``நம் திருமணங்கள், சுப வைபவங்கள் எதுவும் பாயசம் இன்றி நிறைவடைவதில்லை. விருந்து என்றாலே வடை, பாயசம் என்பது இன்றும் வழக்குச் சொல்லாகவே தொடர்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு பாயசம். இப்படிப்பட்ட அருமையான பாயசத்தைச் சில புதிய வழிகளில் முயற்சி செய்து பார்த்தபோது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது’’ என்கிறார் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சமையற்கலைஞர் இளவரசி வெற்றி வேந்தன்.

புதுமை நிறைந்த உணவுகளைச் சமைப்பதில் இளவரசிக்கு மிகுந்த விருப்பம் என்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் `ஃபுட் ரிசர்ச்சர்’, `குயின் ஆஃப் இன்னோவேஷன்’ என்று இவரை பாராட்டுகிறார்கள். இதோ... சத்தும் சுவையும் மிக்க பாயசம், பிர்னி, கீர் என நல்லதோர் இனிப்புக் கொண்டாட்டத்தைச் சுவைக்கத் தூண்டும் படங்களுடன் வழங்குகிறார் இளவரசி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
கருப்பட்டி பாயசம்
தேவையானவை:
ஜவ்வரிசி - 50 கிராம்
சேமியா - 50 கிராம்
காய்ச்சிய பால் - 3 கப்
கருப்பட்டித் துருவல் - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 15
உலர்திராட்சை - 10
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை:
கருப்பட்டித் துருவலைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து, காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். ஜவ்வரிசியை வேகவைத்துக் கொள்ளவும். சேமியாவை ஒரு டீஸ்பூன் நெய்யில் இளஞ்சிவப்பாக வறுத்து வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் அடிகனமான பாத்திரத்தில் ஜவ்வரிசி, சேமியா, பால் சேர்த்து சிறு தீயில் 10 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும். பிறகு, கருப்பட்டிக் கரைசலைச் சேர்த்து நன்கு கிளறவும்.மீதமுள்ள நெய்யைச் சூடாக்கி முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுத்து பாயசத்தில் சேர்த்து நன்கு கிளறிப் பரிமாறவும்.
குறிப்பு: அடுப்பில் இருக்கும்போது கருப்பட்டி கரைசல் சேர்க்கக் கூடாது. திரிந்துவிடும்.
காபியில் சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டி சேர்த்தால், சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஃப்ரூட்ஸ் க்ரீம் கீர்
தேவையானவை:
சேமியா - 100 கிராம்
காய்ச்சிய பால் - 3 கப்
க்ரீம் - ஒரு கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
விருப்பமான பழத்துண்டுகள் - ஒரு கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 7
உலர்திராட்சை - 5
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை:
சேமியாவை ஒரு டீஸ்பூன் நெய்யில் இளஞ்சிவப்பாக வறுத்து பால் சேர்த்துக் குழையாமல் வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் சர்க்கரை சேர்த்து 6 - 8 நிமிடங்கள் குறைவான தீயில் வைத்திருக்கவும். பிறகு க்ரீம் சேர்க்கவும். ஒரு கொதி வந்தபின் இறக்கவும்.மீதமுள்ள நெய்யில் முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள் இறுதியாக பழத்துண்டுகள் சேர்த்து சில விநாடிகள் வதக்கி, கீரில் சேர்க்கவும். சூடாகவோ அல்லது ஆறியபின் குளிர்வித்தோ பரிமாறலாம்.
சேமியாவும் ஒருவகை பாஸ்தாவே. ஆனால், மற்ற பாஸ்தாக்களைக் காட்டிலும் சேமியாவின் தடிமன் குறைவு.
ரோஸ்மில்க் ரசகுல்லா பாயசம்
தேவையானவை:
பால் - அரை லிட்டர் (பனீருக்கு)
ரோஸ்மில்க் ஃப்ளேவர் - 4 டீஸ்பூன்
வினிகர் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - அரை கப் (ரசகுல்லாவுக்கு)
தண்ணீர் - ஒன்றரை கப்
ஜவ்வரிசி - 50 கிராம்
சேமியா - 50 கிராம்
காய்ச்சிய பால் - 3 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 15
உலர்திராட்சை - 10
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை:
பாலைக் காய்ச்சவும். பால் நன்கு காய்ந்தபின் 3 டீஸ்பூன் ரோஸ்மில்க் ஃப்ளேவர் சேர்க்கவும். ஒரு நிமிடம் கழித்து வினிகர் சேர்க்கவும். நன்கு கலந்து இறக்கி மெல்லிய துணியில் வடிகட்டி வைக்கவும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து எடுத்து கைகளால் மென்மையாகப் பிழிந்து தனியே எடுக்கவும். பனீரைக் கைகளால் ஒன்று சேர நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.
அரை கப் சர்க்கரையை ஒன்றரை கப் தண்ணீரில் கலந்து அகலமான பாத்திரத்தில் கொதிக்கவைக்கவும். ரோஸ்மில்க் பனீரை நமக்கு விருப்பமான வடிவத்தில் தயார் செய்து கொதிக்கும் சர்க்கரை பாகில் சேர்த்து 10 - 15 நிமிடங்கள் மூடி கொதிக்கவைத்து இறக்கவும்.
ஜவ்வரிசியை வேகவைத்துக் கொள்ளவும். சேமியாவை ஒரு டீஸ்பூன் நெய்யில் இளஞ் சிவப்பாக வறுத்து வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் அடிகனமான பாத்திரத்தில் ஜவ்வரிசி, சேமியா, பால், சர்க்கரை சேர்த்து சிறுதீயில் 10 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும். பின்னர் ஒரு டீஸ்பூன் ரோஸ்மில்க் ஃப்ளேவர் சேர்த்து இறக்கவும். மீதமுள்ள நெய்யைச் சூடாக்கி முந்திரிப்பருப்பு, உலர்திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். தயார்செய்து வைத்துள்ள ரோஸ்மில்க் ரசகுல்லா சேர்த்துப் பரிமாறவும்.
குழப்பமான மனநிலையிலிருந்து விடுபட ரோஸ்மில்க் அருந்துவது ஓரளவு உதவும்.
பப்பாளி பாயசம்
தேவையானவை:
ஜவ்வரிசி - 50 கிராம்
சேமியா - 50 கிராம்
பால் - 3 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 15
உலர்திராட்சை - 10
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
நன்கு பழுத்த பப்பாளித் துண்டுகள் - ஒரு கப்

செய்முறை:
பப்பாளித் துண்டுகளை ஒரு கப் பாலில் ஐந்து நிமிடங்கள் வேகவைத்து ஆறியபின் அரைத்துக்கொள்ளவும். ஜவ்வரிசியை வேகவைத்துக் கொள்ளவும். சேமியாவை ஒரு டீஸ்பூன் நெய்யில் இளஞ்சிவப்பாக வறுத்து வேகவைத்துக் கொள்ளவும்.
பின்னர் அடிகனமான பாத்திரத்தில் ஜவ்வரிசி, சேமியா, 2 கப் காய்ச்சிய பால், சர்க்கரை சேர்த்து சிறுதீயில் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு பப்பாளிக்கூழ் சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும். மீதமுள்ள நெய்யைச் சூடாக்கி முந்திரிப்பருப்பு, உலர்திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுத்து, பாயசத்தில் சேர்த்து நன்கு கிளறிப் பரிமாறவும்.
ஜவ்வரிசியில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டும் குறைந்த அளவு கொழுப்பும் உள்ளது.
ஸ்ட்ராபெர்ரி பிர்னி
தேவையானவை:
ரவை - ஒரு கப்
பால் - 3 கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
ஸ்ட்ராபெர்ரி - 10
தேன் - 2 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி, பிஸ்தா - தலா ஒன்றரை டீஸ்பூன்

செய்முறை:
வாணலியில் ரவையை வறுத்து தண்ணீரில் வேகவைக்கவும். முக்கால் பாகம் வெந்த பின்னர் பால் சேர்த்து, அடுப்பை சிறுதீயில் வைத்து நன்கு கொதித்த பின்னர் சர்க்கரை, நெய் சேர்த்து 6 - 8 நிமிடங்கள் வைத்திருக்கவும். ஸ்ட்ராபெர்ரிகளைத் தேன் சேர்த்து நன்கு அரைத்து பிர்னியில் சேர்க்கவும் (தேன் சேர்ப்பதால் பழத்தில் உள்ள புளிப்புச் சுவை நீங்கிவிடும்). பிர்னி கொதித்த பின்னர் இறக்கிவிடவும். முந்திரி, பிஸ்தாவை லேசாக இடித்து பிர்னியில் கலந்து பரிமாறவும்.
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி சத்து ஏராளமாக உள்ளது.
பிஸ்தா பிர்னி
தேவையானவை:
ரவை - ஒரு கப்
பால் - 3 கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
பிஸ்தா - 30 கிராம்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி, பிஸ்தா - தலா ஒன்றரை டீஸ்பூன்

செய்முறை:
வாணலியில் ரவையை வறுத்து தண்ணீரில் வேகவைக்கவும். முக்கால் பாகம் வெந்த பின்னர் பால் சேர்த்து, அடுப்பை சிறுதீயில் வைத்து நன்கு கொதித்த பின்னர் சர்க்கரை, நெய் சேர்த்து 6 - 8 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிஸ்தாவை வெந்நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு விழுதாக அரைத்து பிர்னியில் சேர்க்கவும். பிர்னி கொதித்த பின்னர் இறக்கிவிடவும். முந்திரி, பிஸ்தாவை லேசாக இடித்து பிர்னியில் கலந்து பரிமாறவும்.
பிஸ்தா பருப்பில் காணப்படும் வைட்டமின் பி6 சத்து, ரத்த வெள்ளையணு உற்பத்திக்கு உதவுகிறது.
முலாம்பழ பிர்னி
தேவையானவை:
ரவை - ஒரு கப்
பால் - 3 கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
முலாம்பழத் துண்டுகள் - ஒரு கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
உலர்திராட்சை - 7
ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்
குங்குமப்பூ - சில கற்றைகள்

செய்முறை:
குங்குமப்பூவை ஒரு டீஸ்பூன் பாலில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். ரவையை வறுத்து தண்ணீரில் வேகவைக்கவும். முக்கால் பாகம் வெந்த பின்னர் பால் சேர்த்து, அடுப்பை சிறுதீயில் வைத்து, நன்கு கொதித்த பின்னர் சர்க்கரை, நெய் சேர்த்து 6 - 8 நிமிடங்கள் வைத்திருக்கவும். முலாம்பழத்தை நன்கு கூழாக அரைத்து பிர்னியில் சேர்க்கவும். பிர்னி கொதித்த பின்னர் இறக்கிவிடவும். குங்குமப்பூக் கரைசல் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுத்து பிர்னியில் சேர்த்துப் பரிமாறவும்.
முலாம்பழத்தில் வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, பொட்டாசியம் சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன.
பறங்கிக்காய் பாயசம்
தேவையானவை:
பாசிப்பருப்பு - 50 கிராம்
வெல்லம் - 300 கிராம்
தேங்காய்ப்பால் - ஒரு கப்
முந்திரி - 8 - 10
உலர்திராட்சை - ஒரு கைப்பிடி அளவு
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - அரை கப்
நெய் - தேவையான அளவு
பறங்கிக்காய்த் துருவல் - 150 கிராம்

செய்முறை:
பாசிப்பருப்பைச் சிறிதளவு நெய்யில் வாசனை வரும் வரை வறுத்து நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். பறங்கிக்காயை நன்கு மசியும் வரை வேக வைக்கவும்.
வெல்லத்தை நன்றாக இடித்து வேகவைத்த பருப்பு, பறங்கிக்காய் சேர்த்து தேங்காய்ப்பாலையும் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். கடாயில் நெய்யைக் காயவைத்து முந்திரி, திராட்சையை வறுத்து, பாயசத்தில் நெய்யுடன் ஊற்றவும். ஏலக்காய்த்தூள் மற்றும் தேங்காய்த் துருவலைச் சிறிதளவு நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்த்துப் பரிமாறவும்.
தாவரவியலின்படி பறங்கிக்காய் பழம் என்றாலும், நடைமுறையில் காய்கறியாகவே கருதப்படுகிறது.
பான் கீர்
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - கால் கப்
பால் - 4 கப்
சர்க்கரை - ஒரு கப்
முந்திரிப்பருப்பு - 10
உலர்திராட்சை - 6
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
வெற்றிலை - 6
மில்க்மெய்டு - ஒரு டேபிள்ஸ்பூன்
பிஸ்தா - அலங்கரிக்கத் தேவையான அளவு
நெய் - சிறிதளவு

செய்முறை:
பாஸ்மதி அரிசியைச் சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, காய்ந்த பின்னர் பாஸ்மதி அரிசி சேர்த்து வேகவைக்கவும். இடையிடையே கிளறிக்கொண்டே இருக்கவும். அரிசி நன்கு வெந்த பின்னர் கரண்டியால் நன்றாக மசித்துக்கொள்ளவும். வெற்றிலையின் நரம்பு, காம்பு நீக்கி வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்து ஆறவைத்து மில்க்மெய்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் பாலில் சர்க்கரை, வெற்றிலைக் கலவை சேர்க்கவும். 6 - 8 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பு, உலர்திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுத்து கீரில் சேர்க்கவும். பிஸ்தாவை லேசாக இடித்து, தூவி அலங்கரிக்கவும்.
உலகின் தேவையில் 70% பாஸ்மதி அரிசி உற்பத்தி இந்தியாவில்தான் செய்யப்படுகிறது.
ஜாமூன் ரைஸ் கீர்
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - கால் கப்
பால் - 4 கப்
சர்க்கரை - ஒரு கப்
முந்திரிப்பருப்பு - 10
உலர்திராட்சை - 6
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
டிரை ஜாமூன் - 6 - 8 (ஸ்வீட் ஸ்டாலில் கிடைக்கும்)
பிஸ்தா - அலங்கரிக்கத் தேவையான அளவு
நெய் - சிறிதளவு

செய்முறை:
பாஸ்மதி அரிசியைச் சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, காய்ந்த பின்னர் பாஸ்மதி அரிசி சேர்த்து வேகவைக்கவும். இடையிடையே கிளறிக்கொண்டே இருக்கவும். அரிசி நன்கு வெந்த பின்னர் கரண்டியால் நன்றாக மசித்துக் கொள்ளவும். பின்னர் சர்க்கரை சேர்க்கவும். 6 - 8 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பு, உலர்திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுத்து கீரில் சேர்க்கவும். பரிமாறும் கிண்ணத்தில் அரை கப் கீர் ஊற்றி, ஒரு ஜாமூன் வைத்து, லேசாக இடித்த பிஸ்தா தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
முந்திரி தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது.