்சை மிளகாய் - 2

  • வெங்காயம் - ஒன்று

  • தக்காளி - ஒன்று

  • கொத்தமல்லி இலை - சிறிதளவு

  • உப்பு - தேவையான அளவு

  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • பாட்டி செய்ய:

  • கோதுமை மாவு - 2 கப்

  • உப்பு - தேவைக்கேற்ப

  • நெய் - 2 - 3 டீஸ்பூன்

  • தண்ணீர் - தேவையான அளவு

  • செய்முறை:

தால் பாட்டி சூர்மா
தால் பாட்டி சூர்மா

பருப்புகளை வேகவைக்கவும். ஒரு குக்கரில் நெய்விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பிரியாணி இலை, கிராம்பு தாளித்து, அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறவும். மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பெருங்காயத்தூள் சேர்க்கவும். அத்துடன் பருப்பு கலவையைச் சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லி இலை சேர்க்கவும். தால் தயார்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, நெய் கலந்து, அத்துடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 10 நிமிடங்கள் தனியாக வைக்கவும். பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டி அவனில் அல்லது காஸ் தந்தூர் அவனில், இல்லையென்றால் குக்கர் பாத்திரத்தில் உப்பு பரப்பி அதன் மேல் கம்பி ராக் வைத்து, உருண்டைகளை அதன்மேல் வைத்து சிறிது மேலாக அழுத்தி அல்லது கம்பியினால் ஓர் அழுத்தம் கொடுக்கவும் (இப்படிச் செய்வதனால் மாவு உள்ளிருந்து நன்றாக வேகும்). மாவு நன்றாக வேகும் வரை வைத்திருக்கவும் அல்லது 12 -15 நிமிடம் வேகவிடவும். இருபுறமும் பொன்னிறமாகும் வரும் வரை வைத்து எடுக்கவும். பிறகு வேகவைத்த பாட்டியை ஒரு கிண்ணத்தில் நெய் ஊற்றி அதன்மேல் முக்கி எடுக்கவும். பாட்டி ரெடி.

இதை நாம் ஏற்கெனவே தயாரித்து வாய்த்த தாலோடு நனைத்து சாப்பிடலாம். இது ஒரு ராஜஸ்தானின் உணவாகும்.

முதலில் ஆசியாவில் பயிரிடப்பட்டதாகக் கருதப்படும் துவரை, இப்போது உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது.

லிட்டி சோக்கா

தேவையானவை:

  • கோதுமை மாவு - 2 கப்

  • நெய் அல்லது எண்ணெய் ­- 1 டேபிள்ஸ்பூன்

  • உப்பு - கால் டீஸ்பூன்

  • தண்ணீர் - முக்கால் கப்

  • ஸ்டஃப்பிங் செய்வதற்கு:

  • வறுத்த அரைத்த பொட்டுக்கடலை - ஒரு கப்

  • சீரகம் - அரை டீஸ்பூன்

  • சோம்பு - அரை டீஸ்பூன்

  • ஓமம் - அரை டீஸ்பூன்

  • கருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

  • நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்

  • நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்

  • நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்

  • கொத்தமல்லி இலைகள் - 4 டேபிள்ஸ்பூன்

  • எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்

  • பிளாக் சால்ட் - கால் டீஸ்பூன்

  • கடுகு எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

  • தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

  • சைடிஷ்:

  • பைங்கன் சோக்கா

  • டொமேட்டோ சோக்கா

  • ஆலு சோக்கா

  • உருக்கிய நெய் - அரை கப்

  • செய்முறை:

லிட்டி சோக்கா
லிட்டி சோக்கா

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் நெய், தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி மென்மையான சப்பாத்தி மாவாகப் பிசைந்து அதை மூடி வைக்கவும்.

ஸ்டஃபிங் செய்யும் செய்முறை:

சீரகம், சோம்பை நன்றாக இடித்து வைக்கவும். பொட்டுக்கடலை மாவில் சீரகம் - சோம்பு கலவையைச் சேர்க்கவும். அத்துடன் ஓமம், கருஞ்சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், கடுகு எண்ணெய், கொத்தமல்லி இலைகள், கறுப்பு உப்பு, எலுமிச்சைச்சாறு, உப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு பிசையவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம். பிடிக்கும் அளவுக்கு (ஈரமும் இல்லாமல் காய்ந்து இல்லாமல்) இருக்க வேண்டும்.

லிட்டி செய்முறை:

பிசைந்த சப்பாத்தி மாவை எடுத்து ஒரு பந்து போல் உருட்டவும். இதை பூரி போல் இட்டு 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு கலவையை வைக்கவும். இதை உருட்டி ஒரு பந்து போல் பிசையவும். விரிசலோ, வெடிப்போ இல்லாமல் இருக்க வேண்டும். அனைத்து மாவையும் இதே போல் தயாரித்துக்கொள்ளவும்.

லிட்டி தயாரிக்க நான்கு முறைகள் உண்டு...

1. பேக்கிங்: 200 டிகிரி செல்ஷியஸுக்கு அவனை (oven) சூடாக்கி ட்ரேயில் லிட்டிகளை வைத்து, முதலில் 20 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு ட்ரேயை வெளியில் எடுத்து லிட்டிகளைத் திருப்பிப் போட்டு, குறைந்தது 45 நிமிடங்கள் வேகவைக்கவும். பார்ப்பதற்கு பொறை பிஸ்கட் போல் காணப்படும். இதன் நிறம் பொன்னிறமாக இருக்கும். பிரவுன் புள்ளிகள் காணப்படும். இவைதான் சரியான நிலை.

2. தோசை தவாவின் மேல் ரோஸ்ட் செய்வது: சிறு தீயில் தோசை தவா மீது லிட்டிகளை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் நன்கு வேகவைக்கவும்.

3. எண்ணெயில் பொரிப்பது: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சமோசா போல் பொரித் தெடுக்கவும்.

4. தந்தூர் கிரில்லிங்: தந்தூரி அடுப்பில் கம்பியின் மேல் வைத்து இருபுறமும் வேகவைக்கவும். மேலிருக்கும் ஏதாவது ஒரு முறையில் லிட்டியைத் தயார் செய்துகொள்ளவும்.

பைங்கன் ஜோக்கா செய்முறை:

பெரிய கத்திரிக்காய் எடுத்து அடுப்பின் மேல் காட்டி நன்கு வெந்து, மென்மையாக ஆனதும் குளிரவைத்து தோலை நீக்கி பொடியாக நறுக்கவும். அத்துடன் ஒரு நறுக்கிய சிறிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கடுகு எண்ணெய், எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.

டொமேட்டோ ஜோக்கா:

இரண்டு பெரிய தக்காளியை அடுப்பின் மேல் காட்டி அல்லது அவனில் (oven) வேக வைக்கவும். தோல் கறுத்ததும் தோலை நீக்கி தக்காளியைப் பொடியாக நறுக்கி அத்துடன் பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு, கடுகு, எண்ணெய் உப்பு சேர்க்கவும்.

ஆலூ சோக்கா:

இரண்டு உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து, மசித்து அத்துடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, பூண்டு, எலுமிச்சைச் சாறு, உப்பு, கடுகு எண்ணெய் சேர்க்கவும்.

லிட்டி சோக்கா பரிமாறும் முறை:

ஒரு தட்டில் லிட்டிவைத்து அதை உடைத்து அதனுள் நெய்விட்டு சைடிஷ் சேர்த்துப் பரிமாறவும்.

இது பீகார், ஜார்க்கண்ட் பகுதியில் மிகவும் விசேஷமாகச் செய்யப்படும் ஓர் உணவு ஆகும்.

கோதுமையின் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் எத்தியோப்பிய உயர்நிலங்களாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு