புதுமணத் தம்பதிகள் என்றாலே அனைவருக்கும் தனி கரிசனம்தான். பரிசுப் பொருள்களாலும் பாராட்டுகளாலும் அவர்களைத் திக்குமுக்காட வைத்துவிடுவார்கள். திருமணத்துக்குப் பிறகு வீட்டுக்கு அழைத்து, பார்த்துப் பார்த்துச் சமைத்து விருந்தளித்துச் சிறப்பிப்பார்கள். புதுமண தம்பதிகளின் நல்வாழ்வுக்கு அன்பைப் போலவே அறுசுவை உணவுக்கும் முக்கிய இடம் உண்டு. ஒவ்வோர் ஊரிலும், திருமணமான புதிதில் புதுப்பெண், மாப்பிள்ளைக்குக் கொடுக்கப்படும் ஸ்பெஷல் உணவுகளின் தொகுப்பு இது.

*குறிப்பிட்ட ரெசிப்பிகளைச் செய்து காட்டியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் எஸ்.ராஜகுமாரி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவட்லாப்பம்
தேவையானவை:
நெய் - 50 கிராம்
முட்டை - 10
சர்க்கரை - கால் கிலோ
முந்திரி - 50 கிராம்
பொட்டுக்கடலை - 25 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
தேங்காய்ப்பால் - ஒரு டம்ளரில் கெட்டியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை:
முட்டையுடன் சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு கலந்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் சிறிதளவு தண்ணீர்விட்டு முந்திரி மற்றும் பொட்டுக்கடலையைத் தனியாக மிக்ஸியில் வெண்ணெய் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்து வைத்திருந்த முட்டை - சர்க்கரை கலவை மற்றும் பொட்டுக்கடலை - முந்திரி கலவையை ஒன்றாகச் சேர்த்து கலந்துகொள்ளவும். அதன் மேலாக, தேங்காய்ப் பால், நெய்யை ஊற்றவும். பின்னர் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளவும்.
இட்லிச் சட்டியில் தனியாக அரை லிட்டர் அளவில் நீரை எடுத்து ஸ்டவ்வில் வைக்கவும். ஏற்கெனவே கலந்து வைத்திருந்த வட்லாப்பம் கலவையை மூடப்பட்ட தனி பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். பின்னர் இட்லி சட்டியில் உள்ளே கொதிக்கும் நீரின் மீது அந்த வட்லாப்பம் கலவை கொண்ட பாத்திரம் படும்படியாக வைத்துக்கொண்டு இட்லி சட்டியை மூடவும். அரை மணி நேரம் நன்றாக வேகவிடவும். பின்னர் வெளியே எடுத்தால் வட்லாப்பம் ரெடி!
இந்த உணவு வகை பெரும்பாலும் கடற்கரைப் பகுதியில் திருமணமான கணவன் மனைவிக்கு வழங்கப்படும். முட்டை, தேங்காய்ப்பால், முந்திரி, பொட்டுக்கடலை ஆண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது. தாம்பத்ய வாழ்க்கை ஆரோக்கியமாக அமையும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடற்பாசி
தேவையானவை:
கடற்பாசி - ஒரு கைப்பிடி அளவு
தண்ணீர் - கடற்பாசிக்குத் தகுந்தாற்போல எடுத்துக்கொள்ள வேண்டும்
ஏலக்காய் - 4
தேங்காய்ப்பால் - ஒரு டம்ளர்
சர்க்கரை - 100 கிராம்
உப்பு - சிறிதளவு
முந்திரி - தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கடற்பாசியைத் தண்ணீரோடு கலந்து நன்றாகக் காய்ச்சவும். சில நிமிடங்களில் கடற்பாசி கரைந்துவிடும். சர்க்கரையையும் உப்பையும் சேர்த்துக் கரையும் வரை காய்ச்சவும். பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றவும். ஒரு நிமிடத்துக்குப் பின்னர் பாத்திரத்தைக் கீழே இறக்கிவிட்டு ஏலக்காயைக் கைகளால் பிரித்து பரவலாகப் போடவும். பின்னர் அகலமான தட்டில் அந்தக் கடற்பாசியை ஊற்றவும். அரை மணி நேரம் காற்றில் காயவிடவும். கடற்பாசி திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு மாறும். முந்திரி வைத்துப் பரிமாறவும்.
சு.முகமது அணஸ்
கடற்பாசி உடலில் உள்ள சூட்டைக் குறைக்கும். வயிற்றுப் புண்ணை குணமாக்கும்.
வெந்தயக்களி
தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒரு கப்
வெந்தயம் - 50 கிராம்
ஏலக்காய் - 3
வெல்லம் - 150 கிராம்
நல்லெண்ணெய் - 500 மில்லி

செய்முறை:
வெந்தயம் மற்றும் புழுங்கலரிசியை நன்றாக வறுத்து மிக்ஸியில் அரைத்தெடுத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் தண்ணீர்விட்டு அடுப்பில் வைக்கவும். நீர் கொதித்து வரும்போது வறுத்து அரைத்து வைத்த மாவு கலவையை நீரிலிட்டு கட்டி படாமல் கிளறவும். கெட்டியாக வரும் நேரத்தில் வெல்லம், ஏலக்காய் போட்டு நன்றாகக் கிளறவும். வெல்லம் கரைந்து களி பதத்தில் வரும்போது நல்லெண்ணெய் சேர்த்து இறக்கி வைக்கவும். இளம் சூட்டில் பரிமாறவும்.
வெ.கெளசல்யா, படங்கள்: தே.தீட்ஷித்
பெண்களுக்கு ஏற்படும் அடிவயிற்று வலி, இடுப்பு வலி போன்றவற்றுக்கு சிறந்த மருந்து இந்த உணவு. உடல் சூட்டைத் தவிர்க்கவும் களியைச் சாப்பிடலாம். வாயுத் தொல்லையால் ஏற்படும் நெஞ்சு வலியைத் தவிர்க்கவும் இது உதவும்.
சுருட்டைப் பணியாரம்
தேவையானவை:
மைதா - 250 கிராம்
சர்க்கரை - 75 கிராம்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
ஏலக்காய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு

செய்முறை:
பாத்திரத்தில் தண்ணீர்விட்டு மைதா மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். பின் தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலக்காய் மூன்றையும் சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கரைத்து வைத்த மாவை தோசை போல் வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய்விடவும். தேங்காய்த் துருவல் கலவையை மாவின் மீது வைத்து இரண்டு பக்கமும் மடித்துத் திருப்பிப் போட்டு வேக வைக்கவும். பின் சிவக்க வெந்ததும் எடுத்து வைத்துப் பரிமாறவும்.
வெ.கெளசல்யா, படங்கள்: தே.தீட்ஷித்
உடல் சோர்வைப் போக்குவதற்கு இந்த உணவு கொடுக்கப்படும். தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவற்றுக்கு வைரஸ் மற்றும் பாக்டீரிய நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் உண்டு. உடலில் உள்ள பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளை அழிப்பதற்காகவே இந்த உணவு கொடுக்கப்படுகிறது.
கணவன் மனைவி சாதம்
தேவையானவை:
அரிசி - 500 கிராம்
துவரம்பருப்பு - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 5
சீரகம், மிளகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - 4 பல்
எண்ணெய், நெய், மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
அரிசியையும் பருப்பையும் ஒன்றாகக் கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணெய் சூடானதும் சீரகம், மிளகு தாளித்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் அதன்பின் காய்ந்த மிளகாயை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு தாளிக்கவும். பூண்டை ஒன்றிண்டாக இடித்துப் போடவும். பிறகு ஊறவைத்த அரிசி, பருப்பை குக்கரில் சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி தேவையான தண்ணீர்விட்டு குக்கரை மூடவும். மூன்று விசில் வந்ததும் இறக்கி நெய் சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.
வெ.கெளசல்யா, படங்கள்: தே.தீட்ஷித்
அரிசியும் பருப்பும் போல என்றும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த உணவை கணவன் மனைவி என்ற பெயரில் சேலம் மாவட்டத்தில் அழைக்கின்றனர்.
காரம், மசாலாக்களின் சேர்க்கை குறைவாக உள்ள உணவு இது. உணவு எளிதில் ஜீரணமாகவும், வாயுப் பிரச்னை, வயிற்று எரிச்சல், வலி போன்றவை நீங்குவதற்காகவும் புதுமண தம்பதிகளுக்குப் பரிமாறப்படுகிறது.
கற்றாழை இஞ்சிச்சாறு
தேவையானவை:
கற்றாழை - 4 மீட்டர் அளவு
இஞ்சி - ஒரு துண்டு
தேன் - 2 டீஸ்பூன்

செய்முறை:
கற்றாழையின் மேல்தோலை நீக்கி விட்டு கற்றாழை ஜெல்லை மூன்று முறை சுத்தமாக கழுவி எடுத்துக்கொள்ளவும். இஞ்சியையும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். பின்பு காற்றாழையையும் இஞ்சியையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். அரைத்து எடுத்த சாற்றை வடிகட்டியில் வடிகட்டவும். பின்பு சுவைக்காக 2 டீஸ்பூன் தேன் கலக்கவும். தேனுக்குப் பதிலாக கரும்புச் சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம். வேண்டு மானால் ஐஸ் கட்டிகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
ச.கிருத்திகா , படங்கள்: சு.ரூத் ஜான்
தாம்பத்யத்தில் நிறைவு கிடைக்க கற்றாழை இஞ்சிச்சாறு துணைபுரியும். சோர்வை குறைக்கும். உடல் குளிர்ச்சிக்கும் இது மிகவும் முக்கியமானது.
இடியாப்பம் - தேங்காய் சுக்குப்பால்
தேவையானவை:
அரிசி மாவு - ஒன்றரை கப்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
சர்க்கரை / கரும்புச் சர்க்கரை / கருப்பட்டி - தேவையான அளவு
ஏலக்காய் - 2
சுக்குப் பொடி - அரை சிட்டிகை (அ) சிறு சுக்குத் துண்டு
தண்ணீர், உப்பு - தேவையான அளவு

இடியாப்பம் செய்முறை:
அரிசி மாவை எடுத்து வறுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைக்கவும். மாவுக்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, கொதிக்கவைத்த தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து ஒரு கரண்டியால் கலக்கவும். சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அந்த மாவில் ஒரு பங்கை இடியாப்பம் பிழியும் இயந்திரத்தில் போட்டுக்கொள்ளவும். பின்னர் இட்லித் தட்டில் ஒட்டாமல் இருப்பதற்காக எண்ணெய் சேர்த்து அதன் மேல் இடியாப்பத்தைப் பிழியவும். வேண்டுமானால் சுவைக்குத் துருவிய தேங்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.
அடுப்பில் வைக்கும் இட்லிப் பாத்திரத்தில் முன்னரே தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் சூடான பின் இட்லித் தட்டுகளை வைத்து இட்லி பாத்திரத்தை மூடவும். ஆறில் இருந்து ஏழு நிமிடங்கள் வேகவைக்கவும். சுடச்சுட இடியாப்பம் தயார்!
தேங்காய் சுக்குப்பால் செய்முறை:
அரை மூடி தேங்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதை மிக்ஸியில் சேர்த்து, ஏலக்காயும் சிறிதளவு தண்ணீரும் சேர்த்து அரைக்கவும். அரைத்த தேங்காயை சுடுநீர் சேர்த்து நன்றாக வடிகட்டவும். ஏலக்காய் சேர்க்கும்போது அரை சிட்டிகை சுக்குப் பொடி அல்லது சிறு சுக்கு துண்டை நசுக்கி சேர்த்தால் சுவையும் மணமும் கூடும். தேவையான அளவு சர்க்கரை அல்லது கரும்புச் சர்க்கரை சேர்த்து சூடான இடியாப்பத்துடன் எடுத்துக் கொள்ளலாம். கருப்பட்டி சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது.
ச.கிருத்திகா , படங்கள்: சு.ரூத் ஜான்
இந்த உணவு திருமணமான தம்பதியருக்கு கோவைப் பகுதியில் வழங்கப்படுகிறது. அரிசி மாவிலுள்ள கார்போஹைட்ரேட் உடல் ஊட்டத்துக்கு உதவும். தேங்காய்ப்பாலில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் உடல் பலத்தையும் கூட்டும். ரத்தசோகையைச் சீர்செய்யும்.
அரச இலை கடையல்
தேவையானவை:
அரச இலை கொழுந்து - 6 கைப்பிடி அளவு
துவரம்பருப்பு - ஒரு கப்
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 15
காய்ந்த மிளகாய் - 5
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10 பல்
தக்காளி - 4
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
அரச இலை கொழுந்துகளை நன்கு கழுவி சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
முதலில், தேவையான அளவு நல்லெண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதற்குப் பின், நறுக்கிய வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து வதக்கவும். அவை வெந்தவுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். தக்காளியும் வெங்காயமும் வெந்தவுடன் அதில் மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்க்கவும். ஊறவைத்த பருப்பு, தண்ணீர் சேர்க்கவும். பருப்பு வேக தேவையான தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு உப்பை சேர்த்துக்கொள்ளவும். பருப்பு பாதி வெந்தவுடன் அதனுடன் அரச இலை கொழுந்துகளைச் சேர்க்கவும். கலவை கொதித்துக்கொண்டிருக்கும்போது பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின்னர், சீரகத்தை கசக்கி மேலோட்டமாக போடவும். பருப்பும் இலையும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து நன்கு வெந்தவுடன், சூட்டிலேயே அவற்றைக் கடைந்து விட வேண்டும். சுவையான மணமணக்கும் அரச இலைக்கொழுந்து கடையல் தயார்.
தி.ஷிவானி, படங்கள்: பெ.ராகேஷ்
ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை, பெண்களின் சீரற்ற மாதவிடாய் ஆகியவற்றுக்கு மருந்தாகும் அரச இலை.
நாஞ்சில் நாட்டு இலைக்கறி கஞ்சி
தேவையானவை:
அரிசி - ஒன்றரை கப்
பாசிப்பருப்பு - கால் கப்
முருங்கைக்கீரை இலைகள் - இரண்டரை கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் - 3
வெந்தயம் - அரை டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 2-3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 6-7 கப்

செய்முறை:
அரிசியுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
15 நிமிடங்கள் கழித்து நரம்புகள் நீக்கி கிள்ளி வைத்திருக்கும் முருங்கைக்கீரை இலைகளை அதில் சேர்க்கவும். முருங்கைக்கீரை நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு துருவிய தேங்காயைத் தூவவும். மணமணக்கும் இலைக்கறி கஞ்சி தயார்! தேவைக்கேற்றவாறு கஞ்சி ஊற்றி தேவையான உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
தி.ஷிவானி
சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். ஜீரண சக்தியை மேம்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் ரத்த சோகையை சரிசெய்யும். ஆண்களுக்கு ரத்தத்தைச் சுத்திகரிக்கும். தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுவதற்கான ஆற்றலை அளிக்கும்.
தேங்காய்ப்பால் - கருவாட்டுப் பொரியல்
தேவையானவை:
நெய் மீன் கருவாடு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - கால் கிலோ
பச்சை மிளகாய் - 8
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு
நல்லெண்ணெய் - 5 குழிக்கரண்டி

தேங்காய்ப்பால் எடுக்கும் முறை:
ஒரு முற்றிய தேங்காயைத் துருவவும். தேங்காய்த் துருவலில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துப் பாலைப் பிழிந்து எடுக்கவும். இந்தப் பாலை சூடான சோற்றில் ஊற்றிச் சாப்பிடவும். சைடிஷாக கருவாட்டுப் பொரியலைச் சாப்பிடவும். விரும்புபவர்கள் தேங்காய்ப்பாலுடன் சீனி சேர்த்துக் கொள்ளலாம்.
கருவாட்டுப் பொரியல் செய்முறை:
கருவாட்டைக் கழுவி, வெந்நீரில் மூழ்கும்படி ஐந்து நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு வெந்நீரில் இருந்து எடுத்து மீண்டும் கழுவிக்கொள்ளவும். சட்டியில் 5 குழிக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை நன்கு வதக்கவும். வெங்காயம் முக்கால்வாசி வதங்கிய பின் கழுவி வைத்துள்ள கருவாட்டையும் சேர்த்து சிறிது மஞ்சள்தூள் தூவி வதக்கவும். இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு சிறு தீயில் வைக்கவும். கருவாடு உதிரி உதிரியாக ஆகும்வரை வதக்கவும். கருவாட்டில் உப்பு ஏற்கெனவே இருப்பதால் சுவைத்துப் பார்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்க்கவும். கடைசியாகத் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பா.கவின், படங்கள்: பெ.ராகேஷ்
தேங்காய்ப்பால் உடல் வெப்பத்தைச் சீர்படுத்தும்.
தீயல்
தேவையானவை:
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தேங்காய் - அரை மூடி (துருவவும்)
காய்ந்த மிளகாய் - 6
மிளகு - ஒன்றரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 குழிக்கரண்டி
மல்லி (தனியா) - 4 டீஸ்பூன்
பிஞ்சு முருங்கைக்காய் - 2
கத்திரிக்காய் - 150 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
சட்டியில் இரண்டு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி மிளகைப் போடவும். மிளகு வெடிக்க ஆரம்பித்தவுடன் மல்லி (தனியா), கொஞ்சம் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். கடைசியில் தேங்காய்த் துருவலைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். ஆறியபின் இந்த மசாலா பொருள்களை வழுவழுவென்று அரைக்கவும். ஒரு கரண்டி நல்லெண்ணெயில் கடுகு சேர்த்து வெடித்தவுடன் வெந்தயம் போட்டு தாளித்து பின்னர் கறிவேப்பிலையைப் போடவும். தாளிப்பைத் தனியாக வைக்கவும்.
குழம்புச் சட்டியில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு நறுக்கிய சின்ன வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய கத்திரிக்காய் முருங்கைக்காயைப் போட்டு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துப் பின் தேவையான தண்ணீர் சேர்த்து மூடிவைத்து வேக வைக்கவும். காய்கள் நன்கு வெந்தபிறகு கரைத்துவைத்துள்ள புளித்தண்ணீரைச் சேர்த்து மூடி வைக்கவும். பின் அரைத்துவைத்துள்ள மசாலாவைச் சேர்த்து அவ்வப்போது கிளறிவிடவும். ஏற்கெனவே தாளித்துவைத்துள்ளதைச் சேர்த்து மேலும் கிளறவும் . 2 கரண்டி எண்ணெய் சேர்த்து சிறு தீயில் மூடி வைக்கவும். எண்ணெய் பிரிந்து மேலே வந்த பிறகு அடுப்பை நிறுத்தவும்.
பா.கவின், படங்கள்: பெ.ராகேஷ்
சின்ன வெங்காயம் இனவிருத்திக்கு உதவும்.
சொதி
தேவையானவை:
முற்றிய தேங்காய் - ஒன்று (துருவவும்)
பச்சை மிளகாய் - 6
பொரிகடலை (பொட்டுக்கடலை) - 50 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 50 கிராம்
சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 கரண்டி
உப்பு - தேவையான அளவு
காய்கறிகள்:
பீன்ஸ் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 50 கிராம்
பிஞ்சு முருங்கைக்காய் - 2
பச்சைப் பட்டாணி - 50 கிராம்
எலுமிச்சைப்பழம் - ஒன்று

செய்முறை:
பொரிகடலையை மிக்ஸியில் அரைத்து மாவாக்கவும். பாசிப்பருப்பை சிறு தீயில் மணம் வரும் வரை வறுத்து ஆறிய பின் வேக வைத்து நைஸாக மசிக்கவும்.
சீரகம், பச்சை மிளகாய், 2 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் சேர்த்து வழுவழுப்பாக அரைக்கவும். மீதமுள்ள தேங்காய்த் துருவலில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கெட்டியாக பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். மறுபடியும் தேங்காய்ச் சக்கையில் சற்று கூடுதலாகத் தண்ணீர் சேர்த்து அரைத்து இரண்டாவது பாலை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
தாளிப்புச் சட்டியில் 2 கரண்டி நல்லெண் ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்துவிட்டு, நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும். இது தனியாக இருக்கட்டும்.
குழம்பு வைக்கும் சட்டியில் நீளமாக வெட்டிய காய்கறிகள், பச்சைப் பட்டாணி போட்டு இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப் பாலை ஊற்றி, உப்பு போட்டு வேக வைக்கவும். பின் அரைத்த மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சிறு தீயில் வதக்கவும். மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். காய்கறி வெந்தவுடன் மசித்த பாசிப்பருப்பையும் தண்ணீரில் கலக்கிய பொரிகடலை மாவையும் போட்டு காய்கறியில் புரட்டிவிட்டு, தாளித்து சட்டியில் உள்ளவற்றைப் போட்டுக் கிளறிவிடவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். கடைசியாக முதலில் எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றவும். சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் இருக்கட்டும். சொதி தயார்.
பா.கவின், படங்கள்: பெ.ராகேஷ்
தேங்காய்ப்பால் சேர்ப்பதால் குடல் சுத்தமாகும். உடல் வெப்பம் சமநிலையில் இருக்கும்.
மட்டன் கோலா உருண்டை
தேவையானவை:
மட்டன் கொத்துக்கறி - 200 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
பொட்டுக்கடலை - 150 கிராம்
தேங்காய் - கால் மூடி (துருவவும்)
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6 பல்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
பிரியாணி இலை - ஒன்று
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய்விட்டு, சூடானதும் அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து பொரிந்தவுடன், நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்க்கவும். பச்சை வாடை நீங்கும் வரை நன்கு வதக்கவும். பிறகு பொட்டுக்கடலை சேர்க்கவும். அது பொன்னிறமானவுடன் துருவிய தேங்காய் சேர்க்கவும். கொத்துக்கறியை நன்றாகக் கழுவி, தண்ணீரில்லாமல் பிழிந்து எடுக்கவும். அதைக் கடாயில் சேர்த்து முக்கால் வாசி கறி வேகும் வரை வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். பிறகு கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். கலவை ஆறியவுடன், மிக்ஸியில் சேர்த்து உருண்டை உருட்டும் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உருட்டி வைத்த உருண்டைகளைப் பொரித் தெடுக்கவும்.
வே.அபிநய சௌந்தர்யா, படங்கள்: சி.அரவிந்தன்
செட்டிநாடு பக்கம் மாப்பிள்ளை விருந்தில் எத்தனை வகைகள் இருந்தாலும், தவறாமல் இடம்பெறும் உணவு மட்டன் கோலா உருண்டை. மட்டனில் புரதச்சத்து அதிகம்.