Published:Updated:

மிளகாயில் வெரைட்டி ருசி!

குடமிளகாய் கிரேவி வித் பானிபூரி
பிரீமியம் ஸ்டோரி
News
குடமிளகாய் கிரேவி வித் பானிபூரி

சுதா செல்வகுமார்

மிளகாய், வறட்சியான பகுதிகளிலும் விளையும் தன்மையைக் கொண்டது. உணவுக்குக் காரத்தன்மையை அளிக்கும் மிளகாய், மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. வருடத்தின் எல்லா நாள்களிலும் கிடைக்கக்கூடியது இது. காய்கறி வாங்கச் சென்றால் வெங்காயம், தக்காளிக்கு அடுத்து வாங்கும் பொருள் மிளகாய்தானே?

 சுதா செல்வகுமார்
சுதா செல்வகுமார்
மிளகாயில் வெரைட்டி ருசி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பல ரகங்களைக் கொண்ட மிளகாயும் காய்கறி வகையைச் சேர்ந்ததுதான் என்றால் பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். மற்ற காய்கறிகளைத் தனித்தனியே சமைக்க முடியும்... மிளகாயை அப்படி முதன்மைப்படுத்திச் சமைத்து ருசிக்க முடியுமா என்பது பலரது கேள்வி. அதற்கு விடை சொல்லும் வகையில் மிளகாயைப் பயன்படுத்திச்செய்யும் புதுமையான சமையல் குறிப்புகளை அளித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் சுதா செல்வகுமார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பஜ்ஜி மிளகாய் வெஜ் ஸ்டஃப்டு பஜ்ஜி

தேவையானவை - பஜ்ஜி செய்ய:

 • பஜ்ஜி மிளகாய் - 6

 • கடலை மாவு - ஒரு கப்

 • அரிசி மாவு - கால் கப்

 • பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை

 • பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

ஸ்டஃபிங் செய்ய:

 • உருளைக்கிழங்கு - ஒரு கப் (வேகவைத்து தோல் உரித்து மசித்தது)

 • வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)

 • கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன்

 • மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • ஆம்சூர் பவுடர் (உலர் மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன்

 • இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்

 • கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

 • வெந்தயக்கீரை (அலசி ஆய்ந்தது) - 3 டேபிள்ஸ்பூன்

 • உப்பு - சிறிதளவு

பஜ்ஜி மிளகாய் வெஜ் ஸ்டஃப்டு பஜ்ஜி
பஜ்ஜி மிளகாய் வெஜ் ஸ்டஃப்டு பஜ்ஜி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஸ்டஃபிங் செய்யத் தேவையான பொருள் களை ஒன்றாகக் கலந்து மூடி வைக்கவும். பஜ்ஜி செய்யத் தேவையான பொருள்களை (மிளகாய், எண்ணெய் தவிர) வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு நீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். மிளகாயை எடுத்துக்கொண்டு அதன் நடுவில் கீறி உள் விதைகளை எடுத்து விடவும். கலந்துவைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலா சிறிதளவு எடுத்து அதனுள் வைத்து மூடவும். இதே மாதிரி எல்லா பஜ்ஜி மிளகாய்களையும் தயார் செய்துகொள்ளவும். பஜ்ஜி மாவுக் கலவையில் இந்த மிளகாய்களை முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

மிளகாய் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே உணவில் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பஜ்ஜி மிளகாய் சட்னி

தேவையானவை:

 • பஜ்ஜி மிளகாய் - 4 (காம்பை எடுத்துவிட்டு வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்)

 • தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

 • பச்சை மிளகாய் - 2

 • தோல் உரித்த பூண்டு - 4 பல்

 • இஞ்சி - கால் அங்குலத் துண்டு (தோல் நீக்கவும்)

 • தக்காளி - ஒன்று (நறுக்கிக்கொள்ளவும்)

 • கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) - 3 டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

 • கடுகு - ஒரு டீஸ்பூன்

 • உடைத்த உளுந்து - ஒரு டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - சிறிதளவு

 • எண்ணெய் - சிறிதளவு

பஜ்ஜி மிளகாய் சட்னி
பஜ்ஜி மிளகாய் சட்னி

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு, சூடானதும் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை (உப்பு நீங்கலாக) ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கி எடுத்து ஆறவிடவும். மிக்ஸி யில் வதக்கிய கலவையைப் போட்டு உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து மையாக அரைக்கவும். இறுதியாக தாளிக்கும் பொருள்களைத் தாளித்து இதில் சேர்த்துப் பரிமாறவும்.

தோசை, இட்லிக்கு சைடிஷாக சாப்பிடலாம். சாதத்தில் சேர்த்துப் பிசைந்தும் சாப்பிடலாம். பிரெட் டோஸ்ட்டிலும் தடவி சாப்பிடலாம்.

பச்சை மிளகாயின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.

பஜ்ஜி மிளகாய் வெஜ் கைமா

தேவையானவை:

 • பஜ்ஜி மிளகாய் - 4 (மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

 • வெங்காயம் - 2 (மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

 • தக்காளி - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

 • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 • கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

 • கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

அரைத்துக்கொள்ள:

 • சின்ன வெங்காயம் - 6 (தோல் உரிக்கவும்)

 • சோம்பு - ஒரு டீஸ்பூன்

 • பச்சை மிளகாய் - 2

 • கறிவேப்பிலை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன்

மிளகாயில் வெரைட்டி ருசி!

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம், தக்காளியை வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, பஜ்ஜி மிளகாய் போட்டுக் கிளறி, அரைத்த விழுது சேர்த்து, உப்பு போட்டுப் புரட்டவும். தீயைக் குறைத்து கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்துப் புரட்டி வேகவிடவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

சப்பாத்தி நடுவில் இந்த கைமா வைத்து சாப்பிடலாம். சாதத்துக்கும் இட்லி, தோசைக்கும் இது செம காம்பினேஷன்.

சன்னம், LC 334, படகி, ஜுவலா, அதிசய கார மிளகாய் ஆகியவை இந்திய மிளகாய் வகைகளில் குறிப்பிடத்தக்கவை.

சீஸ் ஸ்டஃப்டு குடமிளகாய்

தேவையானவை:

 • குடமிளகாய் - 3 (பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ணம்)

 • சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 2 (வேகவிட்டு எடுத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளவும்)

 • சீஸ் துருவல் - ஒரு கப்

 • ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - கால் கப்

 • சதுரமாக நறுக்கிய கேரட் - கால் கப்

 • வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)

 • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

சீஸ் ஸ்டஃப்டு குடமிளகாய்
சீஸ் ஸ்டஃப்டு குடமிளகாய்

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது போட்டு வதக்கவும். இதனுடன் கேரட், உப்பு, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி வேகவிடவும். மசாலா ரெடி.

குடமிளகாயை எடுத்துக்கொண்டு மேற்புறம் (மூடி மாதிரி) வெட்டிக் கொள்ளவும் (பார்க்க படம்). கீழ்ப்புறம் (அடிபாகம்) இருக்கும் குடமிளகாயின் விதைகளை நீக்கிவிட்டு வெஜ் மசாலாவை நிரப்பவும், மூன்று குடமிளகாய்களில் நிரப்பிக்கொண்டு அதன் மீது சீஸைச் சரிசமமாகப் பிரித்துப்போடவும்.

ஒரு பானில் (pan) எண்ணெய் விட்டு, சூடானதும் மிதமான தீயில் அடுப்பை வைத்து தயார் செய்துள்ள குடமிளகாய்களை அதில் வைத்து ஃப்ரை செய்யவும். எல்லா பக்கமும் நன்கு வேக வேண்டும். சிறிது நேரம் மூடி வைத்தும் வேகவிடவும். எல்லா பக்கமும் ஃப்ரை ஆனவுடன் அடுப்பை நிறுத்திப் பரிமாறவும்.

குறிப்பு:

அவனில் (oven) செய்வதாக இருந்தால், டிரேயில் இந்தக் குடமிளகாய்களை அடுக்கி 15 நிமிடங்கள் பிரீஹீட் செய்த அவனில் 160 டிகிரி செல்ஷியசில் 10 நிமிடங்கள் பேக் செய்யவும். குடமிளகாய் அளவைப் பொறுத்து வேகும் நேரம் 10 அல்லது 15 நிமிடங்கள் ஆகும்.

பச்சை மிளகாயை நட்ட 75 நாள்களிலும் அல்லது விதைத்த 105 நாள்களிலும், பழுத்த பழங்களை ஒரு மாதத்துக்குப் பின்னும் அறுவடை செய்யலாம்.

மூவண்ண குடமிளகாய் - பனீர் புலாவ்

தேவையானவை:

 • குடமிளகாய் - 3 (பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணம் - சதுரமாக நறுக்கவும்)

 • பனீர் க்யூப்ஸ் - ஒரு கப்

 • பாஸ்மதி அரிசி - ஒரு கப்

 • தக்காளிச்சாறு - ஒரு கப்

 • கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • புதினா (அலசி ஆய்ந்தது) - ஒரு டேபிள்ஸ்பூன்

 • வெங்காயம் - ஒன்று (சதுரமாக நறுக்கவும்)

 • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

அரைத்துக் கொள்ள:

 • தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

 • பூண்டு - 4 பல்

 • மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்

 • பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்

 • இஞ்சி - கால் அங்குலத் துண்டு (தோல் நீக்கவும்)

 • கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன்

 • காய்ந்த மிளகாய் - 3

 • பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

மூவண்ண குடமிளகாய் - பனீர் புலாவ்
மூவண்ண குடமிளகாய் - பனீர் புலாவ்

செய்முறை:

அரிசியை அலசி 20 நிமிடங்கள் நீரில் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிதளவு நீர் தெளித்து மிக்ஸியில் மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய குடமிளகாய் சேர்த்து வதக்கி, பனீர் சேர்த்துக் கிளறவும். பிறகு தக்காளிச்சாறு, தேவையான நீர்விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிவந்தவுடன் அரிசி சேர்க்கவும். தீயை மிதமாக வைத்து குக்கரை மூடிவைத்து வேகவிடவும். இரண்டு விசில்விட்டு சாதம் வெந்ததும் அடுப்பை நிறுத்தி குக்கரை இறக்கவும். பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து புதினாவைத் தூவிக் கிளறிப் பரிமாறவும்.

மிளகாயை மூன்று முதல் நான்கு மாதங்களுக்குத் தொடர்ந்து அறுவடை செய்யலாம். முதல் இரண்டு பறிப்புகளிலிருந்து பச்சை மிளகாயும், அடுத்த பறிப்புகளிலிருந்து பழுத்த மிளகாயும் கிடைக்கும்.

குடமிளகாய் கிரேவி வித் பானிபூரி

தேவையானவை:

 • குடமிளகாய் - 2 (சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்)

 • பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

 • பானி பூரி வற்றல் - சிறிதளவு (ரெடிமேடாகக் கிடைக்கும்)

 • கிராம்பு - 2

 • பட்டை - கால் அங்குலத் துண்டு

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

 • கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

 • தேங்காய்ப்பால் - ஒரு கப்

 • கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன்

 • எண்ணெய், உப்பு, காராபூந்தி - தேவைக்கேற்ப

அரைத்துக்கொள்ள:

 • தக்காளி - 2

 • முந்திரி, பாதாம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

 • கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்

குடமிளகாய் கிரேவி வித் பானிபூரி
குடமிளகாய் கிரேவி வித் பானிபூரி

செய்முறை:

முந்திரி, பாதாமை நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். கசகசாவையும் நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் பானி பூரி வற்றல் போட்டு பூரியாகப் பொரித்தெடுத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்த பொருள்களை மிக்ஸியில் சேர்த்து சிறிளவு நீர்விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, சீரகம் போட்டு தாளித்து, வெங்காயம் தாளித்து, அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் குடமிளகாய் சேர்த்து, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு புரட்டி, தீயை மிதமாக வைத்து தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிடவும். குடமிளகாய் வெந்ததும் கரம் மசாலாத்தூள் போட்டு, கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை நிறுத்தி இறக்கவும். பொரித்து வைத்துள்ள பானி பூரியில் நடுவில் சிறு துளை போட்டு, இந்த கிரேவியை அதில் ஊற்றி காராபூந்தி தூவிப் பரிமாறவும்.

குடமிளகாயைக் கீறி, விதைகளை நீக்கிவிட்டு, மல்லி, சீரகம், வெந்தயம், மிளகு ஆகியவை கலந்த மசாலாப் பொடியை மிளகாயினுள் அடைத்து, ‘அடைச்ச மிளகாய்’ என்ற பெயரில் ராமநாதபுரம் பகுதிகளில் விற்கப்படுகிறது. இந்த மிளகாயை எண்ணெயில் பொரித்து, உணவுடன் சேர்த்து உண்டால் அலாதி ருசி!

பச்சை மிளகாய் ஊறுகாய்

தேவையானவை:

 • பச்சை மிளகாய் - 200 கிராம் (காம்பை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

 • இஞ்சித் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

 • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

 • காஷ்மீரி மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • கடுகு - ஒரு டீஸ்பூன்

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்

 • நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

 • வறுத்துப் பொடி செய்துகொள்ள:

 • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

 • கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்

 • பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் ஊறுகாய்
பச்சை மிளகாய் ஊறுகாய்

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தனித்தனியே வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது நேரம் புரட்டவும். பச்சை மிளகாய் நீரெல்லாம் இறங்கும். பிறகு எலுமிச்சைச்சாறு விட்டு, பொடித்த பொடி சேர்த்து புரட்டி அடுப்பை நிறுத்தி இறக்கி சாதத்துக்குத் தொட்டு சாப்பிடவும்.

ஈரம் இல்லாத, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்து ஒரு வாரம் வரை வைத்திருந்து சுவைக்கலாம்.

பச்சை மிளகாய் மோர் வற்றல்

தேவையானவை:

 • பச்சை மிளகாய் (நீளமானது அல்லது குண்டு மிளகாய்) - கால் கிலோ

 • கெட்டித் தயிர் - 2 கப்

 • கல் உப்பு - தேவைக்கேற்ப

 • எண்ணெய் - தயாரான மிளகாய் பொரிப்பதற்கு தேவையான அளவு

பச்சை மிளகாய் மோர் வற்றல்
பச்சை மிளகாய் மோர் வற்றல்

செய்முறை:

பச்சை மிளகாய்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றிலும் ஊசியால் இரண்டு மூன்று துளை போடவும். (இப்படிச் செய்வதால் இதில் உப்பும் தயிரும் உள்ளே போய் சுவை அதிகமாகும்). ஒரு பாத்திரத்தில் கல் உப்பு போட்டு பச்சை மிளகாயை அதில் போட்டு குலுக்கவும். ஒரு நாள் முழுவதும் இதை மூடி போட்டு ஊறவைக்கவும். மிளகாயில் உப்பு நன்கு இறங்கி இருக்கும். பிறகு அதில் தயிர் ஊற்றி நன்கு குலுக்கவும். எல்லா மிளகாயிலும் தயிர் பரவி இருக்க வேண்டும். இதை ஒரு தாம்பாளத்துக்கு மாற்றி பரப்பிவிட்டு மூன்று நாள்கள் காயவிடவும். இப்போது சுவையான மோர் மிளகாய் வற்றல் தயார். சூடான எண்ணெயில் இந்த மிளகாய் வற்றலைப் போட்டு வறுத்து எடுத்து தயிர் சாதத்துக்குத் தொட்டுச் சாப்பிடலாம்.