Published:Updated:

இலங்கை உணவுகள்!

இலங்கை உணவுகள்
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை உணவுகள்

இது சற்றே மாறுபட்ட சுவை!

இலங்கை உணவுகள்!

இது சற்றே மாறுபட்ட சுவை!

Published:Updated:
இலங்கை உணவுகள்
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை உணவுகள்

``அழகான இலங்கைத் தீவில் புகழ் பெற்ற கோயில்களும் கடற்கரைகளும் நிறைந்திருந்தாலும் அங்கு பேசப்படும் இலங்கைத் தமிழும் தனி அழகுதான். அங்குள்ள நிறைய உணவகங்கள் நம்மூரைப் போலவே பல்வேறு சுவையான உணவுகளை, சில வித்தியாசமான பெயர் களுடன் சற்றே மாறுபட்ட சுவையில் வழங்குகின்றன. வீடுகளிலும் விருந்தினர் வருகையின்போதும் பண்டிகைகளின் போதும் பாரம்பர்ய உணவுகளையும் விசேஷமான சில உணவுகளையும் செய்து பரிமாறுகின்றனர்’’ என்கிறார் சமையற்கலைஞர் எஸ்.ராஜகுமாரி.

எஸ்.ராஜகுமாரி
எஸ்.ராஜகுமாரி

`சபாஷ்’ போடவைக்கும் ருசியில் அவர் வழங்கும் இலங்கை உணவு வகைகள் இங்கே இடம்பெறுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரைட் ஸ்பைஸி முருங்கைக்காய் கறி

தேவையானவை:

  • துண்டுகளாக்கிய முருங்கைக்காய் - 2 கப்

  • புளிக்கரைசல் - அரை கப்

  • குழம்புப்பொடி - 3 டேபிள்ஸ்பூன்

  • தேங்காய்ப்பால் - ஒரு கப்

  • பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

  • பூண்டு - 6 பல் (நறுக்கவும்)

  • தக்காளி - ஒன்று (நறுக்கவும்)

  • கடுகு - ஒரு டீஸ்பூன்

  • சீரகம் - அரை டீஸ்பூன்

  • சோம்பு - அரை டீஸ்பூன்

  • வெந்தயம் - கால் டீஸ்பூன்

  • கறிவேப்பிலை - 10 இதழ்கள்

  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

பிரைட் ஸ்பைஸி முருங்கைக்காய் கறி
பிரைட் ஸ்பைஸி முருங்கைக்காய் கறி

செய்முறை:

துண்டுகளாக்கிய முருங்கைக்காயை நடுவில் இரண்டாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய முருங்கைக்காயைப் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல் ஊற்றி உப்பு, குழம்புப்பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். எல்லாமாகச் சேர்ந்து கொதித்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்துள்ள முருங்கைக்காய் துண்டுகளைச் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கி எல்லாவற்றையும் நன்கு கலந்துவிடவும். இது சாதத்தில் வைத்து சாப்பிடவும், புட்டுக்குத் தொட்டு சாப்பிடவும் ஏற்றது.

முருங்கைக்காயில் நார்ச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன.

வெங்காயச் சம்பல்

தேவையானவை:

  • மெலிதாக நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒரு கப்

  • சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

  • மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்

  • கறிவேப்பிலை - 10 இதழ்கள்

  • எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

வெங்காயச் சம்பல்
வெங்காயச் சம்பல்

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயத்தை வதக்கி உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு மூடியைத் திறந்து கிளறிவிட்டு சில்லி ஃப்ளேக்ஸ், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி விடவும். கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி அடுப்பை அணைத்து எலுமிச்சைச்சாறு கலந்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும். வெங்காயச் சம்பல் தயார். சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றுக்குத் தொட்டுச் சாப்பிடலாம். பால் சாதத்துக்குத் தொட்டுச் சாப்பிடவும் ஏற்றது.

பாக்டீரியாவை அழிக்கும் தன்மை வெங்காயத்துக்கு உண்டு என அறியப்பட்டுள்ளது.

கத்திரிக்காய் மொஜ்ஜு

தேவையானவை:

  • பெரிய கத்திரிக்காய் - 2

  • பச்சை மிளகாய் - 3

  • புளி பேஸ்ட் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

  • தேங்காய்ப்பால் - ஒரு கப்

  • முந்திரித் துண்டுகள் - 6

  • கடுகு - ஒரு டீஸ்பூன்

  • இஞ்சி - சிறிய துண்டு

  • பூண்டு - 4 பல்

  • சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

  • வினிகர் - ஒரு டீஸ்பூன்

  • ஏலக்காய் - ஒன்று

  • பட்டை - ஒரு சிறிய துண்டு

  • மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

  • சாம்பார் வெங்காயம் - 8 (தோலுரிக்கவும்)

  • பெரிய வெங்காயம் - பாதியளவு (நறுக்கவும்)

  • எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு + ஒரு டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

கத்திரிக்காய் மொஜ்ஜு
கத்திரிக்காய் மொஜ்ஜு

செய்முறை:

கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நீர் விடாமல் கலக்கவும். எண்ணெயைக் காயவைத்து, கத்திரிக்காயைப் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். அதே எண்ணெயில் பெரிய, சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் மூன்றையும் பொரித்துத் தனியே வைக்கவும். கடுகு, பூண்டு, இஞ்சி மூன்றையும் நீர்விடாமல் நசுக்கிவைக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு ஏலக்காய், பட்டை, முந்திரித் துண்டுகளை வதக்கி, நசுக்கி வைத்துள்ளவற்றைச் சேர்த்துக் கிளறி, பொரித்து வைத்துள்ள கத்திரிக்காய், வெங்காயங்கள், பச்சை மிளகாய் சேர்க்கவும். இதனுடன் புளி பேஸ்ட், மிளகாய்த்தூள் சேர்த்து எல்லாமாகச் சேர்த்து வரும்போது வினிகர் சேர்த்து, தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதிவந்ததும் சர்க்கரை சேர்த்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும். இது சாதத்தில் வைத்து சாப்பிட ஏற்றது.

எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வாரம் மூன்று முறை உணவில் கத்திரிக்காய் சேர்ப்பது நல்லது.

தால் கறி

தேவையானவை:

  • மைசூர் பருப்பு - அரை கப்

  • தேங்காய்ப்பால் - ஒரு கப்

  • தக்காளி - 2

  • பெரிய வெங்காயம் - ஒன்று

  • மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

  • நெய் - ஒரு டீஸ்பூன்

  • சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 2

  • கடுகு - ஒரு டீஸ்பூன்

  • சீரகம் - அரை ஸ்பூன்

  • வெந்தயம் - கால் டீஸ்பூன்

  • பட்டை - சிறிய துண்டு

  • காய்ந்த மிளகாய் - ஒன்று

  • எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

தால் கறி
தால் கறி

செய்முறை:

மைசூர் பருப்பை நீர்விட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு உப்பு, சிறிதளவு மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். வாணலியில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி இரண்டையும் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து வதக்கித் தனியே வைக்கவும். வெந்த பருப்பில் தேங்காய்ப்பாலையும் சேர்த்துக் கலந்துவிடவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், பட்டை சேர்த்து வதக்கி, சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து, தேங்காய்ப்பால் கலந்த பருப்பைச் சேர்த்துக் கொதிக்கவிடவும் இதனுடன் வதக்கிய தக்காளி, வெங்காயத்தைச் சேர்த்து மீண்டும் இரண்டு கொதிவிட்டு நெய் சேர்த்து இறக்கவும். இது சாதத்தில் வைத்து சாப்பிட ஏற்றது.

சீனா, அமெரிக்கா, இந்தியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகள் தக்காளி உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.

காஹா பாத்

தேவையானவை:

  • பச்சரிசி - 2 கப்

  • தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்

  • பட்டை - 3 சிறிய துண்டு

  • கிராம்பு - 3

  • சீரகம் - ஒரு டீஸ்பூன்

  • ஏலக்காய் - ஒன்று

  • மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

  • பெரிய வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)

  • மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

  • கறிவேப்பிலை - 6 இதழ்கள்

  • முந்திரி, உலர்திராட்சை - தலா 3 டீஸ்பூன்

  • வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • எண்ணெய் - 8 டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

காஹா பாத்
காஹா பாத்

செய்முறை:

வாணலியில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, சீரகம், ஏலக்காய் தாளிக்கவும். இதில் மல்லித்தூள், உப்பு சேர்த்து அரிசியைக் கழுவி அதில் சேர்க்கவும். இதனுடன் தேங்காய்ப்பால், ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கி மஞ்சள்தூளையும் சேர்த்து மூடிவைக்கவும். இடையிடையே திறந்து கிளறிவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். முந்திரி, திராட்சையையும் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து இறக்கவும். வெந்த சாதத்தை எடுத்து அதன் மேலே வறுத்து வைத்தவற்றை பரவலாகச் சேர்க்கவும்.

குறிப்பு: உருளைக்கிழங்குக் கறி, வெள்ளரி சாலட் ஆகியவற்றுடன் சேர்த்து இந்த சாதத்தைச் சுவைக்கவும்.

கிராம்பு இந்தோனேசியாவில் தோன்றியது.

வெள்ளரி தேங்காய்ப்பால் சாலட்

தேவையானவை:

  • வெள்ளரி - 2

  • தக்காளி - ஒன்று

  • பெரிய வெங்காயம் - ஒன்று

  • பச்சை மிளகாய் - 2

  • எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

  • மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • தேங்காய்ப்பால் - 6 டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

வெள்ளரி தேங்காய்ப்பால் சாலட்
வெள்ளரி தேங்காய்ப்பால் சாலட்

செய்முறை:

வெள்ளரியை நடுவில் வெட்டி, துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு நீரை வடிகட்டிவிட்டு ஒரு பாத்திரத்தில் வெள்ளரி, பொடியாக நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்துவிடவும். வெள்ளரி தேங்காய்ப்பால் சாலட் தயார்.

குறிப்பு: விருப்பப்பட்டால் அன்னாசிப்பழத் துண்டுகளையும் சேர்க்கலாம்.

சீனா, இரான், துருக்கி, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் வெள்ளரி உற்பத்தியில் முதன்மை நாடுகளாக விளங்குகின்றன.

பேல் ரொட்டி

தேவையானவை:

  • மைதா மாவு - ஒரு கப்

  • தேங்காய்த் துருவல் - அரை கப்

  • உப்பு - தேவைக்கேற்ப,

  • எண்ணெய் - 8 டேபிள்ஸ்பூன்

பேல் ரொட்டி
பேல் ரொட்டி

செய்முறை:

மைதாவை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து, நீர்விட்டு சப்பாத்தி மாவைவிடச் சற்றுத் தளர்த்தியாகப் பிசைந்து, 20 நிமிடங்கள் மூடிவைக்கவும். பிறகு மாவை எடுத்து உருட்டி சப்பாத்தியைவிடச் சற்று கனமாகப் போட்டு ஓரங்களில் சிறிதளவு எண்ணெய்விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு: இந்த ரொட்டியைச் சம்பல் தொட்டுச் சுவைக்கவும்.

மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மைதா உணவாக உட்கொள்ளப்படுகிறது.

மார்ஸிபேன் ஸ்டஃப்டு டேட்ஸ்

தேவையானவை:

  • பேரீச்சை - 20

  • பாதாம் பவுடர் - ஒரு கப்

  • பவுடர் சுகர் - அரை கப்

  • ரோஸ் வாட்டர் - 4 டேபிள்ஸ்பூன்

  • விருப்பமான ஃபுட் கலர் - ஒரு டீஸ்பூன்

மார்ஸிபேன் ஸ்டஃப்டு டேட்ஸ்
மார்ஸிபேன் ஸ்டஃப்டு டேட்ஸ்

செய்முறை:

பேரீச்சையை முழுவதுமாக நறுக்காமல் நடுவில் கீறி விதையை நீக்கவும். ஒரு பாத்திரத்தில் பாதாம் பவுடர், பவுடர் சுகர் இரண்டையும் போடவும் (பாதாம் பருப்பின் தோலை சுரண்டிவிட்டு மிக்ஸியில் சுற்றினால் பாதாம் பவுடர் தயார். சர்க்கரையை மிக்ஸியில் சுற்றினால் பவுடர் சுகர் தயார்). இதில் ரோஸ் வாட்டர் ஊற்றி விருப்பமான ஃபுட் கலர் சேர்த்து `விஸ்க்’கால் நன்றாக அடிக்கவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் (கைகளால் உருட்டும் பதம்) விதை நீக்கிய பேரீச்சையின் உட்புறம் வைக்கவும். எல்லா பேரீச்சைகளிலும் இதே போல் செய்யவும்.

குறிப்பு: பண்டிகை மற்றும் விருந்தின்போது இலங்கையில் இதைச் செய்வது வழக்கம்.

பேரீச்சையின் ஒவ்வொரு பழமும் அதன் அளவையும் வகையையும் பொறுத்து 20-70 கலோரி ஆற்றலை அளிக்கின்றன.

மில்க் டோஃபி

தேவையானவை:

  • கண்டன்ஸ்டு மில்க் - ஒன்றரை கப்

  • சர்க்கரை - ஒரு கப்

  • வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

  • வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

  • உடைத்த முந்திரித் துண்டுகள் - 4 டேபிள்ஸ்பூன்

  • நெய் - 2 டீஸ்பூன்

மில்க் டோஃபி
மில்க் டோஃபி

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் கண்டன்ஸ்டு மில்க், சர்க்கரை, ஒரு கப் தண்ணீர், வெண்ணெய் நான்கையும் சேர்த்து அடுப்பிலேற்றி, அடுப்பை சிம்மில் வைத்து, கைவிடாமல் கிளறவும். கெட்டி பட்டதும் முந்திரித் துண்டுகள், வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கிளறி கைகளில் உருட்டும் பதம் வந்ததும் 2 ஸ்பூன் நெய்யை ஒரு தட்டில் பரவலாகத் தடவி, அதில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால் ஒரு டீஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடரை சிறிது நீரில் கரைத்து வெனிலா எசென்ஸ் ஊற்றுவதற்கு முன்பே அதில் ஊற்றி, பிறகு எசென்ஸ், முந்திரித் துண்டுகள் சேர்த்துக் கிளறி இறக்கி, தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

கரும்பு மற்றும் பீட்ரூட்டில்தான் இலகுவாகப் பிரித்தெடுக்கக்கூடிய சர்க்கரை வகை காணப்படுகிறது.

ஸ்ரீ லங்கன் போண்டா

தேவையானவை

ஸ்டஃபிங் செய்வதற்கு:

  • வேகவைத்து ஒன்றிரண்டாக மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப்

  • நறுக்கிய வெங்காயம் - அரை கப்

  • சீரகம் - ஒரு டீஸ்பூன்

  • சோம்பு - அரை டீஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)

  • சில்லி ஃப்ளேக்ஸ் - 2 டீஸ்பூன்

  • கறிவேப்பிலை - 8 இதழ்கள்

  • எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

  • தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

மேல் மாவுக்கு:

  • கடலை மாவு - அரை கப்

  • மைதா மாவு - கால் கப்

  • அரிசி மாவு - 5 டேபிள்ஸ்பூன்

  • சீரகம், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்

  • நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்

  • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

  • பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்

  • கரம் மசாலாத்தூள், பெருங்காயத்தூள்,

  • உப்பு - சிறிதளவு

  • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

ஸ்ரீ
 லங்கன் போண்டா
ஸ்ரீ லங்கன் போண்டா

செய்முறை:

வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, சில்லிஃப்ளேக்ஸ், உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் வேக வைத்து ஒன்றிரண்டாக மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறி, எலுமிச்சைச்சாறு சேர்த்து இறக்கவும். ஸ்டஃபிங் தயார். அடிகனமான வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். ஒரு பாத்திரத்தில் மேல்மாவுக்குக் கொடுத்த அனைத்தையும் சேர்த்து நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். தயாரித்து வைத்துள்ள ஸ்டஃபிங்கை உருண்டைகளாக உருட்டி, கரைத்த மாவில் முக்கியெடுத்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

உருளையானது பல்லாண்டுக்காலம் வாழ்கின்ற பூண்டு வகைத் தாவரம்.