Published:Updated:

ஃப்ளவர் ரெசிப்பி

ஃப்ளவர் ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
News
ஃப்ளவர் ரெசிப்பி

ஹேமலதா

மையலில் காய்கறிகளைப் பயன்படுத்துவதைத் தாண்டி பூக்களிலும் சமையல் செய்யும் பழக்கம் இப்போது அதிகரித்துவருகிறது. காய்கறிகளைப் போலவே பூக்களிலும் சத்துகளும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. பொதுவாக வாழைப்பூ, காலிஃப்ளவர், வேப்பம்பூ போன்றவற்றைச் சமையலில் பயன்படுத்தி வருகிறோம். ரோஜாப்பூ, தாமரை, செம்பருத்தி, ஆவாரம்பூ போன்றவற்றையும் பயன்படுத்தி வித்தியாசமான, ருசிகரமான உணவு வகைகளைத் தயாரித்து, பரிமாறி குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

ஃப்ளவர் ரெசிப்பி

இந்த வகையில் பல்வேறு பூக்களை வைத்து ஃப்ரைடு ரைஸ், கப் கேக், வறுவல், சாம்பார், சர்பத் என பத்து வகையான ரெசிப்பிகளைச் செய்துகாட்டி அசத்துகிறார், சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் ஹேமலதா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கோபி ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை:

  • பாஸ்மதி அரிசி - ஒரு கப்

  • காலிஃப்ளவர் (சிறிய பூக்களாக நறுக்கியது) - ஒரு கப்

  • பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் - தலா 3 டீஸ்பூன்

  • இஞ்சி, பூண்டு (பொடியாக நறுக்கியது) - தலா ஒரு டீஸ்பூன்

  • நறுக்கிய குடமிளகாய் - அரை கப்

  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - தேவையான அளவு

  • கிரீன் சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்

  • மைதா, சோள மாவு, கடலை மாவு - தலா 3 டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

  • ரெட் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை

  • நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு

  • மிளகுத்தூள், எண்ணெய், உப்பு, - தேவையான அளவு

கோபி ஃப்ரைடு ரைஸ்
கோபி ஃப்ரைடு ரைஸ்

செய்முறை:

காலிஃப்ளவரைச் சுத்தம் செய்யவும். மைதா, சோள மாவு, கடலை மாவு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த் தூள், உப்பு, சிவப்பு ஃபுட் கலரை சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கலந்து அதில் காலிஃப்ளவரைத் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். அரிசியை வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் கேரட், பீன்ஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பின்பு உப்பு, கிரீன் சில்லி சாஸ் சேர்த்து வதக்கி, சாதத்தைச் சேர்க்கவும். கடைசியாக மிளகுத்தூள், வறுத்த காலிஃப்ளவர் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயத்தாள் கொண்டு அலங்கரிக்கவும்.

மூட்டுவலியைக் குறைப்பதில் காலிஃப்ளவர் முக்கிய பங்கு வகிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃப்ளவர் ரெசிப்பி
ஃப்ளவர் ரெசிப்பி

ரோஸ் கப் கேக்

தேவையானவை:

  • மைதா - ஒரு கப்

  • பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

  • பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

  • தயிர் - அரை கப்

  • ரோஸ் சாறு - ஒரு கப்

  • ரோஸ் எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

  • சர்க்கரை (பொடித்தது) - ஒரு கப்

  • எண்ணெய் - 100 மில்லி

ரோஸ் கப் கேக்
ரோஸ் கப் கேக்

செய்முறை:

மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை சலித்துக் கொள்ளவும். பின்பு அதில் எண்ணெய், தயிர், ரோஸ் சாறு, சர்க்கரை மற்றும் ரோஸ் எசென்ஸ் சேர்த்துக் கலந்து அவனில் (oven) 180 டிகிரி சென்டிகிரேடில் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுத்துப் பரிமாறவும்.

தயிரில் தண்ணீரைக் கலந்தாலே அது மோர் ஆகிவிடாது. தயிரைக் கடைந்து, அதிலிருந்து வெண்ணெயைப் பிரித்தெடுத்தால் மட்டுமே அது மோர்.

முருங்கைப்பூ வடை

தேவையானவை:

  • முருங்கைப்பூ - ஒரு கப்

  • கடலைப்பருப்பு - ஒரு கப்

  • வெங்காயம் - ஒன்று

  • பச்சை மிளகாய் - 2

  • இஞ்சி - பூண்டு - சோம்பு விழுது - ஒரு டீஸ்பூன்

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

முருங்கைப்பூ வடை
முருங்கைப்பூ வடை

செய்முறை:

கடலைப்பருப்பை 4 மணி நேரம் ஊறவைத்து பின்பு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதில் முருங்கைப்பூ, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு - சோம்பு விழுது, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து, வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப்பூவுக்கு உண்டு.

ஆவாரம்பூ டீ

தேவையானவை:

  • ஆவாரம்பூ (காய்ந்தது) - 2 டீஸ்பூன்

  • தண்ணீர் - ஒரு கப்

  • தேன் / நாட்டுச்சர்க்கரை - ஒன்றரை டீஸ்பூன்

ஆவாரம்பூ டீ
ஆவாரம்பூ டீ

செய்முறை:

ஒரு கப் தண்ணீரில் ஆவாரம்பூவைப் போட்டு நன்கு கொதிக்கவிடவும். பூவின் சாறும் நிறமும் இறங்கியபின் அதை வடிகட்டி தேன் சேர்த்துப் பரிமாறவும். இது நீரிழிவாளர்களுக்கு மிகவும் நல்லது.

ஆவாரம்பூ டீ
ஆவாரம்பூ டீ

ஆவாரம்பூ முக அழகைப் பேணவும், சருமப் பிரச்னைகளைப் போக்கவும் உதவும்.

புரொக்கோலி மஞ்சூரியன்

தேவையானவை:

  • புரொக்கோலி (சிறு பூக்களாக நறுக்கவும்) - ஒரு கப்

  • மைதா - அரை கப்

  • சோள மாவு - அரை கப்

  • மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

புரொக்கோலி மஞ்சூரியன்
புரொக்கோலி மஞ்சூரியன்

மஞ்சூரியன் செய்ய:

  • வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

  • இஞ்சி (பொடியாக நறுக்கியது) - ஒரு டீஸ்பூன்

  • பூண்டு (பொடியாக நறுக்கியது) - ஒரு டீஸ்பூன்

  • குடமிளகாய் - ஒன்று (நறுக்கவும்)

  • நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டீஸ்பூன்

  • சோள மாவு - 2 டீஸ்பூன்

  • ரெட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்

  • டொமேட்டோ சாஸ் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

புரொக்கோலியைச் சுத்தம் செய்யவும். பின்பு மைதா, சோள மாவு, மிளகுத்தூள், உப்புடன் தண்ணீர் சேர்த்து, மாவு பதத்துக்குக் கரைத்து, அதில் புரொக்கோலியை தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு இஞ்சி, பூண்டு, வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் உப்பு, ரெட் சில்லி சாஸ், தக்காளி சாஸ் சேர்க்கவும். சோள மாவைத் தண்ணீரில் கரைத்து ஊற்றவும் ஒரு கொதி வந்தவுடன் பொரித்த புரொக்கோலி சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தாளையும் சேர்க்கவும். புரொக்கோலி மஞ்சூரியன் தயார்.

புரொக்கோலியின் இலைகளிலும் தண்டுகளிலும் பினாலிக், ஆன்டி ஆக்ஸிடன்ட், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல மூலக்கூறுகள் அடங்கியுள்ளன.

வேப்பம்பூப்பொடி சாதம்

தேவையானவை:

  • காய்ந்த வேப்பம்பூ - 50 கிராம்

  • கறிவேப்பிலை - 100 கிராம்

  • மிளகு - 25 கிராம்

  • சுக்கு - 25 கிராம்

  • உளுத்தம்பருப்பு - 100 கிராம்

  • கடலைப்பருப்பு - 100 கிராம்

  • பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் - 4

  • உப்பு - தேவையான அளவு

வேப்பம்பூப்பொடி சாதம்
வேப்பம்பூப்பொடி சாதம்

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தையும் கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் தனித்தனியாக வறுத்து பின்பு அரைக்கவும். இந்தப் பொடியை வேகவைத்த சாதத்துடன் தேவையான அளவு சேர்த்து, நெய் ஊற்றிக் கலந்து சாப்பிடவும்.

உடல் உஷ்ணத்தைப் போக்கும் சக்தி வேப்பம்பூவுக்கு உண்டு.

வாழைப்பூ - 65

தேவையானவை:

  • வாழைப்பூ - ஒரு கப் (சுத்தம் செய்தது)

  • கடலை மாவு, மைதா, சோள மாவு - தலா 2 டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

  • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

  • ரெட் ஃபுட் கலர் (தேவைப்பட்டால்) - ஒரு சிட்டிகை

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

வாழைப்பூ - 65
வாழைப்பூ - 65

செய்முறை:

கடலை மாவு, மைதா, சோள மாவு, மற்ற பொருள்கள் அனைத்தையும் (எண்ணெய், வாழைப்பூ நீங்கலாக) சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். பின்பு அதில் பூவைத் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கர்ப்பப்பைக்கு வாழைப்பூ மிகவும் நல்லது.

ஆவாரம்பூ சாம்பார்

தேவையானவை:

  • காய்ந்த ஆவாரம்பூ - அரை கப்

  • துவரம்பருப்பு - ஒரு கப்

  • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

  • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

  • சீரகம் - அரை டீஸ்பூன்

  • தேவையான காய்கறிகள் (நறுக்கியது) - ஒரு கப்

  • வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

  • புளி - ஒரு எலுமிச்சை அளவு

  • தக்காளி - 2 (நறுக்கவும்)

  • கடுகு, பூண்டு - தாளிக்கத் தேவையான அளவு

  • குழம்பு மிளகாய்த்தூள் (காய்ந்த மிளகாய், தனியா சேர்த்து அரைத்தது) - 3 டீஸ்பூன்

  • கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

  • எண்ணெய் - உப்பு - தேவையான அளவு

ஆவாரம்பூ சாம்பார்
ஆவாரம்பூ சாம்பார்

செய்முறை:

துவரம்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகத்துடன் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு, பூண்டு தாளித்து, வெங்காயம், தக்காளி மற்ற காய்கறிகள் மற்றும் பூவைச் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் குழம்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும். பின்பு தேவையான நீர் சேர்த்து மூடி போட்டு காய்கறிகளை வேகவைக்கவும். வெந்தவுடன் அதில் புளிக்கரைசல், உப்பு மற்றும் பருப்பு சேர்த்துக் கலந்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். கொத்தமல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அலங்கரிக்கவும்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் தன்மை ஆவாரம்பூவுக்கு உண்டு.

பூசணிப்பூ ஃப்ரிட்டர்ஸ்

தேவையானவை:

  • பூசணிப்பூ - 8 -10 பூ இதழ்கள்

  • வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கவும்)

  • கடலை மாவு - 2 டீஸ்பூன்

  • மைதா - ஒரு டீஸ்பூன்

  • சோள மாவு - அரை ஸ்பூன்

  • கொத்தமல்லித்தழை - அரை கப்

  • பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),

  • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

  • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

பூசணிப்பூ ஃப்ரிட்டர்ஸ்
பூசணிப்பூ ஃப்ரிட்டர்ஸ்

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ளவை அனைத் தையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்றாகச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றிப் பிசையவும். மாவை தோசை தவாவில் வட்டமாகத் தட்டி, எண்ணெய்விட்டுச் சுட்டெடுக்கவும்.

பூசணிப்பூவுக்கு, அரசாணிப்பூ என்ற பெயரும் உண்டு.

செம்பருத்தி மாதுளை சர்பத்

தேவையானவை:

  • மாதுளை முத்துகள் - அரை கப்

  • செம்பருத்திப்பூ - 2 (இதழ்கள் மட்டும்)

  • தேன்/சர்க்கரை - 2 டீஸ்பூன்

  • தண்ணீர் - 250 மில்லி

செம்பருத்தி மாதுளை சர்பத்
செம்பருத்தி மாதுளை சர்பத்

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, பின்பு வடிகட்டி பரிமாறவும்.

கூந்தல் வளர்ச்சிக்கும், பொடுகு போன்ற பிரச்னைகளுக்கும் செம்பருத்தி தீர்வு தரும்.

கிரிஸ்பி லோட்டஸ் ஃப்ளவர்

தேவையானவை:

  • தாமரை - ஒரு பூவின் இதழ்கள்

  • மைதா மாவு - 2 டீஸ்பூன்

  • சோள மாவு - 2 டீஸ்பூன்

  • மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • ரெட் கலர் (தேவைப்பட்டால்) - ஒரு சிட்டிகை

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கிரிஸ்பி லோட்டஸ் ஃப்ளவர்
கிரிஸ்பி லோட்டஸ் ஃப்ளவர்

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தையும் (எண்ணெய், தாமரை நீங்கலாக) தண்ணீர் விட்டுக் கரைக்கவும். அதில் தாமரை இதழ்களைத் தோய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

ஈரல் பாதிப்பு, குடல்புண், தேக எரிச்சல், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடு ஆகியவற்றை நீக்கும் தன்மை தாமரைப்பூவுக்கு உண்டு.