Published:Updated:

கார்ன் ரெசிப்பி

கார்ன் ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
கார்ன் ரெசிப்பி

சுதா செல்வகுமார்

கார்ன் ரெசிப்பி

சுதா செல்வகுமார்

Published:Updated:
கார்ன் ரெசிப்பி
பிரீமியம் ஸ்டோரி
கார்ன் ரெசிப்பி

ழக்கமான உணவுகளைச் செய்து பரிமாறும்போது, என்னதான் சுவையாக இருந்தாலும் சற்று அலுப்புத் தட்டுவது சகஜம்தான். அதிலிருந்து கொஞ்சம் மாறி பேபி கார்ன், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன், வொயிட் கார்ன் போன்றவற்றைச் சமையலில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த சோளங்களைக்கொண்டு பக்கோடா, சூப், கபாப், இட்லி ஃப்ரை போன்ற ருசிகரமான ரெசிப்பிகளை வழங்குகிறார் சமையற்கலைஞர் சுதா செல்வகுமார்.

சுதா செல்வகுமார்
சுதா செல்வகுமார்

``வொயிட் கார்ன் கிரேட் மில்லெட் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் அரிசி, கோதுமையைவிட வைட்டமின், புரதம், தாதுக்கள் பல மடங்கு அதிகம். இது செரிமானத்துக்கு உதவும். மாரடைப்பு வராமல் தடுக்கும். பேபி கார்னில் வைட்டமின் பி அதிகம். நினைவாற்றலை அதிகரிக்கும். ரத்தச் சோகையில் இருந்து பாதுகாக்கும். அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சருமத்துக்கு நன்மை பயக்கும்’’ என அவற்றின் நன்மைகளையும் எடுத்துரைக்கிறார் சுதா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பேபி கார்ன் மசாலா பக்கோடா

தேவையானவை:

  • பேபி கார்ன் (வட்டமாக நறுக்கியது) - 2 கப்

  • பச்சை வேர்க்கடலை - அரை கப்

  • வேகவைத்து, உதிர்த்த சோள முத்துகள் - கால் கப்

  • கடலை மாவு - ஒரு கப்

  • அரிசி மாவு - அரை கப்

  • வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - கால் கப்

  • பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

  • மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • இஞ்சித் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை (அலசி ஆய்ந்தது) - சிறிதளவு

  • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

பேபி கார்ன் மசாலா பக்கோடா
பேபி கார்ன் மசாலா பக்கோடா

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களில் எண்ணெய் தவிர மற்றவற்றை ஒரு வாய் அகன்ற பவுலில் போட்டு தண்ணீர் தெளித்துப் பிசைந்துகொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி, மாவை உதிரி உதிரியாகப் போட்டு பக்கோடாக்களாகப் பொரித்தெடுக்கவும். வித்தியாசமான சுவையில் கார்ன் பக்கோடா தயார். சூடாகச் சாப்பிடவும்.

நமக்குத் தேவைப்படும் தினசரி வைட்டமின் சி அளவில் 17 சதவிகிதம் ஒரு பேபிகார்னில் அடங்கியுள்ளது.

பேபி கார்ன் சில்லி 65

தேவையானவை:

  • பேபி கார்ன் - 10

  • மைதா மாவு - 4 டேபிள்ஸ்பூன்

  • சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்

  • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

  • எலுமிச்சைப்பழம் - அரை மூடி

  • சோம்புப்பொடி - அரை டீஸ்பூன்

  • பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

  • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

  • கறிவேப்பிலை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன்

  • பச்சை மிளகாய் - ஒன்று (நீளவாக்கில் கீறவும்)

பேபி கார்ன் சில்லி 65
பேபி கார்ன் சில்லி 65

செய்முறை:

வாய் அகன்ற பாத்திரத்தில் மைதா, சோள மாவு, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, இரு வகை மிளகாய்த்தூள்கள், சோம்புப்பொடி சேர்த்து எலுமிச்சைச்சாறு பிழிந்து தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். பேபி கார்னை மாவில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சாப்பிடும் தட்டுக்கு மாற்றவும்.

சிறிய வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து பொரித்துவைத்துள்ள பஜ்ஜியின் மேல் போட்டு நறுக்கிய வெங்காயம் தூவிப் பரிமாறவும். சுவையான கார்ன் சில்லி 65 ரெடி.

பேபிகார்னில் வைட்டமின் பி, ரிபோஃப்ளவின், பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை கணிசமான அளவில் உள்ளன.

கிரிஸ்பி கார்ன் ஃப்ரை

தேவையானவை:

  • வேகவைத்து, உதிர்த்த சோள முத்துகள் - 2 கப்

  • கொத்தமல்லித்தழை விழுது - 2 டேபிள்ஸ்பூன்

  • புதினா தழை விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

  • ஓமம் - ஒரு டீஸ்பூன்

  • மைதா மாவு - 4 டேபிள்ஸ்பூன்

  • ரவை - ஒரு டேபிள்ஸ்பூன்

  • சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்

  • கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

  • சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

  • கிரீன் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • ஓட்ஸ் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்

  • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

மேலே தூவ:

சாட் மசாலாத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

கிரிஸ்பி கார்ன் ஃப்ரை
கிரிஸ்பி கார்ன் ஃப்ரை

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் (எண்ணெய் தவிர) வாய் அகன்ற பவுலில் போட்டு சிறிதளவு நீர் தெளித்துப் பிசைந்து மூடி 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். மாவை சூடான எண்ணெயில் உதிர்த்துப்போட்டுப் பொரித்தெடுத்து, சாட் மசாலாத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

அமெரிக்காவில் விற்பனையாகும் டின் பேபிகார்ன் பெரும்பாலும் ஆசியாவிலிருந்து செல்பவையே.

கார்ன் கபாப்

தேவையானவை:

  • வேகவைத்து, உதிர்த்த அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் முத்துகள் - ஒரு கப்

  • துருவிய காலிஃப்ளவர் - ஒரு கப்

  • வேர்க்கடலைப்பொடி - 2 டேபிள்ஸ்பூன்

  • முந்திரிப்பருப்பு - 6

  • புதினா தழை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன்

  • வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - கால் கப்

  • கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன்

  • கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • ரஸ்க் தூள் - 2 டேபிள்ஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)

  • ரெட் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

கார்ன் கபாப்
கார்ன் கபாப்

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம், காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து, கார்ன் போட்டு, புதினா, ரெட் சில்லி சாஸ் சேர்த்து வேர்க்கடலைப்பொடி தூவிப் புரட்டி கொத்தமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். சிறு உருண்டைகளாகப் பிடித்து வடை போல தட்டி, விருப்ப வடிவ பிஸ்கட் கட்டரால் அழுத்தி எடுத்து ரஸ்க் தூளில் புரட்டி எடுக்கவும். எல்லாவற்றையும் இதே மாதிரி செய்து ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஒரு பானில் (Pan) கொஞ்சம் எண்ணெய்விட்டு சூடாக்கி, இந்த கார்ன் கபாபை அதில் போட்டு இருபுறமும் வேகவிட்டுப் பொன்னிறமானதும் எடுத்து, அதன் ஒவ்வொன்றின் மேலும் முந்திரிப்பருப்பு வைத்து அலங்கரித்து சாஸ் உடன் பரிமாறவும்.

100 கிராம் ஸ்வீட் கார்னிலிருந்து 86 கலோரி ஆற்றலைப் பெற முடியும்.

வொயிட் கார்ன் சூப்

தேவையானவை:

  • வெள்ளை சோளம் - அரை கப் (சூப்பர் மார்க்கெட், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)

  • கேரட் - (சிறு சதுர துண்டுகளாக நறுக்கியது) - கால் கப்

  • கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன்

  • சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்

  • தக்காளி - ஒன்று (நறுக்கவும்)

  • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

  • சின்ன வெங்காயம் - 10 (நறுக்கவும்)

  • நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

வொயிட் கார்ன் சூப்
வொயிட் கார்ன் சூப்

செய்முறை:

வெள்ளை சோளத்தை நீரில் ஆறு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். வெந்த வெள்ளை சோளத்தில் பாதியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் வெங்காயம், தக்காளி , இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, கேரட் துண்டுகளைப் போட்டு மேலும் வதக்கவும். இதில் தேவையான அளவு நீர் ஊற்றி அரைத்த சோளம், மீதி உள்ள முழு வெள்ளை சோளம் சேர்த்து, உப்பு, சீரகத்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு வெந்ததும் இறக்கிவைத்து மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

வெள்ளைச் சோளத்தில் கொலஸ்ட்ரால் கிடையாது. 100 கிராம் வெள்ளைச் சோளத்தில் 1.4 கிராம் மட்டுமே கொழுப்பு.

வொயிட் கார்ன் ஃப்ரை இட்லி

தேவையானவை:

  • வெள்ளை சோளம் - 3 கப் (சூப்பர் மார்க்கெட், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)

  • முழு உளுந்து - ஒரு கப்

  • இட்லி அரிசி - ஒரு கப்

  • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)

  • சீரகம் - ஒரு டீஸ்பூன்

  • கடுகு - ஒரு டீஸ்பூன்

  • கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

  • மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

  • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

  • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

வொயிட் கார்ன் ஃப்ரை இட்லி
வொயிட் கார்ன் ஃப்ரை இட்லி

செய்முறை:

வெள்ளை சோளம், வெந்தயத்தை நீரில் 10 மணி நேரம், முழு உளுந்தை நீரில் ஒரு மணி நேரம், இட்லி அரிசியை நீரில் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். முதலில் ஊறிய அரிசி, சோளம் - வெந்தயம், உளுந்தில் இருந்து நீரை வடிக்கவும். அவற்றைத் தனித்தனியாக மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பிறகு அரைத்தவற்றை கிரைண்டரில் சேர்த்து மையாக அரைத்து ஐந்து மணி நேரம் புளிக்கவைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். பின்னர் தேவையான அளவு இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுத்து நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, சீரகம், பச்சை மிளகாய் தாளிக்கவும். இதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கறிவேப்பிலை, துண்டுகள் போட்ட இட்லி, சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

வெள்ளைச் சோளத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி-6, மெக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் ஆகிய சத்துகள் கணிசமான அளவில் உள்ளன.

மிக்ஸ்டு கார்ன் இனிப்புச் சுண்டல்

தேவையானவை:

  • ஆறு மணி நேரம் ஊற வைத்து, வேகவைத்த வெள்ளை சோளம் - கால் கப்

  • வேகவைத்த அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - கால் கப்

  • வேகவைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிய பேபி கார்ன் - கால் கப்

  • உலர்திராட்சை, விதை நீக்கிய பேரீச்சை (நறுக்கியது) - தலா 2 டேபிள்ஸ்பூன்

  • டூட்டி ஃப்ரூட்டி - ஒரு டேபிள்ஸ்பூன்

  • பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (பனீரை வெந்நீரில் போட்டு எடுத்து துருவிக்கொள்ளவும்)

  • ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

  • நாட்டுச் சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்

  • உலர் மிக்ஸ்டு விதைகள் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்

மிக்ஸ்டு கார்ன் இனிப்புச் சுண்டல்
மிக்ஸ்டு கார்ன் இனிப்புச் சுண்டல்

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் வாய் அகன்ற பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டுக் கிளறி, சிறிய பவுலுக்கு மாற்றிப் பரிமாறவும்.

சோளம் கி.மு 2750 காலகட்டத்திலேயே மெக்ஸிகோவில் வனப்பயிராக வளர்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

மிக்ஸ்டு கார்ன் ரைஸ்

தேவையானவை:

  • உதிரியாக வடித்த சாதம் - 2 கப்

  • வேகவைத்து உதிர்த்த அமெரிக்க ஸ்வீட் கார்ன் - கால் கப்

  • பேபி கார்ன் (வெந்நீரில் போட்டு எடுத்து, பிழிந்து நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கியது) - கால் கப்

  • வெள்ளை சோளம் (ஆறு மணி நேரம் ஊறவைத்து, வேக வைத்தது) - கால் கப்

  • ஏலக்காய் - 2

  • கிராம்பு - 2

  • பிரியாணி இலை - ஒன்று

  • பட்டை - சிறிய துண்டு

  • பச்சை மிளகாய் - ஒன்று (நீளமாக நறுக்கவும்)

  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு

  • பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

  • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

அரைத்துக்கொள்ள:

  • சின்ன வெங்காயம் - 5 (தோலுரிக்கவும்)

  • இஞ்சி - கால் அங்குலத் துண்டு (தோல் நீக்கவும்)

  • பூண்டு - 3 பல்

  • சோம்பு - ஒரு டீஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 3

மிக்ஸ்டு கார்ன் ரைஸ்
மிக்ஸ்டு கார்ன் ரைஸ்

செய்முறை:

அரைக்கக்கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, மூன்றுவித சோளத்தையும் போட்டுக் கிளறவும். பிறகு வெந்த சாதம், உப்பு சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

நாம் சைனீஸ் பாணி உணவுகளில் மட்டுமே பேபிகார்னைப் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். ஆனால், சூப், சாலட், பாஸ்தா உட்பட பலவகை உணவுகளிலும் பேபிகார்னைச் சேர்க்க முடியும்.

மிக்ஸ்டு கார்ன் கிரேவி

தேவையானவை:

  • உதிர்த்த அமெரிக்கன் ஸ்வீட் கார்ன், வெள்ளை சோளம், நறுக்கிய பேபி கார்ன் (சேர்த்து) - ஒரு கப் (மூன்றும் வேகவைத்தது)

  • வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்)

  • கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) - சிறிதளவு

  • மசாலா வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்

  • எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

அரைத்துக்கொள்ள:

  • தக்காளி - 2

  • தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

  • முந்திரிப்பருப்பு - 6 (நீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்)

  • கசகசா (வறுத்தது) - ஒரு டீஸ்பூன்

  • பூண்டு - 5 பல்

  • சீரகம் - ஒரு டீஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 3

  • கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

மிக்ஸ்டு கார்ன் கிரேவி
மிக்ஸ்டு கார்ன் கிரேவி

செய்முறை:

அரைக்கக்கொடுத்த பொருள்களை மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதனுடன் மூன்றுவித சோளத்தைச் சேர்த்து, நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, உப்பு சேர்த்து, கொத்த மல்லித்தழை தூவி, மசாலா வேர்க்கடலையும் தூவி இறக்கவும். குறிப்பு: வெள்ளை சோளத்தை ஆறு மணி நேரம் ஊறவைத்து வேகவைக்கவும்.

வடஅமெரிக்க நாடுகளின் மிக முக்கியமான உணவு சோளம்.