Published:Updated:

பூரி ஜெகந்நாதர் கோயில் பிரசாதங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பூரி ஜெகந்நாதர் கோயில் பிரசாதம்
பூரி ஜெகந்நாதர் கோயில் பிரசாதம்

ரெசிப்பிஸ் : ‘தளிகை’ நளினா கண்ணன்

பிரீமியம் ஸ்டோரி

பூரி ஜெகந்நாதர் ஆலயம்... ஒடிசாவின் மிகப் பிரபலமான அடையாளம். 56 வகையான பிரசாதங்களுக்குப் புகழ்பெற்ற `சப்பன் போக்’ இந்தக் கோயிலின் சிறப்பு!

300 சமையற்கலைஞர்களும், உதவியாளர்கள் 600 பேரும் ஒருநாளைக்கு 20,000 பேருக்கும் பண்டிகை நாள்களில் 50,000 பேருக்கும் சமைக்கிறார்கள். உலகத்தின் பெரிய சமையலறை இங்குள்ளது.

பூரி ஜெகந்நாதர் ஆலயம்
பூரி ஜெகந்நாதர் ஆலயம்

சமையலறையில் சமைக்கப்பட்டு கடவுளிடம் எடுத்துச் செல்லும்போது அந்த உணவுகளுக்கு எந்த மணமும் இருப்பதில்லை. சாமிக்குப் படைக்கப்பட்டு, `ஆனந்த் பஸார்’ என்ற இடத்தில் பிரசாதங்கள் விநியோகிக்கப்படும். அப்போது அந்த உணவுகளின் வாசம் ஊரே மணக்கும். அந்த வாசனையை உணர முடிந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றொரு நம்பிக்கை.

மண் பாத்திரங்களில்தான் சமைக்கிறார்கள்.ஐந்து பானைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைத்து, அடியில் விறகுகள் வைத்துச் சமைக்கிறார்கள். சமைக்கும்போது மேலே உள்ள பானையிலுள்ள உணவு முதலில் வெந்துவிடும். இப்படியோர் அதிசயத்தை வேறெங்கும் பார்க்க முடியாது. அதனால் மகாலட்சுமியே வந்து சமைப்பதாகவும் நம்பப்படுகிறது.

 ‘தளிகை’ 
நளினா கண்ணன்
‘தளிகை’ நளினா கண்ணன்

அந்த ஊருக்கான காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் மட்டுமே பயன்படுத்தப் படும். ஏலக்காய், பச்சைக் கற்பூரம் கிடையாது. சேப்பங்கிழங்கு, வாழைக்காய் போன்ற நாட்டுக் காய்கறிகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். சீசனுக்கேற்ப இந்த மெனு மாறும்.

வெயில் காலத்தில் மோர், நீராகாரம் போன்ற வையும் பிரசாதங்களாகப் பரிமாறப்படுகின்றன.

இந்தக் கோயிலில் மதிய நேரத்தில் செய்யப் படுகிற நைவேத்தியம் ரொம்பவே பிரபலம். அவற்றிலிருந்து தேர்வுசெய்து சில ஸ்பெஷல் ரெசிப்பிகளை இங்கே பகிர்கிறார் சென்னை மயிலாப்பூரிலுள்ள ‘தளிகை’ ரெஸ்ட்டாரன்ட்டின் உரிமையாளரும் சமையற்கலைஞருமான நளினா கண்ணன்.

கனிகா
கனிகா

கனிகா

தேவையானவை:

 • பாஸ்மதி அரிசி - 2 (கப் ஊறவைக்கவும்)

 • சர்க்கரை - ஒன்றரை கப் + 2 டீஸ்பூன்

 • தண்ணீர் - 4 கப்

 • உலர்திராட்சை - 10

 • முந்திரி - 6

 • ஏலக்காய் - 2 - 4

 • கிராம்பு - 4

 • நெய் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பாஸ்மதி அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்றாக வடியவிடவும். அடி கனமான பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் நெய்யைவிட்டு 2 டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிரப் போன்ற பதத்தில் சிவப்பாக மாறும்வரை கிளறவும். பிறகு ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும். ஏலக்காய், கிராம்பு, முந்திரி மற்றும் உலர்திராட்சை சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு நன்றாகக் கிளறவும். ஒன்றரை கப் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கலக்கவும். 4 கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவிடவும். 15 முதல் 20 நிமிடங்கள் வெந்தவுடன் இறக்கி, தனியாகவோ காய்கறி மஹுராவுடனோ பரிமாறவும்.

குறிப்பு: குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிட்டும் சமைக்கலாம்.

பிரேசில், இந்தியா ஆகியவையே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் பெற்ற நாடுகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மஹுரா
மஹுரா

மஹுரா

உலகப் பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் பிரசாதம் இது. உருளைக்கிழங்கு, தக்காளி, கேரட் முதலியவற்றை இதில் சேர்க்க மாட்டார்கள். காய்கறிகளைச் சேர்த்து மட்டுமே தயார் செய்வார்கள்.

தேவையானவை:

 • பூசணிக்காய் - 250 கிராம்

 • வாழைக்காய் - 50 கிராம்

 • சேனைக்கிழங்கு - 50 கிராம்

 • சேப்பங்கிழங்கு - 50 கிராம்

 • கத்திரிக்காய் - 100 கிராம்

 • சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 50 கிராம்

 • தேங்காய் (துருவியது) - ஒன்று (ஒன்றரை கப்)

 • கொண்டைக்கடலை - 20 கிராம்

 • சோம்பு - 3 டீஸ்பூன்

 • சீரகம் - 2 டீஸ்பூன்

 • இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 • உப்பு - 2 டீஸ்பூன்

 • நெய் - 3 டீஸ்பூன்

தாளிக்க:

 • கடுகு - ஒரு டீஸ்பூன்

 • காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும். பிறகு வேகவைக்கவும். சோம்பு, சீரகத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும். காய்கறிகளைக் கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஊறவைத்த சீரகம் மற்றும் சோம்பை மிருதுவான விழுதாக அரைக்கவும்.

வாய் அகலமான கடாயில் நெய் சேர்த்து சூடாக்கவும். அதில் காய்கறிகளைப் போட்டு வதக்கவும். இதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலையைச் சேர்க்கவும். பின்னர் இஞ்சி விழுது, சோம்பு - சீரக விழுது சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேங்காய்த் துருவல், உப்பு, மஞ்சள்தூள் போட்டு மூடி வைக்கவும். தேவையானால், அரை கப் தண்ணீர் விடலாம். 10 முதல் 12 நிமிடங்களில் நன்றாக வெந்துவிடும். தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சிறிதளவு நெய்யில் பொரித்து மேலாகச் சேர்த்துப் பரிமாறவும்.

பூசணியில் 40-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

பேசாரா
பேசாரா

பேசாரா

பூரி ஜெகந்தாதர் கோயில் மஹா பிரசாதங்களில் மிகவும் சிறப்பானது. இதிலும் காய்கறிகள் மட்டுமே சேர்க்கப்படும். தக்காளி, வெங்காயம் சேர்ப்பதில்லை.

தேவையானவை:

 • பூசணிக்காய் - 250 கிராம்

 • வாழைக்காய் - 50 கிராம்

 • சேனைக்கிழங்கு - 50 கிராம்

 • சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 50 கிராம்

 • பர்வல் (கம்பு புடலை) - 2 (பெரிய காய்கறிக் கடைகளில் கிடைக்கும்)

 • காராமணிக்காய் - 4 - 5

 • கத்திரிக்காய் - 100 கிராம்

 • தேங்காய்த் துருவல் - ஒன்றரை கப்

 • கொண்டைக்கடலை (கறுப்பு அல்லது வெள்ளை) - 20 கிராம்

 • கடுகு - 5 டீஸ்பூன்

 • இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 • உப்பு - 2 டீஸ்பூன்

 • நெய் - 3 டீஸ்பூன்

தாளிக்க:

 • கடுகு - ஒரு டீஸ்பூன்

 • காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும். பிறகு வேகவைக்கவும். கடுகை அரை மணி ஊறவைக்கவும். காய்கறிகளைக் கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஊறவைத்த கடுகை மிருதுவான விழுதாக அரைக்கவும்.

வாய் அகலமான கடாயில் நெய் சேர்த்து காய்கறிகளைப் போட்டு வதக்கவும். வேகவைத்த கொண்டைக்கடலையைச் சேர்க்கவும். அரைத்த கடுகு விழுது, இஞ்சி விழுதைச் சேர்த்துக் கலக்கவும். தேங்காய்த் துருவல், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு மூடி 10 - 12 நிமிடங்கள் நன்றாக வேகவிடவும். தேவையானால் அரை கப் தண்ணீர் விடலாம். 10 முதல் 12 நிமிடங்களில் நன்கு வெந்துவிடும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சிறிதளவு நெய்யில் பொரித்து மேலாகச் சேர்த்துப் பரிமாறவும்.

பித்தம், உஷ்ணம், இருமல் ஆகியவற்றுக்கு நிவாரணம் அளிக்க வாழைக்காய் உதவும்.

அச்சா
அச்சா

அச்சா

தேவையானவை:

 • பச்சரிசி - 2 கப்

 • பாகு வெல்லம் - 2 கப்

 • நெய் - அரை கிலோ

செய்முறை:

அரிசியை 2 அல்லது 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். வடியவைத்து நிழலில் ஆறவைக்கவும். நைஸாகப் பொடிக்கவும். ஒரு கப் நீரை அடி கனமான பாத்திரத்தில் விட்டு வெல்லத்தைப் போட்டு நன்றாகக் கரைக்கவும். வடிகட்டி நன்கு கொதிக்கவிடவும். நன்கு உருண்டு வரும்போது அரிசி மாவைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் மூடி வைக்கவும். நெய்யைக் காய வைக்கவும். பாகு சேர்த்த அரிசி மாவை சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டி சூடான நெய்யில் பொரிக்கவும். ஆறியபின் பரிமாறவும்.

வெல்லத்தின் தரம் அதன் நிறத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.

தஹி பக்காலா
தஹி பக்காலா

தஹி பக்காலா

உடலின் உஷ்ணத்தைக் குறைப்பதற்காக வெயில் காலத்தில் இதைப் பரிமாறுவார்கள். இதனுடன் வறுவல் அல்லது ஊறுகாய் சேர்த்துச் சாப்பிட, மிகவும் ருசியாக இருக்கும்.

தேவையானவை:

 • பச்சரிசி - ஒரு கப்

 • தண்ணீர் - 3 கப்

 • குளிர்ந்த நீர் - 3 கப்

 • உப்பு - 2 டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - 6 - 8

 • பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன்

 • மோர் - ஒரு கப்

 • நெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

அரிசியைத் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து ஆறவைக்கவும். 3 கப் குளிர்ந்த நீரை அதில் ஊற்றி 8 முதல் 10 மணி நேரம் மூடி வைக்கவும். பின்னர் உப்பு, மோர், பச்சை மிளகாய் விழுது ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நெய்யைச் சூடாக்கி கறிவேப்பிலையைப் போட்டு, பொரிந்ததும் அதைச் சேர்த்துப் பரிமாறவும்.

கறிவேப்பிலை மரம் 4-6 மீட்டர் வரை வளரும்.

காஜா
காஜா

காஜா

2,000 வருடங்களுக்கும் முந்தைய பழைமை வாய்ந்த இனிப்பு. இதன் செய்முறை ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பகவான் ஜெகந்நாதர் இதன் செய்முறையை கோயில் காப்பாளர் கனவில் வந்து செய்து காண்பித்ததாக வரலாறு உண்டு.

தேவையானவை:

 • சிரோட்டி ரவை - ஒரு கப்

 • உப்பு - ஒரு சிட்டிகை

 • நெய் - 4 டேபிள்ஸ்பூன்

 • தண்ணீர் - அரை கப்

 • நெய் - அரை லிட்டர் (பொரிக்க)

சர்க்கரைப் பாகுக்கு:

 • சர்க்கரை - ஒரு கப்

 • தண்ணீர் - அரை கப்

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் சிரோட்டி ரவையைப் போட்டு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாக நன்கு பிசையவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஈரத் துணியால் மூடி வைக்கவும். சிறு உருண்டைகளாக எடுத்து மெல்லிய சப்பாத்தியாக இடவும். நான்கு சப்பாத்திகள் செய்தவுடன் ஒரு பெரிய தட்டில் முதல் சப்பாத்தியை வைக்கவும். சிறிதளவு நெய்யைத் தடவி இரண்டாவது சப்பாத்தியை அதன் மேலே வைக்கவும். மீண்டும் நெய்யைத் தடவவும். மூன்றாவது சப்பாத்தியை மேலே அடுக்கி மீண்டும் நெய்யைத் தடவவும். நான்காவது சப்பாத்தியையும் மேலே வைத்து நெய்யைத் தடவி இறுக்கமாகச் சுருட்டவும். ஒரு கத்தியால் மூன்று முதல் நான்கு துண்டுகளாக நறுக்கவும். ஒரு துண்டை எடுத்து சப்பாத்திக் குழவியால் மெதுவாக அழுத்தித் தேய்க்கவும். கால் இன்ச் கனத்துக்கும் குறைவாக வரும் வரை தேய்க்கவும். இது போலவே அனைத்து மாவையும் இட்டு தனித்தனியாக ஒரு தட்டில் வைக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை கலந்து தீயை மூட்டவும். 2 கம்பிப் பாகு வரும் வரை கொதிக்கவிடவும். நெய்யை ஒரு கடாயில் சூடாக்கவும். தேய்த்து வைத்த காஜாக்களை ஒவ்வொன்றாக மிதமான சூட்டில் பொன்னிறமாகப் பொரித்து வடியவிடவும். சர்க்கரைப் பாகில் முக்கி 2 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் அதிலிருந்து எடுத்து ஒரு தட்டில் ஆறவைக்கவும். பிறகு பரிமாறவும்.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளத்தில் `சுஜி’ என்று அழைக்கப்படுகிறது ரவை.

பன்னா
பன்னா

பன்னா

லஸ்ஸி போன்ற இனிப்பு பானம். ஸ்நான பூர்ணிமா மற்றும் ரத யாத்ரா இடையிலான 15 நாள்கள் பூரி ஜெகந்நாதர், பல்தேவர் ஆகிய தெய்வங்கள் மிகவும் பலவீனமாக இருப்பார்களாம். அவர்களுக்குப் புத்துணர்ச்சி உண்டாக்க `பன்னா’வைப் பரிமாறுவார்கள்

தேவையானவை:

 • தண்ணீர் - 4 கப்

 • தயிர் - ஒரு கப்

 • கல்கண்டு - அரை கப்

செய்முறை:

ஒரு ஜாடியில் தண்ணீர், கல்கண்டு மற்றும் தயிரைச் சேர்த்து நன்றாகக் கடையவும். அழகான கோப்பைகளில் பரிமாறவும். மேலும் சுவைகூட்ட நறுக்கிய வாழைப்பழம் மற்றும் உலர் திராட்சை ஆகியவற்றை மேலே தூவி அலங்கரிக்கலாம்.

மெலிந்த உடல் பருமனாக கல்கண்டு உதவும்.

பொதொல் ரசா
பொதொல் ரசா

பொதொல் ரசா

தேவையானவை:

 • பர்வல் (கம்பு புடலை - வட்டங்களாக நறுக்கியது) - ஒரு கப் (பெரிய காய்கறிக் கடைகளில் கிடைக்கும்)

 • நெய் - 2 டேபிள்ஸ்பூன்

 • உப்பு - ஒரு டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • தேங்காய்ப்பால் (கெட்டியானது) - ஒரு கப்

செய்முறை:

கடாயைச் சூடாக்கி நெய்யைச் சேர்க்கவும். பர்வல் துண்டுகளை நன்றாகப் பொரிக்கவும். உப்பு, மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்தூள் போட்டுக் கலக்கவும். தேங்காய்ப்பாலைச் சேர்த்து நிதானமான தீயில் வேகவிடவும். நான்கைந்து நிமிடங்களில் தயாராகிவிடும்.

வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் புடலை வளரும்.

தால்
தால்

தால்

பகவானுக்கு மிகவும் பிடித்தமான தால். ஒடிசா மற்றும் பெங்கால் மாநிலங்களில் அனைத்து இல்லங்களிலும் இதை பூரி உடன் காலை உணவாக எடுத்துக் கொள்வார்கள்.

தேவையானவை:

 • கடலைப்பருப்பு - ஒரு கப்

 • தண்ணீர் - 3 கப்

 • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 • உப்பு - 2 டீஸ்பூன்

 • தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்

 • மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • நெய் அல்லது எண்ணெய் - 2 டீஸ்பூன்

 • கிராம்பு - 3 - 4

 • பட்டை - ஒரு சிறிய துண்டு

 • சீரகம் - அரை டீஸ்பூன்

 • கறிவேபில்லை - 4 - 6

 • பிரிஞ்சி இலை - ஒன்று

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். பருப்பை நன்கு கழுவி அதில் போட்டு மஞ்சள்தூள் சேர்த்து மிருதுவாக வேகவிடவும் (10 முதல் 12 நிமிடங்கள்). உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாகக் கொதிக்கவிடவும்.

கடாயில் நெய் சேர்த்து சீரகம், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். தேங்காய்ப் பல்லையும் போட்டுப் பொரிக்கவும். இதை வெந்த பருப்பில் போட்டு மேலும் ஒரு நிமிடம் கொதித்தவுடன் இறக்கவும். பூரி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.

மேற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளே கடலைப்பருப்பின் தாயகம்.

கீரா
கீரா

கீரா

தேவையானவை:

 • ஃப்ரெஷ் பனீர் - அரை கப்

 • பால் - 2 லிட்டர்

 • சர்க்கரை - ஒன்றரை கப்

 • ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 • முந்திரி, திராட்சை (சேர்த்து) - 2 டீஸ்பூன் (நெய்யில் பொரித்தது)

 • உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை;

அடி கனமான உருளி பாத்திரத்தில் பாலை நன்றாகக் காய்ச்சவும் பாதியாகக் குறைய வேண்டும். சுண்டிய பாலில் சர்க்கரை மற்றும் உப்பைப் போட்டு கைவிடாமல் கலக்கவும். பின்னர் பனீரை உதிர்த்துப் போட்டு கைவிடாமல் கலக்கவும். பனீருடன் பால் நன்றாகச் சேர்ந்தவுடன், ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுத்த முந்திரி, திராட்சை தூவிப் பரிமாறவும்.

100 கிராம் பனீரில் 20.8 கிராம் கொழுப்பு, 18.3 கிராம் புரதம் உள்ளது.

ரசபலி
ரசபலி

ரசபலி

தேவையானவை:

 • பனீர் - அரை கப்

 • ரவை - ஒரு டீஸ்பூன்

 • கோதுமை மாவு - ஒரு டீஸ்பூன்

 • கெட்டியான பால் - 2 லிட்டர்

 • பொடித்த சர்க்கரை - அரை கப்

 • ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

 • நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பனீரை உதிர்த்து ரவை, உப்பு மற்றும் கோதுமை மாவைச் சேர்த்து நன்கு மிருதுவாகப் பிசையவும். 8-10 சிறிய வடைகளாகத் தட்டி அடுக்கிவைக்கவும். பாலை அடி கனமான பாத்திரத்தில் பாதியாகச் சுண்டும் வரை காய்ச்சவும். 35 முதல் 40 நிமிடங்கள் வரை ஆகலாம். கைவிடாமல் கிளறவும்.

நெய்யைச் சூடாக்கி நிதானமான தீயில் வடைகளைப் பொரிக்கவும். நன்றாகச் சிவந்தவுடன் நெய்யிலிருந்து எடுத்து சூடான பாலில் போடவும். பொடித்த சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூள் தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

ஆப்கானிஸ்தான் மற்றும் இரானிய பயணிகளால் பனீர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு