Published:Updated:

ராஜ்மா ஸ்பெஷல் ரெசிப்பிகள்

ராஜ்மா
பிரீமியம் ஸ்டோரி
ராஜ்மா

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: ஜலீலா கமால்

ராஜ்மா ஸ்பெஷல் ரெசிப்பிகள்

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: ஜலீலா கமால்

Published:Updated:
ராஜ்மா
பிரீமியம் ஸ்டோரி
ராஜ்மா

துபாயில் வசிக்கிற ஜலீலா கமாலின் சொந்த ஊர் சென்னை. பத்து ஆண்டுகளாக samaiyalattakaasam.blogspot.com, cookbookjaleela.blogspot.com ஆகிய தளங்களிலும், `samaiyal attakaasam’ யூடியூப் சேனலிலும் ரெசிப்பிகளைப் பதிவிட்டு வருகிறார்.

ராஜ்மா ஸ்பெஷல் ரெசிப்பிகள்

``என் பிள்ளைகளுக்காக விதவிதமாக செய்ய ஆரம்பித்தேன். பிள்ளைகளுக்குக் காய்கறிகளே பிடிக்காது. அதை எப்படி சாப்பிட வைக்கலாம் என்று ஆராய்ந்து எல்லா காய்கறிகளையும் பீட்சா, நூடுல்ஸ், முர்தபா, ஸ்டஃப்டு இட்லி, சாண்ட்விச், சூப்பில் சேர்த்துக் கொடுப்பேன். கத்திரிக்காய் என்று சொன்னால் காத தூரம் ஓடும் பிள்ளகளுக்கு சிப்ஸாக செய்து கத்திரிக்காய் என்று கண்டிபிடிக்காத அளவுக்குக் கொடுத்துவிடுவேன். கீரையை சூப்பாக, வடையாக, பக்கோடாவாக, பத்திரியாக (தட்டு ரொட்டி) செய்துவிடுவேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜ்மா ஸ்பெஷல் ரெசிப்பிகள்

ராஜ்மாவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது. ராஜ்மாவில் கேன்சர் நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது. ரத்தசோகையைப் போக்கும். தசைகளை வலுவாக்கும்’’ என்கிற ஜலீலா கமால் வழங்கும் ராஜ்மா ரெசிப்பிகள் இங்கே இடம்பெறுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராஜ்மா புலாவ்

தேவையானவை:

 • பாஸ்மதி அரிசி - 200 கிராம்

 • ராஜ்மா - 100 கிராம்

 • இஞ்சி - பூண்டு விழுது - ‍ஒரு டீஸ்பூன்

 • தக்காளி - ஒன்று

 • வெங்காயம் - ஒன்று

 • கொத்தமல்லி, புதினா இலை - சிறிதளவு

 • புரொக்கோலி - உதிர்த்த 3 பூக்கள்

 • கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு‍ - 50 கிராம்

 • பச்சைப் பட்டாணி - ஒரு டீஸ்பூன்

 • பச்சை மிளகாய் - ஒன்று

 • மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன்

 • கரம் மசாலாத்தூள் ‍- கால் டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 • சர்க்கரை ‍- கால் டீஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

 • நெய் - எண்ணெய் கலவை - 2 டேபிள்ஸ்பூன்

 • நெய் - அரை டீஸ்பூன்

ராஜ்மா ஸ்பெஷல் ரெசிப்பிகள்

செய்முறை

ராஜ்மாவை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் சேர்த்து எட்டில் இருந்து பத்து விசில்விட்டு வேகவைக்கவும். அரிசியைக் களைந்து ஊறவைக்கவும். புரொக்கோலியை உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும். கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளி, கொத்தமல்லி, புதினா இலைகள், பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை ஏற்றி நெய் - எண்ணெய் கலவையை ஊற்றிக் காயவைத்து வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும். பிறகு புரொக்கோலி, நறுக்கிவைத்துள்ள கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பட்டாணி மற்றும் வேகவைத்த ராஜ்மா சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சர்க்கரையைச் சேர்த்து நன்கு வதக்கி அரைத்த விழுதைச் சேர்த்து சிறிது நேரம் சிறிய தீயில் வேகவிடவும். ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு தண்ணீர் அளந்து ஊற்றிக் கொதிக்கவிட்டு அரிசியை வடித்துப் போட்டு கரம் மசாலாத்தூள் மற்றும் அரை டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு குக்கரை மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும். பிறகு ஆவி அடங்கியதும் நன்கு ஒரு ஃபோர்க்கால் கிளறி உடனே வேறு பாத்திரத்தில் மாற்றவும். மிக அருமையான சத்தான ராஜ்மா புலாவ் ரெடி. இதற்குத் தொட்டுக்கொள்ள தயிர்ப்பச்சடி, அப்பளம், சேப்பங்கிழங்கு வறுவல் நல்ல காம்பினேஷன்.

இந்தியில் ‘ராஜ்மா’, ஆங்கிலத்தில் ரெட் கிட்னி பீன்ஸ், தெலுங்கில் ‘பாரிகலு’, கன்னடத்தில் ‘திங்கல நாரி’ என்று அழைக்கப்படுகிறது இந்த சிவப்பு பீன்ஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராஜபோக ராஜ்மா கட்லெட்

தேவையானவை:

 • வேகவைத்த ராஜ்மா - 100 கிராம்

 • வேகவைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 25 கிராம்

 • வேகவைத்த கேரட் - 25 கிராம்

 • வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 • பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கவும்)

 • பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 • கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

 • சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

 • இஞ்சி (துருவியது) - அரை டீஸ்பூன்

 • சில்லி ஃப்ளேக்ஸ் - கால் டீஸ்பூன்

 • கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கட்லெட் கோட்டிங் கொடுக்க:

 • கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன்

 • மைதா - ஒரு டீஸ்பூன்

 • பிரெட் கிரம்ஸ் - கால் கப்

 • ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்

 • ரவை - 2 டீஸ்பூன்

 • மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு

ராஜ்மா ஸ்பெஷல் ரெசிப்பிகள்

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், துருவிய இஞ்சி சேர்த்து தாளிக்கவும். பிறகு சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு சேர்த்து வதக்கி, வேகவைத்த ராஜ்மா சேர்த்து நன்கு கிளறி ஆறவைக்கவும்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் கேரட்டை வேகவைத்து மசித்து வைக்கவும். இதை ராஜ்மா கலவையுடன் சேர்த்து கொத்த

மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி சேர்த்து அத்துடன் கரம் மசாலாத்தூள் மற்றும் சாட் மசாலாவைச் சேர்த்து நன்கு பிசறி வைக்கவும்.

கோட்டிங் கொடுக்க:

மைதாவையும் கார்ன் மாவையும் சேர்த்து அதில் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் போட்டு தண்ணீர் ஊற்றி கட்டியாகக் கலக்கி வைக்கவும். பிரெட் கிரம்ஸ் உடன் ரவை மற்றும் ஓட்ஸைக் கலந்து அதில் சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

ராஜ்மா கலவையைச் சிறு உருண்டைகளாக உருட்டி, வேண்டிய வடிவில் ஷேப் செய்து மைதா - கார்ன் கலவையில் தோய்த்து, பிரெட் கிரம்ஸ் - ஓட்ஸ் - ரவை கலவையில் நன்கு கோட்டிங் கொடுத்துப் புரட்டி தட்டில் அடுக்கிவைத்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். தவாவை சூடுபடுத்தி எண்ணெய்விட்டு கட்லெட்டைப் போட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு மொறுமொறுப்பாக எடுக்கவும். இதை கெட்சப் அல்லது சட்னியுடன் சேர்த்து மாலை நேர சிற்றுண்டியாகச் சாப்பிட அருமையாக இருக்கும்.

ராஜ்மாவில் அளவில் சிறிய வகையும் உண்டு. அது பெரிய ராஜ்மாவைவிட வேகமாக வெந்துவிடும்.

ராஜ்மா சாண்ட்விச்

தேவையானவை:

 • பிரெட் ஸ்லைஸ் - 6

 • வேகவைத்த ராஜ்மா - 100 கிராம்

 • பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள்

 • குடமிளகாய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

 • பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்

 • நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் - 2 டேபிள்ஸ்பூன்

 • பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கவும்)

 • வெங்காயம் - ஒன்று மீடியம் (பொடியாக நறுக்கவும்)

 • பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 • சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • ஒரிகானோ - 2 டீஸ்பூன்

 • தக்காளி சாஸ் - தேவைக்கேற்ப

 • மொசரெல்லா சீஸ் - தேவைக்கேற்ப

 • ஆலிவ் ஆயில், உப்பு - தேவையான அளவு

 • வெண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்

ராஜ்மா ஸ்பெஷல் ரெசிப்பிகள்

செய்முறை:

ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் சேர்த்து பூண்டு, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். அடுத்து வெங்காயம், முட்டைகோஸ், வெங்காயத்தாள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். அடுத்து ராஜ்மா சேர்த்து வதக்கவும். கடைசியாக குடமிளகாய் வகைகளைச் சேர்த்து ஒரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ் தூவி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஒரு பிரெட் ஸ்லைஸில் தக்காளி சாஸ் தடவி, அதன் மேல் மொசரெல்லா சீஸ் தூவி, செய்துவைத்த ஃபில்லிங்கை தேவையான அளவு வைத்து மேலே மொசரெல்லா சீஸ் தூவி, மற்றொரு பிரெட் ஸ்லைஸில் தக்காளி சாஸ் தடவி மூடி சாண்ட்விச் மேக்கரில் ஒரு மேஜை கரண்டி வெண்ணெயை இரண்டு பகுதியிலும் தடவி தயார் செய்து வைத்துள்ள பிரெட் சாண்ட்விச்சை வைத்து கருகாமல் கிரில் செய்து எடுக்கவும் இதேபோல மற்ற பிரெட் ஸ்லைஸ்களையும் செய்யவும்.

ரொம்பவே சுவையான ஹெல்த்தியான, வித்தியாசமான ராஜ்மா சாண்ட்விச் ரெடி.

மற்ற பீன்ஸை போல ஊறவைத்த தண்ணீரை வடிக்காமல், அதே தண்ணீருடன் வேகவைத்தால் கிரேவிக்கு அடர் சிவப்பு நிறம் கிடைக்கும்.

ராஜ்மா மசாலா (சௌராஷ்டிர முறை)

தேவையானவை:

 • வேகவைத்த ராஜ்மா - 100 கிராம்

வறுத்துப் பொடிக்க:

 • மிளகு - அரை டீஸ்பூன்

 • சீரகம் - அரை டீஸ்பூன்

 • சோம்பு - அரை டீஸ்பூன்

 • கிராம்பு - ஒன்று

 • காய்ந்த மிளகாய் - ஒன்று

 • மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்

தாளிக்க:

 • வெண்ணெய் - 2 டீஸ்பூன்

 • வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 • தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 • புதினா – 8 இதழ்கள்

 • இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

 • உப்பு – தேவையான அளவு

ராஜ்மா ஸ்பெஷல் ரெசிப்பிகள்

செய்முறை:

வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றைப் பொடித்துக்கொள்ளவும். ஒரு கடாயில் வெண்ணெயைச் சேர்த்து சூடாக்கி வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பிறகு, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். வறுத்துப் பொடித்த பொடி, சேர்த்து நன்கு கிளறி வெந்த ராஜ்மாவையும் சேர்த்து நன்கு புரட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மசாலா முழுவதும் ராஜ்மாவுடன் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.

இது சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

ராஜ்மாவை உபயோகித்து சுண்டல், கிரேவி, தால் மட்டுமல்ல... கட்லெட்டும் செய்யலாம். மெக்ஸிகன் உணவில் இதை உபயோகித்து ‘டிப்’ செய்வார்கள். சோள மாவைப் பயன்படுத்தி செய்யும் ரொட்டியின் மத்தியில் இதை மசித்து வைக்கும் உணவும் உண்டு.

ராஜ்மா பராத்தா

தேவையானவை – பராத்தா தயாரிக்க:

 • கோதுமை மாவு - 2 டம்ளர்

 • சர்க்கரை - அரை டீஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

 • கருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்

 • பால் - கால் டம்ளர்

 • தண்ணீர் - அரை டம்ளர் + தேவைக்கேற்ப

 • நெய் - அரை டீஸ்பூன்

ஃபில்லிங் செய்ய:

 • நன்கு வேகவைத்த ராஜ்மா - அரை கப்

 • வேகவைத்த உருளைக்கிழங்கு - ஒன்று (மீடியம் சைஸ்)

 • பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 • இஞ்சி (துருவியது) - அரை டீஸ்பூன்

 • ஓமம் - கால் டீஸ்பூன்

 • சீரகம் - ஒரு சிட்டிகை

 • எண்ணெய் - சிறிதளவு

 • உப்பு - தேவையான அளவு

 • ஆம்சூர் பவுடர் - கால் டீஸ்பூன்

 • நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்

ராஜ்மா ஸ்பெஷல் ரெசிப்பிகள்

செய்முறை:

கோதுமை மாவில் உப்பு, சர்க்கரை, கருஞ்சீரகம், நெய் சேர்த்துக் கலந்து, பால் மற்றும் தண்ணீரை லேசாக சூடுபடுத்தி மாவில் ஊற்றி, ஒரு ஃபோர்க்கால் கிளறி ஒரு நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மீண்டும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். மாவை சிறிது நேரம் மூடி வைக்கவும்.

ஃபில்லிங் தயாரிக்க:

வேகவைத்த ராஜ்மாவையும் உருளைக்கிழங்கை யும் ஒன்றாகச் சேர்த்து மசித்து வைக்க வும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடு படுத்தி ஓமம், சீரகம் சேர்த்துத் தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சியை சேர்த்து வதக்கவும். ராஜ்மா மற்றும் உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு கிளறி அதில் உப்பு மற்றும் ஆம்சூர் பொடி சேர்த்து, கடைசியாக கொத்துமல்லித்தழை தூவி கிளறி ஆறவைக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

பராத்தா செய்ய:

பிசைந்த கோதுமை மாவை சரிபாகமாக ஆறு உருண்டைகளாகப் பிரித்து, ஒரு உருண்டை எடுத்து சிறிதளவு மாவு தோய்த்து சிறிது வட்ட வடிவமாக திக்காக உருட்டி அதில் நாம் ஏற்கெனவே செய்து வைத்துள்ள ராஜ்மா ஃபில்லிங் உருண்டையை நடுவில் வைத்து மாவைக்கொண்டு ஃபில்லிங்கை மூடி நன்கு உருட்டி மீண்டும் சப்பாத்தி கட்டையில் வைத்து மெதுவாக பராத்தாவை வட்ட வடிவத்தில் பரத்தவும். ஒரு இரும்பு தவாவைச் சூடுபடுத்தி பாராத்தாவை போட்டு, சுற்றிலும் நெய்விட்டு இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து எடுக்கவும்.

100 கிராம் ராஜ்மாவில் மாவுச்சத்து 60.6 கிராம், புரதம் 22.9 கிராம், நார்ச்சத்து 4.8 கிராம், தாதுக்கள் 3.2 கிராம், கொழுப்பு 1.3 கிராம் அடங்கியுள்ளன.

ராஜ்மா புளிக்குழம்பு

தேவையானவை:

 • வேகவைத்த ராஜ்மா - அரை டம்ளர்

 • வேகவைத்த சேப்பங்கிழங்கு - 3

 • புளி - சிறிய எலுமிச்சை அளவு

 • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

 • வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

 • தக்காளி - ஒன்று (அரைக்கவும்)

 • நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்

வறுத்துப் பொடிக்க:

 • மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன்

 • காய்ந்த மிளகாய் - 3

 • தேங்காய் - 3 பத்தை

 • சீரகம் - அரை டீஸ்பூன்

தாளிக்க:

 • நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

 • கடுகு - ஒரு டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - சிறிதளவு

 • பூண்டு - 3 பல் (நறுக்கவும்)

 • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

ராஜ்மா ஸ்பெஷல் ரெசிப்பிகள்

செய்முறை

ராஜ்மாவை இரவில் ஊறவைக்கவும் (சுமார் எட்டு மணி நேரம்). காலையில் குக்கரில் வேகவைக்கவும். சேப்பங்கிழங்கை மீடியம் சைஸாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். காய்ந்த மிளகாய், மல்லி, சீரகத்தை வறுத்து தேங்காயுடன் சேர்த்து கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும்.

கடாயில் நல்லெண்ணெய்விட்டு சூடாக்கி, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்த தக்காளியைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் குறைவான தீயில் வதங்கவிட்டு, வேகவைத்து வைத்துள்ள ராஜ்மா மற்றும் சேப்பங்கிழங்கைச் சேர்த்து வதக்கி கொதிக்கவிட்டு, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து, கொரகொரப்பாக பொடித்து வைத்துள்ளதையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். எல்லாம் சேர்ந்து கொதித்து குழம்பு பதம் வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான ராஜ்மா புளிக்குழம்பு ரெடி.

பரிமாறும்போது பொடியாக நறுக்கிய வெங்காயம், இரண்டாக அரிந்த எலுமிச்சைப்பழத்தை மேலே பிழிந்து சாப்பிட்டால் அதிக ருசியாக இருக்கும். இதில் உள்ள இரும்புச்சத்து உறிஞ்சப்படவும் உதவும். இந்த கிரேவியை சாதத்துடன் சாப்பிடுபவர்களும் உண்டு.

கலர்ஃபுல் ராஜ்மா சாலட்

தேவையானவை:

 • லெட்டியூஸ் இலை - ஒரு கப் (நறுக்கவும்)

 • தில் இலை - கால் கப் (நறுக்கவும்)

 • வேகவைத்த ராஜ்மா - 100 கிராம்

 • நீளவாக்கில் நறுக்கிய வயலட் கோஸ் - 2 டேபிள்ஸ்பூன்

 • நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் - 2 டேபிள்ஸ்பூன்

 • நீளவாக்கில் நறுக்கிய மூவண்ண குடமிளகாய் - 3 டேபிள்ஸ்பூன்

 • சோளம் - 2 டேபிள்ஸ்பூன்

 • ஆலிவ் ஆயில் - சிறிதளவு

 • எலுமிச்சைச்சாறு - சிறிதளவு

 • உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

டிரஸ்ஸிங் செய்ய:

 • உப்பு - முக்கால் டீஸ்பூன்

 • மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்

 • ஆப்பிள் சைடர் வினிகர் - ஒரு டீஸ்பூன்

 • சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • ஆலிவ் ஆயில் - 3 டீஸ்பூன்

 • தயிர் - 175 மில்லி

ராஜ்மா ஸ்பெஷல் ரெசிப்பிகள்

செய்முறை:

தயிரை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி கெட்டியான தயிராக எடுக்கவும். வாயகன்ற பவுலில் முதலில் வடிகட்டிய தயிரைச் சேர்க்கவும். அதில் ஆலிவ் ஆயில், சோயா சாஸ், ஆப்பிள் சைடர் வினிகர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

வேகவைத்த ராஜ்மாவைச் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து உப்பு, மிளகுத்தூள் தூவி லேசாக வறுத்துக்கொள்ளவும். பிறகு நறுக்கிவைத்துள்ள சாலட் இலைகள் மற்றும் காய் வகைகள் (மூவண்ண குடமிளகாய் மற்றும் இரண்டு வகையான கோஸ்), வறுத்து வைத்த ராஜ்மா, சோளம் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக எலுமிச்சைச்சாறு சிறிதளவு சேர்த்து கிளறிப் பரிமாறவும். அனைத்து சத்துகளும் அடங்கிய அருமையான சாலட் ரெடி.

இன்னும் க்ரீமியாக வேண்டும் என்றால் ஃப்ரெஷ் க்ரீம் அல்லது எக்லெஸ் மயோ னைஸ் சேர்த்துக்கொள்ளலாம்.

ராஜ்மாவில் கால்சியமும் இரும்புச்சத்தும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புகள் அடர்த்தி இழக்கும் நிலையைத் தடுக்கவும் உதவும்.

ராஜ்மா மினி ஸ்லைடர்

தேவையானவை:

 • வேகவைத்த ராஜ்மா - 100 கிராம்

 • துருவி வேகவைத்த பீட்ரூட் - 2 டேபிள்ஸ்பூன்

 • வேகவைத்த மஞ்சள் பூசணி - 4 சதுர வடிவ துண்டுகள்

 • உப்பு - தேவைக்கேற்ப

 • வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • வெங்காயப் பொடி - ஒரு டீஸ்பூன்

 • பூண்டுப் பொடி - அரை டீஸ்பூன்

 • துளசி இலை - கால் டீஸ்பூன்

 • பிரெட் ஸ்லைஸ் - 2

 • சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்

 • கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

 • பிரெட் கிரம்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

மினி ஸ்லைடருக்கு:

 • ரெடி செய்து வைத்து இருக்கும் – ராஜ்மா ஸ்லைடர்கள் 5

 • குட்டி பன் - 5

 • லெட்டியூஸ் இலை அல்லது

 • ஐஸ்பர்க் லெட்டியூஸ் – தேவைக்கேற்ப

 • வட்டவடிவமாக வெட்டிய வெங்காயம் மற்றும்

 • தக்காளி - தேவைக்கேற்ப

 • தக்காளி சாஸ் - தேவைக்கேற்ப

 • சதுர வடிவ சீஸ் – 5 எண்ணிக்கை

 • வெண்ணெய் - தேவைக்கேற்ப

ராஜ்மா ஸ்பெஷல் ரெசிப்பிகள்

செய்முறை:

மிக்ஸியில் பிரெட் ஸ்லைஸ் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்துப் பொடிக்கவும். ஒரு பவுலில் வேகவைத்த ராஜ்மா, பீட்ரூட், மஞ்சள் பூசணி சேர்த்துக் கலக்கி, அதை வேறு பவுலுக்கு மாற்றி, அதில் வெங்காயப் பொடி, பூண்டுப் பொடி, துளசி இலை, வெள்ளை மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து பொடித்த பிரெட் கலவை பாதியைச் சேர்க்கவும். இதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து மீண்டும் பவுலில் மாற்றவும். அதில் கலவை பர்கர் பதத்துக்கு வர, கோதுமை மாவு மற்றும் பிரெட் கிரம்ஸ், மீதி உள்ள பொடித்த பிரெட் சேர்த்து நன்கு கலக்கி உள்ளங்கைக்கும் சிறியதாக, கெட்டியாக வட்ட வடிவில் தட்டவும். தவாவில் எண்ணெய் ஊற்றி இந்த மினி ஸ்லைடரை இரண்டு பக்கமும் பொரித்தெடுக்கவும்.

ராஜ்மா மினி ஸ்லைட் அரேஞ்ச் செய்ய:

மினி பன்னைப் பாதியாக வெட்டி இரண்டு பக்கமும் வெண்ணெய் தடவி தவாவில் சூடுபடுத்தவும். ஒரு பாதி மினி பன்னின் மேலே, ஒரு டீஸ்பூன் அளவு தக்காளி சாஸை தடவி, லெட்டியூஸ் இலையை பன் அளவுக்கு கட் செய்து வைத்து அதன் மேல் வட்டமாக நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயம், அதற்கு மேல் பொரித்து வைத்த ராஜ்மா பர்கர்/ஸ்லைடரை வைத்து, மேலே சதுர வடிவ சீஸை வைத்து மறுபடி மேலே வட்ட வடிவ வெங்காயம், தக்காளியை வைத்து மேலே மற்றொரு பாதி மினி பன்னைக் கொண்டு மூடவும்.

குறிப்பு:

வெங்காயப் பொடி, பூண்டுப் பொடி இல்லை என்றால் பொடியாக வெங்காயம், பூண்டை கட் செய்து சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளை மிளகுத்தூள் இல்லை என்றால் கறுப்பு மிளகுத் தூள் சேர்க்கலாம். சாஸ் மற்றும் வெஜ் மயோனைஸ் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

சோடியமும் பொட்டாசியமும் ராஜ்மாவில் இல்லை என்பதால் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும் சேர்த்துக் கொள்ளலாம்.

ராஜ்மா ரிச் சூப்

தேவையானவை:

 • வேகவைத்த ராஜ்மா - 50 கிராம்

 • பார்லி - ஒரு டேபிள்ஸ்பூன்

 • ஓட்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • பூண்டு - 2 பல்

 • உப்பு, மிளகுத்தூள் - சிறிதளவு

 • பச்சை மிளகாய் - சிறிய துண்டு

 • சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கவும்)

 • நறுக்கிய கொத்தமல்லித்தழை -ஓரு டேபிள்ஸ்பூன்

 • வெண்ணெய் – அரை டீஸ்பூன்

தாளிக்க:

 • வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • வெங்காயத்தாள் (வெள்ளை பாகம்) - தேவைக்கேற்ப (நறுக்கவும்)

 • சிவப்பு குடமிளகாய் (நறுக்கியது) - சிறிதளவு

 • தண்ணீர் - சிறிதளவு

 • சோள மாவு - ஒரு டீஸ்பூன்

 • பாதாம் - 4 (ஊறவைத்து ஒன்றிரண்டாக அரைக்கவும்)

சூப்புக்கு - சைடிஷ் சாஸ்:

 • பச்சை மிளகாய் - இரண்டு இன்ச் அளவு பொடியாக நறுக்கியது

 • வினிகர் – 25 மில்லி

 • தக்காளி சாஸ் - தேவைக்கேற்ப

 • சோயா சாஸ் - தேவைக்கேற்ப

ராஜ்மா ஸ்பெஷல் ரெசிப்பிகள்

செய்முறை:

பார்லியைப் பொடித்துக் கழுவி தண்ணீரில் ஊறவைக்கவும். குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். கொதிக்கும் நீரில் ஊறவைத்த பார்லி, ஓட்ஸ், வேகவைத்த ராஜ்மா, பூண்டு, கொத்தமல்லித்தழை, வெண்ணெய், உப்பு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் அனைத்தையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு குக்கரை மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். பிரஷர் அடங்கியதும், குக்கரைத் திறந்து, அதில் உள்ள கலவையை பிளெண்டரில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும்.

தனியாக ஒரு சிறிய பானில் (pan) வெண்ணெயைச் சூடாக்கி சிவப்பு குடமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து தாளித்து வெந்த சூப் கலவையில் சேர்த்து கொதிக்கவிடவும். அரைத்த பாதாம் சேர்த்து சிறிதளவு தண்ணீரில், ஒரு டீஸ்பூன் சோள மாவைக் கரைத்து சூப்பில் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு, மிளகுத்தூள் தூவிக் கலக்கி இறக்கவும் பரிமாறும்போது சோயா சாஸ், வினிகரில் பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு மற்றும் கெட்சப் சேர்த்துச் சாப்பிடவும்.

ரத்த சோகை நோய் ஏற்படாமல் இருக்க இந்த பீன்ஸை அடிக்கடி உபயோகிக்கலாம். உலர்ந்த சுண்டல் வகைகளைப் போலவே, இதில் உள்ள நார்ச்சத்து பலவிதமாகவும் நமக்கு நன்மை புரியும். மலச்சிக்கலைத் தடுக்கும். கொலஸ்ட்ராலைக் குறைக்கும். நீரிழிவு உள்ளவர்கள், இதயநோய் உள்ளவர்கள் என்று எல்லோரும் இதை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

ராஜ்மா கிச்சடி

தேவையானவை:

 • ரவை - 100 கிராம்

 • வேகவைத்த ராஜ்மா - அரை கப்

 • எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • நெய் - ஒரு டீஸ்பூன்

 • கடுகு - அரை டீஸ்பூன்

 • கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, முந்திரி - தலா அரை டீஸ்பூன்

 • பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்)

 • பூண்டு - 2 பல் (நறுக்கவும்)

 • கறிவேப்பிலை - சிறிதளவு

 • பொடியாக நறுக்கிய வெங்காயம் –ஒன்று மீடியம் சைஸ்

 • பொடியாக நறுக்கிய தக்காளி – ஒன்று மீடியம் சைஸ்

 • மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 • நறுக்கிய கேரட் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • பச்சைப் பட்டாணி - ஒரு டேபிள்ஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

ராஜ்மா ஸ்பெஷல் ரெசிப்பிகள்

செய்முறை:

ரவையை கறுகாமல் வறுத்து ஆற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய், நெய் சேர்த்து சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி சேர்த்து பொரியவிடவும். வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, கேரட், பச்சைப் பட்டாணி, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவைக்கவும். கடைசியாக ராஜ்மா சேர்த்து ஒன்றுசேரக் கிளறி வேகவிடவும். 300 மில்லி வெந்நீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி தட்டாமல் கிளறி இறக்கவும். கடைசியாக சிறிது நெய்விட்டுக் கிளறி ஒரு நிமிடம் தம்மில் விட்டு இறக்கவும்.

இதற்கு பக்க உணவாக சட்னி, ஊறுகாய், வடை போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

ராஜ்மாவை ஆறு மாதங்கள் தாண்டி வைத்திருந்தால் வேகுவதற்கு நேரம் எடுக்கும். புழு, பூச்சி வராமல் இருப்பதற்காக ஃப்ரிட்ஜில் வைத்திருந்தாலும் வேக அதிக நேரம் ஆகும். உலர்ந்த ராஜ்மா பீன்ஸை லேசாக கடாயில் சூடு செய்தபின் தண்ணீரில் ஊறவைப்பது நல்லது. ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்த நீரில் ஊறவைத்து கழுவி, புதிய தண்ணீர் ஊற்றி பிரஷர் குக்கரில் வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism