Published:Updated:

அழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்!

ஆரோக்கியம் + சருமப்பொலிவை அள்ளித்தரும் ஹெல்த்தி உணவுகள் குறித்த வசுந்தராவின் எளிமையான செய்முறை குறிப்புகள் இதோ உங்களுக்காக...

பிரீமியம் ஸ்டோரி
“உணவே மருந்து என்பது குறித்த விழிப்புணர்வை நாம் மெள்ள மெள்ள அடைந்துவருகிறோம்.

அத்துடன் `உணவே அழகு’ என்பதையும் மனத்தில் நிறுத்திக்கொள்ளுங்கள்” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் வசுந்தரா. ``நூற்றுக்கணக்கில் பணம் செலவழித்து விதவிதமான க்ரீம்கள், லோஷன்கள், அழகு நிலையங்களில் பலவிதமான அழகு சிகிச்சைகள் என்று மெனக்கெட்டால் மட்டுமே சருமம் மிளிர்ந்து விடாது. நாம் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவும் நம்முடைய புற அழகுக்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது.

அழகுக்கு அழகு சேர்க்கும்
உணவுகள்!

குறிப்பாக பால், இஞ்சி, நெல்லிக்காய், தேன், பாதாம், உளுத்தம்பருப்பு, வெல்லம் போன்ற உணவுப்பொருள்கள் மற்றும் கோதுமை, கம்பு, சோளம், திணை, ராகி, சாமை போன்ற தானியங்கள் உடலுக்கு வலு சேர்ப்பதோடு, சருமத்தின் பளபளப்புக்கும் பொலிவுக்கும் காரணமாக அமைந்து டூ-இன்-ஒன் பலன்களைத் தந்துவிடுகின்றன’’ என்கிறார் அவர்.

இப்படி ஆரோக்கியம் + சருமப்பொலிவை அள்ளித்தரும் ஹெல்த்தி உணவுகள் குறித்த வசுந்தராவின் எளிமையான செய்முறை குறிப்புகள் இதோ உங்களுக்காக...

அழகு சேர்க்கும்
உணவுகள்
அழகு சேர்க்கும் உணவுகள்

ஸ்பா டீடாக்ஸ் வாட்டர்

தேவையானவை:

 • வெந்நீர் - 200 மில்லி

 • இஞ்சி – சிறிய துண்டு

 • நெல்லிக்காய் - ஒன்று

 • எலுமிச்சை – ஒன்று (சாறு எடுக்கவும்)

 • தேன் – 2 டீஸ்பூன்

ஸ்பா டீடாக்ஸ் வாட்டர்
ஸ்பா டீடாக்ஸ் வாட்டர்

செய்முறை:

இஞ்சி, நெல்லிக்காய் இரண்டையும் கல்லில் வைத்து இடித்து நசுக்கி வெந்நீரில் போட்டுவிடவும். அரைமணி நேரம் கழித்து வெந்நீர் கலவை சூடு தணிந்து கொஞ்சம் ஆறியதும், எலுமிச்சைச்சாற்றை இதனுடன் சேர்க்கவும். பின்னர் இதனை வடிகட்டி, 2 டீஸ்பூன் தேன் சேர்த்துக் குடிக்கவும்.

இதன்மூலம் உடலிலுள்ள வேண்டாத நச்சுக்கழிவுகள் நீங்கிவிடும். அதேபோல தாகம் எடுக்கும்போது வெறும் தண்ணீரைப் பருகுவதைவிட இந்த ஸ்பா டீடாக்ஸ் வாட்டரைப் பருகலாம்.

எலுமிச்சை, இஞ்சி, நெல்லிக்காய், தேன் கலந்த இந்த வாட்டர், சருமத்துக்குப் பளபளப்பு தரும் ஆற்றல் கொண்டது. முகத்தில் பருக்கள் வராமல் தடுப்பதோடு, உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் இது உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓட்ஸ் வித் ஹனி

தேவையானவை:

 • ஓட்ஸ் - 50 கிராம்

 • பால் - 50 மில்லி

 • தண்ணீர் - 50 மில்லி

 • தேன் - 10 மில்லி

 • பாதாம்பருப்பு - சிறிதளவு

ஓட்ஸ் வித் ஹனி
ஓட்ஸ் வித் ஹனி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு ஓட்ஸ் மற்றும் சிறிது தேனைப் பாலுடன் சேர்த்து, குறைந்த அளவு தீயில் கொதிக்கவிட வேண்டும். இப்படிச் செய்வதால் ஓட்ஸ் நன்கு வெந்து 10 நிமிடங்களில் நன்றாகக் கெட்டியாகிவிடும். பின்னர் பாத்திரத்தைக் கீழே இறக்கி, வெந்த ஓட்ஸ் கலவையின் மேலே பாதாம் மற்றும் சிறிது தேன் சேர்த்துப் பரிமாறலாம்.

பொதுவாக இப்போது எல்லோர் வீட்டிலும் ஓட்ஸ் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்துக்கு ஓட்ஸ் மிகவும் நல்லது. பெரியவர்கள் மட்டுமல்லாது நார்ச்சத்து மிகுந்த ஒட்ஸை எந்த வயதினரும் சாப்பிடலாம்.

கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து நிறைந்த ஓட்ஸ் சருமப் பளபளப்புக்கு நல்லது. இனிப்புக்குச் சர்க்கரை சேர்க்காமல் தேன், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் சருமப் பளபளப்புடன் ஆரோக்கியமும் உங்கள் வசமாகும்.

பச்சைப் பட்டாணி மசாலா

தேவையானவை:

 • பச்சைப் பட்டாணி - ஒரு கப்

 • வெங்காயம் - 3 (அரைத்து விழுதாக்கவும்)

 • பூண்டு - 5 பல்

 • பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்)

 • இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்)

 • தக்காளி பியூரி - ஒரு கப்

 • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

 • கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

 • கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு

 • முந்திரிப்பருப்பு - 5

 • பாதாம்பருப்பு - 5

 • தயிர் - 2 டீஸ்பூன்

 • பட்டை - சிறிய துண்டு

 • ஏலக்காய் - 2

 • கிராம்பு - 2

 • வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

பச்சைப் பட்டாணி மசாலா
பச்சைப் பட்டாணி மசாலா

செய்முறை:

முந்திரி, பாதாம் இரண்டையும் வெந்நீரில் 15 நிமிடங்களுக்கு ஊறவிட்டு, லேசாக அரைத்து தயிரில் கலந்து வைத்துக்கொள்ளவும். பச்சைப் பட்டாணியைக் குக்கரில் வைத்து வேகவிடவும். ஒரு விசில் போதும். குக்கரை அணைத்து ஆவியை வெளியேற்றவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, ஏலக்காய், சீரகம் போட்டு வறுக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்துக்கொள்ளவும். அதில், வெங்காய விழுதைப் போட்டு சிறிது வதக்கி அதன் பச்சை வாசனை நீங்கியதும், தக்காளி பியூரி சேர்த்து வதக்கவும் (இரண்டையும் சேர்த்துப் போட்டால் வெங்காயத்தின் பச்சை வாசனை போகாது). இப்போது, வேகவைத்த பச்சைப் பட்டாணியைச் சேர்க்க வேண்டும். அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு கலந்து முந்திரி, பாதாம் கலவை சேர்க்கவும். வெண்ணெய் ஒரு டீஸ்பூன்விட்டு அதன் மீது கொத்தமல்லி இலைகள் போட்டு கார்னிஷ் பண்ணலாம்.

பச்சைப் பட்டாணியில் இருக்கிற வைட்டமின் சத்துகள் கண்களுக்கும் சருமத் துக்கும் மிகவும் நல்லது.

உலகின் பல நாடுகளில் பயிரிடப்படும் பட்டாணி ஓராண்டு தாவரமாகும். குளிர்காலப் பயிரான இது, பனிக்காலம் தொடங்கி வெயில் காலம் வரை பயிரிடப்படும்.

மினி இட்லி வித் சாம்பார்

இட்லிக்குத் தேவையானவை:

 • புழுங்கலரிசி - 4 கப்

 • ஊறவைத்த உளுந்து - ஓரு கப்

 • உப்பு - சிறிதளவு

மினி இட்லி
மினி இட்லி

செய்முறை:

இரண்டு கப் தண்ணீரில் ஒரு கப் உளுந்து சேர்த்து ஊறவைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் நான்கு கப் புழுங்கலரிசிக்கு எட்டு கப் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். இரண்டும் ஒரு மணி நேரம் ஊறியபிறகு உளுந்தை மைய அரைக்க வேண்டும். அடுத்து அரிசியை அரைக்க வேண்டும். அரிசியை மிகவும் மைய அரைக்காமல் அதேநேரம் அதிக கொரகொரப்புடனும் அரைக்காமல் மிதமாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த அரிசியையும் உளுந்தையும் கலந்து உப்பு சேர்த்துக் கலக்க வேண்டும். பின்னர் இந்த மாவைப் புளிக்கவைத்து மினி இட்லித் தட்டில் இட்லிகளாக வார்க்கவும்.இட்லி செய்வதற்குத் தேவைப்படுகிற புளித்த மாவில் பயோட்டின் என்கிற பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் இருக்கிறது. இது சரும ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் ஆவியில் வெந்து கிடைப்பதால் இட்லி எளிதில் செரிமானமாகும் உணவாகவும் இருக்கிறது.

சாம்பார் செய்ய தேவையானவை:

 • புளி – நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்)

 • கடுகு - 2 டீஸ்பூன்

 • சீரகம் - 2 டீஸ்பூன்

 • வெந்தயம் – சிறிதளவு

 • நறுக்கிய பச்சை மிளகாய் – 4 + 2

 • பெருங்காயம் - சிறிய கட்டி

 • வெங்காயம் - 2 (நறுக்கியது)

 • தக்காளி - 2 (நறுக்கியது)

 • கறிவேப்பிலை – சிறிதளவு

 • நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

 • துவரம்பருப்பு - ஒரு கப்

 • வெள்ளைப்பூசணி - ஒரு துண்டு

 • மஞ்சள்தூள் - சிறிது

 • சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்

 • கடலைப்பருப்பு - 10 கிராம்

 • உளுத்தம்பருப்பு - 10 கிராம்

 • துவரம்பருப்பு - 10 கிராம் (தாளிக்க)

 • தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்

 • எண்ணெய் – தேவையான அளவு

 • நெய் – ஒரு டீஸ்பூன்

 சாம்பார்
சாம்பார்

செய்முறை:

ஒரு கப் துவரம் பருப்புக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில், வெள்ளைப் பூசணிக்காய் நறுக்கிப் போட்டு கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்க்கவும். இதை குக்கரில் வைத்து மூன்று விசில் வரும்வரை வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

கடாயைச் சூடாக்கி சிறிது எண்ணெய் விடவும். எண்ணெய் கொஞ்சம் சூடானதும் அதில் கடுகு தாளிக்கவும். அடுத்து சீரகத்தைப் போடவும். சீரகத்தின் நிறம் சற்று மாறும்போது சிறிது வெந்தயத்தைச் சேர்க்கவும். அதுவும் நிறம் மாறும்போது அடுத்து நறுக்கிய நான்கு பச்சை மிளகாயைப் போடவும். பிறகு, நறுக்கிவைத்த வெங்காயத்தைச் சேர்த்து, கூடவே நெய்யையும் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறும்போது நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் இவை அனைத்தையும் வேகவைத்த பருப்புக் கலவையுடன் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பிறகு இதனுடன் புளிக்கரைசலைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். புளி பச்சை வாசனை போக நன்கு கொதித்ததும் சாம்பார் பொடி, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

இன்னொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கவும். பின்னர் இதில் சிறிது வெந்தயம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு, பச்சை மிளகாய் இரண்டு, கொத்தமல்லி, தேங்காய் ஆகிய அனைத்தையும் சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் இதனை விழுதாக அரைத்து ஏற்கெனவே கொதித்துக் கொண்டிருக்கிற பருப்புக் கலவையில் சேர்த்து ஒருகொதிவிட்டு இறக்கினால் சுவையான சாம்பார் ரெடி.

இந்த சாம்பாரில் புரதச்சத்து, வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவை இருப்பதால் சரும ஆரோக்கியத்துக்கும் உடல் வலிமைக்கும் இது மிகவும் ஏற்றது.

புளிக்கரைசலில் ஊறவைத்து வேகவிடுவதாலேயே காய்கறிகளின் புரதச்சத்தும், பல கனிமச் சத்துகளும் வீணாகாமல் பாதுகாக்கப்படுகின்றன.

க்ளோ ஸ்கின் லட்டு

தேவையானவை:

 • சத்து மாவு - ஒரு கப்

 • வெல்லம் – ஒரு கப் (பொடித்தது)

 • நெய் - 4 டீஸ்பூன்

 • பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு - சிறிதளவு

 • பொடியாக நறுக்கிய பாதாம்பருப்பு - சிறிதளவு

 • பொடியாக நறுக்கிய உலர்திராட்சை - சிறிதளவு

க்ளோ ஸ்கின் லட்டு
க்ளோ ஸ்கின் லட்டு

செய்முறை:

கோதுமை மாவு, கம்பு, சோளம், ராகி, திணை, சாமை என்று எல்லாமே கலந்த சத்து மாவை வாங்கிக்கொள்ளவும். பின்னர் சத்து மாவு, பொடித்த வெல்லம் ஆகிய இரண்டையும் நன்கு கலந்துகொள்ளவும். இதனுடன் உலர் திராட்சையையும், பருப்புகளையும் சேர்த்துக் கலக்கவும். நெய்யைச் சூடாக்கி அதை இந்த மாவுக் கலவையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கொண்டே மாவை லட்டுகளாகப் பிடிக்கவும். வெல்லமும் நெய்யும் சேர்ந்து ஈரத்தன்மை கொடுப்பதால் தண்ணீரோ, பாலோ கலக்காமல் இந்த லட்டுகளைச் செய்ய முடியும்.

இந்த லட்டு சருமத்தைப் பளபளப்பாக்கு வதோடு மட்டுமல்லாமல் உடலுக்கும் பலம் கொடுக்கும்.

இந்திய துணைக்கண்டத்தில் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக வெல்லம் பயன்படுத்தப்படுகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு