ரெசிப்பிஸ்
Published:Updated:

அசத்தல் எக்லெஸ் கேக்ஸ்

எக்லெஸ் கேக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
எக்லெஸ் கேக்ஸ்

ஜானகி அஸாரியா

ரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுவிட்டது. எங்கும் வெளியில் செல்ல முடியாத நிலைமை இருப்பதால் வீட்டில் கட்டிப்போட்டது போல உணர்கிறார்கள் குழந்தைகள். அதோடு, குழந்தைகள் மணிக்கு ஒரு தடவை ஏதாவது சாப்பிடக் கேட்டுக்கொண்டும் இருப்பார்கள். வீட்டில் இருக்கும் கோதுமை, மைதா, சர்க்கரை, வெல்லம், எண்ணெய் ஆகிய பொருள்களை வைத்து சுலபமாகச் செய்யக்கூடிய சில எக்லெஸ் கேக் வகைகளின் ரெசிப்பிகளை இங்கே தந்திருக்கிறார் ஜானகி அஸாரியா.

அசத்தல் எக்லெஸ் கேக்ஸ்

பிறகென்ன... இந்த லாக் டெளன் நேரத்தில் சுவையான கேக்குகளைத் தயாரித்துக்கொடுத்து குட்டீஸ்களை குஷிப்படுத்துவோம்!

அசத்தல் எக்லெஸ் கேக்ஸ்

பனானா வால்நட் கேக்

தேவையானவை:

நன்கு பழுத்த வாழைப்பழம் - 3

சர்க்கரை – ஒன்றே கால் கப்

ரிஃபைண்ட் எண்ணெய் - அரை கப் + ஒரு டேபிள்ஸ்பூன்

கெட்டித் தயிர் - அரை கப்

மைதா அல்லது கோதுமை மாவு - 2 கப்

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்

வால்நட் – அரை கப்

வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

அசத்தல் எக்லெஸ் கேக்ஸ்

செய்முறை:

மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். மைதா அல்லது கோதுமை மாவுடன் உப்பைச் சேர்த்து இரண்டு முறை சலித்து வைத்துக்கொள்ளவும். வாழைப் பழங்களைத் தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசிக்கவும். மற்றொரு பாத்திரத்தில் தயிருடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடரை கலந்து நன்றாக அடித்து ஐந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஐந்து நிமிடங்களில் அது நன்றாக நுரைத்து வரும். பிறகு அதனுடன் எண்ணெய், சர்க்கரை, வெனிலா எசென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து சர்க்கரை முழுவதுமாக கரைந்து க்ரீம் போல ஆகும் வரை அடிக்கவும். பின்பு இதனுடன் மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர் இதில் சலித்த மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும். மாவைச் சேர்த்துக் கலக்கும்போது அதிகமாக அடித்துக் கலக்கக் கூடாது. லேசாகக் கலந்தால் போதும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வால்நட்டைச் சேர்க்கவும்.

பிறகு ஒரு பேக்கிங் பானில் நன்றாக எண்ணெய் தடவி, கேக் கலவையை அதில் ஊற்றவும். பிரீஹீட் செய்த ஓவனில் இதை வைத்து 35-ல் இருந்து 40 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

கிட்டத்தட்ட 17-ம் நூற்றாண்டு வரை ரொட்டியையும் கேக்கையும் யாருமே வேறு வேறாகப் பிரித்துப் பார்க்கவில்லை.

டூட்டி ஃப்ரூட்டி கேக்

தேவையானவை:

மைதா அல்லது கோதுமை மாவு - ஒன்றரை கப்

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

பொடித்த சர்க்கரை - ஒரு கப்

வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்

ரிஃபைண்ட் எண்ணெய் - அரை கப் + ஒரு டேபிள்ஸ்பூன்

கெட்டித் தயிர் - ஒரு கப்

உலர் திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்

டூட்டி ஃப்ரூட்டி - 2 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கி பதப்படுத்தப்பட்ட ஆரஞ்சுத் தோல் - 2 டேபிள்ஸ்பூன் (இது ORANGE PEEL என்கிற பெயரில் கடைகளில் கிடைக்கும்)

அசத்தல் எக்லெஸ் கேக்ஸ்

செய்முறை:

மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். ஒரு பேக்கிங் பானில் நன்றாக எண்ணெய் தடவி வைக்கவும். மைதா அல்லது கோதுமை மாவை இரண்டு முறை சலித்து எடுத்து வைக்கவும். பின்னர் ஒரு டேபிள்ஸ்பூன் மாவுடன் உலர் திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, நறுக்கிய ஆரஞ்சுத் தோல் ஆகியவற்றை கலந்து தனியாக வைக்கவும். தயிரை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதனுடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இரண்டையும் கலந்து நன்றாக அடிக்கவும். அதை அப்படியே ஐந்து நிமிடங்கள் தனியாக வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து அது நன்றாக நுரைத்து இருக்கும். பின்னர் அதனுடன் அரை கப் எண்ணெய், வெனிலா எசென்ஸ், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு இதனுடன் சலித்துவைத்த மாவையும் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து தனியாகக் கலந்து வைத்த உலர் திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, ஆரஞ்சுத் தோல் ஆகியவற்றையும் மாவுக் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு இந்த கேக் கலவையை எண்ணெய் தடவிய பேக்கிங் பானில் ஊற்றவும்.

பேக்கிங் பானை ஓவனில் வைத்து 45 நிமிடங்கள் அல்லது கேக் நன்றாக பேக் ஆகும் வரை வைத்து பின்னர் எடுக்கவும்.

பண்டைய எகிப்தில் கேக், ரொட்டி ஆகியவை இறை வழிபாட்டில் படைக்கப்படும் புனிதப் பொருளாகவே கருதப்பட்டிருக்கிறது.

ப்ளூ பெர்ரி மஃப்பின்

தேவையானவை:

மைதா அல்லது கோதுமை மாவு - ஒரு கப்

கார்ன் மாவு - 2 டேபிள்ஸ்பூன்

ரிஃபைன்ட் எண்ணெய் – கால் கப் + ஒரு டேபிள்ஸ்பூன்

கெட்டியான தயிர் - கால் கப்

பால் – முக்கால் அல்லது ஒரு கப்

சர்க்கரை – முக்கால் கப்

வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

ப்ளூ பெர்ரி ஜாம் - 2 டேபிள்ஸ்பூன்

உலர்ந்த ப்ளூ பெர்ரி பழங்கள் - 2 டேபிள்ஸ்பூன்

அசத்தல் எக்லெஸ் கேக்ஸ்

செய்முறை:

மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். மைதா அல்லது கோதுமை மாவுடன் கார்ன் மாவு, பேக்கிங் பவுடர் இரண்டையும் கலந்து இரண்டு முறை சலித்து வைத்துக்கொள்ளவும். தயிரை பெரிய பாத்திரத்தில் எடுத்து அதனுடன் பேக்கிங் சோடாவை நன்றாகக் கலந்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு இதனுடன் எண்ணெய், பால், சர்க்கரை, வெனிலா எசென்ஸ் சேர்த்து சர்க்கரை நன்றாகக் கரைந்து க்ரீம் போல ஆகும் வரை நன்றாக அடிக்கவும்.பின்னர் சலித்துவைத்த மாவை இதில் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும் (மாவு மிகவும் இறுகி இருந்தால் மேலும் கால் கப் பால் சேர்த்துக் கலந்துகொள்ளலாம்).பின்னர் இதில் ப்ளூ பெர்ரி ஜாமைச் சேர்த்து லேசாகக் கலந்துவிடவும். (மிகவும் நன்றாகக் கலந்தால் ப்ளூ பெர்ரியின் நீல நிறம் கேக்கில் தெரியாமல் போய்விடும்). பின்னர் இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் உலர்ந்த ப்ளூ பெர்ரி பழத்தையும் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை எண்ணெய் தடவிய கப் கேக் பான் அல்லது பேப்பர் கப்புகளில் முக்கால் பாகம் அளவுக்கு ஊற்றவும். இதன்மேலே மீதமுள்ள ப்ளூ பெர்ரி பழங்களைத் தூவவும்.

பின்னர் இவற்றை ஓவனில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

சீன மக்கள் `Heng O’ என்ற தங்கள் நிலவுக் கடவுளுக்கு வட்ட வடிவ கேக்கைத் தயாரித்துப் படைத்திருக்கின்றனர்.

ஆரஞ்சு க்ரான்பெர்ரி கேக்

தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப்

சர்க்கரை - அரை கப்

கார்ன் மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

ரிஃபைண்ட் எண்ணெய் - கால் கப் + 2 டேபிள்ஸ்பூன்

ஆரஞ்சு ஜூஸ் - ஒரு கப்

துருவிய ஆரஞ்சுப்பழத் தோல் - 2 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

ஆரஞ்சு எசென்ஸ் - அரை டீஸ்பூன்

ஆரஞ்சு நிற ஃபுட் கலர் (விருப்பப்பட்டால்) – கால் டீஸ்பூன்

உலர்ந்த க்ரான்பெர்ரி பழம் - 2 டேபிள்ஸ்பூன்

அசத்தல் எக்லெஸ் கேக்ஸ்

செய்முறை:

மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். கோதுமை மாவு, கார்ன் மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை இரண்டு முறை சலித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, கால் கப் எண்ணெய், இரண்டையும் சேர்த்து சர்க்கரை கரைந்து க்ரீம் போல ஆகும்வரை நன்கு அடிக்கவும். பிறகு இதனுடன் ஆரஞ்சு ஜூஸையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் அதில் துருவிய ஆரஞ்சுப்பழத் தோல், ஆரஞ்சு எசென்ஸ், ஒரு டேபிள் ஸ்பூன் க்ரான்பெர்ரி பழம், ஆரஞ்சு ஃபுட் கலர் மற்றும் சலித்துவைத்துள்ள கோதுமை மாவு ஆகியவற்றை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு பேக்கிங் பானில் எண்ணெய் தடவவும். அதில் பேக்கிங் பேப்பரை வைக்கவும். அதன் மேலும் எண்ணெய் தடவவும். இதில் தயாரித்துவைத்துள்ள கேக் கலவையை ஊற்றி அதன்மீது ஒரு டேபிள்ஸ்பூன் உலர்ந்த க்ரான்பெர்ரியைத் தூவவும்.

பின்னர் இதை ஓவனில் 30 முதல் 35 நிமிடங்கள் வைத்து நன்றாக பேக் செய்து எடுக்கவும்.

ரஷ்யர்கள் தங்களின் வசந்தக் கடவுளான Maslenitsa-வுக்குச் சிறிய வட்ட வடிவ கேக்குகளை ‘சூரிய கேக்குகள்’ என்னும் பெயரில் படைத்தனர்.

சாக்லேட் கேக்

தேவையானவை:

மைதா - ஒன்றரை கப்

கோகோ பவுடர் – கால் கப்

ரிஃபைண்ட் எண்ணெய் – கால் கப் + 2 டேபிள்ஸ்பூன்

பால் – அரை கப்

தயிர் – அரை கப்

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

சர்க்கரை - ஒரு கப்

வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்

அசத்தல் எக்லெஸ் கேக்ஸ்

செய்முறை

மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர் ஆகியவற்றைக் கலந்து கட்டியில்லாமல் இரண்டு முறை சலித்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், தயிர், சர்க்கரை மூன்றையும் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்றாக அடிக்கவும். பின்னர் அதில் பேக்கிங் சோடாவைக் கலந்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு அதில் வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். பின்னர் சலித்துவைத்துள்ள மாவுக் கலவையை அதில் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும். பிறகு அதில் கால் கப் எண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

ஒரு பேக்கிங் பானில் எண்ணெய் தடவி அதில் பேக்கிங் பேப்பரை வைக்கவும். பேப்பரின் மேல் சிறிது எண்ணெய் தடவி கலந்துவைத்துள்ள கேக் மாவை அதில் ஊற்றி லேசாகச் சமப்படுத்தவும். பின்னர் இதை ஓவனில் வைத்து 20 முதல் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். விருப்பப்பட்டால் சாக்லேட் கனாஸ் (Ganache) செய்து அதை கேக் மேல் ஊற்றிப் பரிமாறலாம்.

ஐரோப்பியப் பழங்குடிகளான செல்ட் இனத்தினர், வசந்தகாலப் பண்டிகையின் முதல் நாளில், வட்ட வடிவ கேக்குகளைத் தயாரித்து எடுத்து வந்து கடவுளுக்குப் படைத்தனர். பின், அந்த வட்ட கேக்குகளை மலைப்பகுதியின் மேலிருந்து உருட்டி விட்டனர்.

கனாஸ்

தேவையானவை:

க்ரீம் - அரை கப்

சாக்லேட் சிப்ஸ் – முக்கால் கப்

செய்முறை:

சாக்லேட் சிப்ஸை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். க்ரீமை ஒரு பாத்திரத்தில் ஊற்றிச் சூடாக்கவும். லேசாகக் கொதி வரும்போது அடுப்பை அணைத்து க்ரீமை சாக்லேட் சிப்ஸின் மீது ஊற்றி, ஐந்து நிமிடங்கள் அப்படியே மூடிவைக்கவும். இப்படிச் செய்வதால் சாக்லேட் சிப்ஸ் நன்றாக ஊறிவிடும். பிறகு இதைக் கட்டியில்லாமல் பேஸ்ட் போல நன்றாகக் கலந்துகொள்ளவும். கனாஸ் ரெடி. இவ்வாறு தயாரித்த கனாஸை கேக்கின் மேல் தடவிப் பரிமாறவும்.

கேரட் கேக்

தேவையானவை:

கோதுமை மாவு – ஒன்றரை கப்

கார்ன் மாவு - 2 டேபிள்ஸ்பூன்

துருவிய கேரட் – ஒரு கப்

எண்ணெய் – அரை கப் +

2 டேபிள் ஸ்பூன்

தயிர் – ஒரு கப்

பால் – கால் அல்லது அரை கப்

வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

பொடித்த வெல்லம் -

ஒன்றேகால் கப்

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

ஆல் ஸ்பைஸ் பவுடர் - ஒரு டீஸ்பூன் (இது கிடைக்கவில்லையென்றால் ஏலக்காய், ஜாதிக்காய், ஒரு சிறிய துண்டு பட்டை ஆகியவற்றைச் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்)

பொடித்த சர்க்கரை – அலங்கரிக்க

அசத்தல் எக்லெஸ் கேக்ஸ்

செய்முறை:

மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். கோதுமை மாவுடன் கார்ன் மாவு, பேக்கிங் பவுடர், ஆல்ஸ்பைஸ் பவுடர், பேக்கிங் சோடா எல்லாவற்றையும் சேர்த்து மூன்று முறை சலித்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரை கப் எண்ணெய், தயிர், பொடித்த வெல்லம், வெனிலா எசென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அடிக்கவும். பிறகு இதனுடன் துருவிய கேரட்டையும் சேர்த்துக் கலக்கவும். பிறகு சலித்துவைத்துள்ள மாவை இதனுடன் சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்கவும். பின்னர் இதனுடன் தேவைப்படும் அளவுக்குப் பால் ஊற்றி கேக் மாவுப் பதத்துக்கு நன்றாகக் கலக்கவும். ஒரு பேக்கிங் பானில் எண்ணெய் தடவி அதன் அடியில் பேக்கிங் பேப்பர் வைக்கவும். அதன் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி தயாரித்துவைத்துள்ள கேக் மாவை அதில் ஊற்றிச் சமப்படுத்தவும்.

பிரீஹீட் செய்துள்ள ஓவனில் இதனை வைத்து 45-ல் இருந்து 50 நிமிடங்கள் வரை நன்றாக பேக் செய்து எடுக்கவும். கேக் நன்றாக ஆறிய பிறகு அதன் மேல் பொடித்த சர்க்கரை தூவிப் பரிமாறவும்.

பண்டைய கிரேக்கர்கள் மாவுடன் தேனும் பருப்புகளும் சேர்த்துச் சமைத்த கேக்கின் பெயர் `Plakous’. அதற்கு ‘தட்டையான உணவு’ என்று பொருள்.

ஜாம் ரோல்

தேவையானவை:

மைதா – ஒரு கப்

பொடித்த சர்க்கரை - அரை கப்

உருக்கிய வெண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்

தயிர் – கால் கப்

பால் – அரை கப்

மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் - 4 டேபிள்ஸ்பூன்

வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

வினிகர் - ஒரு டீஸ்பூன்

அசத்தல் எக்லெஸ் கேக்ஸ்

செய்முறை:

ஓவனை 220 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். மைதாவுடன் பேக்கிங் பவுடரை கலந்து சலித்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர், 4 டேபிள்ஸ்பூன் உருக்கிய வெண்ணெய், பேக்கிங் சோடா, பால், பொடித்த சர்க்கரை, வெனிலா எசென்ஸ், வினிகர் ஆகியவற்றைச் சேர்த்து க்ரீம் போல ஆகும் வரை நன்றாக அடிக்கவும். பிறகு இதில் சலித்த மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

(9” x 14”) நீள அகலமுள்ள ஒரு நீண்ட செவ்வக வடிவிலான பேக்கிங் ட்ரேயில் ஒரு டேபிள்ஸ்பூன் உருக்கிய வெண்ணெயைத் தடவவும். அதன் மேல் பேக்கிங் பேப்பரை வைக்கவும். பேப்பரின் மேல் மறுபடியும் மீதமுள்ள உருக்கிய வெண்ணெயை நன்றாகத் தடவவும். செய்து வைத்துள்ள கேக் கலவையை இந்த பேக்கிங் ட்ரேயில் ஊற்றி, சமப்படுத்தி, பிரீஹீட் செய்த ஓவனில் வைத்து ஏழு நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

(9” x 14”) நீள அகலத்தில் மற்றொரு பேக்கிங் பேப்பரை நீளமாக வெட்டிக் கொள்ளவும். அதன்மேல் பொடித்த சர்க்கரையைத் தூவி தயாராக வைக்கவும்.

பேக் செய்த கேக்கை, இந்த பேப்பரின் மேல் கவிழ்த்து, கேக்கின் மேலுள்ள பேப்பரை பிரித்து எடுக்கவும். பின்னர் இந்த கேக்கை அடியில் உள்ள பேப்பருடன் சேர்த்து, இறுக்கமான ரோலாக உருட்டவும். பிறகு இதை அப்படியே அரை மணி நேரம் வைக்கவும்.

ஜாமை ஒரு கிண்ணத்தில் போட்டு லேசாகச் சூடாக்கவும். பிறகு இதை ஸ்பூனால் நன்கு அடித்துக்கலக்கவும். அரை மணி நேரம் கழித்து கேக் ரோலைப் பிரிக்கவும். அதன் மேல் ஜாமை நன்றாகத் தடவவும். பின்னர் அடியில் உள்ள பேப்பரை விட்டுவிட்டு, கேக்கை மறுபடியும் இறுக்கமான ரோலாக உருட்டி மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:

கேக்கை ஏழு நிமிடங்களுக்கு மேல் பேக் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அதில் விரிசல் விட்டுவிடும். பின்னர் ரோல் சரியாக வராது.

ரோமானியர்களது பாரம்பர்ய கேக்கின் பெயர் `Sautra’. மாவு + மாதுளை + உலர் பழங்கள் + ஒயின் கலந்த ரெசிப்பி அது. அவற்றுடன் பாலாடைக்கட்டியும் சேர்த்து `Libum’ என்ற கேக் தயாரித்தார்கள். உலகின் முதல் சீஸ் கேக் அதுதான்!

மார்பிள் கேக்

தேவையானவை:

மைதா – ஒன்றேகால் கப்

கண்டன்ஸ்டு மில்க் - 200 மில்லி

கோகோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

வெண்ணெய் - 100 கிராம்

(ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து குறைந்தது மூன்று மணி நேரம் வெளியில் வைத்த வெண்ணெய்)

பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

வினிகர் - ஒரு டீஸ்பூன்

தண்ணீர் – அரை கப்

அசத்தல் எக்லெஸ் கேக்ஸ்

செய்முறை:

மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். ஒரு கேக் பானில் நன்றாக எண்ணெய் தடவி வைக்கவும். மைதா, பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை சலித்து வைத்துக்கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் கண்டன்ஸ்டு மில்க், வெனிலா எசென்ஸ், வெண்ணெய், வினிகர், தண்ணீர் ஆகியவற்றைச் கலவையானது நன்றாக நுரைத்து க்ரீம் போல ஆகும்வரை அடிக்கவும். பின்னர் இதனுடன் சலித்துவைத்துள்ள மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கலந்து நன்றாகக் கலக்கவும்.

பிறகு இதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கவும். அதில் ஒரு பகுதியில் கோகோ பவுடரை கலந்து நன்றாக மிக்ஸ் செய்யவும். கேக் பானில் வெள்ளை மாவையும் கோகோ கலந்த மாவையும் மாற்றி மாற்றி ஊற்றவும். இரண்டு மூன்று முறை பானை நன்றாகத் தட்டி சமப்படுத்தவும். பின்னர் இதனை பிரீஹீட் செய்த ஓவனில் வைத்து 35 முதல் 40 நிமிடங்கள் அல்லது கேக் நன்றாக பேக் ஆகும் வரை வைத்து பேக் செய்து எடுக்கவும்.

13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைகிங் இன மக்கள், கேக் போன்ற இனிப்புக்கு `Kaka’ என்று பெயர் வைத்திருந்தனர். `Cake’ என்ற சொல்லின் வேர்ச்சொல் இதுவாகவே இருக்கக்கூடும்.