பிரீமியம் ஸ்டோரி

லாக் டெளனில் சிக்கியிருக்கின்ற குழந்தைகளை குஷிப்படுத்த அம்மாக்களிடம் இருக்கின்ற மிக முக்கியத் துருப்புச்சீட்டே அவர்களின் வெரைட்டி சமையல் தான். தினம் தினம் மாலை வேளையில் தினுசு தினுசாகச் சாப்பிடக் கேட்கும் குழந்தைகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் டேஸ்ட்டி லாக் டெளன் ரெசிப்பிகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் பவானி.

லாக் டெளன் ரெசிப்பிகள்!
லாக் டெளன் ரெசிப்பிகள்!

சப்போட்டா கேசரி

தேவையானவை:

பழுத்த சப்போட்டா – 10 (சுத்தம் செய்து சதைப்பகுதிகளை விழுதாக எடுத்துக்கொள்ளவும்)

ரவை – ஒரு கப்

சர்க்கரை – ஒரு கப்

ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

நெய் – முக்கால் கப்

முந்திரி – 10

உலர்திராட்சை – 10

வெந்நீர் – 3 கப்

லாக் டெளன் ரெசிப்பிகள்!

செய்முறை:

வாணலி சூடேறியதும், நெய் முழுவதையும் சேர்த்து அதில் முந்திரி, உலர்திராட்சை இரண்டையும் வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதிலேயே ரவையைச் சேர்த்து மூன்று நிமிடங்கள் வாசனை வரும்வரை வறுக்கவும். ரவை வறுபட்டவுடன் அதில் மூன்று கப் வெந்நீரைச் சேர்த்து நன்கு கிளறவும். வெந்நீர் வற்றி ரவை நன்கு வெந்தவுடன் அக்கலவையில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். கலவை முதலில் நீர்த்து, பின்பு கெட்டியாகத் தொடங்கும். இப்போது சப்போட்டா விழுதை சேர்த்து நன்கு கிளறவும். மூன்று நிமிடங்கள் கழித்து இறக்கி வறுத்த முந்திரி, உலர்திராட்சையால் அலங்கரித்துப் பரிமாறவும்.

இரவில் உறங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் சப்போட்டா ஜூஸ் பருகினால், தூக்கமின்மை பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இட்லி மாவு சுய்யம்

தேவையானவை:

இட்லி மாவு (புளிக்காமல் இருக்க வேண்டும்) – ஒரு கப்

கடலைப்பருப்பு – ஓர் ஆழாக்கு

தேங்காய்த் துருவல் – அரை மூடியைத் துருவிக்கொள்ளவும்

ஏலக்காய், சுக்குப்பொடி – தலா அரை டீஸ்பூன்

நெய் – ஒரு டீஸ்பூன்

பொடித்த வெல்லம் – 200 கிராம்

உப்பு - சிறிதளவு

லாக் டெளன் ரெசிப்பிகள்!

செய்முறை:

கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து முக்கால் பதம் வேகவைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு சூடாக்கி அதில் தேங்காய்த் துருவலை இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுக்கவும். முக்கால் பதம் வேகவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் எதுவும் சேர்க்காமல் மிக்ஸியில் பொடித்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். பின்னர் இக்கலவையை உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும். இட்லி மாவில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பின்னர் தயாரித்து வைத்துள்ள கடலைப்பருப்பு உருண்டைகளை இட்லி மாவில் முக்கியெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பாரம்பர்ய பட்சணமான சுய்யம்... சிய்யம், சுகியம், சீயன் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு போளி

தேவையானவை:

சர்க்கரைவள்ளிக்கிழங்கு – 200 கிராம்

வெல்லம் – 100 கிராம்

தேங்காய்த் துருவல் – அரை கப்

ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

நெய் – தேவையான அளவு

கோதுமை மாவு – 200 கிராம்

சர்க்கரை – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

லாக் டெளன் ரெசிப்பிகள்!

செய்முறை:

கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, மஞ்சள்தூள் ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவைவிட இலகுவாகப் பிசைந்துகொள்ளவும். இத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து மீண்டு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பூரணம் செய்முறை:

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது உப்பு சேர்க்கவும். அதன் மேல் இட்லித் தட்டைவைத்து அதில் கிழங்கை சேர்த்து 20 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து தோல் நீக்கி மசித்துக்கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு சூடாக்கி அதில் தேங்காய்த் துருவலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இரண்டு நிமிடங்கள் கழித்து, அதில் பொடித்த வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் நன்கு உருகியவுடன் ஏலக்காய்த் தூள் மற்றும் மசித்த கிழங்கையும் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். இதை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

இப்போது பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, பூரி போல சிறிது திரட்டி அதில் கிழங்கு கலவை உருண்டையை நடுவில் வைத்து மறுபடியும் நன்கு உருட்டிக்கொள்ளவும். இந்த உருண்டையை மெதுவாக சப்பாத்தி அளவுக்கு நன்கு திரட்டவும். இதை நெய்விட்டு சுட்டெடுத்தால் போளி தயார்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து போன்றவை உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும்.

கீரை வடை

தேவையானவை:

பொடியாக நறுக்கிய அரைக்கீரை – ஒரு கப்

உளுத்தம்பருப்பு – அரை கப்

கடலைப்பருப்பு – அரை கப்

இஞ்சி – ஒரு துண்டு

காய்ந்த மிளகாய் – 6

சோம்பு – ஒரு டீஸ்பூன்

வெங்காயம் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

லாக் டெளன் ரெசிப்பிகள்!

செய்முறை:

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில், ஊறவைத்த பருப்புக்கலவை, தேவையான உப்பு, சோம்பு, இஞ்சி, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த கலவையுடன், நறுக்கிய கீரை, வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி மாவை வடைகளாகத் தட்டிப் பொரித் தெடுக்கவும்.

அரைக்கீரையில் வைட்டமின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், தாதுக்கள் போன்ற அவசிய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.

முட்டைகோஸ் பகோடா

தேவையானவை:

கடலை மாவு – முக்கால் கப்

அரிசி மாவு – கால் கப்

நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப்

வெங்காயம் – 2 கப்

சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் – அரை டீஸ்பூன்

இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

லாக் டெளன் ரெசிப்பிகள்!

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர, மற்ற பொருள்களைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்துவைத்திருக்கும் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

முட்டைகோஸைப் பயன்படுத்தி உள்ளே மிருதுவாகவும் வெளியே க்ரிஸ்பியாகவும் இருக்கும் வகையில் கேப்பேஜ் பால்ஸ், பேட்டீஸ், கட்லெட் போன்ற மொறுமொறு ஸ்நாக்ஸ் வகைகளைத் தயாரிக்கலாம்.

பீட்ரூட் குச்சி சிப்ஸ்

தேவையானவை:

பீட்ரூட் – 200 கிராம்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

அரிசி மாவு – 3 டீஸ்பூன்

சோள மாவு – ஒரு டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்

சீரகத்தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

லாக் டெளன் ரெசிப்பிகள்!

செய்முறை

பீட்ரூட்டை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் ஒரு தட்டில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையுடன் வெட்டிவைத்த பீட்ரூட்டை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம், பீட்ரூட்டில் உள்ள ஈரப்பதமே போதுமானது. (பீட்ரூட் ஒன்றோடு ஒன்று ஓட்டாத வண்ணம் கலந்துகொள்ளவும்) பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி பீட்ரூட்டைப் பொரித்தெடுக்கவும்.

உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும் தன்மை பீட்ரூட்டுக்கு உண்டு.

பிரெட் கட்லெட்

தேவையானவை:

பிரெட் ஸ்லைஸ் – 6 (ஓரங்களை நீக்கவும்)

வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)

தக்காளி – ஒன்று (நறுக்கியது)

உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து மசிக்கவும்)

குடமிளகாய் – ஒன்று (நறுக்கியது)

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் – அரை டீஸ்பூன்

சோம்புத்தூள் – அரை டீஸ்பூன்

பிரெட் தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

லாக் டெளன் ரெசிப்பிகள்!

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். இதனுடன் தேவையான உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும். பிறகு இதில் நறுக்கிய குடமிளகாய் சேர்த்து வதக்கவும். குடமிளகாய் நன்கு வதங்கியவுடன் மசித்த உருளைக்கிழங்கையும் அதில் சேர்த்துக் கிளறி எடுக்கவும். இந்த மசாலா கலவையை சிறு உருண்டைகளாக்கிக்கொள்ளவும்.

பிரெட் ஸ்லைஸைத் தண்ணீரில் நனைத்து, பிழிந்து எடுக்கவும். பின்னர் ஒரு மசாலா உருண்டையை இதன் நடுவில் வைத்து சிறிய பந்தாக உருட்டிக்கொள்ளவும். மீதமுள்ள எல்லா பிரெட் ஸ்லைஸின் நடுவிலும் மேற்சொன்னதுபோல மசாலா உருண்டைகளை வைத்து தயார் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி உருட்டிவைத்திருக்கும் பிரெட் பந்துகளை பிரெட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான பிரெட் கட்லெட் தயார்.

கோதுமை பிரெட்டில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், கனிமங்கள் அடங்கியிருக்கும். சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு அல்லது மைதா பிரெட்டில் கார்போஹைட்ரேட் மட்டுமே இருக்கும்.

கறுப்பு உளுந்து அல்வா

தேவையானவை:

கறுப்பு உளுந்து – ஒரு கப்

வெல்லம் – ஒரு கப்

நெய் – முக்கால் கப்

நல்லெண்ணெய் – முக்கால் கப்

லாக் டெளன் ரெசிப்பிகள்!

செய்முறை

கறுப்பு உளுந்தை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். இதை ஆறவைத்து மிக்ஸியில் பவுடராக்கவும். நன்கு அரைபட்டதும் வெல்லத்தையும் இதனுடன் சேர்த்து ஒன்றாகப் பொடித்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அரைத்த இந்தக் கலவையுடன் தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கலந்துகொள்ளவும். பின்னர் வாணலியில் நெய் சேர்த்துச் சூடாக்கி மிக்ஸியில் அரைத்துவைத்திருக்கும் உளுந்து கலவையை சேர்த்து நன்கு கிளறவும். இடையிடையில் எண்ணெய் சேர்த்து அல்வா கையில் ஒட்டாதவரை கிளறவும். பின்பு நெய்யும் எண்ணெயும் பிரிந்து சுருண்டு வரும்வரை கலவையை நன்கு கிளறி இறக்கவும். சுவையான அல்வா தயார்.

கறுப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பிரெட் தவா பீட்சா

தேவையானவை:

பிரெட் ஸ்லைஸ் – 6

துருவிய சீஸ் – தேவையான அளவு

வெண்ணெய் – தேவையான அளவு

பீட்சா சாஸ் – 2 டீஸ்பூன்

நறுக்கிய தக்காளி – தேவையான அளவு

நறுக்கிய வெங்காயம் – தேவையான அளவு

நறுக்கிய குடமிளகாய் – தேவையான அளவு

ஒரிகானோ – தேவையான அளவு

சில்லி ப்ளேக்ஸ் – தேவையான அளவு

எண்ணெய் – சிறிதளவு

லாக் டெளன் ரெசிப்பிகள்!

செய்முறை

நறுக்கிவைத்துள்ள காய்கறிகளை சிறிது எண்ணெயில் லேசாக வதக்கி எடுத்துக்கொள்ளவும். ஒரு தவாவில் சிறிது வெண்ணெய் போட்டுச் சூடாக்கி பிரெட் ஸ்லைஸின் ஒருபக்கத்தை மட்டும் லேசாக டோஸ்ட் செய்து எடுத்துக்கொள்ளவும். டோஸ்ட் செய்த பக்கத்தில் பீட்சா சாஸை முதலில் தடவவும். பிறகு சிறிதளவு துருவிய சீஸை அதில் சேர்க்கவும். பின்னர் அதன் மேல் வதக்கிய காய்கறிகளை வைத்து, ஒரிகானோ, சில்லி ப்ளேக்ஸ் ஆகியவற்றை மேலே தூவவும். கடைசியாக மறுபடியும் அதன் மேல் துருவிய சீஸ் சேர்க்கவும். பின்னர் இதனை தவாவில் வைத்து மூடி போட்டு மூடி இரண்டு நிமிடங்கள் டோஸ்ட் செய்து எடுக்கவும். சுவையான பிரெட் பீட்சா தயார்.

500-க்கும் மேற்பட்ட பாலாடைக் கட்டி வகைகள், உலக பால் பொருள் உற்பத்தி ஆணையத்தால் வகைப் படுத்தப்பட்டுள்ளது.

அரிசி மாவு டேப் சிப்ஸ்

தேவையானவை:

அரிசி மாவு – ஒரு கப்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

ஓமம் – அரை டீஸ்பூன்

நெய் – 2 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – ஒரு கப் + அரை கப்

லாக் டெளன் ரெசிப்பிகள்!

செய்முறை

ஒரு வாணலியில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி அதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், ஓமம், நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கொதித்தவுடன் இதில் அரிசி மாவைச் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

பின்னர் கலவையை நன்கு கிளறி இன்னும் அரை கப் வெந்நீரைச் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். மாவை கையளவு உருண்டைகளாக்கி ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு, எண்ணெய் தடவிய தட்டில் பிழிந்துகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி தட்டில் பிழிந்துவைத்திருக்கும் மாவைச் சிறு துண்டுகளாக்கி எண்ணெயில் பொரித்தெடுத்தால் அரிசி மாவு டேப் சிப்ஸ் தயார்.

100 கிராம் அரிசி மாவில் 366 கலோரி ஆற்றல் உள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு