திவ்யா
ஆம்லெட் என்கிற பிரெஞ்சு வார்த்தை அறிமுகமானது என்னவோ 16-ம் நூற்றாண்டில்தான். ஆனால், அதற்கு வெகுகாலம் முன்னதாகவே ஆம்லெட் போன்ற முட்டை உணவு ருசிக்கப்பட்டுவிட்டது. உதாரணமாக...1393-ல் பாரிஸ் பெருநகரத்தில் வெளியிடப்பட்ட வீட்டுக் குறிப்பு நூலிலேயே இதற்கான ரெசிப்பி இடம்பெற்றிருக்கிறது. இதற்கும் முன்னால், `ஆதி ஆம்லெட்’ உருவான இடம் பண்டைய பெர்சியாவாகத்தான் இருக்கக் கூடும் என்று கணிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆம்லெட் ஆராய்ச்சியைவிட அதன் சுவையும், எளிதாகவும் விரைவாகவும் சமைக்க உதவுகிற தன்மையும் நம்மில் பலரையும் ஈர்க்கும். எதனோடும் கலக்கலாம் என்பதற்கேற்ப, பால் முதல் காய்கறிகள், மாமிசம் வரை விருப்பத் தேர்வு செய்து விதம்விதமான ஆம்லெட்டுகளை சட்சட்டென தயாரிக்க முடியும். தேவை கொஞ்சம் கற்பனைத்திறன்தான். அந்த வகையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சமையற் கலைஞர் திவ்யா அருமையான ஆம்லெட் ரெசிப்பிகளைச் சுவைக்கத் தூண்டும் படங்களுடன் அளிக்கிறார்.
ஆம்லெட் கொண்டாட்டம் ஆரம்பமாகட்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபீட்ரூட் ஆம்லெட்
தேவையானவை: 2 ஆம்லெட் செய்ய
முட்டை - 2
சிறிய பீட்ரூட் - ஒன்று (துருவி தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்)
நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சில இலைகள்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:
முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்து நன்கு அடிக்கவும். ஒரு தோசைக்கல்லை சுடவைத்து, எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டைக் கலவையை ஊற்றவும். வெந்ததும் திருப்பிப்போட்டு அடுப்பிலிருந்து எடுத்து, சூடாகப் பரிமாறவும்.
வைட்டமின் சத்துகள் நிறைந்திருப்பதால்தான் `உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளில் ஒன்று’என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது முட்டை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வெள்ளை ஆம்லெட்
தேவையானவை: ஒரு ஆம்லெட் செய்ய
முட்டை – 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
மிளகு – கால் டீஸ்பூன் (தட்டி வைக்கவும்)
சீரகம் - கால் டீஸ்பூன் (தட்டி வைக்கவும்)
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:
முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் பிரித்து எடுத்து வைக்கவும். வெள்ளைக் கருவை உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும். ஒரு தோசைக்கல்லை சுடவைத்து, எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டைக் கலவையை ஊற்றவும். அதன் மீது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, தட்டி வைத்துள்ள மிளகு, சீரகம் தூவி, திருப்பிப் போடவும். வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.
நாட்டுக்கோழி முட்டையில் ரிபோஃப்ளேவின், பயோடின், வைட்டமின்கள் பி2, பி6, பி12, ஏ, டி ஆகியவையும் செலினியம், துத்தநாகம் , இரும்பு, காப்பர், அயோடின் போன்ற கனிமச்சத்துகளும் இருக்கின்றன.
மஷ்ரூம் குழி ஆம்லெட்
தேவையானவை: 6 ஆம்லெட் செய்ய
முட்டை – 2
பட்டன் காளான் – 2
பூண்டு - ஒரு பல்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/8 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
பட்டன் காளானைக் கழுவி, சுத்தமான துணியால் துடைத்து நான்கு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி உப்பு, மிளகுத்தூள் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாக அடித்து தனியே வைக்கவும்
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தட்டிய பூண்டு, சின்ன சதுரங்களாக வெட்டிவைத்த காளான், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். காளான் வெந்ததும் அடுப்பிலிருந்து எடுத்து தனியாக வைக்கவும்.
ஒரு குழிப்பணியார கடாயை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியினுள்ளும் அரை டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, முட்டைக் கலவையை முக்கால் குழி நிரம்பும் வரை ஊற்ற வேண்டும் அதிகம் ஊற்றினால் முட்டை பொங்கி வெளியே வடிந்துவிடும்.
முட்டைக் கலவையின் நடுவே ஒரு காளான் துண்டை வைக்க வேண்டும். ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு, மறுபக்கம் வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.
40 முதல் 50 கிராம் எடை கொண்ட ஒரு முட்டையில், 187 மில்லிகிராம் கொழுப்புச்சத்து உள்ளது.
ஜாப்பனீஸ் ஆம்லெட் ரோல்
தேவையானவை: ஒரு ஆம்லெட் செய்ய
முட்டை – 4
சோயா சாஸ் - 5 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – கால் டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்து நன்கு அடிக்கவும்.

அடுப்பில் நான் ஸ்டிக் பான் (pan) வைத்து எண்ணெய் பூசி சூடாக்கி, முட்டைக் கலவையை சிறிது ஊற்றி நன்றாகப் பரப்பிவிடவும். லேசாக வேக ஆரம்பிக்கும்போது கரண்டி வைத்து நிதானமாகப் பாய் சுருட்டுவது போல் சுருட்டிவிட்டு ஓரத்தில் ஒதுக்கவும்.

பானில் மீண்டும் சிறிது எண்ணெய் தடவி இன்னும் சிறிது முட்டைக் கலவையை ஊற்றி லேசாக வெந்ததும் சுருட்டி வைத்திருக்கும் முட்டைக் கலவையை இதன் மீது சுருட்டவும்.

இதே போல் மீதம் இருக்கும் முட்டைக் கலவை முடியும் வரை ஊற்றி ரோல் செய்துகொண்டே இருக்கவும். முட்டை அதிகம் வேகும் முன்னர் ரோல் செய்தால் முட்டை நன்றாக ஒட்டி ரோல் போன்று வரும். ரோல் செய்து முடித்த உடன் அடுப்பிலிருந்து இறக்கி வெட்டிப் பரிமாறவும். நான் ஸ்டிக் பானில் செய்தால்தான் நன்றாக ரோல் செய்ய முடியும். சதுர பான் இருந்தால் ரோல் செய்ய மிகவும் வசதியாக இருக்கும்.
சாதாரணமாக ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்குத் தேவையான கொழுப்புச்சத்தின் அளவு 300 மில்லிகிராம்தான். இரண்டு முட்டைகள் அந்தக் கொழுப்புச்சத்தின் தேவையைப் பூர்த்தி செய்துவிடும்.
கலக்கி ஆம்லெட்
தேவையானவை: 2 ஆம்லெட் செய்ய
முட்டை – 3
சிக்கன் குழம்பு அல்லது ஏதேனும் ஒரு கறிக் குழம்பு – 5 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:
முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும். குழம்பை அதனுடன் சேர்த்து அடிக்கவும். ஒரு தோசைக்கல்லை சுடவைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டைக் கலவையை ஊற்றவும். ஓரங்கள் லேசாக வெந்ததும் கரண்டி வைத்து படத்தில் உள்ளது போல் நடுவில் சேர்த்து, அடுப்பிலிருந்து எடுத்து உடனே பரிமாறவும். கலக்கி ஆம்லெட் நடுவில் சிறிது வேகாமல் இருக்க வேண்டும்.
குழம்பு நல்ல வாசனையாக இருந்தால் கலக்கி சுவையுடன் இருக்கும். ஹோட்டலில் வாங்கிய பரோட்டா சால்னா அல்லது சேர்வை இருந்தால் அதைப் பயன்படுத்தலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
அதிக எடையோடு இருப்பவர்கள், உடலில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள் வாரத்துக்கு இரண்டு முறை முட்டை சாப்பிட்டால் போதுமானது.
மசாலா ஆம்லெட்
தேவையானவை: 2 ஆம்லெட் செய்ய
முட்டை – 2
நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சில இலைகள்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
சிக்கன் 65 மசாலா – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 2 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 4 டீஸ்பூன்

செய்முறை:
முட்டையை உடைத்து நன்றாக அடித்துவைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி கறிவேப்பிலை, வெங்காயம், கொத்தமல்லி இலைகள் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், சிக்கன் 65 மசாலா, கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதன் மீது அடித்த முட்டையை ஊற்றி நன்றாகக் கலக்கிவிடவும். வெந்தவுடன் திருப்பிப் போட்டு, மறுபுறம் வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.
78 கலோரிகள் கொண்ட ஒரு முட்டையில் 6.6 கிராம் புரதச்சத்து இருக்கிறது.
அவன் பேக்டு ஆம்லெட்
தேவையானவை:
முட்டை – 10
பால் – கால் கப்
பொடியாக நறுக்கியகொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
அவனை (oven) 175 டிகிரிக்கு செட் செய்து 10 நிமிடங்கள் பிரீஹீட் செய்து வைக்கவும். முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடிக்கவும்.
கேக் பாத்திரம் (8 X 8 inch cake pan) ஒன்று எடுத்து அதனுள் எல்லா பக்கமும் வெண்ணெய் தடவி வைக்கவும். இதனுள் ஒரு பட்டர் பேப்பர் வெட்டி வைக்கவும். முட்டைக் கலவையை இந்த கேக் பத்திரத்துக்குள் ஊற்றவும். நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி, பிரீ ஹீட் செய்த அவன் உள்ளே கேக் பாத்திரத்தை வைக்கவும்.
20-25 நிமிடங்கள் வேகவைக்கவும். வெந்துவிட்டதா என்று நடுவில் டூத்பிக் வைத்து குத்திப் பார்த்து வெளியே எடுக்கவும். வேகவில்லை என்றால் சில நிமிடங்கள் கூடுதலாக வேகவிடவும்.
இப்போது, தேவையென்றால் ஒரு டேபிள்ஸ்பூன் சீஸைத் துருவி மேலே போட்டு கூடுதலாக 5 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகும் வரை பேக் செய்யவும். வெட்டிப் பரிமாறவும்.
முட்டையை 10 முதல் 15 நிமிடங்கள் வேகவைப்பது தவறு. அளவுக்கு அதிகமாக வேகவைத்தால் முட்டையில் பிரவுன் மற்றும் சாம்பல் நிறத்தில் ஒரு படிவம் படிந்துவிடும். அந்த முட்டைகளை உட்கொள்ளக் கூடாது. முட்டையை 7 நிமிடங்கள் வரை வேகவைத்தாலே போதும்.
ஸ்வீட் ஆம்லெட்
தேவையானவை: ஒரு ஆம்லெட் செய்ய
முட்டை – ஒன்று
பால் - 5 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
மைதா மாவு – ஒரு டீஸ்பூன்
பட்டைத்தூள் - 2 சிட்டிகை (விருப்பப்பட்டால்)
உப்பு – ஒரு சிட்டிகை
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி பால், சர்க்கரை, மைதா, உப்பு, பட்டைத்தூள் சேர்த்து அடித்துவைக்கவும். அடுப்பில் தோசைக்கல் வைத்து வெண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, முட்டைக் கலவையை ஊற்றி மூடி போட்டு வேகவிடவும். சிறு தீயில்வைத்துதான் வேகவைக்க வேண்டும். இல்லையென்றால் கருக வாய்ப்புள்ளது. வெந்த பின்பு அடுப்பிலிருந்து இறக்கவும். சர்க்கரையைப் பாகு வைத்து ஊற்றி அல்லது சர்க்கரைத் தூள் செய்து மேலே தூவிப் பரிமாறலாம்.
மைதா மாவு கட்டி விழுவதைத் தவிர்க்க சிறிதளவு முட்டையுடன் மைதாவை ஸ்பூன் வைத்து நன்றாகக் கரைத்து பின்னர் கலவையுடன் சேர்த்து பிறகு ஆம்லெட் செய்யலாம்.
முட்டையிலிருக்கும் கோலின் (Choline) சத்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடியது. கருவுற்ற தாய்மார்கள் முட்டை சாப்பிட்டால், வயிற்றிலுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி சீராக இருக்கும்.
ட்ரை கலர் ஆம்லெட்
தேவையானவை: ஒரு ஆம்லெட் செய்ய
முட்டை - 3
சிறிய கேரட் – ஒன்று (மெல்லிய ஸ்லைஸ்களாக வெட்டவும்)
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – 3 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 4 டீஸ்பூன்

செய்முறை:
கேரட்டை சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு முட்டையிலிருந்து மஞ்சள் கருவைப் பிரித்தெடுத்து வெள்ளைக் கருவை மட்டும் தனியே வைக்கவும். மீதம் இருக்கும் 2 முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி இந்த மஞ்சள் கரு மற்றும் உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடிக்கவும்.

தோசைக்கல்லை சுடவைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டைக் கலவையில் பாதியை மட்டும் ஊற்றி நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை இடைவெளி இல்லாமல் தூவவும். வெந்ததும் திருப்பிப்போட்டு சில நொடிகள் கழித்து உடனே திருப்பிப் போட்டு எடுக்க வேண்டும். அதிகம் வேகவிட்டால் இலைகள் கருகிவிடும். கொத்தமல்லி இலைகளுடன் புதினா இலைகளும் பயன்படுத்தலாம். ஓரங்களை கத்திவைத்து நேராக வெட்டி எடுக்கவும்.

இதை போல் தோசைக்கல்லை சுடவைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதம் இருக்கும் முட்டைக் கலவையை ஊற்றி மேலே வேகவைத்த கேரட்டை இடைவெளி இல்லாமல் அடுக்கி வைக்கவும்.
மூடி போட்டு சிறுதீயில் வேகவைக்கவும். வெந்தவுடன் கவனமாக எடுத்து ஓரங்களை வெட்டவும். தோசைக்கல்லை சுடவைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியே வைத்திருந்த முட்டை வெள்ளைக் கருவை சிறிது உப்புடன் கலந்து அடித்து கல்லில் ஊற்றவும்.

வெட்டி வைத்த கேரட் ஆம்லெட் மற்றும் கொத்தமல்லிமல்லி ஆம்லெட்டை வெள்ளைக் கரு ஆம்லெட்டின் இரண்டு ஓரங்களில் கொஞ்சம் மேலே படும்படி வைத்து வேகவிடவும். வெள்ளைக்கரு வெந்தவுடன் கவனமாக எடுக்கவும். ஓரங்களை சதுர வடிவம் வருமாறு வெட்டி எடுத்துப் பரிமாறவும்.
கருவுற்றிருக்கும் பெண்கள், முட்டை சூப், அவித்த முட்டை, முட்டைத் துருவல் என உட்கொள்ளலாம். ஆஃப் பாயிலுக்குக் கண்டிப்பாக `நோ’ சொல்லிவிட வேண்டும்.
சீஸ் ஆம்லெட்
தேவையானவை: 2 ஆம்லெட் செய்ய
முட்டை – 2
செடார் சீஸ் (துருவியது) – 3 டேபிள்ஸ்பூன் (அல்லது மொசரெல்லா அல்லது வேறு ஏதாவது சீஸ்)
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வெண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:
முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி 2 டேபிள்ஸ்பூன் துருவிய செடார் சீஸ், மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ், உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும். ஒரு தோசைக்கல்லை சுடவைத்து, வெண்ணெய் சேர்த்து சூடானதும் முட்டைக் கலவையை ஊற்றவும். மேலே மீதம் இருக்கும் சீஸ் தூவி மூடி போட்டு வேகவைக்கவும். முட்டை வெந்ததும் திருப்பிப் போடாமல் அடுப்பிலிருந்து எடுத்துப் பரிமாறவும். மூடி போடாமல் முட்டைக்கலவையின் ஓரங்களை மடித்து வேகவைத்தும் பரிமாறலாம்.
கடினமான உடற்பயிற்சி செய்பவர்களைத் தவிர மற்றவர்கள் பச்சையாக முட்டையைச் சாப்பிடக் கூடாது. தொடர்ந்து பச்சை முட்டை சாப்பிடுபவர்களுக்கு பயோட்டின் (வைட்டமின்-பி) குறைபாடு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.