பிரீமியம் ஸ்டோரி

ஸ்திரேலியாவிலுள்ள பெர்த் நகரில் வசிக்கும் சாந்தா ஜெயராஜின் பூர்வீகம் தஞ்சாவூர். கணவர் ஜெயராஜ் திரைப்படத் தயாரிப்பாளர். ஓவியக்கலை, தையற்கலை, வீட்டு அலங்காரம், மலர் அலங்காரம், மணப்பெண் அலங்காரம் போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்றவர் சாந்தா. தமிழ்ப்பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள இவர், விகடன் பிரசுரத்தில் `சாந்தாஸ் கேக்ஸ்’, `சாந்தாஸ் சமையல்’, `சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணி வகைகளும்’ ஆகிய நூல்களையும் வழங்கியுள்ளார்.

அயல்நாட்டு சமையல்
அயல்நாட்டு சமையல்
 சாந்தா ஜெயராஜ்
சாந்தா ஜெயராஜ்

இப்போது முழுநேர மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்துவரும் சாந்தாவின் ரெசிப்பிகள் டியூடிப்பில் ‘Shantha’s Table’ என்ற பெயரில் இடம்பெற்றுள்ளன. பல நாட்டு சமையல் வகைகளைச் செய்து அனுபவப்பட்ட இவரின் வெரைட்டி ரெசிப்பிகள் அழகிய படங்களுடன் இதோ உங்களுக்காக...

உருளைக்கிழங்கு சாலட்

தேவையானவை:

  • வேகவைத்த உருளைக்கிழங்கு - 250 கிராம்

  • வேகவைத்து உதிர்த்த மக்காச்சோளம் - ஒரு கப்

  • தயிர் - ஒரு கப்

  • ஃப்ரெஷ் க்ரீம் – அரை கப்

  • பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்

  • உப்பு - அரை டீஸ்பூன்

உருளைக்கிழங்கு சாலட்
உருளைக்கிழங்கு சாலட்

செய்முறை:

வேகவைத்த உருளைக்கிழங்கைத் தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளவும். மேலே தரப்பட்டிருக்கும் மற்ற அனைத்துப் பொருள்களையும் (வெங்காயத்தாள் தவிர) உருளைக்கிழங்குடன் சேர்த்து, ஒரு முட் கரண்டியால் நன்றாகக் கிளறிவிட்டு, ஃபிரிட்ஜில் வைத்துவிடவும். பரிமாறும் முன்னர் வெங்காயத்தாளைத் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: இது ஆங்கிலேயர்களின் உணவு வகைகளுள் ஒன்று. ஆஸ்திரேலியாவிலும் மிகப் பிரபலமானது.

உலகில் விரும்பி உண்ணப்படும் 10 பிரதான உணவு வகைகளில் உருளைக்கிழங்கு இடம்பெறுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெவில்ட் இறால்

தேவையானவை:

  • இறால் - 500 கிராம் (உள்ளே இருப்பதைச் சுத்தப்படுத்தவும். தோல் மற்றும் வால் இருக்க வேண்டும்)

  • வினிகர் - 3 டேபிள்ஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் - 3

  • பெரிய வெங்காயம் - 2

  • கறிவேப்பிலை - ஒரு கொத்து

  • மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

  • ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

  • பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

  • எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

  • மஞ்சள்தூள், உப்பு - தேவைக்கேற்ப

டெவில்ட் இறால்
டெவில்ட் இறால்

செய்முறை:

வெங்காயத்தை வட்டமாகவும் காய்ந்த மிளகாயைச் சரித்தும் நறுக்கிவைத்துக் கொள்ள வும். இறாலை மஞ்சள் நீரில் நன்கு அலசி, தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும். ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மிளகுத்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், அரை டீஸ்பூன் உப்பு, வினிகர், கறிவேப்பிலை ஆகியவற்றை இறாலுடன் சேர்த்துப் புரட்டி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

ஒரு அகன்ற வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி ஓரிரண்டு துண்டுகள் வெங்காயத்தை முதலில் பொரியவிடவும். பின்னர் பூண்டு விழுதைச் சேர்த்து வேகமாகக் கிளறி, மீதமிருக்கும் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்துப் பொரியவிடவும். கிளறியவண்ணமே இருக்க வேண்டும். கொஞ்சம் மஞ்சள்தூளும் சேர்க்க வேண்டும். ஃப்ரிட்ஜில் இருக்கும் இறாலைக் கடைசியாகச் சேர்த்து, மீதமிருக்கும் மிளகாய்த்தூள், தேவைப்படின் உப்பும் சேர்த்துக் கிளறி, இறால் வெந்த உடனேயே வாணலியை இறக்கிவிட வேண்டும். வெங்காயம், மிளகாய் குழைந்து போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: இந்தச் செய்முறை காரமாக இருக்க வேண்டும். விரும்பினால் மிளகாய்த்தூள் கொஞ்சம் அதிகமாகவே சேர்த்துக்கொள்ளலாம்.

இறாலில் அதிக அளவில் கால்சியம், அயோடின் மற்றும் புரதச்சத்துகள் உள்ளன.

டக்சல் காளான் மசாலா

தேவையானவை:

  • காளான் (Button Mushrooms) – 500 கிராம்

  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - 200 கிராம்

  • நறுக்கிய பூண்டு - 10 பல்

  • நறுக்கிய கொத்தமல்லி இலை - ஒரு கப்

  • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

  • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

  • தேங்காய்த்துருவல் - ஒரு கப்

  • இஞ்சி - பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன்

  • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

டக்சல் காளான் மசாலா
டக்சல் காளான் மசாலா

செய்முறை:

காளானைச் சுத்தம் செய்து நீரில் அலசி, நீர்ப்பதம் இல்லாமல் நன்கு ஒரு பேப்பர் டவலால் துடைத்து, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி நறுக்கிய பூண்டினை மிதமான சூட்டில் பொரியவிட வேண்டும். பூண்டு ஓரளவு பொரிந்து வரும்போது இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து கொஞ்சம் உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வெங்காயத்தைப் பொரியவிடவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வரும்போது நறுக்கிய காளான், மீதமிருக்கும் மஞ்சள்தூள் மற்றும் தனியாத்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும். காளான் வெந்து நீர் வற்றி வரும்போது தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறவும். கடைசியாகக் கொத்தமல்லி இலையைத் தூவிக் கிளறி இறக்கிவிடவும்.

குறிப்பு:

காளானில் புரதச்சத்து அதிகம் உண்டு. காளான் சாப்பிட விரும்பாதவர்கள்கூட இந்த செய்முறையை விரும்புவார்கள். மிகவும் சுவையாக இருக்கும். ஃப்ரெஷ் தேங்காய்த்துருவல் கிடைக்காது போனால் டெசிக்கேட்டட் கோகனட் (Dessicated Coconut) உபயோகப்படுத்தலாம்.

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமானதொரு உணவுச் செய்முறை இது!

இந்தியாவில் 2000 காளான் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பூண்டு மீன் குழம்பு (Garlic Fish)

தேவையானவை:

  • முள் இல்லாத சிறிய மீன் துண்டுகள் - 500 கிராம்

  • முட்டை - ஒன்று

  • சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டேபிள்ஸ்பூன்

  • சிவப்பு கலரிங் - சில துளிகள்

  • செசெமி எண்ணெய் (Seseme Oil) – 2 டேபிள்ஸ்பூன்

  • பொடியாக நறுக்கிய பூண்டு - 10 பல்

  • உப்பு - சுவைக்கேற்ப

  • சாஸ் செய்வதற்கு

  • தண்ணீர் - ஒரு கப்

  • மீன் சாஸ் (Fish Sauce) – ஒரு டேபிள்ஸ்பூன்

  • சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

  • வினிகர் - ஒரு டீஸ்பூன்

  • தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்

  • சர்க்கரை - அரை டீஸ்பூன்

  • பொரிப்பதற்கு:

  • எண்ணெய் - 2 கப்

  • மேலே தூவ:

  • நறுக்கிய வெங்காயத்தாள் - 3 டேபிள்ஸ்பூன்

பூண்டு மீன் குழம்பு
பூண்டு மீன் குழம்பு

செய்முறை:

மீன் துண்டுகளை மஞ்சள் நீரில் அலசி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை நன்கு அடித்து அதில் சோயா சாஸ், சிவப்பு கலர், ஒரு சிட்டிகை உப்பு, சிறிதளவு நீரில் கரைத்த சோள மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து அதில் மீன் துண்டுகளை ஊறவைக்கவும். எண்ணெயைச் சூடாக்கி மீனைப் பொரித்தெடுத்து ஒரு பேப்பர் டவலில் போட்டு வைத்துக்கொள்ளவும். சாஸ் செய்யத் தேவையான பொருள்களை ஒரு சிறிய கிண்ணத்தில் கலந்து வைத்துக்கொள்ளவும்.

செசெமி எண்ணெயுடன் மீன் பொரித்த எண்ணெயில் ஒரு கரண்டி சேர்த்து ஒரு வாணலியில் சூடாக்கி, சிறு தீயில் பூண்டினை வதக்க வேண்டும். (பூண்டு கறுகாமல் பார்த்துக்கொள்ளவும்). பூண்டு வதங்கியவுடன் அதில் பொரித்தெடுத்த மீனைச் சேர்த்துப் புரட்டி, சாஸுக்காகக் கலந்து வைத்திருக்கும் பொருள்கள் அனைத்தையும் சேர்த்து ஏறக்குறைய இரண்டு நிமிடங்கள் சூடேற்றி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். பரிமாறும்போது நறுக்கிய வெங்காயத்தாளைத் தூவி, சூடாக சாதத்துடன் அல்லது நூடுல்ஸுடன் பரிமாறவும்.

குறிப்பு: பூண்டு மீன் சீனர்களின் சமையல் வகைகளுள் மிகவும் பிரபலமானது. சுலபமான செய்முறையும்கூட..

உடலுக்குத் தேவையான ஏ, பி, சி, டி, இ என அனைத்து வகையான வைட்டமின்களும் முட்டையில் உண்டு.

மரவள்ளிக்கிழங்குப் புட்டு

தேவையானவை:

  • தோல் அகற்றிய மரவள்ளிக்கிழங்கு - ஒரு கிலோ

  • தேங்காய்த் துருவல் - 300 - 400 கிராம்

  • உப்பு - 2 டீஸ்பூன்

  • வெள்ளை அரிசி மாவு (வறுத்தது) - முக்கால் கப் (விரும்பினால் மட்டும்)

மரவள்ளிக்கிழங்குப் புட்டு
மரவள்ளிக்கிழங்குப் புட்டு

செய்முறை:

மரவள்ளிக்கிழங்கை நன்கு நீரில் அலசி ஒரு பேப்பர் டவலால் துடைத்துவிட்டு ஒரு கிரேட்டரில் நன்றாகத் துருவிக்கொள்ளவும். பின்னர் அதைப் பிழிந்து நீரை அகற்றிவிடவும். பிழிந்தெடுத்த மரவள்ளிக்கிழங்கில் தேவையான அளவு உப்பு சேர்த்து, தேங்காய்த் துருவலில் பாதி அளவு சேர்த்து, விரும்பினால் அரிசி மாவையும் சேர்த்து நன்றாகக் குழைத்து வைத்துக்கொள்ளுங்கள். மீதியிருக்கும் தேய்காய்த் துருவலில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். புட்டுக் குழலைச் சூடேற்றி ஆவி வரும்போது, கொஞ்சமாகத் தேய்காய்த் துருவலை முதலில் போட்டு அதன் மேல் மரவள்ளிக்கிழங்குக் கலவை கொஞ்சம் போட்டு இதே போல இரண்டு அல்லது மூன்று முறை போட்டு புட்டுக் குழலை நிரப்பிய பின்னர் ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

குறிப்பு: சம்பல், வெந்தயக்குழம்பு அல்லது மீன் குழம்புடன் சாப்பிட, மிகவும் சுவையாக இருக்கும்.

கார்போஹைட்ரேட்டுகளைத் தருவதில் உலகின் மூன்றாவது பெரிய மூலம் மரவள்ளிக்கிழங்குதான்.

தேங்காய்ச் சம்பல்

தேவையானவை:

  • தேங்காய்த் துருவல் - 300 கிராம்

  • நறுக்கிய வெங்காயம் - அரை கப்

  • காய்ந்த மிளகாய் - 10 – 12

  • கறிவேப்பிலை - 15 - 20 இலைகள்

  • எலுமிச்சை - ஒன்று (சாறு எடுக்கவும்)

  • உப்பு - ஒன்றரை டீஸ்பூன் அல்லது தேவையான அளவு

தேங்காய்ச் சம்பல்
தேங்காய்ச் சம்பல்

செய்முறை:

காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் தண்ணீர்விடாமல் அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சைச்சாறு, தேங்காய்த் துருவல் மற்றும் மிக்ஸியில் அரைத்துவைத்த இந்தக் கலவை ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தேங்காய்ச் சம்பல் தயார்.

மரவள்ளிக்கிழங்கு புட்டுடன் பிசைந்து சாப்பிட இது நல்ல சுவையாக இருக்கும். அதேபோல தோசை, இடியாப்பம் போன்ற வற்றுடனும் தொட்டுச் சாப்பிடலாம்.

உலகில் வெப்ப மண்டல நாடுகளில் விளைகின்ற முக்கியமான பணப்பயிராக தேங்காய் திகழ்கிறது.

காலிஃப்ளவர் சிக்கன் ரைஸ்

தேவையானவை:

  • பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் - 500 கிராம்

  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்

  • பொடியாக நறுக்கிய கேரட் - ஒரு கப்

  • பொடியாக நறுக்கிய கோஸ் - ஒரு கப்

  • பொடியாக பச்சை மிளகாய் - 3

  • நறுக்கிய கொத்தமல்லி இலை - அரை கப்

  • கறிவேப்பிலை - 2 கொத்து

  • எலும்பில்லாத கோழி இறைச்சி - 250 கிராம்

  • முட்டை - 2

  • நறுக்கிய பூண்டு - 3 – 4 பல்

  • மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

  • எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

  • உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

காலிஃப்ளவர் சிக்கன் ரைஸ்
காலிஃப்ளவர் சிக்கன் ரைஸ்

செய்முறை

காலிஃப்ளவரை ஒரு ஸ்டீமரில் வேக வைத்துக்கொள்ளவும். (ஸ்டீமர் இல்லை யென்றால் இட்லிக் குக்கரில் வேகவைத்துக் கொள்ளலாம். அதேபோல அதிக நேரம் ஸ்டீம் செய்தால் காலிபிளவர் குழைந்துவிடும்.எனவே, இரண்டு,அல்லது மூன்று நிமிடங்கள் மட்டும் இட்லித் தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்கலாம்).

பின்னர் கோழி இறைச்சியை மஞ்சள் நீரில் நன்கு அலசி, சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, மிளகுத்தூள் போட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஒரு வாணலியில் சூடேற்றி நறுக்கிய பூண்டில் பாதியை சிறுதீயில் பொரியவிட்டு, இறைச்சியை அதில் சேர்த்து வதக்கி வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். மீதியிருக்கும் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை அதே வாணலியில் சூடேற்றி மீதமுள்ள பூண்டை முதலில் பொரியவிட்டு, பின்னர் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துக் கிளறி, கேரட், கோஸ் ஆகியவற்றுடன் கொஞ்சமாக உப்பும் சேர்த்து வதக்கவும். அடுத்து, தயாராக இருக்கும் இறைச்சியைச் சேர்த்துக் கிளறி கடைசியாக காலிஃப்ளவரைச் சேர்த்துக் கிளறி இறக்குவதற்கு முன்னர் தேவைப்படின் உப்பும் சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்துக் கிளறி இறக்கவும்..

பரிமாறும் முன்னர் ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்துப் போட்டு கொஞ்சமாக உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஒரு முள் கரண்டியால் அடித்து ஆம்லெட் போல் பொரித்தெடுத்து, அவற்றை நீளத் துண்டுகளாக வெட்டியெடுத்து காலிஃப்ளவர் ரைஸ் மேல் அடுக்கிப் பரிமாறுங்கள்.

குறிப்பு:

காலிஃப்ளவரை இப்படி ஸ்டீமரில் வேகவைப்பதற்கு ஒரு காரணம் உண்டு. அதாவது இயல்பாகவே காலிஃப்ளவர் நீர்ச்சத்து மிகுந்த ஒரு காயாகும். எனவே ஸ்டீமிங் மூலம் காலிஃப்ளவரை வேகவைத்தால் இதிலுள்ள அதிகப்படியான நீர் சுலபமாக வெளியேறிவிடும்.

அதேபோல கொஞ்சம் காரம் அதிகம் வேண்டுமென நினைப்பவர்கள் சிறிதளவு மிளகாய்த்தூள், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்.

சிக்கன் மற்றும் முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் அவற்றைத் தவிர்த்தும் இதைச் செய்யலாம்.

ஸ்டார்ச் எனப்படும் மாவுப்பொருள் எதுவும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் உணவு இது என்பதால் எடைக் குறைப்புக்கு இந்த உணவு மிகவும் கைகொடுக்கும்.

காலிஃப்ளவரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கத்திரிக்காய் ஊறுகாய்

தேவையானவை:

  • பெரிய அளவிலான பர்ப்பிள் நிறக் கத்திரிக்காய் - ஒன்று அல்லது சிறிய கத்திரிக்காய் - 500 கிராம்

  • உரித்து இடித்த பூண்டு - 10 பற்கள்

  • வினிகர் - ஒன்றரை கப்

  • உப்பு - 2 டீஸ்பூன்

  • சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூனில் இருந்து ஒன்றரை டேபிள்ஸ்பூன் வரை

  • மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

  • எண்ணெய் - 3 கப் (பொரிப்பதற்கு)

கத்திரிக்காய் ஊறுகாய்
கத்திரிக்காய் ஊறுகாய்

செய்முறை:

கத்திரிக்காயைச் சிறிய சதுரத்துண்டுகளாக நறுக்கி, கொஞ்சமாக மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசறி வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கத்திரிக்காய் துண்டுகளை அதில் போட்டுப் பொரித்து ஒரு பேப்பர் டவலில் போட்டு வைத்துக்கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் வினிகரை ஊற்றி அதில் மசித்த பூண்டு, உப்பு, சர்க்கரை, மிளகாய்த்தூள், மீதமுள்ள மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். கத்திரிக்காயை அதில் சேர்த்து, குழைந்து போகாமல் புரட்டிவிட்டு அடுப்பை அணைத்துவிடவும். நன்கு ஆறியவுடன் கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துப் பல மாதங்களுக்கு உபயோகப் படுத்தலாம்.

குறிப்பு:

சாதம், சப்பாத்தி, நான், புலவு சாதம் ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இலங்கையில் மிகப் பிரபலமான ஊறுகாய் வகை இது.

கத்திரிக்காயிலுள்ள நீர்ச்சத்து சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும் சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.

முருங்கைக்காய் முட்டை பால்கறி

தேவையானவை:

  • முருங்கைக்காய் - 4 அல்லது 5

  • முட்டை - 4

  • நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று

  • நறுக்கிய பச்சை மிளகாய் - 3

  • கறிவேப்பிலை - 2 கொத்து

  • தேங்காய்ப்பால் - 2 கப்

  • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

  • தக்காளி - 2

  • மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

  • தண்ணீர், உப்பு - தேவைக்கேற்ப

முருங்கைக்காய் முட்டை பால்கறி
முருங்கைக்காய் முட்டை பால்கறி

செய்முறை

முருங்கைக்காயைச் சுத்தப்படுத்தி, ஒன்றரை அங்குல நீள துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் அல்லது கனமான பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி முதலில் வெந்தயத்தைச் சிறுதீயில் பொரியவிடவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முருங்கைக்காய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறுதீயில் மூடி போட்டு வேகவைக்கவும். இடையிடையே கிளறிவிட வேண்டும்.

முருங்கைக்காய் ஓரளவு வதங்கியவுடன் நறுக்கிய தக்காளிப்பழத்தைச் சேர்த்து வதக்கி, காய்கள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து மூடி வேகவிடவும். முருங்கைக்காய் நன்கு வெந்து, தண்ணீரும் ஓரளவு வற்றியவுடன், தேங்காய்ப்பாலைச் சேர்த்து சிறுதீயில் வேக வைக்கவும். தேங்காய்ப்பால் அளவுக்கு அதிகமாக வற்றிவிடுவதற்கு முன்னர், முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து முருங்கைக்காய் பால்கறியின் மேல் ஊற்றி, கிளறாமல் அப்படியே மூடி சிறு தீயில் வேக வைக்கவும். பாத்திரம் மூடியபடியே இருக்க வேண்டும். முட்டைகள் நன்கு வெந்துவிட்டது என்பது தெரிந்ததும் அடுப்பை அணைத்து இறக்கிவிடவும்.

குறிப்பு:

சாதம், பிரெட், ரொட்டி, சப்பாத்தி ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

முட்டை சாப்பிடாதவர்கள் அதைத் தவிர்க்கலாம். முருங்கைக்காய் மட்டுமே வைத்து இப்படி சமைத்தால்கூட மிகவும் சுவையாக இருக்கும்.

ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.

நெய் சோறு

தேவையானவை:

  • முத்து சம்பா அல்லது சீரக சம்பா அரிசி - 6 கப்

  • நெய் - அரை கப்

  • இஞ்சி - பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்பூன்

  • நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று

  • ரம்பை (பண்டான் இலை) - ஒரு பெரிய இலை

  • கறிவேப்பிலை - ஒரு கொத்து

  • ஏலக்காய் - 5

  • கிராம்பு - 5

  • கறுவாப்பட்டை (லவங்கப்பட்டை) - 2 துண்டு

  • மஞ்சள்தூள் - முக்கால் டீஸ்பூன்

  • தண்ணீர் - தேவையான அளவு

  • தேங்காய்ப்பால் - 2 கப்

  • உப்பு - இரண்டரை டீஸ்பூன்

  • நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - திராட்சை - அரை கப்

நெய் சோறு
நெய் சோறு

செய்முறை:

அரிசியை மூன்று அல்லது நான்கு முறை நன்றாக அலசி ரைஸ் குக்கர் அல்லது ஒரு பாத்திரத்தில் போடவும். ஒரு சிறு வாணலியில் நெய்யைச் சூடேற்றி, ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றைப் போட்டுப் பொரியவிடவும். பின்னர் அதில் வெங்காயம், கறிவேப்பிலை, ரம்பை இலை ஆகியவற்றோடு ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். இவற்றோடு இஞ்சி - பூண்டு விழுதையும் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அலசி வைத்திருக்கும் அரிசியுடன் கலந்துகொள்ளவும். மஞ்சள்தூள், தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை அரிசியுடன் சேர்த்து வேகவைக்கவும்.

ரைஸ் குக்கரில் சமைப்பதானால் 10 நிமிடங் களுக்குப் பின்னர் ஒரு தடவை ஒரு முட் கரண்டியினால் கிளறிவிட்டால் போதும். கேஸ் அடுப்பில் சமைப்பதானால் சாதம் ஓரளவு வெந்தவுடன் சிறுதீயில் சமைப்பது நல்லது. தேங்காய்ப்பால் சேர்ப்பதால் சாதம் தீய்ந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

சாதம் வெந்து பரிமாறும்போது முந்திரிப் பருப்பு, திராட்சை தூவி அலங்கரித்துச் சூடாகப் பரிமாறுங்கள்.

குறிப்பு:

சம்பா அரிசியானது பாஸ்மதி அரிசி போல் இல்லாமல் வேக கொஞ்சம் அதிகமாகவே நேரம் ஆகும் என்பதாலேயே தண்ணீர் கொஞ்சம் அதிகமாக உபயோகிக்கிறோம்.

திருமணங்கள், பண்டிகைகள், விசேஷ தினங்களில் நெய் மணக்க இந்த நெய் சோறு சமைக்கலாம்.

சீரகத்தின் வடிவத்துக்கு இணையாகக் காணப்படுவதால், இந்த நெல்லுக்கு `சீரகச் சம்பா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு