ரெசிப்பிஸ்
Published:Updated:

பிரெட் ஸ்பெஷல்

பிரெட் ரசமலாய்
News
பிரெட் ரசமலாய்

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: பிரவீனா

``படிக்கும்போது அம்மாவுக்குக் காய்கறிகள் நறுக்கிக் கொடுப்பேன்... அவ்வளவுதான். அம்மா, சித்தி இருவரும் நன்றாகச் சமைப்பார்கள். நான் திருமணத்துக்குப் பிறகுதான் சமைக்க ஆரம்பித்தேன். அதைத் தொடர்ந்து இணையதளத்தில் வித்தியாசமான ரெசிப்பிகளைப் பார்த்து வீட்டில் அதை முயற்சி செய்வேன். இப்படியே சமையலில் ஆர்வம் அதிகமானது.

பிரவீனா
பிரவீனா
பிரெட் ரசமலாய்
பிரெட் ரசமலாய்

ஓராண்டுக்கு முன் `Coolhome Kitchen’ எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திவருகிறேன். பிரெட்டை வைத்து வித்தியாசமான இனிப்பு வகைகளைச் செய்வது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்’’ என்று கூறும் பிரவீனா எம்.இ (கணினி அறிவியல்) படித்துள்ளார். அவர் வழங்கும் ருசியான பிரெட் ரெசிப்பிகள் இங்கே இடம்பெறுகின்றன.

பிரெட் பால்ஸ்

தேவையானவை - ஸ்டஃபிங் செய்ய:

 • தேங்காய்த் துருவல் - கால் கப்

 • ஃபுட் கலர் (க்ரீன்) - சிறிதளவு

 • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

 • பாதாம், முந்திரி (நறுக்கியது) - சிறிதளவு

பால்ஸ் செய்ய:

 • பிரெட் துண்டுகள் - 6

 • பால் - 3 டேபிள்ஸ்பூன்

 • சர்க்கரைப் பாகு செய்ய:

 • சர்க்கரை - கால் கப்

 • தண்ணீர் - 3 டேபிள்ஸ்பூன்

 • ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

பொரிக்க:

 • எண்ணெய் - தேவையான அளவு

பிரெட் பால்ஸ்
பிரெட் பால்ஸ்

செய்முறை:

ஒரு வாணலியில் நெய் சேர்த்து பாதாம், முந்திரியை வறுத்துக்கொள்ளவும். அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து ஃபுட் கலர், சர்க்கரை சேர்த்து வதக்கினால் ஸ்டஃபிங் ரெடி.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துக் கலந்துவிடவும். சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதம் வந்தவுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்துவிடவும். சர்க்கரைப் பாகு தயார். பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி எடுத்து, பின்னர் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். ஒரு பவுலில் அரைத்த பிரெட்டைச் சேர்த்து, அதனுடன் பால் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். இந்த மாவை உருண்டைகளாக்கி அதனுள் தயாரித்த ஸ்டஃபிங் வைத்து நன்கு உருட்டிக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி தயார் செய்த உருண்டைகளை மிதமான சூட்டில் பொன்னிறமாகப் பொரித்துக்கொள்ளவும். பொரித்த உருண்டைகளை இளம் சூட்டில் இருக்கும் சர்க்கரைப் பாகில் நன்றாகப் புரட்டி எடுத்தால், சுவையான பிரெட் பால்ஸ் தயார்.

30,000 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் ரொட்டி பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

பிரெட் அல்வா

தேவையானவை:

 • பிரெட் துண்டுகள் - 4

 • பால் - கால் கப்

 • இனிப்பில்லாத கோவா - 3 டேபிள்ஸ்பூன்

 • சர்க்கரை - 1/3 கப்

 • தண்ணீர் - கால் கப்

 • நெய் - 3 டேபிள்ஸ்பூன்

 • உலர்திராட்சை - சிறிதளவு

 • பாதாம், முந்திரி - சிறிதளவு (நறுக்கியது)

 • ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

 • எண்ணெய் - தேவைக்கேற்ப

பிரெட் அல்வா
பிரெட் அல்வா

செய்முறை:

பிரெட் துண்டுகளை நறுக்கிக்கொண்டு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து பிரெட் துண்டுகளைப் பொரித்தெடுக்கவும். மீண்டும் ஒரு வாணலியில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து சர்க்கரை நன்கு கரைந்த பிறகு பொரித்த பிரெட் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும். அதன் பிறகு பால் சேர்த்துக் கிளறவும். இனிப்பில்லாத கோவா உடன் 2 டேபிள்ஸ்பூன் சூடான பால் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிரெட் துண்டுகளுடன் இந்த கோவாவைச் சேர்த்து நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறவும். ஒரு தாளிப்புக் கரண்டியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து பாதாம், முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து வறுக்கவும். தாளித்த கலவையை அல்வா உடன் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறினால், பிரெட் அல்வா ரெடி.

19-ம் நூற்றாண்டில் ரயில் போக்குவரத்து விரிவடைந்ததால், பால் உற்பத்தியும் அதிகரித்தது.

பிரெட் ஜிலேபி

தேவையானவை:

 • பிரெட் துண்டுகள் - 5

 • தயிர் - 3 டேபிள்ஸ்பூன்

 • ஃபுட் கலர் (மஞ்சள்) - சிறிதளவு

 • பால் - கால் கப்

 • கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன்

 • சமையல் சோடா - சிறிதளவு

 • சர்க்கரை - 1/3 கப்

 • தண்ணீர் - கால் கப்

 • ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

 • எண்ணெய் - தேவையான அளவு

பிரெட் ஜிலேபி
பிரெட் ஜிலேபி

செய்முறை:

முதலில் ஒரு மிக்ஸர் ஜாரில் பிரெட் துண்டுகள், தயிர், ஃபுட் கலர், பால், கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிதளவு சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். சிறு கம்பி பதம் வந்த பின் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும். பிரெட் கலவையை ஒரு பாலித்தீன் கவர் அல்லது பைப்பிங் பேகில் ஊற்றிக் கட்டிக்கொள்ளவும். கவரின் முனையில் ஒரு சிறு துளை இடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி (எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்) பிரெட் கலவையைச் சிறு சிறு ஜிலேபிகளாகச் சுற்றி, இருபுறமும் திருப்பிப்போட்டு மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுத்துக் கொள்ளவும். பொரித்த ஜிலேபிகளை சர்க்கரைப் பாகில் 10 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்தால் பிரெட் ஜிலேபி தயார்.

தயிருக்கான ஆங்கில வார்த்தையான Curd என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

பிரெட் மால்புவா

தேவையானவை:

 • பிரெட் துண்டுகள் - 4

 • சர்க்கரை - அரை கப்

 • தண்ணீர் - கால் கப்

 • ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

 • எண்ணெய் - தேவையான அளவு

பிரெட் மால்புவா
பிரெட் மால்புவா

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துக் கலந்து ஒரு சிறு கம்பி பதம் வரும் வரை கொதிக்கவிடவும். இதில் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். பிரெட் துண்டுகளை வட்டமான மூடிவைத்து வெட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி வெட்டிவைத்த பிரெட் துண்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்துக்கொள்ளவும். பொரித்த பிரெட் துண்டுகளை மிதமான சூட்டில் இருக்கும் சர்க்கரைப் பாகில்

10 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்தால் பிரெட் மால்புவா ரெடி.

பெரும்பாலான தாவரங்களின் திசுக்களில் சர்க்கரை காணப்படுகிறது.

பிரெட் ரசமலாய்

தேவையானவை:

 • பிரெட் துண்டுகள் - 4

 • பால் - 500 மில்லி

 • சர்க்கரை - கால் கப்

 • நறுக்கிய பாதாம், முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்

 • ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

 • குங்குமப்பூ - சிறிதளவு

பிரெட் ரசமலாய்
பிரெட் ரசமலாய்

செய்முறை:

பிரெட் துண்டுகளை வட்டமான மூடிவைத்து வெட்டிக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, பால் பாதியாக குறையும் வரை கொதிக்கவிடவும் (நடுநடுவே சுற்றி இருக்கும் பால் ஆடையை எடுத்து பாலில் சேர்த்துவிட்டுக் கிளறவும்). இப்போது சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்துக் கிளறவும். பால் முக்கால் பாகமாகக் குறைந்த பின் நறுக்கிய பாதாம், முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறிவைக்கவும். இதை நன்கு ஆறவிடவும். பின்னர் பிரெட் துண்டுகளை ஆறவைத்த பாலில்

ஐந்து நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறவும்.

பாதாம் மரத்தின் பூர்வீகம் இரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகள்.