Published:Updated:

பலே பப்பாளி சமையல்!

பப்பாளி
பிரீமியம் ஸ்டோரி
பப்பாளி

`ஏழைகளின் கனி’ என்று அழைக்கப்படும் பப்பாளியின் பூர்வீகம் மெக்ஸிகோ..

பலே பப்பாளி சமையல்!

`ஏழைகளின் கனி’ என்று அழைக்கப்படும் பப்பாளியின் பூர்வீகம் மெக்ஸிகோ..

Published:Updated:
பப்பாளி
பிரீமியம் ஸ்டோரி
பப்பாளி

காய், கனிகளில் `சீப் அண்டு பெஸ்ட்’ வகையைச் சேர்ந்தது பப்பாளி. இருப்பினும் நம்மில் பலர் அதை உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. பப்பாளியை ஒதுக்குவதால் நாம் அதன் ஆரோக்கிய பயன்பாடுகளை இழக்க நேரிடுகிறது. பப்பாளிப்பழத்தை அப்படியே சாப்பிட்டாலே போதும்... உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்கும். பழத்தில் மட்டுமல்ல; பப்பாளிக்காயைப் பயன்படுத்தியும் பல்வேறு உணவு வகைகளை சமைத்துப் பரிமாறி அசத்தலாம்.

மீனாட்சி சிவதாஸ்
மீனாட்சி சிவதாஸ்
பலே பப்பாளி சமையல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பப்பாளியின் பயன்பாட்டை நாம் அதிகரிக்க உதவும் வகையில், தன் சமையல் திறனைக்கொண்டு களம் இறங்குகிறார் வேலூரைச் சேர்ந்த சமையற்கலைஞர் மீனாட்சி சிவதாஸ். பப்பாளிக்காய், பப்பாளிப்பழத்தைப் பயன்படுத்தி கூட்டு, பொரியல் என்று தொடுகறிகளையும் போளி, வடை, சமோசா என்று நாவூறவைக்கும் ஸ்நாக்ஸ்களையும், குழந்தைகள் விரும்பும் குல்ஃபியையும், ஏன்... ஏன்... பராத்தாவைக்கூட பப்பாளி சேர்த்து வழங்கி, நம் சமையல் அனுபவத்தை அடுத்த கட்டத்துக்குக்கொண்டுசெல்கிறார் மீனாட்சி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பப்பாளிக்காய் வேர்க்கடலை பால் கூட்டு

தேவையானவை:

 • பப்பாளிக்காய் - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)

 • ஊறவைத்த வேர்க்கடலை - 150 கிராம்

 • தேங்காய் - ஒரு மூடி

 • பச்சை மிளகாய் - 6

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • சோம்பு - ஒரு டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

 • கடுகு - அரை டீஸ்பூன்

 • பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

 • காய்ந்த மிளகாய் - 2

 • கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

 • தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்

பப்பாளிக்காய் வேர்க்கடலை பால் கூட்டு
பப்பாளிக்காய் வேர்க்கடலை பால் கூட்டு

செய்முறை:

தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், சோம்பு ஆகியவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். குக்கரில் வேர்க்கடலை, நறுக்கிய பப்பாளிக்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். பின்பு அதில் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு, தாளிக்கக்கொடுத்ததைத் தாளித்து இறக்கினால், சுவையான பப்பாளிக்காய் வேர்க்கடலை பால் கூட்டு தயார். இது கலந்த சாத்துக்கும் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

`ஏழைகளின் கனி’ என்று அழைக்கப்படும் பப்பாளியின் பூர்வீகம் மெக்ஸிகோ..

பப்பாளிக்காய் மசாலா பராத்தா

தேவையானவை:

 • துருவிய பப்பாளிக்காய் - 150 கிராம்

 • கோதுமை மாவு - 250 கிராம்

 • இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)

 • பச்சை மிளகாய் - 4

 • ஓமம் - 2 டீஸ்பூன்

 • துருவிய வெங்காயம் - 50 கிராம்

 • கொத்தமல்லித்தழை - அரை கப் (நறுக்கியது)

 • உப்பு - தேவைக்கேற்ப

 • எண்ணெய் - 50 கிராம்

பப்பாளிக்காய் மசாலா பராத்தா
பப்பாளிக்காய் மசாலா பராத்தா

செய்முறை:

இஞ்சி, பச்சை மிளகாயை கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு ஓமம் சேர்த்து அதில் நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், துருவிய வெங்காயம், துருவிய பப்பாளிக்காய், உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு இறக்கி, ஆறியவுடன் கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, கொத்தமல்லித்தழை சேர்க்கவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு மெல்லிய பராத்தாவாக இட்டு, இரண்டு பக்கமும் எண்ணெய்விட்டுப் பொன்னிறமாக எடுக்கவும்.

குறிப்பு: கோதுமை மாவுக்குப் பதில் மைதா மாவிலும் செய்யலாம். தொட்டுக்கொள்ள காரச் சட்னி சுவையாக இருக்கும்.

மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்அமெரிக்கா ஆகிய இடங்களில் அதிக அளவில் பப்பாளி விளைகிறது.

பப்பாளிக்காய் வெஜ் குருமா

தேவையானவை:

 • பப்பாளிக்காய் - 200 கிராம்

 • கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி - தலா 100 கிராம்

 • குடமிளகாய் - ஒன்று

 • வெங்காயம் - ஒன்று

 • பூண்டு - 8 பல்

 • இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவவும்)

 • பட்டை - சிறு துண்டு

 • கிராம்பு - 2

 • ஏலக்காய் - 2

 • சோம்பு - அரை டீஸ்பூன்

 • மிளகு - அரை டீஸ்பூன்

 • தக்காளி - ஒன்று

 • தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்

 • முந்திரி - 6

 • எண்ணெய் - 4 டீஸ்பூன்,

 • பச்சை மிளகாய் - 2

 • சீரகம் - அரை டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

பப்பாளிக்காய் வெஜ் குருமா
பப்பாளிக்காய் வெஜ் குருமா

செய்முறை:

தேங்காய்த் துருவல், முந்திரியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.பப்பாளிக்காய், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கைப் பொடியாக நறுக்கி, பச்சைப் பட்டாணியுடன் குக்கரில் போட்டு உப்பு, மஞ்சள்தூள், நீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு தாளித்து அதில் நறுக்கிய குடமிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு கீறிய பச்சை மிளகாய் போட்டு அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். சுருண்டு வந்தவுடன் குக்கரில் வேகவைத்த காய் கலவையைச் சேர்த்து மேலும் அரை டம்ளர் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். அதில் முந்திரி - தேங்காய்க் கலவை சேர்த்து, சீரகம் தாளித்து இறக்கவும். சுவையான பப்பாளிக்காய் குருமா தயார். இது ஆல் பர்பஸ் குருமா.

பத்து மீட்டா் உயரம் வரை வளரும் பப்பாளி மரம் இருபது ஆண்டுகள் வரை வாழும்.

பப்பாளிக்காய் சோள மசால் வடை

தேவையானவை:

 • வெள்ளை சோளம் - 200 கிராம்

 • துருவிய பப்பாளிக்காய் - 100 கிராம்

 • வெங்காயம் - ஒன்று

 • இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)

 • பூண்டு - 10 பல்

 • சோம்பு - ஒரு டீஸ்பூன்

 • காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 3

 • புதினா (அ) கறிவேப்பிலை - தேவையான அளவு

 • அரிசி மாவு - 50 கிராம்

 • உப்பு - தேவைக்கேற்ப

 • எண்ணெய் - அரை லிட்டர்

பப்பாளிக்காய் சோள மசால் வடை
பப்பாளிக்காய் சோள மசால் வடை

செய்முறை:

வெள்ளை சோளத்தை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, சோம்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், புதினா (அ) கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதில் துருவிய பப்பாளிக்காய் சேர்த்து, அரிசி மாவு சேர்த்து வடை மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி மாவை சிறு சிறு வடைகளாகப் போட்டு பொரித்தெடுக்கவும். இது நார்ச்சத்து நிறைந்தது. வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

பப்பாளியில் கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இது மஞ்சள் நிறமான பழங்களில் அதிக அளவு காணப்படுகிறது. இந்தச் சத்தே வைட்டமின் ஏ-வாக மாற்றப்படுகிறது.

பப்பாளிக்காய் ஆனியன் சமோசா

தேவையானவை:

 • கோதுமை மாவு - 200 கிராம்

 • துருவிய பப்பாளிக்காய் - 200 கிராம்

 • வெங்காயம் - 200 கிராம் (நீளமாக நறுக்கவும்)

 • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - சிறிதளவு

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 • பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)

 • உப்பு - தேவைக்கேற்ப

 • எண்ணெய் - அரை லிட்டர்

பப்பாளிக்காய் ஆனியன் சமோசா
பப்பாளிக்காய் ஆனியன் சமோசா

செய்முறை:

வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, துருவிய பப்பாளிக்காய் சேர்த்து மேலும் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு காயவிடவும். கோதுமை மாவை பெரிய சப்பாத்தியாக இட்டு அதை மூன்று துண்டுகளாக்கி ஒவ்வொன்றையும் முக்கோணமாக மடித்து ஆறிய கலவையை வைத்து நன்றாக ஓரத்தில் தண்ணீர் தொட்டு ஒட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான ஆல் டைம் ஃபேவரைட் சமோசா தயார்.

உடல்நலத்துக்கு அவசியமான வைட்டமின் சி சத்து பப்பாளியில் உள்ளது. அதோடு, 18 வகை சத்துகள் பப்பாளியில் நிறைந்து காணப்படுகின்றன.

பப்பாளிக்காய் பொரியல்

தேவையானவை:

 • பப்பாளிக்காய் - அரை கிலோ (நறுக்கவும்)

 • வெங்காயம் - 100 கிராம் (நறுக்கவும்)

 • காய்ந்த மிளகாய் - 6

 • கடுகு - ஒரு டீஸ்பூன்

 • கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • துருவிய தேங்காய் - அரை கப்

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

 • எண்ணெய் - 4 டீஸ்பூன்

பப்பாளிக்காய் பொரியல்
பப்பாளிக்காய் பொரியல்

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து, கறிவேப்பிலை போட்டு நறுக்கிய வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கிய பப்பாளிக்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 - 15 நிமிடங்கள் வேகவைக்கவும். பின்பு துருவிய தேங்காய் சேர்த்து இறக்கவும். பப்பாளிக்காய் பொரியல் தயார். இது ரசம் மற்றும் காரக்குழம்பு சாதத்துக்கு ஏற்றது.

வாஷிங்டன், ஹனி டியூ, சோலா சன்ரைஸ், சோலா வைமினாலோ, கோவை, கூா்க், பாங்காக், சிலோன், பிலிப்பைன்ஸ் எனப் பப்பாளியில் பல வகைகள் உள்ளன.

பப்பாளிப்பழ சேமியா குல்ஃபி

தேவையானவை

 • பப்பாளிப்பழக்கூழ் - ஒரு டம்ளர் (200 மில்லி)

 • சேமியா - 50 கிராம்

 • முந்திரி, பாதாம், பிஸ்தா (சேர்த்து) 50 கிராம்

 • பால் - 200 மில்லி

 • சர்க்கரை - 50 கிராம்

 • கோவா (அ) பால் பவுடர் - 50 கிராம்

 • ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • நெய் - 2 டீஸ்பூன்

பப்பாளிப்பழ சேமியா குல்ஃபி
பப்பாளிப்பழ சேமியா குல்ஃபி

செய்முறை:

கனமான வாணலியில் நெய்விட்டு பாதாம், முந்திரி, பிஸ்தாவை உடைத்துப் போட்டு அத்துடன் சேமியாவைச் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். அதில் ஒரு டம்ளர் கொதிக்கும் நீரைவிட்டு மூடிவைக்கவும். அதே கனமான வாணலியில் பப்பாளிக்கூழ், சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொஞ்சம் இறுகும்போது கோவா அல்லது பால் பவுடர் சேர்த்துக் கிளறவும். இது கொஞ்சம் கெட்டிப்படும்போது காய்ச்சிய பாலைச் சேர்க்கவும். இப்போது எல்லாம் சேர்த்து தோசை மாவுப் பதம் வந்தவுடன் அதில் கொதிக்கும் நீரில் உள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி, சேமியா மற்றும் ஏலக்காய்த்தூள் கலக்கவும். கொஞ்சம் ஆறியவுடன் குல்ஃபி மோல்டு, சிறு சிறு டம்ளரில் விட்டு ஃப்ரீசரில் 4 - 6 மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான குல்ஃபி தயார்.

குறிப்பு: நட்ஸுக்குப் பதில் விருப்பமான பழத்துண்டுகள் சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரைக்குப் பதில் தேன் சேர்க்கலாம்.

ஹனி டியூ பப்பாளி விதையில்லாமல் இருப்பதால் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.

பப்பாளிப்பழ ரவை போளி

தேவையானவை:

 • பப்பாளிப்பழத் துண்டுகள் - ஒரு கப்

 • மைதா (அ) கோதுமை மாவு - கால் கிலோ

 • ரவை - 200 கிராம்

 • சர்க்கரை - 100 கிராம்

 • ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

 • எண்ணெய், நெய் - தலா 50 கிராம் (கலந்துகொள்ளவும்)

 • உப்பு - ஒரு சிட்டிகை

பப்பாளிப்பழ ரவை போளி
பப்பாளிப்பழ ரவை போளி

செய்முறை:

மைதா (அ) கோதுமை மாவை மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 4 டீஸ்பூன் நெய் - எண்ணெய் கலவையைவிட்டு பிசைந்து நன்கு மூடிவைக்கவும். கடாயில் நெய்விட்டு ரவையை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பின்பு அதே கடாயில் சர்க்கரை, பப்பாளிப்பழத் துண்டுகள் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். அதில் வறுத்த ரவை சேர்த்து கெட்டியாகக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்து எடுத்துக்கொள்ளவும். இப்போது மாவை சிறு சப்பாத்தியாக இட்டு, அதில் பப்பாளி - ரவை கலவையை வைத்து நன்கு மூடி திரட்டி, இரண்டு பக்கமும் நெய் - எண்ணெய் கலவையைவிட்டு பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும்.

குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும் பல் உறுதிக்கும் பப்பாளி உதவும்.

பப்பாளிப்பழ அவல் கேசரி

தேவையானவை:

 • பப்பாளிப்பழக்கூழ் - 200 மில்லி

 • வெள்ளை அவல் - 100 கிராம்

 • சர்க்கரை - 100 கிராம்

 • ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

 • பச்சைக் கற்பூரம் - மிளகு அளவு

 • பாதாம், முந்திரி, திராட்சை தலா - 10

 • நெய் - 50 கிராம்

பப்பாளிப்பழ அவல் கேசரி
பப்பாளிப்பழ அவல் கேசரி

செய்முறை:

வாணலியில் 2 டீஸ்பூன் நெய்விட்டு அவலை நன்றாக வறுத்து ரவை பதத்தில் பொடித்து வைக்க வேண்டும். கனமான கடாயில் பப்பாளிக்கூழ், தண்ணீர், சர்க்கரை சேர்த்து பொடித்த அவலை சேர்த்துக் கிளறி அடுப்பை ‘சிம்’மில் வைத்து நெய்விட்டு மூடவும். 10 நிமிடங்கள் கழித்து நன்கு கிளறி ஏலக்காய்த்தூள்,பச்சைக் கற்பூரம் சேர்த்து வறுத்த பாதாம், முந்திரி, திராட்சை சேர்த்து கிளறினால், பப்பாளி அவல் கேசரி தயார். கலர் தேவைப்பட்டால் கேசரி பவுடர் சேர்க்கலாம்.

பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து உண்பது எடை குறைக்க உதவும்.

பப்பாளிப்பழ ஜாம்

தேவையானவை:

 • பப்பாளிப்பழம் - அரை கிலோ (தோல்சீவி அரைக்கவும்)

 • சர்க்கரை - 200 கிராம்

 • எலுமிச்சைப்பழம் - பாதி அளவு

 • பட்டைத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • நெய் - 500 கிராம்

பப்பாளிப்பழ ஜாம்
பப்பாளிப்பழ ஜாம்

செய்முறை:

அடிகனமான கடாயைச் சூடுபடுத்தி அரைத்த பப்பாளிப்பழத்தைச் சேர்த்துக் கிளறவும். சிறிது கெட்டிபடும்போது சர்க்கரை சேர்க்கவும். நன்கு சுருண்டு வரும்போது நெய் சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல்வரும் பக்குவத்தில் பட்டைத்தூள் சேர்த்து எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சுத்தமான பாட்டிலில் எடுத்துவைக்கவும். தேவைப்படும்போது பயன்படுத்தலாம். பிரெட், சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.

100 கிராம் பப்பாளிப்பழத்தில் 43 கலோரி ஆற்றல் அடங்கியுள்ளது.

பப்பாளிப்பழ மில்க் ஷேக்

தேவையானவை:

 • பப்பாளிப்பழம் - அரை கப்

 • பால் - 250 மி.லி

 • சர்க்கரை (அல்லது) தேன் - 2 டீஸ்பூன்

 • சீரகப்பொடி (அல்லது) சோம்பு - கால் டீஸ்பூன்

 • தண்ணீர் - 200 மி.லி.

 • ஐஸ் க்யூப்ஸ் - 2

பப்பாளிப்பழ மில்க் ஷேக்
பப்பாளிப்பழ மில்க் ஷேக்

செய்முறை:

பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும். பப்பாளிப்பழத்தை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதில் காய்ச்சி பாலைவிட்டு மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அரைத்தெடுத்து டம்ளருக்கு மாற்றவும். அதில் சர்க்கரை (அல்லது) தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு சீரகப்பொடி (அல்லது) சோம்பு சேர்த்து, ஐஸ் க்யூப்ஸ் போட்டுப் பரிமாறவும்.

நோய்க் கிருமிகளை எதிர்க்கும் தன்மை பப்பாளிக்கு உண்டு. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

பப்பாளிப்பழத் தேங்காய் பர்ஃபி

தேவையானவை:

 • பப்பாளிப்பழம் - 200 கிராம்

 • தேங்காய்த்துருவல் - ஒரு கப்

 • ரவை - 100 கிராம்

 • நெய் - 100 கிராம்

 • முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 10

 • ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்

 • சர்க்கரை - 150 கிராம்

பப்பாளிப்பழத் தேங்காய் பர்ஃபி
பப்பாளிப்பழத் தேங்காய் பர்ஃபி

செய்முறை:

அடிகனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் முந்திரி, பாதாம், பிஸ்தாவை வறுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் நான்கு டீஸ்பூன் நெய்விட்டு ரவையைப் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் பப்பாளிப்பழம், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். சிறிது இறுகும்போது 50 கிராம் நெய் சேர்க்கவும். சுருண்டு வரும்போது வறுத்த ரவை, முந்திரி, பாதாம், பிஸ்தா, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அத்துடன் தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறி ஆறியதும் நெய் தடவிய தட்டில் கொட்டி சிறு வில்லைகளாக்கிப் பரிமாறவும்.

பப்பாளியைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் ஓரளவு குறையும்.