பிரீமியம் ஸ்டோரி

ழைக்கும் மக்கள் தங்கள் உழைப்புக்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா... உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டுக்குக் கொண்டுவந்து உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாள்... தைப்பொங்கல்!

எஸ்.மீனாட்சி
எஸ்.மீனாட்சி

தமிழர்களின் தேசிய விழாவான பொங்கலை மக்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடுவதே வழக்கம். கிறிஸ்துவர்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல் வைத்துக் கொண்டாடுகின்றனர். பல இஸ்லாமியக் குடும்பங்களில் பொங்கல் அன்று சர்க்கரைப்பொங்கலுடன் 16 வகை காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக உண்பதும், அன்று அசைவ உணவுகளைத் தவிர்க்கும் வழக்கமும் உண்டு. தனிச்சிறப்புகள் பல கொண்ட பொங்கல் திருநாளன்று சமைக்க வேண்டிய சிறப்பு உணவுகளின் செய்முறைகளை வழங்குகிறார் வேலூரைச் சேர்ந்த சமையற்கலைஞர் எஸ்.மீனாட்சி. மகிழ்ந்து கொண்டாட மனமார்ந்த வாழ்த்துகள்!

பொங்கல் 
சிறப்பு உணவுகள்
பொங்கல் சிறப்பு உணவுகள்

கல்கண்டு பொங்கல்

தேவையானவை:

 • பச்சரிசி - 200 கிராம்

 • டைமண்டு கல்கண்டு - 150 கிராம்

 • பாசிப்பருப்பு - 50 கிராம்

 • பால் - 200 மில்லி

 • பேரீச்சை, உலர்திராட்சை, ஆப்பிள் துண்டுகள், டூட்டி ஃப்ரூட்டி, செர்ரி, அத்திப்பழம் (சேர்த்து) - 250 கிராம்

 • முந்திரி - 10

 • ஏலக்காய் - 4 (பொடிக்கவும்)

 • நெய் - 75 கிராம்

 • தண்ணீர் - 400 மில்லி

செய்முறை:

பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். முந்திரியை ஒரு டீஸ்பூன் நெய்யில் பொரித்துக்கொள்ளவும். நெய்யில் பழத்துண்டுகளை சூடு செய்து எடுக்கவும். கல்கண்டை மிக்ஸியில் தூள் செய்துகொள்ளவும்.

கல்கண்டு பொங்கல்
கல்கண்டு பொங்கல்

குக்கரில் பால் 200 மில்லி, தண்ணீர் 200 மில்லி சேர்த்து கொதிக்கும்போது நெய்யில் வறுத்த அரிசி, பருப்பு சேர்த்து நன்கு கிளறி, ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து அதில் பொடித்த கல்கண்டு, வறுத்த முந்திரி, சூடு செய்த பழத்துண்டுகள், பொடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு மீதமுள்ள 200 மில்லி தண்ணீரைக் கொதிக்க வைத்து பொங்கலில்விட்டு, மீதமுள்ள நெய்விட்டு நன்கு கிளறி இறக்கினால் ஸ்வீட் கல்கண்டு பொங்கல் தயார். தேவையானால் மூன்று நிமிடங்கள் குக்கரை `சிம்’மில் வைத்து எடுத்துப் பரிமாறலாம்.

குறிப்பு: வெல்லம் இல்லாமல் கல்கண்டு பொடி, பழங்கள் சேர்த்துச் செய்யும்போது சுவை கூடுதலாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.

பாசிப்பருப்பை சரும அழகு, கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் அழகுசாதனப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கரும்புச்சாறு ஜவ்வரிசி பொங்கல்
கரும்புச்சாறு ஜவ்வரிசி பொங்கல்

கரும்புச்சாறு ஜவ்வரிசி பொங்கல்

தேவையானவை:

 • கரும்புச்சாறு - 500 மில்லி

 • ஜவ்வரிசி - 150 கிராம்

 • பால் - 200 மில்லி

 • முந்திரி - 20

 • உலர்திராட்சை - 20

 • பாதாம் - 20

 • ஏலக்காய் - 4 (பொடிக்கவும்)

 • நெய் - 75 மில்லி

 • பயத்தம்பருப்பு - 50 கிராம்

செய்முறை:

கடாயில் 2 டீஸ்பூன் நெய்விட்டு, ஜவ்வரிசியை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதே கடாயில் பயத்தம்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு உடைத்த முந்திரி, உலர்திராட்சை, உடைத்த பாதாம் ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் பால், கரும்புச்சாறு சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் வறுத்து வைத்துள்ள பயத்தம்பருப்பு, ஜவ்வரிசியை சேர்த்து நன்கு கிளறி குறைந்த தீயில் வைத்து மூடவும். ஏழு நிமிடங்கள் கழித்து வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, பொடித்த ஏலக்காய் எல்லாவற்றையும் நன்கு கலந்து, மீதமுள்ள நெய்யைவிட்டு மூடி, வெயிட் போட்டு, ஐந்து நிமிடங்கள் `சிம்’மில் வைத்து இறக்கினால், சுவையான கரும்புச்சாறு ஜவ்வரிசி பொங்கல் தயார்.

குறிப்பு:

வெல்லம் சேர்த்து செய்யும் பொங்கலைவிட கரும்புச்சாறு பொங்கலின் சுவை கூடுதலாக இருப்பதுடன், நீரிழிவாளர்களுக்கும் உகந்தது.

கரும்புச்சாற்றில் இரும்பு, மக்னீசியம், கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளன.

கறுப்பு உளுந்து மிளகுப் பொங்கல்
கறுப்பு உளுந்து மிளகுப் பொங்கல்

கறுப்பு உளுந்து மிளகுப் பொங்கல்

தேவையானவை:

 • பச்சரிசி - 200 கிராம்

 • கறுப்பு உளுந்து - 100 கிராம்

 • மிளகு - 2 டீஸ்பூன்

 • சீரகம் - அரை டீஸ்பூன்

 • இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

 • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

 • முந்திரி - 20

 • தண்ணீர் - 4 டம்ளர்

 • நெய் - 75 கிராம்

 • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு டீஸ்பூன் நெய்யில் பச்சரிசியை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு அதே வாணலியில் கறுப்பு உளுந்தை வாசனை வரும் வரை வறுக்கவும். குக்கரில் தண்ணீர்விட்டு, கொஞ்சம் சூடானவுடன் வறுத்த உளுந்து சேர்த்துக் கொதிக்கவிடவும். உளுந்து பாதி வெந்தவுடன் வறுத்த அரிசி, இஞ்சித் துருவல், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். குக்கரை மூடி, வெயிட் போட்டு இரண்டு விசில்விட்டு அடுப்பை நிறுத்தவும். பின்பு சிறிய கடாயில் மீதமுள்ள நெய்விட்டு, மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து குக்கரில் உள்ள பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: இது டீன்ஏஜ் பெண்களுக்கும், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

கறுப்பு உளுந்தில் நார்ச்சத்தும் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளன.

பச்சைப்பயறு குதிரைவாலி பொங்கல்
பச்சைப்பயறு குதிரைவாலி பொங்கல்

பச்சைப்பயறு குதிரைவாலி பொங்கல்

தேவையானவை:

 • பச்சைப்பயறு - 100 கிராம்

 • குதிரைவாலி - 200 கிராம்

 • மிளகு - ஒரு டீஸ்பூன்

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்

 • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

 • தண்ணீர் - 5 டம்ளர்

 • முந்திரி - 20

 • உப்பு - தேவைக்கேற்ப

 • நெய் - 75 கிராம்

செய்முறை:

வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு பச்சைப்பயற்றை வறுத்துக்கொள்ளவும். பின்னர் குக்கரில் 5 டம்ளர் தண்ணீர்விட்டு கொதிக்கும்போது வறுத்த பச்சைப்பயறு, குதிரைவாலி, உப்பு, இஞ்சித் துருவல் சேர்த்துக் கலந்து குக்கரை மூடி, வெயிட் போட்டு இரண்டு (அ) மூன்று விசில்விட்டு அடுப்பை நிறுத்தவும். பின்பு சிறிய கடாயில் மீதமுள்ள நெய்விட்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, பெருங்காயத்தூள், முந்திரி சேர்த்து வறுத்து குக்கரில் உள்ள பொங்கலில் கலக்கவும்.

குறிப்பு: டயட்டில் இருப்பவர்கள் நெய் தவிர்த்து எண்ணெய் உபயோகித்து சாப்பிடலாம்.

பச்சைப்பயறு வைட்டமின் பி பற்றாக்குறையைத் தவிர்க்க உதவும்.

மொச்சை கதம்பப் பொரியல்
மொச்சை கதம்பப் பொரியல்

மொச்சை கதம்பப் பொரியல்

தேவையானவை:

 • மஞ்சள் பூசணி துண்டுகள் - 200 கிராம்

 • அவரைக்காய் - 100 கிராம்

 • வாழைக்காய் - ஒன்று

 • உரித்த மொச்சைக் கொட்டை - 150 கிராம்

 • கருணைக்கிழங்கு - 100 கிராம்

 • காராமணிக்காய் - 100 கிராம்

 • புடலங்காய் - 100 கிராம்

 • சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 100 கிராம்

 • கத்திரிக்காய் - 100 கிராம்

 • கொத்தவரங்காய் - 100 கிராம்

 • காய்ந்த மிளகாய் - 6

 • கடுகு - அரை டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • தேங்காய்த் துருவல் - அரை கப்

 • கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

 • எண்ணெய் - 2 டீஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

காய்கறிகளை ஒரு இன்ச் அளவில் நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு தாளித்து பின்பு உரித்த மொச்சைக் கொட்டை சேர்த்துப் புரட்டவும்.

அதில் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 100 மில்லி தண்ணீர்விட்டு, மூடி வேக வைக்கவும். நன்கு வெந்து தண்ணீர் சுண்டியவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துப் புரட்டவும். சுவையான மொச்சை கதம்பப் பொரியல் தயார்.

குறிப்பு:

எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இந்தப் பொரியல் மிகவும் உகந்தது.

மொச்சையிலுள்ள அமினோ அமிலம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

கிராமிய கதம்பக் கூட்டு
கிராமிய கதம்பக் கூட்டு

கிராமிய கதம்பக் கூட்டு

தேவையானவை:

 • வெள்ளைப் பூசணி - 100 கிராம்

 • மஞ்சள் பூசணி - 100 கிராம்

 • அவரைக்காய் - 100 கிராம்

 • உரித்த மொச்சைக் கொட்டை - 100 கிராம்

 • உரித்த பச்சைத் துவரை - 100 கிராம்

 • உரித்த காராமணிப் பயறு - 100 கிராம்

 • வாழைக்காய் - ஒன்று

 • கருணைக்கிழங்கு - 100 கிராம்

 • வள்ளிக்கிழங்கு - 100 கிராம்

 • கொத்தவரங்காய் - 100 கிராம்

 • புளி - ஒரு எலுமிச்சை அளவு

 • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு

 • கடுகு - அரை டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

 • எண்ணெய் - 2 டீஸ்பூன்

வறுத்து அரைக்க:

 • காய்ந்த மிளகாய் - 8

 • மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்

 • கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

 • தேங்காய்த் துருவல் - அரை கப்

 • பச்சரிசி - ஒரு டீஸ்பூன்

 • கசகசா - அரை டீஸ்பூன்

 • பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்

செய்முறை:

வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.

காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, 2 டம்ளர் தண்ணீர்விட்டு, குக்கரில் வெயிட் போடாமல் வேகவைக்கவும். பாதி வெந்தவுடன் புளியை நன்கு கரைத்து ஊற்றவும். எல்லாம் சேர்ந்து கொதிக்கும்போது வறுத்து அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பின்பு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து தேவையானால் ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு கலந்து இறக்கவும். சுவையான கிராமிய கதம்பக் கூட்டு தயார்.

செரிமான பிரச்னை உள்ளவர்களுக்கு மஞ்சள் பூசணி ஜூஸ் நலம் பயக்கும்.

வெந்தயக்கீரைக் கூட்டு
வெந்தயக்கீரைக் கூட்டு

வெந்தயக்கீரைக் கூட்டு

தேவையானவை:

 • வெந்தயக்கீரை - 4 கட்டு

 • துவரம்பருப்பு - 100 கிராம்

 • தக்காளி - 2 (நறுக்கவும்)

 • வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

 • மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

 • உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

 • எண்ணெய் - 2 டீஸ்பூன்

 • கடுகு - அரை டீஸ்பூன்

 • வெந்தயம் - அரை டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்

 • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

துவரம்பருப்பைக் கழுவி குக்கரில் சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும். பின்பு கீரையை நன்கு ஆய்ந்து, கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய வெந்தயக்கீரை, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு வேகவைத்த பருப்பை நன்கு மசித்து, கீரையில் கலந்து ஒரு கொதிக்க விடவும். பாரம்பர்யமான வெந்தயக்கீரைக் கூட்டு தயார்.

குறிப்பு:

இதை பொங்கல் அன்று செய்து ஆண்டவனுக்குப் படைப்பார்கள். நார்ச்சத்து நிறைந்தது.

வெந்தயக்கீரையில் தாது உப்புகளும் வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன.

மஞ்சள் பூசணி பாயசம்
மஞ்சள் பூசணி பாயசம்

மஞ்சள் பூசணி பாயசம்

தேவையானவை:

 • நன்கு பழுத்த மஞ்சள் பூசணி - கால் கிலோ

 • பால் - ஒரு லிட்டர்

 • சர்க்கரை - 200 கிராம்

 • முந்திரி, பாதாம் - தலா 20 (ஊறவைத்து, அரைத்துக்கொள்ளவும்)

 • ஏலக்காய் - 4

 • துருவிய தேங்காய் - ஒரு கப்

 • உலர்திராட்சை - 20

 • நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

மஞ்சள் பூசணியைத் தோல் சீவி, துருவி ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கிக்கொள்ளவும். பாலை, சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி வைக்கவும். ஏலக்காய் சேர்த்து, வதக்கிய மஞ்சள் பூசணித் துருவலை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதில் அரைத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் விழுது சேர்த்து, சர்க்கரை சேர்த்து காய்ச்சிய பாலை நன்கு கலக்கவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் திராட்சை மற்றும் துருவிய தேங்காயை வறுத்து பாயசத்தில் சேர்க்கவும்.

குறிப்பு:

இதை சூடாகவோ, குளிரவைத்தோ பருகலாம். எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை அடிக்கடி பருகலாம்..

கஜூ (Caju) என்ற போர்ச்சுகீஸ் வார்த்தையிலிருந்தே முந்திரியின் ஆங்கிலப்பெயர் (Cashew), இந்திப் பெயர் `காஜூ’ ஆகிய வார்த்தைகள் உருவாகின.

புளி அவல் சாதம்
புளி அவல் சாதம்

புளி அவல் சாதம்

தேவையானவை:

வெள்ளை (அ) சிவப்பு கெட்டி அவல் - கால் கிலோ

புளி - எலுமிச்சை அளவு

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

 • கடுகு - அரை டீஸ்பூன்

 • கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை - தலா ஒரு டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

 • எண்ணெய் - 4 டீஸ்பூன்

வறுத்துப் பொடிக்க:

 • கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 • உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 • வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு

 • எள் - 2 டீஸ்பூன்

 • காய்ந்த மிளகாய் - 8

 • மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்

அவலைத் தண்ணீர்விட்டு நன்கு கழுவி, வடிகட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் புளியைக் கெட்டியாகக் கரைத்து உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அவலில் விட்டு அரை மணி நேரம் ஊறவிடவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளித்து, ஊறிய அவலைச் சேர்த்து நன்கு புரட்டவும். அதில் வறுத்துப் பொடித்த பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கினால், சுவையான புளி அவல் சாதம் ரெடி.

குறிப்பு: இதை கனு அன்று சாதாரண புளி சாதத்துக்குப் பதில் செய்தால் சத்து, சுவை நிறைந்ததாக இருக்கும்.

அவலுடன் பாலும் நெய்யும் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் பலமாகும்.

கனு அவியல்
கனு அவியல்

கனு அவியல்

தேவையானவை:

 • வெள்ளைப் பூசணி - ஒரு துண்டு

 • மஞ்சள் பூசணி - ஒரு துண்டு

 • கருணைக்கிழங்கு - 100 கிராம்

 • அவரைக்காய் - 100 கிராம்

 • கொத்தவரங்காய் - 100 கிராம்

 • சௌசௌ (பெங்களூரு கத்திரிக்காய்), வள்ளிக்கிழங்கு, வாழைக்காய், கேரட் - தலா ஒன்று

 • பீன்ஸ் - 10

 • முருங்கைக்காய் - ஒன்று

 • மாங்காய் - 100 கிராம்

 • உரித்த மொச்சைக் கொட்டை, காராமணி, துவரை (மூன்றும் சேர்த்து) - 200 கிராம்

 • தயிர் - 200 மில்லி

 • கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • உப்பு - தேவைக்கேற்ப

 • தேங்காய் எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி + ஒரு டீஸ்பூன் அரைக்க:

 • தேங்காய் துருவல் - ஒரு கப்

 • பச்சை மிளகாய் - 8

 • சீரகம் - ஒரு டீஸ்பூன்

 • பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். கருணைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, கேரட், பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய், மாங்காய், வெள்ளைப் பூசணி, மஞ்சள் பூசணி, வாழைக்காய், சௌசௌ, முருங்கைக்காய் ஆகியவற்றை ஒரு இன்ச் அளவில் வெட்டி குக்கரில் சேர்த்து, உரித்த மொச்சை, துவரை, காராமணி சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து ஒரு விசில்விட்டு இறக்கவும். பின்பு அதில் அரைத்த விழுது சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சீரகம், கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, தயிரும் ஒரு குழிக்கரண்டி தேங்காய் எண்ணெயும் சேர்த்து நன்கு கலந்தால், சுவையான கனு அவியல் தயார்.

குறிப்பு: காய்கறிகள் அனைத்தும் சேர்த்து செய்யும் இந்த அவியல் ஆரோக்கியமானது.

பீகார், மேற்கு வங்காளம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், ஒடிசா மாநிலங்களில் கருணைக்கிழங்கு அதிகம் பயிராகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு