Published:Updated:

எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் தோசை வகைகள்!

சுவையுடன் சேர்த்து ஆரோக்கியத்தையும் தேடுவோர் சிறுதானிய மாவைப் பயன்படுத்தலாம்.

பிரீமியம் ஸ்டோரி

`தோசையம்மா தோசை... அம்மா சுட்ட தோசை’ என்று ரைம்ஸ் பாடும் அளவுக்குத் தமிழக உணவுக் கலாசாரத்தில் இரண்டற கலந்துவிட்ட டிபன், தோசை! தோசைக்கென்றே தனியாக உணவகங்கள் தொடங்கப்பட்டு, அவை மக்களிடையே பேராதரவைப் பெற்று வருகின்றன. `இன்னிக்கு டிபன் உப்புமா’ என்றால் முகம் சுளிக்கும் குழந்தைகள்கூட `தோசை’ என்றால், `சீக்கிரம் கொண்டு வா’ என்று பரபரப்பார்கள். அதுவும் வித்தியாசமாக பனீர் தோசை, பாஸ்தா தோசை, பீட்சா தோசை, ஐஸ்க்ரீம் தோசை என செய்து பரிமாறினால், உற்சாகத்தில் துள்ளிக் குதிப்பார்கள். உங்கள் உணவறையில் மகிழ்ச்சி நிலவும் விதத்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சுவையான, வித்தியாசமான 10 வகை தோசைகளின் செய்முறைக் குறிப்பு களை வழங்குகிறார், `Dosart’ உணவு நிறுவனத் தின் முதன்மை சமையற்கலைஞர் ராம்.

ராம்
ராம்

இந்த பத்து வகை தோசைகளைச் செய்வதற்கு நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் தோசை மாவையே பயன்படுத்தலாம். சுவையுடன் சேர்த்து ஆரோக்கியத்தையும் தேடுவோர் சிறுதானிய மாவைப் பயன்படுத்தலாம்.

சிறுதானிய தோசை மாவு தயாரிக்கும் முறை: கேரள சிவப்பரிசியை தேவையான அளவு எடுத்து மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். சிறுதானிய வகைகளையும் மாவாக அரைத்து இரண்டையும் சரிபாதி விகிதத்தில் எடுத்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, தோசைக்கு மாவுக் கரைசலைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

தோசை
தோசை

மாவு அரைப்பது சிரமமாகத் தோன்றினால் சிவப்பரிசி மாவும் சிறுதானிய வகைகள் மாவும் இரண்டுமே கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உப்பு, தண்ணீர் சேர்த்து தயார் செய்யலாம். இரவு தோசை ஊற்றப்போவதாக இருந்தால் காலையிலேயே மாவுக் கரைசலை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் புளிப்புத் தன்மை ஏற்பட்டு, தோசையின் சுவை பிரமாதமாக இருக்கும். பத்து தோசை வகைகளில் ஐஸ்க்ரீம் தோசையை தவிர்த்து மற்ற ஒன்பது வகை தோசைகளுக்கும் தேங்காய்ச் சட்னி மற்றும் புதினாச் சட்னி சேர்த்து சாப்பிடலாம்... சுவையாக இருக்கும்.

தேங்காய்ச் சட்னி

தேவையானவை:

 • பச்சை மிளகாய் - 4

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்

 • தேங்காய் - 50 கிராம்

 • பொட்டுக்கடலை - 100 கிராம்

 • எண்ணெய் - 2 டீஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

தேங்காய்ச் சட்னி
தேங்காய்ச் சட்னி

செய்முறை :

கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம் தாளித்து, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும். அதை மிக்ஸியில் தேங்காய் மற்றும் பொட்டுக் கடலையுடன் சேர்த்து நீர்விட்டு அரைத்து உப்பு சேர்த்தால் சுவையான தேங்காய்ச் சட்னி தயார்.

இந்தியாவில் ஒவ்வொரு பிரதேசத்திலும் அந்தந்த மக்களின் கலாசாரத்துக்கேற்ப விதம்விதமான சட்னிகள் புழக்கத்தில் இருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதினாச் சட்னி

டாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு புதினா, கொத்தமல்லித்தழை, நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதை மிக்ஸியில் 100 கிராம் பொட்டுக்கடலையுடன் நீர்விட்டு அரைத்து உப்பு சேர்த்தால் புதினாச் சட்னி தயார்.

ஐரோப்பியப் பதப்படுத்தப்பட்ட சட்னிகளைவிட, ஃப்ரெஷ்ஷான இந்தியச் சட்னிகள் அதிக சுவை மிகுந்தவை. 19-ம் நூற்றாண்டில் இந்தியாவின் பல வகையான சட்னிகளுக்கு பிரிட்டிஷார் தங்களது நாக்கைப் பறிகொடுத்தனர்.

ரெட் சட்னி

டாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடான வுடன் தேவையான அளவு பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின் நறுக்கிவைத்த பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதங்கியதும் அதில் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிதளவு வெல்லம் மற்றும் சுவைக்கேற்ப புளி சேர்த்து கிளறி இறுதியாக காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து இறக்கினால் ரெட் சட்னி செய்வதற்கான மசாலா கலவை தயார். மிக்ஸியில் சட்னிக்குத் தேவையான அளவு பொட்டுக்கடலையைச் சேர்த்து அத்துடன் தயார் செய்துவைத்த மசாலா கலவையைக்கொட்டி அரைத்தெடுத்தால் வகை வகையான தோசைகளுடன் சேர்க்கும் ரெட் சட்னி தயார்.

இந்திய வகை சட்னிகளை உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அறிமுகப்படுத்திய வர்கள் ஐரோப்பியர்களே. இன்றைக்கும் இங்கிலாந்தில் `Chutney’ என்ற பெயர்கொண்ட ரெஸ்டாரன்ட்டுகள் பலவற்றைப் பார்க்கலாம்.

மேகி தோசை

தேவையானவை:

 • சிறுதானிய தோசை மாவு - 2 கரண்டி

 • வேகவைத்த மேகி - 60 கிராம்

 • பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 20 கிராம்

 • மயோனைஸ் - 2 டீஸ்பூன்

 • ஃப்ரெஷ் க்ரீம் - 100 மில்லி

 • பீட்சா சாஸ் - அரை டீஸ்பூன்

 • சீஸ் - 20 கிராம்

 • வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • ரெட் சட்னி - அரை கரண்டி

மேகி தோசை
மேகி தோசை

செய்முறை:

தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி மெல்லியதாகத் தேய்த்துக் கொள்ளவும். பின்னர் தோசையின் மேல் வெண்ணெய் போட்டு, அது உருகிய உடன் நறுக்கிவைத்த வெங்காயத்தைப் போடவும். அதைத் தொடர்ந்து மயோனைஸ், பீட்சா சாஸ், வேகவைத்த மேகி சேர்க்கவும். பின்னர் மேகி மேல் ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் ரெட் சட்னி போட்டுக் கிளறி, தோசையின் மேல் சீஸைத் துருவிச் சேர்த்து அடுப்பில் இருந்து எடுத்து தட்டில் வைத்தால், சுவையான மேகி தோசை தயார்.

உலகமயமாக்கலினால் கலாசார எல்லைகளை எல்லாம் உடைத்துக்கொண்டு உணவு வகைகள் எங்கெங்கும் பரவிக் கிடக்கின்றன. அதனால்தான் அமெரிக்க நகரங்களிலும் நம் ஊர் மசால் தோசை மணமணக்கிறது.

ஐஸ்க்ரீம் தோசை

தேவையானவை:

 • சிறுதானிய தோசை மாவு - 2 கரண்டி

 • வொயிட் சாக்லேட் சிப்ஸ் - 30 கிராம்

 • பிளாக் சாக்லேட் சிப்ஸ் - 30 கிராம்

 • சாக்லேட் ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப் (150 மில்லி )

 • சாக்லேட் சாஸ் - 3 டீஸ்பூன்

 • உடைத்த முந்திரி - 30 கிராம்

 • உடைத்த பாதாம் - 15 கிராம்

 • செர்ரி பழம் - 4

 • வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

ஐஸ்க்ரீம் தோசை
ஐஸ்க்ரீம் தோசை

செய்முறை:

தோசைக்கல்லில் 2 கரண்டி மாவை ஊற்றி தேய்த்துவிட்டு, அதன் மேல் வெண்ணெய் போட்டு சாக்லேட் சாஸ் சேர்த்து தோசை மேல் நன்றாகத் தேய்க்க வேண்டும். பின்னர் வொயிட் மற்றும் பிளாக் சாக்லேட் சிப்ஸை தோசை மேல் தூவிவிடவும். தொடர்ந்து முந்திரி மற்றும் பாதாமைப் போட்டு தோசையை நன்கு முறுகலாக்கி கோன் வடிவில் தோசையை சுருட்டி, அதில் ஐஸ்க்ரீமை வைத்துச் சுற்றி, செர்ரி பழங்கள் வைத்துப் பரிமாறவும்.

தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால்.. அதற்குக் கொஞ்சம் புளியை, ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெயில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் தோசை நன்றாக எடுக்க வரும்.

பீட்சா தோசை

தேவையானவை:

 • சிறுதானிய தோசை மாவு - 2 கரண்டி

 • பீட்சா சாஸ் - ஒன்றரை டீஸ்பூன்

 • பனீர் - 25 கிராம்

 • பச்சைப்பட்டாணி - 20 கிராம்

 • முட்டைகோஸ் - 20 கிராம்

 • வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 20 கிராம்

 • பேபி கார்ன் - 15 கிராம்

 • ஸ்வீட் கார்ன் - 10 கிராம்

 • சீஸ் - 20 கிராம்

 • ரெட் சட்னி - ஒரு கரண்டி

பீட்சா தோசை
பீட்சா தோசை

செய்முறை:

தோசைக்கல்லில் 2 கரண்டி மாவைவிட்டு தேய்த்துக்கொள்ளவும். பின்னர் தோசை மேல் வெண்ணெய் போட்டு, நறுக்கி வைத்த வெங்காயம், பச்சைப்பட்டாணி மற்றும் பீட்சா சாஸ் சேர்த்து, பிறகு தோசையின் மேல் துருவிய பனீர் மற்றும் துருவிய முட்டைகோஸை பரவலாகப் போட வேண்டும். தொடர்ந்து தோசை மேல் பேபி கார்ன் தூவி, அதன் மேல் ரெட் சட்னி ஊற்றி நன்றாகக் கிளறவும். கடைசியாக தோசையின் மேல் சீஸைத் துருவி விட்டு, ஸ்வீட் கார்னைப் பரவலாகத் தூவி கல்லில் இருந்து எடுத்து தட்டில் வைத்தால், சுவையான பீட்சா தோசை ரெடி.

நெய் வாசனையோடு கூடிய வித்தியாசமான கோயில் பிரசாதம் அழகர் கோயில் தோசை. நெய்யில் பொரித்த பெரிய வடை போலவே இருந்தாலும்கூட, இது தோசையில்தான் சேர்த்தி.

பனீர் ஃபேன்டஸி தோசை

தேவையானவை :

 • சிறுதானிய தோசை மாவு - 2 கரண்டி

 • பனீர் - 70 - 100 கிராம்

 • மயோனைஸ் - 2 டீஸ்பூன்

 • பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 20 கிராம்

 • பீட்சா சாஸ் - அரை டீஸ்பூன்

 • ஃப்ரெஷ் க்ரீம் - 100 மில்லி

 • ரெட் சட்னி - அரை கரண்டி

 • வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • கொத்தமல்லி - சிறிதளவு

பனீர் ஃபேன்டஸி தோசை
பனீர் ஃபேன்டஸி தோசை

செய்முறை :

தோசைக்கல்லில் 2 கரண்டி மாவை விட்டு தேய்த்துவிட்டு, பின்னர் அதன் மேல் நறுக்கி வைத்த வெங்காயத்தைச் சேர்க்கவும். பின்னர் மயோனைஸ் ஊற்றவும். தொடர்ந்து பீட்சா சாஸ், ரெட் சட்னி போட்டு அதன் மேல் சிறிதளவு கொத்தமல்லித்தழை தூவிவிடவும். பின்னர் கியூப் வடிவில் வெட்டி வைக்கப்பட்ட பனீரைப் போட்டு அதன் மேல் ஃப்ரெஷ் க்ரீம் ஊற்றி கரண்டி கொண்டு நன்கு கிளறிவிடவும். இறுதியாக வெண்ணெய் சேர்த்து தோசையின் மேல் தயாரான கிரேவியை தட்டில் வழித்து வைத்து பின் தோசையை தனியாக அதே தட்டில் வைத்துப்பரிமாறவும்.

தோசையை தேங்காய்ச் சட்னி மற்றும் புதினாச் சட்னியுடன் சேர்த்து சுவைக்க மிகவும் பிரமாதமாக இருக்கும்.

கி.பி 920 வாக்கில் கன்னடத்தில் ஷிவகோடியாசார்யா என்பவர் எழுதியதிலிருந்து, இன்று நாம் விரும்பி சாப்பிடும் தோசை, கர்நாடக மாநிலக் கண்டுபிடிப்பு என்பதை அறிய முடிகிறது.

அமெரிக்கன் சொப்சே தோசை

தேவையானவை:

 • சிறுதானிய தோசை மாவு - 2 கரண்டி

 • வேகவைத்த நூடுல்ஸ் - 60 கிராம்

 • ஸ்வீட் கார்ன் - 40 கிராம்

 • பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 20 கிராம்

 • செஸ்வான் சாஸ் - ஒரு டீஸ்பூன்

 • நறுக்கிய வெங்காயத்தாள் - 10 கிராம்

 • பனீர் - 25 கிராம்

 • வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • குடமிளகாய் (நறுக்கியது) - 15 கிராம்

 • முட்டைகோஸ் - 15 கிராம்

 • சில்லி சாஸ் - 10 மில்லி

 • தக்காளி சாஸ் - 10 மில்லி

 • சீஸ் - 20 கிராம்

அமெரிக்கன் சொப்சே தோசை
அமெரிக்கன் சொப்சே தோசை

செய்முறை:

தோசைக்கல்லில் 2 கரண்டி மாவைவிட்டு தேய்த்து, தோசை மேல் வெண்ணெய்விட்டு அது உருகியவுடன் நறுக்கிய வெங்காயம், ஸ்வீட் கார்ன், வேகவைத்த நூடுல்ஸ், நறுக்கிய வெங்காயத்தாள், துருவிய முட்டைகோஸ், துருவிய பனீர் சேர்க்கவும். பின்னர் அதில் நறுக்கிய குடமிளகாய் மற்றும் சில்லி சாஸ், தக்காளி சாஸ், செஸ்வான் சாஸ் சேர்த்து நன்றாகக் கிளறி, தோசையின் மேல் சீஸைத் துருவிவிட்டு, தோசையை எடுத்து தட்டில் வைத்தால், அமெரிக்கன் சொப்சே தோசை தயார்.

மசாலா தோசையும் கர்நாடகா வரவுதான். இது துளுவ மங்களூர் பகுதியிலிருந்து உலகெங்கும் பரவியது.

பாஸ்தா தோசை

தேவையானவை:

 • சிறுதானிய தோசை மாவு - 2 கரண்டி

 • வேகவைத்த பாஸ்தா - 60 கிராம்

 • பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 20 கிராம்

 • மயோனைஸ் - 2 டீஸ்பூன்

 • ஃப்ரெஷ் க்ரீம் - 100 மில்லி

 • பீட்சா சாஸ் - அரை டீஸ்பூன்

 • சீஸ் - 20 கிராம்

 • வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • ரெட் சட்னி - அரை கரண்டி

பாஸ்தா தோசை
பாஸ்தா தோசை

செய்முறை:

தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி மெல்லியதாகத் தேய்த்துக்கொள்ளவும். பின்னர் தோசையின் மேல் வெண்ணெய் சேர்த்து, அது உருகிய உடன் நறுக்கிவைத்த வெங்காயத்தைப் போடவும். அதைத் தொடர்ந்து மயோனைஸ், பீட்சா சாஸ், வேகவைத்த பாஸ்தாவைப் போடவும். பாஸ்தா மேல் ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் ரெட் சட்னி போட்டுக் கிளறி, தோசையின் மேல் சீஸை துருவி விட்டு, அடுப்பிலிருந்து எடுத்து தட்டில்வைத்தால், சுவையான பாஸ்தா தோசை தயார்.

செங்கோட்டையில் செய்யப்படும் தோசைக்கல் பிரசித்திபெற்றது. ரங்கம் கோயில் பிராகாரக் கடைகளில் விற்கப்படும் தோசைக்கல்லும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பாவ் பாஜி தோசை

தேவையானவை:

 • சிறுதானிய தோசை மாவு - 2 கரண்டி

 • குடமிளகாய் (நறுக்கியது) - 25 கிராம்

 • பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 20 கிராம்

 • காலிஃப்ளவர் (வேகவைத்தது) - 30 கிராம்

 • உருளைக்கிழங்கு மசாலா - 5 டீஸ்பூன்

 • கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்

 • வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • ரெட் சட்னி - ஒரு கரண்டி

 • சீஸ் - 100 கிராம்

 • செஸ்வான் சாஸ் - ஒரு டீஸ்பூன்

பாவ் பாஜி தோசை
பாவ் பாஜி தோசை

செய்முறை:

தோசைக்கல்லில் 2 கரண்டி மாவை விட்டு நன்றாகத் தேய்த்துக்கொள்ளவும். பின்னர் நறுக்கிவைத்த வெங்காயம், குடமிளகாய், வேகவைத்த காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு மசாலா முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றை சேர்த்து கரண்டி மூலம் நன்றாகக் கிளறி விட்டு பின் அதில் கரம் மசாலாத்தூள், ரெட் சட்னி, செஸ்வான் சாஸ் சேர்த்து நன்றாகக் கிளறிய பின் தோசை மேல் சீஸைத் துருவி விட்டு, கடைசியாக வெண்ணெய் போட்டு, தட்டில் தோசையின் மேல் உள்ள கிரேவியைத் தனியாகவும் தோசையைத் தனியாகவும் வைத்தால், பாவ் பாஜி தோசை பரிமாறத் தயார்.

வார்ப்பு இரும்பு, அலுமினியம் ஆகியவற்றில் வட்டமாகவோ, குழியாகவோ (வாணலி மாதிரி) பாரம்பர்ய தோசைக்கல் செய்யப்படுகிறது.

ட்ரைபாடு தோசை

தேவையானவை:

 • சிறுதானிய தோசை மாவு - 2 கரண்டி

 • ஸ்வீட் கார்ன் - 40 கிராம்

 • வேகவைத்த பச்சைப்பட்டாணி - 40 கிராம்

 • பனீர் - 30 கிராம்

 • முட்டைகோஸ் - 15 கிராம்

 • பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 20 கிராம்

 • வெங்காயத்தாள் (நறுக்கியது) - 10 கிராம்

 • சீஸ் - 20 கிராம்

 • ரெட் சட்னி - ஒரு கரண்டி

 • வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • செஸ்வான் சாஸ் - ஒரு டீஸ்பூன்

ட்ரைபாடு தோசை
ட்ரைபாடு தோசை

செய்முறை:

தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தேய்த்துக்கொள்ளவும். பின்னர் தோசை மேல் நறுக்கிவைத்த வெங்காயம் போட்டு, அதன் மேல் வெண்ணெய் சேர்த்து, அது உருகிய உடன் ஸ்வீட் கார்ன், பச்சைப் பட்டாணி, துருவிய முட்டைகோஸ், துருவிய பனீர், வெங்காயத்தாள் மற்றும் துருவிய சீஸ் முதலியவற்றை சேர்க்கவும். கடைசியாக செஸ்வான் சாஸ் மற்றும் ரெட் சட்னி போட்டுக் கிளறி, தோசையின் மேல் சீஸைத் துருவி விட்டு, வெண்ணெய் சேர்த்து பின்னர் தோசையை நீளவாக்கில் மூன்றாக நறுக்கி, தட்டில் ரோல் செய்து வைத்தால் ட்ரைபாடு தோசை தயார்.

வெந்தயம் சிறிது சேர்த்து அரைத்து வார்க்கப்படும் `வெந்தய தோசை’ சாஃப்டாக புள்ளி புள்ளியாகச் சிறு குழிகளுடன் மெத்தென இருக்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

ஜீனி தோசை

தேவையானவை:

 • சிறுதானிய தோசை மாவு - 2 கரண்டி

 • சீஸ் - 100 கிராம்

 • குடமிளகாய் (நறுக்கியது) - 30 கிராம்

 • பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 50 கிராம்

 • வெங்காயத்தாள் (நறுக்கியது) - 10 கிராம்

 • மயோனைஸ் - ஒரு டீஸ்பூன்

 • செஸ்வான் சாஸ் - ஒரு டீஸ்பூன்

 • வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 • செர்ரி பழம் - ஒன்று

 • ரெட் சட்னி - அரை கரண்டி

 • தக்காளி சாஸ் - 10 மில்லி

 • சில்லி சாஸ் - 10 மில்லி

ஜீனி தோசை
ஜீனி தோசை

செய்முறை:

தோசைக்கல்லில் 2 கரண்டி மாவை ஊற்றி அதில் நறுக்கிவைத்த வெங்காயம், குடமிளகாய், வெங்காயத்தாள் முதலியவற்றைப் போட்டு பின்னர் அதில் துருவிய சீஸ், மயோனைஸ், செஸ்வான் சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ் மற்றும் வெண்ணெய் போட்டு கடைசியாக ரெட் சட்னி போட்டுக் கிளறி தோசை மேல் கொஞ்சம் சீஸ் துருவிவிட்டு நடுவில் ஒரு செர்ரி பழத்தை வைத்து எடுத்து தட்டில் வைத்தால் ஜீனி தோசை தயார்.

ஆரோக்கிய தோசை வரிசையில் இப்போது சிறுதானிய தோசை, பனீர் தோசை, காளான் தோசை, முடக்கத்தான் இலை தோசை, முருங்கை இலை தோசை ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.

லேஸ் மயோ சீஸ் தோசை

தேவையானவை:

 • சிறுதானிய தோசை மாவு - 2 கரண்டி

 • துருவிய சீஸ் - 200 கிராம்

 • குடமிளகாய் (நறுக்கியது) - 20 கிராம்

 • பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 25 கிராம்

 • மயோனைஸ் - 4 டீஸ்பூன்

 • வெங்காயத்தாள் (நறுக்கியது) - 10 கிராம்

 • லேஸ் சிப்ஸ் - 50 கிராம்

 • சில்லி சாஸ் - 10 மில்லி

 • தக்காளி சாஸ் - 10 மில்லி

 • செஸ்வான் சாஸ் - ஒரு டீஸ்பூன்

 • ரெட் சட்னி - ஒரு கரண்டி

 • வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

லேஸ் மயோ சீஸ் தோசை
லேஸ் மயோ சீஸ் தோசை

செய்முறை:

தோசைக்கல்லில் 2 கரண்டி மாவை விட்டு நன்றாகத் தேய்த்துக்கொள்ளவும். பின்னர் வெண்ணெயைத் தோசையில் போட்டு அது உருகிய உடன் நறுக்கிவைத்த வெங்காயம், குடமிளகாய் மற்றும் வெங்காயத்தாள் சேர்க்கவும். அதைத் தொடர்ந்து துருவிய சீஸ், மயோனைஸ், செஸ்வான் சாஸ், சில்லி சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து நன்றாகக் கிளறிவிடவும். பின்னர் கடைசியாக தோசை மீது ரெட் சட்னி சேர்த்துக் கிளறி லேஸ் சிப்ஸ் போட்டு தோசை மேல் கொஞ்சம் சீஸ் துருவி விட்டு இறக்கி தட்டில் வைத்தால், சுவையான லேஸ் மயோ சீஸ் தோசை ரெடி.

அவசரத்துக்கு வீட்டில் செய்யப்படும் `திடீர்’ தோசையே கரைத்த மாவு தோசை... அரிசி மாவு, கோதுமை மாவு, ஊறிய ரவை ஆகியவற்றை நீரில் கரைத்து, உப்பு, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து, தோசைக்கல்லில் ஊற்றிச் செய்வதுதான் இதன் ரெசிப்பி. ஆங்காங்கே பொத்தல்களும், ஓரங்கள் நன்கு மொறுமொறுவென்றும் இருப்பதும் இதன் சிறப்பு.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு