Published:Updated:

என்ன ஒரு ருசி... இது இறால் ருசி!

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: ப்ரியா சதீஷ்

பிரீமியம் ஸ்டோரி

சைவ உணவுகளில் அத்தனை வகைகள் இருந்தாலும்கூட இறாலுக்கென்று தனிச்சுவை உண்டு. சுவை மட்டுமல்ல... சத்துகளும் இறாலில் நிறைந்து காணப்படுகின்றன. இறாலில் அதிக அளவு புரதமும் வைட்டமின் டி சத்தும் அடங்கியுள்ளன. இதில் கார்போஹைட்ரேட் இல்லை என்பதால், எடை குறைக்க விரும்புபவர்கள் இறாலை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எடை குறைப்பதில் மட்டுமல்ல... சருமப் பொலிவுக்கும் இறால் உதவுகிறது. கூந்தல் உதிர்வைத் தடுப்பதிலும் இறாலுக்குப் பங்குண்டு. இறாலிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பலவிதங்களிலும் நலம் பயப்பவை. இவை மட்டுமல்ல... பார்வைச் சிதைவைத் தடுப்பதிலும், மூப்புத் தோற்றத்தைத் தள்ளிப்போடுவதிலும், எலும்பு ஆரோக்கியத்திலும்கூட இறால்கள் பெரிதும் பங்காற்றுகின்றன.

இறால்
இறால்

நலங்களை அள்ளித்தரும் இறாலைக்கொண்டு பொதுவாக ஃப்ரை, தொக்கு, குழம்பு ஆகியவற்றை மட்டுமே செய்வது வழக்கம். கனடாவில் வாழும் சமையற்கலைஞர் ப்ரியா சதீஷ் அழகிய படங்களுடன் இங்கே வழங்கியிருக்கும் இறால் சமையல் குறிப்புகள் புதுமையானவை; சுவை யானவை; குழந்தைகளையும் கவரக் கூடியவை!

இறால் மோமோஸ்

தேவையானவை:

  • இறால் - ஒரு கப் (கொத்தியது)

  • வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

  • துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்

  • பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

மேல் மாவுக்கு:

  • மைதா - முக்கால் கப்

  • எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

  • உப்பு, தண்ணீர் - தேவைக்கேற்ப

என்ன ஒரு ருசி...  இது இறால் ருசி!

செய்முறை:

மைதாவுடன் எண்ணெய், உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர்விட்டு மாவாகப் பிசையவும். மூடி போட்டு மாவை 30 நிமிடங்கள் தனியே வைக்கவும். வேறொரு பாத்திரத்தில் இறாலுடன் இஞ்சி, வெங்காயத்தாள், வெங்காயம், உப்பு சேர்த்துக் கலந்து தனியே வைக்கவும். மாவை சிறிய, ஒரே அளவான உருண்டைகளாக உருட்டி ஈரத்துணியில் மூடி தனியே வைக்கவும்.

என்ன ஒரு ருசி...  இது இறால் ருசி!

ஓர் உருண்டையை எடுத்து லேசாக மாவு தூவிய பலகையின் மேல் வைத்து 2-3 இன்ச் விட்டமுள்ள வட்டமாகத் தேய்த்துக் கொள்ளவும். வட்டத்தின் நடுவில் இறால் கலவையை வைக்கவும். அதை விருப்பமான வடிவில் செய்துகொள்ளவும். இதேபோல் மற்ற மோமோக்களைத் தயார் செய்து, ஆவியில் வேக வைக்கத் தயாராகும் வரை ஈரத்துணியால் மூடி வைக்கவும். பிறகு இட்லி குக்கரில் வைத்து 5 - 6 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும்.

இந்த மோமோக்கள் தயாரித்த பிறகு டிரான்ஸ் பரென்ட்டாக இருக்கும். அதாவது அவற்றின் உள்ளே இருப்பது வெளிப்படையாகத் தெரியும். இதை சாஸ் அல்லது காய்ந்த மிளகாய் பூண்டு சட்னியுடன் பரிமாறவும்.

இறாலில் கால்சியம், அயோடின், புரதச்சத்துகள் அதிகம் உள்ளன.

இறால் கஞ்சி
இறால் கஞ்சி

இறால் கஞ்சி

தேவையானவை:

  • அரிசி - ஒரு கப்

  • தண்ணீர் - 8 கப்

  • இறால் - 250 கிராம் (சுத்தம் செய்து, நரம்பு நீக்கவும்)

  • துருவிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்

  • நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

  • பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • கார்ன் ஸ்டார்ச் (சோள மாவு) - ஒரு டீஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

டாப்பிங் செய்ய:

  • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்

  • இறால் - 250 கிராம் (சுத்தம் செய்து, நரம்பு நீக்கவும்)

  • மஷ்ரூம் - 100 கிராம் (துண்டுகளாக்கவும்)

  • மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

அலங்கரிக்க:

  • பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு

செய்முறை:

இறால், இஞ்சி, வெங்காயத்தாள், கார்ன் ஸ்டார்ச் ஆகியவற்றை ஒரு சின்னக் கிண்ணத்தில் சேர்த்துக் கலந்து தனியே வைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்துக் கலந்து, கொதிக்கவிட்டு, தீயைக் குறைத்து அடிக்கடி கிளறவும். அரிசி கிட்டத்தட்ட வெந்த பிறகு இறால் கலவையைச் சேர்க்கவும். இறால் வெந்து கலவை (கஞ்சி) கெட்டியாகும் வரை மேலும் சிறிது நேரம் வேகவிடவும். நல்லெண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேகவிடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி தனியே வைக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காயவிட்டு இஞ்சி சேர்த்து மஷ்ரூம், இறால் சேர்க்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். வேகும் வரை கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். கஞ்சியை ஒரு சிறிய பவுலில் சேர்த்து மேலே மஷ்ரூம் - இறால் டாப்பிங், நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.

இறாலில் பவள இறால், பாறை இறால், கல் இறால், மிதியடி இறால் என நான்கு வகைகள் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இறால் கேனபேஸ்
இறால் கேனபேஸ்

இறால் கேனபேஸ்

தேவையானவை:

  • வெள்ளரிக்காய் - 3-4

  • எண்ணெய் - 2 டீஸ்பூன்

  • இறால் - 15 (நரம்பு நீக்கியது)

  • ஸ்வீட் சில்லி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்

  • மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

இறால் - அவகாடோ டிப் செய்ய:

  • அவகாடோ - 2 (மசிக்கவும்)

  • வேகவைத்த இறால் - 15 (பொடியாக நறுக்கியது)

  • மயோனைஸ் - 3-4 டேபிள்ஸ்பூன்

  • தக்காளி - ஒன்று (விதை நீக்கிப் பொடியாக நறுக்கவும்)

  • மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

டிப் செய்ய கொடுத்துள்ளவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு நரம்பு நீக்கப்பட்ட இறால், ஸ்வீட் சில்லி சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். இறால் வெந்ததும் கடாயிலிருந்து எடுத்து தனியே வைக்கவும். வெள்ளரிக்காயை வட்டமாகவோ, குறுக்காகவோ வெட்டி தனியாக வைக்கவும்.

ஒரு வெள்ளரிக்காய் துண்டு எடுத்து, மேலே `இறால் - அவகாடோ டிப்’பைப் பரப்பி, அதன் மேலே வாட்டிய இறால் துண்டு வைத்துப் பரிமாறவும். எல்லா வெள்ளரிக்காய் துண்டு களிலும் இதே போல் செய்து கொள்ளவும். ராய்த்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

டிசம்பர், ஜனவரி மாதங்களே இறால் சீஸன்.

இறால் கீரை அடை
இறால் கீரை அடை

இறால் கீரை அடை

தேவையானவை:

  • கடலைப்பருப்பு - கால் கப்

  • பயத்தம்பருப்பு - கால் கப்

  • துவரம்பருப்பு - கால் கப்

  • மைசூர் பருப்பு (masoor dal) - கால் கப்

  • அரிசி மாவு - கால் கப்

  • காய்ந்த மிளகாய் - 3

  • சீரகம் - ஒரு டீஸ்பூன்

  • துருவிய தேங்காய் - 1/3 கப்

  • இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவவும்)

  • இறால் - 250 கிராம்

  • பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

  • பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

  • பொடியாக நறுக்கிய கீரை இலைகள் - ஒரு கப்

  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

  • எண்ணெய் - தேவையான அளவு

  • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

பருப்புகளை காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துக் கழுவி, நீரில் ஊறவைத்து, நைஸாக அரைத்துக்கொள்ளவும். தேங்காய், இறால், இஞ்சியைத் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அரிசி மாவுடன், கீரை, கொத்தமல்லி இலை, அரைத்த பருப்பு கலவை, இறால் கலவை, உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதை அடை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

தோசை தவாவைச் சூடாக்கி, ஒரு கரண்டி மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய்விட்டு தோசை போல இருபுறமும் சுட்டெடுக்கவும். மீதமுள்ள மாவையும் இதேபோல் செய்யவும். தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

இறாலில் காணப்படும் கொழுப்பானது நல்ல கொலஸ்ட்ரால் வகையைச் சேர்ந்தது.

பீட்டல் லீவ்ஸ் வ்ராப்டு இறால்
பீட்டல் லீவ்ஸ் வ்ராப்டு இறால்

பீட்டல் லீவ்ஸ் வ்ராப்டு இறால்

தேவையானவை:

  • வெற்றிலை - 10

  • இறால் - ஒன்றரை கப் (கொத்தியது)

  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்

  • மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

  • கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு பவுலில் இறாலை எடுத்துக்கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து தனியே வைக்கவும். வெற்றிலையைத் தண்டுப் பகுதி கீழ் நோக்கி இருக்கும்படி தட்டில் வைக்கவும்.

என்ன ஒரு ருசி...  இது இறால் ருசி!

இறால் கலவையைச் சிறிதளவு எடுத்து சிறிய சாசேஜ் (sausage) போல செய்துகொள்ளவும். இதை வெற்றிலை ஓரத்தில் வைத்து மெதுவாக உருட்டவும். இறால் கலவை வெளியே வராதவாறு பார்த்துக்கொள்ளவும். நிரப்பப்பட்ட வெற்றிலையை சீல் செய்து உருளை வடிவம் பெற தண்டைப் பயன்படுத்தவும். இரண்டு ஸ்கீவர்களை எடுத்து வெற்றிலை ரோலை குத்தவும். மீதமுள்ள வெற்றிலைகளை இதேபோல் செய்து அதே ஸ்கீவர்களைக் குத்தவும்.

பானில் (pan) எண்ணெய் தெளித்து ஸ்கீவர் களை வைக்கவும். தீயைக் குறைத்து, மூடி போட்டு இருபக்கமும் வேகவிடவும். பிறகு பானிலிருந்து எடுத்து டொமேட்டோ சாஸ் அல்லது தாய் சில்லி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.

வணிக ரீதியாக இறால் வளர்ப்பு 1970-கள் முதல் பெருகியது.

என்ன ஒரு ருசி...  இது இறால் ருசி!

ஸ்பைஸி இறால் புரொக்கோலி இட்லி உப்புமா

தேவையானவை:

  • காய்ந்த மிளகாய் - 2

  • பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்

  • பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

  • வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)

  • பொடியாக நறுக்கிய புரொக்கோலி - அரை கப்

  • இறால் - 10-15 (பொடியாக நறுக்கவும்)

  • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

  • சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

  • கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

  • இட்லி - 8-10

  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

  • எலுமிச்சைச்சாறு - அரை முதல் ஒரு டீஸ்பூன் வரை (விருப்பப்பட்டால்)

  • உப்பு - தேவைக்கேற்ப

  • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பானில் (pan) எண்ணெயைச் சூடாக்கி காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, கண்ணாடி போல் பளபளப்பாகும் வரை வதக்கவும்.

இதனுடன் புரொக்கோலி சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கலக்கவும். பொடியாக நறுக்கிய இறாலைச் சேர்த்து குலுக்கி, ஒரு நிமிடம் வேகவிடவும். இதற்கிடையே இட்லிகளை அரை நிமிடம் தண்ணீரில் நனைத்து எடுத்து உதிர்க்கவும். உதிர்த்த இட்லியை இறால் கலவையுடன் சேர்த்து, இதனுடன் உப்பு சேர்த்துக் கிளறி இரண்டு நிமிடங்கள் வேகவிடவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கி, எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.

பண்ணை இறால்களில் 70 சதவிகிதம் ஆசிய நாடுகளிலேயே உற்பத்தியாகின்றன.

என்ன ஒரு ருசி...  இது இறால் ருசி!

இறால் பானி பூரி

தேவையானவை:

  • பானி பூரி - 10-15

  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - தேவையான அளவு

இறால் மசாலாவுக்கு:

  • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்

  • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

  • பொடியாக நறுக்கிய மஷ்ரூம் - அரை கப்

  • இறால் (கொத்தியது) - ஒரு கப்

  • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

  • மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

  • சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

  • ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - அரை டீஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

பானிக்கு:

  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

  • வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

  • தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

  • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - 3 டேபிள்ஸ்பூன்

  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

  • சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

  • மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

  • சுத்தம் செய்த இறால் - 10-15

  • உப்பு - தேவைக்கேற்ப

  • தண்ணீர் - 2 கப்

இறால் பானி செய்முறை:

குக்கரில் எண்ணெயைச் சூடாக்கி, வெங்காயம், கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் பளபளப்பாக ஆரம்பித்ததும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், மல்லித்தூள், சுத்தம் செய்த இறால், உப்பு சேர்த்து நன்கு கலந்து ஒரு நிமிடம் வேக விடவும். 2 கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். ஆறியபின் சில இறால்களைத் தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ள கலவையை மிக்ஸியில் நைஸான கூழாக அரைக்கவும்.

இறால் மசாலா செய்முறை:

கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, வெங்காயம் சேர்த்து கண்ணாடி போல் பளபளப்பாகும் வரை வறுத்து, இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கி, நறுக்கிய மஷ்ரூம் சேர்க்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், ஆம்சூர் பவுடர் சேர்த்து, இறாலும் சேர்த்து, உப்பு போட்டு, மஷ்ரூம், இறால் வேகும் வரை சமைக்கவும். பிறகு தனியே எடுத்து வைக்கவும்.

பரிமாறும் முறை:

பானி பூரியை எடுத்து இறால் மசாலாவை நிரப்பி, மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி, தனியாக எடுத்து வைத்த இறாலை மேலே வைக்கவும். இறால் பானியுடன் பரிமாறவும்.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவு இறால் தேவை உள்ளது.

தாய் (Thai) இறால் ஸ்ப்ரிங் ரோல்
தாய் (Thai) இறால் ஸ்ப்ரிங் ரோல்

தாய் (Thai) இறால் ஸ்ப்ரிங் ரோல்

தேவையானவை:

  • ரைஸ் பேப்பர் ஸ்ப்ரிங் ரோல் ரேப்பர்ஸ் (Rice paper spring roll wrappers) - 10

  • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • இறால் - 30 (சுத்தம் செய்து நரம்பு நீக்கவும்)

  • ஸ்டர் ஃப்ரை சாஸ் (Stir fry sauce) - 2 டேபிள்ஸ்பூன்

  • மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • வேக வைத்த பழுப்பு அரிசி சேமியா (Brown rice vermicelli) - 2 கப்

  • நீளமாக, மெலிதாக துருவிய கேரட் - ஒரு கப்

  • வெள்ளரிக்காய் - 4-5 (மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கவும்)

  • உப்பு - தேவைக்கேற்ப

  • கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய்விட்டு சுத்தம் செய்த இறாலைச் சேர்க்கவும். இதனுடன் ஸ்டர் ஃப்ரை சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வேகவிட்டு தனியே வைக்கவும். ஆழமான பானில் (pan) வெந்நீர் சேர்க்கவும். ஒரு ரைஸ் பேப்பர் ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டை எடுத்து நீரில் 10 நிமிடங்கள் நனைக்கவும். அதிகப்படியான நீரை உதறிவிட்டு ஒரு தட்டின் மேல் வைக்கவும்.

வேகவைத்த சேமியாவை பேப்பரின் கீழ்ப்பக்கம் மூன்றில் ஒரு பகுதியில் வைக்கவும். சேமியாவின் மேல் கேரட், வெள்ளரிக்காய், கொத்தமல்லி இலை வைக்கவும். பேப்பரை கவனமாக சிலிண்டர் வடிவில் பாதியளவுக்குச் சுருட்டவும். வேகவிட்ட 3 இறாலை மீதி பாதியில் வைத்து பேப்பரை சுருட்டத் தொடங்கவும். ஸ்ப்ரிங் ரோலுக்கு செய்வதுபோல் பக்கங்களை மூடி, இறுக்கமான சிலிண்டர் வடிவ ரோலாகச் செய்யவும். மற்ற ஷீட்டுகளிலும் இதே போல் செய்யவும். தாய் ஸ்வீட் ரெட் சில்லி சாஸுடன் பரிமாறவும்.

ஆசிய நாடுகளில் சீனாவும் தாய்லாந்தும் இறால் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன.

இறால் வலோவா
இறால் வலோவா

இறால் வலோவா

தேவையானவை:

  • பஃப் பாஸ்ட்ரி ஷீட்

  • முட்டை - ஒன்று

ஸ்டஃபிங்குக்கு:

  • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • சீரகம் - ஒரு டீஸ்பூன்

  • பொடியாக நறுக்கிய

  • பூண்டு - 2 டீஸ்பூன்

  • இறால் - 300 கிராம் (கொத்தவும்)

  • நறுக்கிய காலே (kale) இலைகள் - அரை கப் (கீரையும் பயன்படுத்தலாம்)

  • மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • வெண்ணெய் - கால் கப்

  • மைதா - கால் கப்

  • பால் - முக்கால் கப்

  • துருவிய சீஸ் - கால் கப்

  • உப்பு - தேவைக்கேற்ப

வலோவா கேஸ் செய்முறை:

பாஸ்ட்ரி ஷீட்டை 4 - 5 மில்லிமீட்டர் தடிமனுக்கு ரோல் செய்யவும். ரவுண்ட் கட்டரைப் பயன்படுத்தி பேஸ்ட்ரியை வட்ட வடிவமாக வெட்டிக்கொள்ளவும் (கட்டரின் அளவைப் பொறுத்து சுமார் 12 `டிஸ்க்’குகள்).

6 `டிஸ்க்’குகளை பேக்கிங் ஷீட் மீது வைக்கவும். மீதியுள்ள டிஸ்க்குகளின் நடுவில் சிறிய கட்டரால் துளையிட்டு தனியே வைக்கவும். பாஸ்ட்ரி பிரஷ் கொண்டு, டிஸ்க்கின் மேல் அடித்த முட்டையைத் தடவவும். நடுவில் துளையிட்ட டிஸ்க்கை அதன் மேல் வைக்கவும் (இதை பல டிஸ்குகளைக் கொண்டு, பெரிய வலோவா கேஸ்களாகச் செய்யலாம். ஒவ்வொரு லேயரின் நடுவிலும் கிளேஸ் தடவ வேண்டும்). தயார் செய்த கேஸ்களை, பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) 350 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் 20 - 25 நிமிடங்கள் பேக் செய்து எடுத்து ஆறவிடவும்.

ஃபில்லிங் செய்முறை:

கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, சீரகம், பூண்டு தாளிக்கவும். இறால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும். காலே இலைகள் சேர்த்து, இறால் வேகும் வரை சமைக்கவும். பிறகு தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் வெண்ணெய் சேர்த்து, மைதாவைப் போட்டு நிறம் மாறாமல் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். இதில் பால் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும். இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு இறால் கலவையைச் சேர்க்கவும். இதனுடன் சீஸ் சேர்த்து உப்பு சரிபார்த்து இறக்கவும். தயாரிக்கப்பட்ட இறால் கலவையை வலோவா கேஸ்களில் நிரப்பி பரிமாறவும்.

இந்தியாவில் ஆந்திராவில் அதிக அளவு இறால் உற்பத்தி நடைபெறுகிறது.

இறால் துவையல்
இறால் துவையல்

இறால் துவையல்

தேவையானவை:

  • பெரிய வெங்காயம் - 2 (நறுக்கவும்)

  • பூண்டு - 4-5 பல் (நறுக்கவும்)

  • பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டேபிள்ஸ்பூன்

  • இறால் - 250 கிராம் (சுத்தம் செய்து நரம்பு நீக்கவும்)

  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் - 5-6 (அல்லது ருசிக்கேற்ப)

  • கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

  • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

இறாலுடன் மஞ்சள்தூள் சேர்த்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு பூண்டு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அது லேசான பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கி கொத்தமல்லி இலைகள், இறால் சேர்த்துக் கிளறி நன்கு வேகவைக்கவும். இந்தக் கலவையை ஆறவிட்டு, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். தயிர் சாதத்துடன் பரிமாறவும்.

இறால் ஏற்றுமதியில் உலகில் முதலிடம் பெற்றுள்ள நாடு தாய்லாந்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு