Published:Updated:

இது இந்தியன் ஸ்பெஷல்!

அக்கார அடிசில்
பிரீமியம் ஸ்டோரி
அக்கார அடிசில்

ஜானகி அஸாரியா

இது இந்தியன் ஸ்பெஷல்!

ஜானகி அஸாரியா

Published:Updated:
அக்கார அடிசில்
பிரீமியம் ஸ்டோரி
அக்கார அடிசில்

ந்தியாவுக்குப் பல விதமான சிறப்புகள் உண்டு. பல மொழிகள், மொழிப்படி பிரித்த மாநிலங்கள். இதைவிட மிக சிறப்பான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு மாநிலத்தின் பல விதமான உணவு வகைகள். அந்த இடத்தின் சீதோஷணத்துக்குத் தகுந்தாற் போல் விளையும் காய்கறிகள், பழங்கள், தானிய வகைகளால் செய்யும் நூற்றுக்கணக்கில் இருக்கும் உணவு வகைகள்.

 ஜானகி அஸாரியா
ஜானகி அஸாரியா

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உணவுகளை ஹோட்டலில் ருசி பார்த்திருப்போம். கச்சோரி, ரசமலாய், ஸ்ரீகண்ட், அக்கி ரொட்டி போன்றவை மிகவும் பிரபலம். இவற்றுடன் கட்டே கி சப்ஜி, மிர்ச் கா சாலன், டாபேலி என விதவிதமான ரெசிப்பிகளை வீட்டிலேயே செய்து பரிமாற அழகிய படங்களுடன் இங்கே கற்றுத்தருகிறார் சமையற் கலைஞர் ஜானகி அஸாரியா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அக்கார அடிசில்

தேவையானவை:

  • அரிசி - அரை கப்

  • பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

  • வெல்லம் - ஒன்றரை கப்

  • பால் - ஒரு லிட்டர்

  • நெய் - அரை கப்

  • ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

  • முந்திரி, திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்

  • குங்குமப்பூ - சிறிதளவு

அக்கார அடிசில்
அக்கார அடிசில்

செய்முறை:

அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு கடாயில் லேசாக வறுத்து எடுக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றிக் கழுவி, பிரஷர் குக்கரில் அரை லிட்டர் பாலுடன் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தைக் கொதிக்கவிடவும். குக்கரைத் திறந்து இன்னும் அரை லிட்டர் பால், கரைத்த வெல்லம், குங்குமப்பூ சேர்த்து நன்றாக வேகவைக்கவும். பிறகு நெய்யை ஊற்றி நன்றாகக் கிளறவும். சிறிதளவு நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து அதில் சேர்க்கவும். பின் அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்

பாசிப்பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன.

அக்கி ரொட்டி

தேவையானவை:

  • அரிசி மாவு - ஒரு கப்

  • துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்

  • வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

  • பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

  • இஞ்சி - ஒரு சிறிய துண்டு (நறுக்கவும்)

  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்

  • பொடியாக நறுக்கிய தில் இலைகள் (சதகுப்பை) - ஒரு டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

  • எண்ணெய் - தேவையான அளவு

அக்கி ரொட்டி
அக்கி ரொட்டி

செய்முறை:

அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லித்தழை, சதகுப்பை கீரை, பச்சை மிளகாய், உப்பு மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிருதுவான மாவாகப் பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவை, உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். ஓர் உருண்டையை வாழையிலை அல்லது பட்டர் பேப்பர் மேல் வைத்து மெல்லிய ரொட்டியாக கையால் தட்டவும். ஒரு தோசைக்கல்லை சூடாக்கி கல்லில் பேப்பருடன் / இலையுடன் ரொட்டியைப் போட்டு, பேப்பர் / இலையைப் பிரித்து எடுக்கவும். பின் அதில் எண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் திருப்பிப்போட்டு, சுட்டெடுக்கவும். இதை விருப்பமான சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய்ப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்தால் புத்துணர்வு ஏற்படும்.

ஸ்ரீகண்ட்

தேவையானவை:

  • கெட்டியான தயிர் - 2 கப்

  • பொடித்த சர்க்கரை- 2 டேபிள்ஸ்பூன்

  • ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்`

  • குங்குமப்பூ - சிறிதளவு

  • பால் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • பொடியாக நறுக்கிய பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன்

ஸ்ரீகண்ட்
ஸ்ரீகண்ட்

செய்முறை:

தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டி மூன்று நான்கு மணி நேரம் தொங்கவிட்டு தண்ணீரை வடியவிடவும். வடிகட்டிய கெட்டியான தயிரில் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பாலை சூடாக்கி, குங்குமப்பூவை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். கரைத்த குங்குமப்பூ, நறுக்கிய பாதாம் இரண்டையும் தயிருடன் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து `ஜில்’லென்று பரிமாறவும்.

குறிப்பு:

மாம்பழ சீஸனில் மாம்பழ விழுதையும் சேர்த்து மேங்கோ ஸ்ரீகண்டாகச் செய்யலாம்

தயிரில் புரதங்கள், கால்சியம், ரிபோஃப்ளோவின், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் B12 போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன.

வெஜிடபிள் ஸ்டூ

தேவையானவை:

  • வேகவைத்த காய்கறிகள் - ஒரு கப் (பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்றவை)

  • பச்சை மிளகாய் - 2 (நீளவாட்டில் நறுக்கவும்)

  • வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

  • இஞ்சி - ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)

  • கெட்டியான தேங்காய்ப்பால் - ஒரு கப்

  • லேசான தேங்காய்ப்பால் - ஒரு கப்

  • தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • கடுகு - அரை டீஸ்பூன்

  • ஏலக்காய் - 2

  • கிராம்பு - 2

  • பட்டை - சிறிய துண்டு

  • உப்பு - தேவையான அளவு

வெஜிடபிள் ஸ்டூ
வெஜிடபிள் ஸ்டூ

செய்முறை:

கடாயைச் சூடாக்கி எண்ணெய் ஊற்றி ஏலக்காய், பட்டை, கிராம்பு ஆகியவற்றை லேசாக வறுத்து, கடுகு, கறிவேப்பிலையைச் சேர்த்து தாளிக்கவும். அதில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும். வேகவைத்த காய்கறிகள், உப்பு, லேசான தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு கெட்டியான தேங்காய்ப்பாலைச் சேர்த்து லேசாகக் கொதிவந்தவுடன் அடுப்பைவிட்டு இறக்கி சூடாகப் பரிமாறவும்.

பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன.

சர்சோன் கா சாக்

தேவையானவை:

  • கடுகுக்கீரை (சர்சோன்) - ஒரு கப் (நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கியது)

  • பாலக்கீரை - ஒரு கப் (நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கியது)

  • பூண்டு - 5 பல்

  • இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கவும்)

  • பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

  • வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

  • தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்)

  • மஞ்சள் நிற சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

  • நெய் அல்லது வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

  • கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

சர்சோன் கா சாக்
சர்சோன் கா சாக்

செய்முறை:

ஒரு பிரஷர் குக்கரை சூடாக்கி நெய் அல்லது வெண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளியையும் இரண்டு கீரைகளையும் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை வேகவைக்கவும். பிறகு குக்கரைத் திறந்து வெந்த கீரைகளை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் சோள மாவு, கரம் மசாலா சேர்த்துக் கொதிக்கவிடவும். நீளமாக நறுக்கிய இஞ்சித் துண்டுகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு:

கடுகுக்கீரை, பாலக்கீரையுடன் பதுவா என்கிற கீரை, டர்னிப் ஆகியவற்றைச் சேர்ப்பது வழக்கம்

செடி வகையைச்சார்ந்த கடுகுக்கீரை, சுமார் நான்கு அடி உயரம் வரை வளரக்கூடியது.

டாபேலி

தேவையானவை:

  • பாவ் பன் - 6

  • உருளைக்கிழங்கு - 4 (வேகவைத்து தோல் உரித்து மசிக்கவும்)

  • வறுத்த வேர்க்கடலை - 4 டேபிள்ஸ்பூன்

  • இனிப்பு சட்னி - 6 டேபிள்ஸ்பூன்

  • ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - அரை கப்

  • வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்

  • மாதுளை முத்துகள் - 4 டேபிள்ஸ்பூன்

  • டாபேலி மசாலா (கடைகளில் கிடைக்கும்) - 2 டேபிள்ஸ்பூன்

  • பூண்டு சட்னி - 6 டேபிள்ஸ்பூன் (கடையில் கிடைக்காவிட்டால், காய்ந்த மிளகாய், பூண்டு, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்)

  • கிரீன் சட்னி - 4 டேபிள்ஸ்பூன் (புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தது)

  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

  • வெண்ணெய், உப்பு - தேவையான அளவு

டாபேலி
டாபேலி

செய்முறை:

ஒரு கடாயை சூடாக்கி எண்ணெய் ஊற்றவும். அதில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, டாபேலி மசாலா சேர்த்து லேசாக வதக்கவும். பாவ் பன்னை இரண்டாகப் பிளந்து கொள்ளவும். இரண்டு துண்டாக வெட்டாமல் அடியில் சேர்ந்தாற்போல் இருக்குமாறு வெட்டவும். அதில் ஒரு பக்கம் கிரீன் சட்னியைத் தடவவும். மற்றொரு பக்கம் பூண்டு சட்னியையும் இனிப்பு சட்னியையும் கலந்து தடவவும். நடுவில் ஒரு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு மசாலா, அதன் மேல் வேர்க்கடலை, ஒரு ஸ்பூன் ஓமப்பொடி, ஒரு ஸ்பூன் மாதுளை முத்துகள் சிறிதளவு வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக அழுத்தி மூடவும்.

ஒரு தோசைக்கல்லை சூடாக்கி வெண்ணெய் சேர்த்து, செய்து வைத்துள்ள டாபேலியை நன்றாக இருபுறமும் டோஸ்ட் செய்து பரிமாறவும்.

பாலில் கலந்துள்ள முக்கிய புரத வகை `கேசின்’ எனப்படும்.

மூங் தால் கச்சோரி

தேவையானவை - மேல் மாவு செய்வதற்கு:

  • மைதா - ஒன்றரை கப்

  • உருக்கிய நெய் - கால் கப்

  • உப்பு - அரை டீஸ்பூன்

  • ஓமம் - ஒரு டீஸ்பூன்

ஸ்டஃபிங் செய்வதற்கு:

  • பாசிப்பருப்பு - அரை கப்

  • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • ஆம்சூர் பவுடர் - ஒரு டீஸ்பூன்

  • பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்

  • கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

  • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

  • கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

  • சோம்பு - ஒரு டீஸ்பூன்

  • மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்

  • சீரகம் - அரை டீஸ்பூன்

  • எண்ணெய் - 4 டீஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

பொரிப்பதற்கு:

எண்ணெய் - தேவையான அளவு

மூங் தால் கச்சோரி
மூங் தால் கச்சோரி

மேல் மாவு செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, ஓமம் சேர்த்துக் கலக்கவும். உருக்கிய நெய்யை ஊற்றி, ஏழெட்டு நிமிடங்கள் மாவை விரல்களால் நன்கு கலக்க வேண்டும் (பிசைய வேண்டாம்). அதன் பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கெட்டியான பதமாக மாவைப் பிசைந்து மூடிவைக்கவும்.

ஸ்டஃபிங் செய்முறை:

பாசிப்பருப்பைக் கழுவி 2, 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடியவைத்து மிக்ஸியில் அதனுடன் சோம்பு, தனியாவைச் சேர்த்து (தண்ணீர் சேர்க்காமல்) கொரகொரப்பாக அரைக்கவும்.

ஒரு கடாயை சூடாக்கி, எண்ணெய்விட்டு சீரகம், கடலை மாவு சேர்த்து அடுப்பை சிறிய தீயில் வைத்து ஒரு நிமிடம் வறுக்கவும். பிறகு அதில் பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர், மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வறுக்கவும். பிறகு, அதனுடன் அரைத்த பாசிப்பருப்பு விழுது, உப்பு, பொடித்த சர்க்கரை சேர்த்து, அடிக்கடி கிளறிவிட்டு, நன்றாக வேகவைக்கவும். இவ்வாறு செய்த ஸ்டஃபிங்கை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆறவைக்கவும்.

பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஓர் உருண்டையை எடுத்து ஒரு கிண்ணம் போல் செய்துகொள்ளவும். ஓரத்தில் மெல்லியதாக இருக்கும்படி செய்யவும். நடுவில் ஒரு டேபிள்ஸ்பூன் ஸ்டஃபிங்கை வைத்து ஓரங்களை இழுத்து நன்றாக மூடவும். இந்த உருண்டைகளைக் கைகளால் தட்டி கனமான சிறிய பூரிகளாகச் செய்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு செய்துவைத்துள்ள கச்சோரிகளைப் போட்டு குறைந்த தீயில் திருப்பி திருப்பி விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இனிப்பு சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு:

அடுப்பை பெரிதாக வைத்து பொரிக்காமல் சிறிதாக வைத்து பொரித்தால்தான் கச்சோரி கிரிஸ்பியாக இருக்கும்.

இப்போது பல நாடுகளில் அனைத்துப் பயன்பாட்டு மாவு (All-purpose flour) என்ற பெயரில் மைதா விற்கப்படுகிறது.

ரசமலாய்

தேவையானவை:

  • பசும்பால் - ஒரு லிட்டர்

  • திக்கான பால் (full cream milk) - ஒரு லிட்டர்

  • சர்க்கரை - 2 கப்

  • எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

  • பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்

  • குங்குமப்பூ - சிறிதளவு

  • ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டீஸ்பூன்

ரசமலாய்
ரசமலாய்

செய்முறை:

திக்கான பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி, குங்குமப்பூவைச் சேர்த்து, நிதானமான தீயில் வைத்து, கொதிக்கவிடவும். பால் சற்று குறுகியதும், அதில் அரை கப் சர்க்கரையைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். நறுக்கிய பாதாம் பிஸ்தா, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் பசும்பாலை ஊற்றிக் கொதிக்கவிடவும். பால் பொங்கியதும் அடுப்பை அணைத்து லேசாக ஆறவிடவும் (மூன்று நான்கு நிமிடங்கள்). பிறகு அதில் எலுமிச்சைச்சாற்றை சிறிது சிறிதாகக் கலக்கவும். பால் முழுவதுமாக திரிந்தவுடன் ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டவும். இந்தப் பனீரை மூன்று முறை நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவவும். இவ்வாறு செய்வதால் எலுமிச்சைப்பழ வாசனையும் புளிப்பும் போய்விடும். நன்றாக வடிகட்டி தண்ணீரை ஓட்டப் பிழிந்து எடுக்கவும். பனீரை ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும். உள்ளங்கையால் பனீரை நன்றாகத் தேய்க்கவும். மாவு பிசைவது போல பிசையாமல் தேய்த்து மிருதுவாக செய்துகொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் கார்ன் மாவை சேர்த்து மறுபடியும் சிறிது நேரம் தேய்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை லேசாக அழுத்தி தட்டையாகச் செய்துகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள சர்க்கரையுடன் 4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிடவும். இதற்குப் பாகு தேவையில்லை. சர்க்கரை கரைந்தவுடன் செய்து வைத்துள்ள பனீர் துண்டுகளை ஒவ்வொன்றாக அதில் போடவும். பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்து ஒரு மணி நேரம் ஆறவிடவும்.

பிறகு பனீர் துண்டுகளை எடுத்து குளிரவைத்துள்ள பாலில் போடவும். ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து `ஜில்’லென்று பரிமாறவும்.

உலகிலேயே பால் மற்றும் பால் பொருள்களைத் தயாரிப்பதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

கட்டே கி சப்ஜி

தேவையானவை:

  • கடலை மாவு - ஒரு கப்

  • ஓமம் - அரை டீஸ்பூன்

  • எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

  • சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்

  • கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

  • தயிர் - ஒரு கப்

  • வெங்காயம் - ஒன்று

  • தக்காளி - 2

  • பச்சை மிளகாய் - ஒன்று

  • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

கட்டே கி சப்ஜி
கட்டே கி சப்ஜி

கட்டே செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, ஓமம், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். இவ்வாறு பிசைந்த மாவை நீளவாட்டில் சிலிண்டர் வடிவில் செய்துகொள்ளவும். அகலமான பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். கொதிக்கும் நீரில் செய்துவைத்துள்ள மாவு ரோல்களைப் போட்டு ஐந்தாறு நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். நன்றாக ஆறியவுடன் வட்டமான சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கிரேவி செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். ஒரு கடாயை சூடாக்கி எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை நன்றாக வதக்கவும். பிறகு அதில், இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியவுடன், மஞ்சள்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, வெட்டிவைத்துள்ள கட்டேகளைப் போட்டு கொதிக்கவைக்கவும். தயிரை நன்றாக அடித்து அதில் சேர்த்து, கரம் மசாலாவையும் சேர்த்து லேசாகக் கொதிக்கவிட்டு இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையால் அலங்கரித்துப் பரிமாறவும்.

ஓமத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோஃப்ளோவின், நியாசின் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.

மிர்ச் கா சாலன்

தேவையானவை:

  • நீளமான பஜ்ஜி மிளகாய் - 6

  • வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

  • பூண்டு - 4 பல்

  • கடுகு - ஒரு டீஸ்பூன்

  • எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்

  • தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்)

  • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

  • இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி, நறுக்கவும்)

  • புளி - ஒரு சிறிய எலுமிச்சம்பழ அளவு

  • உப்பு - தேவைக்கேற்ப

  • வறுத்துப் பொடி செய்ய:

  • காய்ந்த மிளகாய் - 3

  • எள் - 2 டீஸ்பூன்

  • மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்

  • சீரகம் - ஒரு டீஸ்பூன்

  • வறுத்த வேர்க்கடலை - 3 டேபிள்ஸ்பூன்

  • தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்

மிர்ச் கா சாலன்
மிர்ச் கா சாலன்

செய்முறை:

ஒரு கடாயைச் சூடாக்கி அதில் காய்ந்த மிளகாய், தனியா, சீரகம், எள், வேர்க்கடலை, தேங்காய் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். அதே கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பஜ்ஜி மிளகாயைக் கழுவி, காம்பை வெட்டாமல் நடுவில் லேசா கீறி வதக்கவும் (லேசாக வதங்கினால் போதுமானது). இதை தனியாக எடுத்து வைக்கவும். மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, மஞ்சள்தூள் சேர்த்து விழுதாக அரைக்கவும். புளியை சிறிதளவு தண்ணீரில் ஊறவைக்கவும்.

கடாயில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, அரைத்த வெங்காய விழுதை நன்றாக வதக்கவும். பிறகு தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும். அதன் பிறகு அதில் ஊறவைத்த புளியைக் கரைத்து ஊற்றவும். வதக்கிய மிளகாய், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பொடி செய்து வைத்த மசாலாவையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையால் அலங்கரித்துப் பரிமாறவும்.

6,000 ஆண்டுகளுக்கு முன்பே மிளகாய் உணவில் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.