Published:Updated:

சுவையும் மணமும் கொண்ட சூப்பர் குழம்புகள் - இது சிவகாசி சிறப்பு

குழம்புகள்
பிரீமியம் ஸ்டோரி
News
குழம்புகள்

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: மணிமேகலை-ஷீத்தல்

தாயும் மகளும் சேர்ந்து ஆக்க பூர்வமான செயலைச் செய்ய முடியும் என நிரூபித்துள்ளனர் Sivakasi Samayal என்ற முகநூல் மற்றும் யூடியூப் சேனலை நிர்வகிக்கும் மணிமேகலை மற்றும் ஷீத்தல்.

சுவையும் மணமும் கொண்ட
சூப்பர் குழம்புகள் - இது சிவகாசி சிறப்பு

``2012-ம் ஆண்டு, அமெரிக்கா வில் வசிக்கும் என் மருமகளுக்கு `ஸ்கைப்’ மூலம் சில சமையற் குறிப்புகளைச் சொல்வது வழக்கம். அதன் தொடர்ச்சியாக முகநூல் மற்றும் யூடியூப் சேனலை என் மகள் ஷீத்தலின் உதவியுடன் தொடங்கினேன். நம் பாரம்பர்ய சமையலை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் எண்ணத்தில் தொடங்கிய எங்கள் பயணம் இன்று மேலைநாட்டுச் சமையல் வரை வளர்ந்துள்ளது. அதோடு, கல்லூரி மாணவிகளுக்குச் சமையற்கலை வொர்க்‌ஷாப்களை நடத்துகிறோம்’’ என்கிறார் மணிமேகலை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சுவையும் மணமும் கொண்ட
சூப்பர் குழம்புகள் - இது சிவகாசி சிறப்பு

``நம் முன்னோர் பயன்படுத்திய ரெசிப்பிகளை அதே கைப்பக்குவத் தில் சமைத்தால் அதன் சுவை உலகையே வசியம் செய்யும். இது தான் எங்கள் வெற்றியின் ரகசியம்’’ என்கிறார்கள் தாயும் மகளும். அவர்கள் வழங்கும் ருசிமிக்க குழம்பு ரெசிப்பிகள் இங்கே இடம் பெறுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சோயா பீன்ஸ் குழம்பு

தேவையானவை:

 • சோயா பீன்ஸ் (உரித்தது) - கால் கிலோ

 • உருளைக்கிழங்கு - ஒன்று

 • தக்காளி - ஒன்று

 • வெங்காயம் - ஒன்று

 • தேங்காய் (துருவியது) - 2 டீஸ்பூன்

 • குழம்பு மசாலாப்பொடி - 2 டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - சிறிதளவு

 • கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 • உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

 • எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

 • கடுகு - சிறிதளவு

 • உளுத்தம்பருப்பு - சிறிதளவு

சுவையும் மணமும் கொண்ட
சூப்பர் குழம்புகள் - இது சிவகாசி சிறப்பு

செய்முறை:

தேங்காயுடன், குழம்பு மசாலாப் பொடி, நறுக்கிய தக்காளி சேர்த்து, நைஸாக அரைத்துவைத்துக்கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து, சோயா பீன்ஸைப் போட்டு, மூன்று விசில்வரும் வரை வேகவைக்கவும். வெந்த சோயா பீன்ஸை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். கடுகு வெடித்ததும், நறுக்கிய வெங்காயத்தையும் கறிவேப்பிலையையும் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் நன்கு வதங்கி வாசனை வரும்போது, தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கைப் போட்டு வதக்கவும்.

இவை வதங்கி வரும்போது, மஞ்சள் தூள், உப்பைச் சேர்த்து வதக்கவும். உருளைக்கிழங்கு கண்ணாடியாக மின்னும் நேரத்தில், அரைத்த தேங்காய் - மசாலா விழுதைச் சேர்த்து, ஒரு புரட்டு புரட்டி, வேகவைத்த சோயா பீன்ஸை அதில் இருக்கும் நீரோடு ஊற்றவும். கரண்டியை விட்டு கிளறிப் பார்க்கும்போது குழம்பு எவ்வளவு நீர்க்க இருக்கிறது என்பது தெரிந்துவிடும். அப்போது குக்கரை மூடி, வெயிட் போட்டு, இரண்டு விசில் வரும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும். குக்கரைத் திறக்கும்போது குழம்பு தேவையான அளவு, ‘கிரேவி’யாக இருக்கிறதா, இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றலாமா என்று பார்த்து, உங்கள் தேவைக்கேற்ப, தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். கடைசியில், நறுக்கிய கொத்தமல்லித்தழையைச் சேர்க்கவும்.

குறிப்பு:

இது சாதத்துக்கு மட்டுமல்ல... இட்லி, தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். உருளைக்கிழங்குக்குப் பதிலாக, சின்னச் சின்ன காலிஃப்ளவர் மொட்டுகளையும் சேர்த்துச் சமைக்கலாம்.

சோயா பீன்ஸ் குழம்பு, நான்-வெஜ் சாப்பிடுபவர் களுக்கு அதன் சுவையை நினைவூட்டும் அருமை யான வெஜ் சமையல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சோயா மீல்மேக்கர் குழம்பு

தேவையானவை:

 • மீல்மேக்கர் - முக்கால் கப்

 • எண்ணெய் - தேவையான அளவு

 • தாளித்து அரைக்க:

 • சீரகம் - அரை டீஸ்பூன்

 • பட்டை - ஒரு சிறு துண்டு

 • கிராம்பு - 2

 • ஏலக்காய் - ஒன்று

 • கல்பாசி - சிறிதளவு

 • மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டேபிள்ஸ்பூன்

 • மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

 • வெங்காயம் - ஒன்று (நடுத்தரமானது)

 • தக்காளி - ஒன்று

 • பச்சை மிளகாய் - 2

 • இஞ்சி - சிறிதளவு

 • கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள் - சிறிதளவு

 • பூண்டு - 3 பல்

 • தேங்காய் (துருவியது) - கால் கப்

 • முந்திரிப்பருப்பு - 4

 • உப்பு - தேவையான அளவு

சுவையும் மணமும் கொண்ட
சூப்பர் குழம்புகள் - இது சிவகாசி சிறப்பு

செய்முறை:

நீரை நன்கு சுடவைத்து, மீல் மேக்கரை அதில் போட்டு, ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். ஊறியதும், மீல்மேக்கரை நன்கு பிழிந்து, சிறு சிறு துண்டுகளாக உதிர்த்துக்கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெயை ஊற்றி, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி ஆகியவற்றைப் போட்டு வாசனை வரும் வரை வதக்கவும். பின்னர், அதில் நறுக்கிவைத்த வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பின்னர், பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கி, அதன் பிறகு இஞ்சி, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், துருவி வைத்த தேங்காயையும் முந்திரிப் பருப்பையும் சேர்த்து, பிறகு மிளகாய்த்தூளையும் மல்லித்தூளையும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். அடுப்பை அணைத்து இந்த மசாலா பொருள்களை ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து, விழுதாக்கிக்கொள்ளவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, தேவை யான அளவு எண்ணெயை ஊற்றிக் காயவிட்டு, பிழிந்து உதிர்த்துவைத்துள்ள, மீல்மேக்கரையும் கறிவேப்பிலையையும் போட்டு லேசாக வதக்கவும். பின்னர், அரைத்து வைத்த மசாலா கலவையை இதனுடன் சேர்த்து, சிறிதளவு மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். எண்ணெய் பிரியும் நேரத்தில், சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு குழம்பு பதம் வரும் வரை கொதிக்கவிடவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையைப் போட்டு, குழம்பை இறக்கவும். ஆரோக்கியமான, சுவையான மீல்மேக்கர் குழம்பு தயார்.

குறிப்பு:

மீல்மேக்கரை உதிர்க்காமல், முழுதாகவும் பயன் படுத்தலாம்.

இது இட்லி, தோசை, சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள அருமையான குழம்பு.

தட்டைப்பயறு குழம்பு

தேவையானவை:

 • தட்டைப்பயறு (சிவப்பு காராமணி) - 100 கிராம்

 • வெங்காயம் - ஒன்று

 • தக்காளி (பெரியது) - ஒன்று

 • கத்திரிக்காய் (இளசாக) - 3

 • முருங்கைக்காய் - ஒன்று

 • பூண்டு - 2 பல்

 • கறிவேப்பிலை - சிறிதளவு

 • புளி - கொட்டைப்பாக்கு அளவு

 • மஞ்சள்தூள் - சிறிதளவு

 • பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

 • கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 • உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு:

 • தேங்காய் (துருவியது) - 2 டேபிள்ஸ்பூன்

 • குழம்பு மசாலாப்பொடி - 2 டீஸ்பூன்

 • பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

 • எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

 • கடுகு - சிறிதளவு

 • உளுத்தம்பருப்பு - சிறிதளவு

சுவையும் மணமும் கொண்ட
சூப்பர் குழம்புகள் - இது சிவகாசி சிறப்பு

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்துக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து, சூடானதும் தட்டைப் பயற்றை குக்கரில் போட்டு, எண்ணெய் ஊற்றாமல், வாசனை வரும் வரை வறுக்கவும். சிவக்க வறுபட்டதும், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, வேகவைக்கவும். ஐந்து விசில் வந்தவுடன், திறந்து பார்த்தால், உடையாமல் வெந்து இருக்கும்.

ஒரு பாத்திரத்தில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி, கடுகைப் போட்டு அது வெடித்ததும் உளுத்தம் பருப்பைப் போட்டு, அதன் பிறகு வெங்காயத்தையும் பூண்டுப் பல்லையும் போட்டு வதக்கவும். பின்பு கறிவேப்பிலையைச் சேர்த்து, நறுக்கிவைத்த கத்திரிக்காய், முருங்கைக்காய், தக்காளி சேர்த்து வதக்கவும். இந்தக் காய்கள் எண்ணெயில் கலந்து வதங்க ஆரம்பித்ததும், வேகவைத்த தட்டைப் பயற்றில் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு அரைத்து வைத்த மசாலா விழுதையும், தேவையான அளவு உப்பையும் மஞ்சள்தூளையும் சேர்த்துவிடவும். பின்பு, கரைத்துவைத்த புளிக்கரைசலை இதனுடன் சேர்த்து, பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரை மூடவும். இரண்டு விசில் வந்தவுடன் திறந்து பார்க்கவும். நாம் ஊற்றிச் சாப்பிடும் அளவு குழம்பு தளர இருந்தால், கொத்தமல்லித்தழையைக் கிள்ளிப் போட்டுப் பரிமாறவும். இன்னும் கொஞ்சம் குழம்பு தேவையானால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும்.

குறிப்பு :

சாதத்துக்கேற்ற பாரம்பர்யமான குழம்பு இது. பழைய சாதத்துக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

தட்டைப்பயறு குழம்பு வைக்கும்போது, அரைக்கீரைக் கடையலும் தேங்காய்த் துவையலும் அப்பளப்பூ என்று சொல்லக்கூடிய சுருள் அப்பளமும் செய்து சாப்பிட, மணமும் சுவையும் ஊரையே கூட்டும்.

பக்கோடா குழம்பு

தேவையானவை:

 • பக்கோடா - ஒரு கப்

 • தேங்காய்ப்பால் - ஒரு கப்

 • தக்காளி - ஒன்று (விழுதாக அரைக்கவும்)

 • குழம்புப் பொடி - ஒரு டீஸ்பூன்

 • கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - சிறிதளவு

 • உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

 • எண்ணெய் - சிறிதளவு

 • பெருஞ்சீரகம் - சிறிதளவு

 • கிராம்பு - 2

 • பட்டை - ஒரு சிறிய துண்டு

 • வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

 • கறிவேப்பிலை, மஞ்சள்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

சுவையும் மணமும் கொண்ட
சூப்பர் குழம்புகள் - இது சிவகாசி சிறப்பு

செய்முறை:

ஒரு வாணலியைச் சூடாக்கவும். அதில் எண்ணெயை ஊற்றி, பெருஞ்சீரகம், கிராம்பு, சிறு துண்டு பட்டை சேர்க்கவும். லேசாக வறுபட்டவுடன், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடியாக வதங்கும்போது, குழம்புப் பொடி, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். இதனுடன் தக்காளி விழுதைச் சேர்த்து, தேவைக்கேற்ப உப்பையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். தக்காளி வெந்தவுடன், தேங்காய்ப்பாலையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். குழம்பு சேர்ந்து வரும்போது, கொத்தமல்லித்தழையையும் பக்கோடாவையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு, குழம்பு சேர்ந்து வந்தவுடன் இறக்கவும்.

குறிப்பு:

பக்கோடா பெரியதாக இருந்தால், சிறிய அளவாக உடைத்துக்கொள்ளவும்.

காலையில், இட்லி, தோசைக்கு தொட்டுச் சாப்பிடலாம். மதியம் சாதத்துக்கு ஊற்றிச் சாப்பிட லாம்.

பன்னீர் கோஃப்தா குழம்பு

தேவையானவை - கோஃப்தா செய்ய:

 • துருவிய பனீர் - அரை கப்

 • உருளைக்கிழங்கு (சிறியது) - ஒன்று (வேகவைக்கவும்)

 • துருவிய கேரட் - சிறிதளவு

 • கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 • மிளகாய்த்தூள் - சிறிதளவு

 • மஞ்சள்தூள் - சிறிதளவு

 • கடலை மாவு - ஒன்றேகால் டேபிள்ஸ்பூன்

 • சோள மாவு - சிறிதளவு

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

குழம்பு வைக்க:

 • பிரியாணி இலை - ஒன்று

 • சீரகம் - கால் டீஸ்பூன்

 • பட்டை - சிறு துண்டு

 • கிராம்பு - ஒன்று

 • வெங்காயம் - ஒன்று (விழுதாக அரைக்கவும்)

 • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 • தக்காளி - ஒன்று (அரைக்கவும்)

 • மஞ்சள்தூள் - சிறிதளவு

 • மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

 • சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

 • ஃப்ரெஷ் கிரீம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

 • கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

 • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

சுவையும் மணமும் கொண்ட
சூப்பர் குழம்புகள் - இது சிவகாசி சிறப்பு

செய்முறை:

துருவிய பன்னீருடன், வேகவைத்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அதில் கடலை மாவைக் கலந்து, நன்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். இந்த உருண்டைகளை சோள மாவில் உருட்டி, ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்கள் வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து, உருண்டைகளை வெளியில் எடுத்து, சோள மாவில் உருட்டி, மறுபடியும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

10 நிமிடங்கள் கழித்து எடுத்து, உருண்டைகளை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் சீரகம், பிரியாணி இலை, கிராம்பு, பட்டையைப் போட்டு, வாசனை வரும் வரை வதக்கவும். அதில் அரைத்த வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்றாக வாசனை வரும்போது, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியவுடன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில், அரைத்து வைத்த தக்காளியைச் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அதன் பிறகு, குழம்பில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து குழம்பு சேர்ந்து வரும்போது, ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து, வாசனைக்காக கரம் மசாலாத்தூள் சேர்த்து, சிறு தீயில் குழம்பைக் கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும். இந்தக் குழம்பை கோஃப்தா மீது ஊற்றிப் பரிமாறவும். இது நான், ரொட்டிக்கு சூப்பராக இருக்கும்.

குறிப்பு:

வாசனைக்காக நறுக்கி வைத்த கொத்த மல்லித்தழையையும் குழம்பில் போடலாம்.

கஸூரி மேத்தி என்று சொல்லப்படும் காய்ந்த வெந்தய இலைகளையும் சேர்க்கலாம்.

கோஃப்தாவில் முட்டைகோஸ், குடமிளகாய் இவற்றையும் சேர்க்கலாம்.

பனீர் டிக்கா மசாலா

தேவையானவை - பன்னீர் டிக்கா செய்ய:

 • பனீர் - 200 கிராம்

 • குடமிளகாய் - பாதியளவு

 • தயிர் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

 • வெங்காயம் - ஒன்று (சிறியது)

 • மஞ்சள்தூள் - சிறிதளவு

 • மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

 • உப்பு - சிறிதளவு

 • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

குழம்பு செய்ய:

 • வெங்காயம் - ஒன்றரை (நடுத்தரமானது)

 • தக்காளி - 2

 • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - சிறிதளவு

 • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்

 • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

 • கஸூரி மேத்தி (காய்ந்த வெந்தய இலைகள்) - சிறிதளவு

தாளிக்க:

 • எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 • பிரியாணி இலை - ஒன்று

 • பட்டை - ஒன்று துண்டு

 • கிராம்பு - ஒன்று

 • ஏலக்காய் - ஒன்று

 • சீரகம் - அரை டீஸ்பூன்

சுவையும் மணமும் கொண்ட
சூப்பர் குழம்புகள் - இது சிவகாசி சிறப்பு

செய்முறை:

முதலில் பனீரை சதுர வடிவில் நறுக்கிக்கொள்ளவும். குடமிளகாயையும், வெங்காயத்தையும் சதுரம் சதுரமாக நறுக்கிக்கொள்ளவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் தயிர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, கரம் மசாலாத்தூள், எண்ணெய் இவை எல்லாவற்றையும் போட்டு, பீட்டரால் (beater) நன்கு கலந்து விடவும். அதில் பனீர், குடமிளகாய், வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு, நன்கு கலந்துவிட்டு, இந்தக் கலவையை 20 நிமிடங்கள் ஊறவிடவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, ஊறப்போட்டு வைத்த பனீர் கலவையை சேர்த்து வறுக்கவும். அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து சூடாக்கி, எண்ணெயை ஊற்றவும். அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றைப் போட்டு, வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, கலர் மாறும் வரை வறுக்கவும். அதில் இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கிய பின், தக்காளி விழுதைச் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். தக்காளி வெந்தவுடன், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, நல்ல வாசம் வரும் வரை வதக்கவும். பின்னர், வறுத்த பன்னீர் டிக்கா கலவையை இதனுடன் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிடவும். இதனுடன், கஸூரி மேத்தியைக் கசக்கிச் சேர்க்கவும். சப்பாத்திக்கு, பரோட்டாவுக்குத் தொட்டுச் சாப்பிட அருமையான குழம்பு ரெடி.

குறிப்பு:

இந்த பன்னீர் டிக்காவை டிரையாகவும் (dry) செய்யலாம். இந்த மாதிரி குழம்பாகவும் செய்து சாப்பிடலாம்.

மிளகாய்க் குழம்பு

தேவையானவை:

 • பச்சை மிளகாய் - 20

 • சின்ன வெங்காயம் - 100 கிராம்

 • பெரிய வெங்காயம் - ஒன்று (நடுத்தரமானது)

 • பூண்டு - 6 அல்லது 7 பல்

 • புளி - பெரிய எலுமிச்சைப்பழ அளவு

 • உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

 • நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

 • கடுகு - அரை டீஸ்பூன்

 • உளுந்து - அரை டீஸ்பூன்

 • வெந்தயம் - சிறிதளவு

 • கறிவேப்பிலை - சிறிதளவு

 • மஞ்சள்தூள் - சிறிதளவு

 • பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

சுவையும் மணமும் கொண்ட
சூப்பர் குழம்புகள் - இது சிவகாசி சிறப்பு

செயல்முறை:

பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தை நறுக்கவும். அடுப்பில், அடி கனமான பாத்திரத்தை வைத்து, நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதன் பிறகு கடுகு, உளுந்து, வெந்தயத்தைப் போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும், நறுக்கிவைத்த சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் பூண்டுப் பற்களையும் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறி வரும் சமயம், நறுக்கிவைத்த பச்சை மிளகாயையும் அதில் போட்டு நன்றாக வதக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து, அதன் கரைசலை எடுத்துவைத்துக்கொள்ளவும். வெங்காயமும், பச்சை மிளகாயும் நன்கு வெந்து வதங்கி வரும் நேரத்தில், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, கரைத்துவைத்த புளிக்கரைசலையும் ஊற்றி, குழம்பைக் கொதிக்கவிடவும். குழம்பு நன்கு சேர்ந்து, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி வைக்கவும்.

குறிப்பு:

புளிக்குழம்பை நல்லெண்ணெயில் சமைத் தால், அதன் சுவையும் வாசமும் தனிதான். மேலும், நல்லெண்ணெய் உடலுக்குக் குளிர்ச்சி தரக் கூடியது. தாளிக்க வெந்தயம் சேர்ப்பதும், உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

சிலர் வெங்காயம் அதிகமாகப் போட்டு, ‘இனிப்பு மிளகாய்க் குழம்பும்’, வெங்காயம் குறைவாகப் போட்டு, ‘கார மிளகாய்க் குழம்பும்’ என இரண்டுமே செய்வார்கள்.

பழைய சோற்றுக்கு ஊறுகாய் இருந்தாலும், இந்தக் குழம்புதான் கன ஜோர்!

வாழைப்பூ புளிக்குழம்பு

தேவையானவை:

 • வாழைப்பூ - 2

 • புளி - ஒரு சிறிய எலுமிச்சைப்பழ அளவு

 • சின்ன வெங்காயம் - 5 அல்லது 6

 • பூண்டு - 2 பல்

 • மஞ்சள்தூள் - சிறிதளவு

 • மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

 • சீரகத்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

 • பெருங்காயத்தூள் - சிறிதளவு

 • நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

சுவையும் மணமும் கொண்ட
சூப்பர் குழம்புகள் - இது சிவகாசி சிறப்பு

செய்முறை:

முதலில், வாழைப்பூவை உரித்து, துவர்க்கும் பூ இதழ்கள் எல்லாவற்றையும் நீக்கிவிட வேண்டும். பூவின் ‘சீப்பு’ போன்ற பகுதி, கலர் மாறிய வெள்ளையாகக் குருத்து மாதிரி வந்தவுடன், அவற்றை ஒவ்வொன்றாகப் பிரித்து சேகரித்துக்கொள்ளவும். இந்தப்பூவில் ‘கள்ளன்’ என்ற நார்கூட இருக்காது. வாழைப் பூவின் குருத்து மொட்டு வரும் வரை உரித்து, சேகரித்துக்கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் பூண்டையும் இந்தப் புளிக்கரைசலில் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். குழம்பு கொதிக்கும்போது உப்பையும் பெருங்காயத்தூளையும் சேர்த்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றவும். குழம்பு கொதித்து, நல்ல வாசனை வரும். அப்போது உரித்த வாழைப்பூவைப் போட்டு, குழம்பை வற்றவிடவும். வாழைப்பூ சீக்கிரம் வெந்து விடும். ஊற்றிச்சாப்பிடும் அளவு குழம்பு வற்றியவுடன், இறக்கிவைத்துப் பரிமாறவும்.

குறிப்பு:

மீன் குழம்பு வாசனையுடன் பார்ப்பதற்கும் ‘அயிரை மீன்’ குழம்பு மாதிரி அட்டகாசமான சுவையுடன் இருக்கும். சாதத்துக்கு ஊற்றிச் சாப்பிட சுவையானது.

நான் - வெஜ் சாப்பிடுபவர்கள் வார நாள்களில், அயிரை மீனை நினைத்துக்கொண்டே, இந்த வாழைப்பூ புளிக்குழம்பு ஊற்றிச் சாப்பிடுவது, ஒரு மாறுதலான, ஆறுதலான விஷயம்.

வெள்ளைத் தட்டைப்பயறு குழம்பு

தேவையானவை:

 • ஊறவைத்த வெள்ளைத் தட்டைப்பயறு (வெள்ளைக் காராமணி) - 100 கிராம்

 • சீரகம் - அரை டீஸ்பூன்

 • வெங்காயம் - ஒன்று

 • பச்சை மிளகாய் - 2

 • பூண்டு - 3 பல்

 • மஞ்சள்தூள் - சிறிதளவு

 • சீரகத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

 • மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

 • கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

 • தக்காளி - ஒன்றரை (அரைக்கவும்)

 • எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

 • கொத்தமல்லி - சிறிதளவு

 • உப்பு - தேவைக்கேற்ப

சுவையும் மணமும் கொண்ட
சூப்பர் குழம்புகள் - இது சிவகாசி சிறப்பு

செய்முறை :

ஊறவைத்த தட்டைப்பயற்றை குக்கரில் உப்பு போட்டு வேகவைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் சீரகம் சேர்க்கவும். வாசனை வந்ததும், நறுக்கிவைத்த வெங்காயத்தைச் சேர்க்கவும். அதனுடன் பூண்டைச் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் பச்சை மிளகாயைச் சேர்த்து, வெங்காயம் வாசனை வரும் வரை வதக்கவும். பிறகு, அதில் மஞ்சள்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இதனுடன் தக்காளி விழுதைச் சேர்த்து, நன்கு வதக்கவும். அதன் பிறகு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து, வேகவைத்த பயற்றையும் இந்தக் கலவையுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். குழம்பு போதுமானதாக இருந்தால், கொத்த மல்லித்தழை சேர்த்து இறக்கவும். இது சப்பாத்திக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு:

குழம்பு சற்று அதிகமாகத் தேவையென்றால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

பட்டர் பீன்ஸ் குழம்பு

தேவையானவை:

 • பட்டர் பீன்ஸ் (உரித்தது) - 200 கிராம்

 • தக்காளி - ஒன்று (விருப்பப்பட்டால்)

 • வெங்காயம் - ஒன்று

 • கறிவேப்பிலை - சிறிதளவு

 • தேங்காய் (துருவியது) - 2 டீஸ்பூன்

 • குழம்பு மசாலாப்பொடி - ஒன்றரை டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - சிறிதளவு

 • முந்திரிப்பருப்பு - 2

 • உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

 • எண்ணெய் - 2 டீஸ்பூன்

 • கடுகு - சிறிதளவு

 • உளுத்தம்பருப்பு - சிறிதளவு

சுவையும் மணமும் கொண்ட
சூப்பர் குழம்புகள் - இது சிவகாசி சிறப்பு

செய்முறை :

தேங்காய்த் துருவல், குழம்பு மசாலாப் பொடி, முந்திரிப்பருப்பை விழுதாக அரைத்துக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து, சூடானதும் எண்ணெயை ஊற்றவும். அதில் கடுகைப் போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பைப் போட்டு சிவந்ததும் வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடியாக நிறம் மாறியதும், கறிவேப்பிலையைப் போட்டு, அதோடு தக்காளியையும் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியவுடன், பட்டர் பீன்ஸை அதனுடன் சேர்த்து சிறிதளவு மஞ்சள்தூளையும், தேவையான அளவு உப்பைச் சேர்க்கவும். பின்பு, அரைத்துவைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடவும். மூன்று விசில் வந்ததும் திறந்து பார்த்தால், சுவையான பட்டர் பீன்ஸ் குழம்பு, சாப்பிடத் தயாராக இருக்கும்.

குறிப்பு:

சாதத்துக்கும் சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். குழந்தை களை ஆசையோடு சாப்பிட வைக்கும் குழம்பு இது.